மேலும் சில முகங்கள்

Published on

மூன்று தலைமுறைகள்

இன்றைய தமிழக சட்டசபையில் முன்னாள் முதல்வர் ஒருவரின் பேரன் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? முதல்வராக, ஆற்றல்மிகு அமைச்சராக, தமிழும் ஆன்மீகமும் வளர்த்த ஆளுமையாகத் திகழ்ந்தவர் இவர். பொன்னம்பலத் தியாகராசன் (பி.டி.ராஜன் என பின்னாட்களில் அழைக்கப்பட்டவர்) என்னும் இவர் 1892 - ம் ஆண்டு ஏப்ரல் 22 - ம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியாக இருந்த உத்தமபாளையத்தில் செல்வ செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்தவர். ஆக்ஸ்போர்டில்  சட்டம் பயின்றவர்.  திரும்பி வந்து வழக்கறிஞர் பணியைத் துவங்கினாலும் நீதிக்கட்சியில் சேர்ந்தார். 1920 சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1937 வரை சட்டமன்ற உறுப்பினராக நீடித்தார்.

முதல்வராக இருந்த பொப்பிலி அரசர் ஐரோப்பாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது 1936 ஏப்ரலில் இருந்து ஆகஸ்ட் வரை சென்னை மாகாணத்தின் முதல்வராகவும் பதவி வகித்தார். 1952 - பொதுத்தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிறகு அவர் தேர்தலில் வெற்றிபெறவில்லை. தனது வாழ்நாளில் தமிழ்முறைத் திருமணங்களைத் தலைமை தாங்கி நடத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இவரது மகன்களில் ஒருவர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன்.

1996 - 2001ஆம் ஆண்டுவரை தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி. அப்போது  சபாநாயகராக இருந்தவர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன். காங்கிரஸ் உறுப்பினர் பொதுப்பணித்துறை தொடர்பாக கேள்வி எழுப்பினார். அதற்கு அப்போதைய முதல்வர் கருணாநிதி எழுந்து பதில் கூற முற்பட்டார். ‘‘துறை அமைச்சர் இருக்கிறார் அவர் பதில்சொல்லட்டும்.

நீங்கள் அமருங்கள்,'' என்றார் சபாநாயகர் பழனிவேல்ராஜன். முதல்வர் அமர்ந்துவிட அன்றை பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.  சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்து விட்டால் பாராபட்சம் இல்லாமல் நடந்து கொள்வார். எதிர்க்கட்சி ஆளுங்கட்சி உறுப்பினர் என்ற பாகுபாடு இவரிடம் கிடையாது. யாராக இருந்தாலும் பேரவை விதிகளின் படி அவர்களை வழி நடத்துவார்.

2006 - 11 திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். மதுரையிலுள்ள இவரது பங்களாவின் நுழைவுவாயிலுக்கு, இவர் இறக்கும் வரை கதவுகள் கிடையாது. யாரும் போகலாம். வரலாம். 2016இல் இறந்தார். இவரது மகன் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். நியூயார்க்கில் முனைவர் பட்டமும், எம்.பி.ஏ. பட்டமும் பெற்றவர். பின்னர் புகழ்பெற்ற நிறுவனங்களில் பணியாற்றிய அவர், சார்டட் வங்கியின் நிர்வாக இயக்குநர் பொறுப்பு வகித்து பின்னர் அதிலிருந்து 2014 - இல் விலகினார். 2016 தேர்தலில் மதுரை மத்திய தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது பணியும் திமுகவில் பரபரப்பாக தொடர்கிறது.

-ப.திருமலை

கையும் தாமரையும்

தமிழக அரசியல்வாதிகளில் சிறந்த இலக்கியப் பேச்சாளர்களில் ஒருவராக இருப்பவர் குமரி அனந்தன்.

நீண்டகாலமாக காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இருக்கும் இவர் மக்களவை, சட்டமன்றம் ஆகியவற்றில் பலமுறை உறுப்பினராக இருந்தவர். காந்தி காமராஜர் தேசிய காங்கிரஸ், தொண்டர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை காங்கிரசில் இருந்து விலகி நடத்தினாலும் இப்போது காங்கிரஸ் கட்சியில் தொடர்கிறார். வெகுநாட்களாக வர்த்தகர் காங்கிரஸ் என்ற தனி அமைப்பு வைத்திருந்த இவருடைய தம்பி தொழிலதிபர் ஹெச்.வசந்தகுமார் காங்கிரஸ் கட்சியின் இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ ஆகி இருக்கிறார். குமரிஅனந்தனின் குடும்பத்திலிருந்து இன்னொரு நபராக அவரது மகள் மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன் தமிழக பாஜகவின் தலைவராக பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறார். கட்சி தாண்டிய குடும்ப உறவுகளைக் கொள்ளும் அரசியல் பாரம்பரியம் குமரிஅனந்தனாருடையது.

சேலத்தின் தளபதி

திமுகவில் சேலத்தின் தளபதியாக இருந்த வீரபாண்டி ஆறுமுகம் கருணாநிதியிடமே எதிர்த்துக் கேள்வி கேட்கும் சுதந்தரம் பெற்றவராக அறியப்பட்டவர். பலமுறை எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்ட இவர் விவசாயத் துறை அமைச்சராக பணியாற்றினார்.  அவரது மூத்தமகன் செழியன் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளராகவும் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் இருந்தார். செழியன் 2001&ல் மரணமடைந்தார். அதன் பின்னர் வீரபாண்டியாரின் மகன் வீரபாண்டி ராஜா, அரசியலுக்கு வந்தார். 2006 தேர்தலில் வீரபாண்டி தொகுதியில் ராஜா எம்.எல்.ஏ ஆனார். வீரபாண்டி ஆறுமுகம் 2012&ல் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அதன்பிறகு நடந்த இரு தேர்தல்களிலும் ராஜா, வீரபாண்டி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இப்போது சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக அவர் இருக்கிறார். வீரபாண்டியாரின் தம்பி மகனான பாரப்பட்டி சுரேஷும் திமுவில் ஒன்றியச் செயலாளர் பதவி வகிக்கிறார்.

பாட்டாளிக் குடும்பம்!

நான் இதுவரை சட்ட மன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ எந்தப் பதவியிலும் இல்லாதபோது, அன்புமணி அந்தப் பதவிக்கு வருவது எப்படி வாரிசு அரசியலாகும்? அரசியலில் நான் ஒரு முனிவன். கட்சிதான் அன்புமணியை அரசியலில் திணித்ததே தவிர, நான் திணிக்கவில்லை. - இந்து தமிழ் திசை பேட்டியில்(ஜூலை 2018) பாமக நிறுவனர் ராமதாஸ்.

எக்காலத்திலும் நானோ என் குடும்ப உறுப்பினர்களோ அரசியல் பொறுப்புகளுக்கு வரமாட்டோம் என்று மருத்துவர் ராமதாஸ் பல ஆண்டுகளுக்கு முன்பு சொன்னபோது தமிழக அரசியல் சூழல் அறிந்தவர்கள் அவரை வியப்புடன் பார்த்தனர். அவர் சொன்னதில் பாதிதான் நடந்தது. ராமதாஸ் இதுவரை எந்த அரசியல் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளவில்லை. உண்மைதான். ஆனால் அவரது மகன் அன்புமணியைப் பொறுத்தவரை இது நடக்கவில்லை. அவர் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஆகிவிட்டார். இப்போதும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆக இருக்கிறார். இது குறித்த விமர்சனக்கேள்விகள் மருத்துவர் முன்பு வைக்கப்படும்போதெல்லாம் மேலே சொன்ன பதிலை அவர் சொல்வது வழக்கம்.  சின்ன அய்யா என்று அழைக்கப்படும் அன்புமணி பாமகவில் இளைஞரணி தலைவராகவும் இருக்கிறார். அன்புமணியின் மனைவி சவுமியா அன்புமணி சுற்றுச்சூழல் தொடர்பான பணிகளில் பசுமைத் தாயகம் அமைப்பு மூலமாக ஈடுபடுகிறவர். அவரது குடும்பமும் அரசியல் குடும்பமே. அவரது தந்தை எம்.கிருஷ்ணசாமி காங்கிரஸ் எம்பியாக இருந்தவர். தமிழக காங்கிரஸின் தலைவராகவும் இருந்தார். அவரது சகோதரர் விஷ்ணுபிரசாத், இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்ததுடன் எம்.எல்.ஏவாகவும் இருந்தார்.

செப்டெம்பர், 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com