நகுதக் கனரே நாடுமீக் கூறுநர்’... எல்லாவற்றுக்கும் தொடக் கத்தைச் சங்க காலத்தில் தேடும் தமிழர்கள், எதிரிப் படைகளை நோக்கித் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் சூளுரைக்கும் புறநானூற்றுப் பாடலைத் தமிழின் முதல்சொற்பொழிவாகக் கூறலாம். ஆனால் சனநாயக யுகத்திலேயே சொற்பொழிவு என்ற வகைமை உருப்பெற முடியும். எதிரில் அமர்ந்திருக்கும் அனைவரும் சமம் என்ற குடியாட்சித் தத்துவமில்லாமல் மேடைச் சொற்பொழிவு தோன்ற முடியாது. திருக்குறள் சொல்லும் ‘சொல்வன்மை’ கற்றோர் கூடும் அவையில் பேசுவது பற்றியது என்பதை ‘அவை அறிதல்’, ‘அவை அஞ்சாமை’ முதலான அதிகாரங்கள் உணர்த்திவிடும்.
அப்படியென்றால் தமிழின் முதல் பொதுச் சொற்பொழிவு எது? 31 டிசம்பர் 1847இல் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை சிவன் கோயிலில் ஆறுமுக நாவலர் ஆற்றிய ‘பிரசங்க’மே முதல் சொற்பொழிவு என்கிறார் மேடைத் தமிழை விரிவாக ஆராய்ந்துள்ள சிகாகோ மானுடவியலாளர் பெர்னார்ட் பேட். சமூக நிகழ்வுப்போக்குகள் சூரியனைப் போல் குறித்த நேரத்தில் உதிப்பதில்லை. இருப்பினும், கிறிஸ்தவப் பிரசார வடிவங்களின் தாக்கத்தால் ‘பிரசங்கம்’ என்ற புதிய தொடர்பாடல் வடிவம் உருவானது எனப் பேராசிரியர் பேட் முன்வைக்கும் கருதுகோள் மேடைத் தமிழைப் புரிந்துகொள்வதற்கான தொடக்கப்புள்ளி எனக் கொள்ளலாம். சொல்வன்மை மிக்கவர் என்ற பொருள்தரும் ‘நாவலர்’ என்ற பட்டம், பின்னாளில் சிறந்த மேடைப் பேச்சாளரைக் குறிக்கலானது என்பது சுவாரசியமான செய்தி.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மெல்ல உருப்பெற்ற மேடைத் தமிழ் இருவேறாகக் கிளை பரப்பியது. சைவ மறுமலர்ச்சியின் வழியே தனித்த தொரு வடிவமாக முதல் கட்டத்தில் வளர்ந்தது. திருவனந்தபுரம், தூத்துக்குடி, பாளையங்கோட்டை, திருச்சி, சென்னை என்று கால் பரப்பிய சைவ சபைகள் தமிழ்ச் சபைகளாகவும் விளங்கின. 1905இல் நிறுவப்பட்ட சைவ சித்தாந்த மகாசமாஜம் (பெருமன்றம்) அதன் உச்சம் எனலாம். மறைமலையடிகள், திரு.வி.க., கி.ஆ.பெ. விசுவ-நாதம் என்ற மரபில் ஞானியார் சுவாமிகளின் பெயருக்குத் தனி இடம் உண்டு என்று அவர் பேச்சை நேர்நின்று கேட்டவர்கள் பதிவு செய்துள்ளார்கள். 1889இல் திருவனந்தபுரம் தமிழ் பயில் சங்கத்தில் தி. இலக்குமணப் பிள்ளை ஆற்றிய ‘தமிழ் மொழி வளர்த்தல்’, 1892இல் மாநிலக் கல்லூரித் தமிழ்ச் சங்கத்தில் தி.த. சரவணமுத்துப்பிள்ளை ஆற்றிய ‘தமிழ்ப் பாஷை’ ஆகிய சொற்பொழிவுகளை இன்று படித்தாலும் அத்தலைமுறையின் திட்பத்தையும், தமிழால் பிழைப்பு நடத்தும் இன்றைய தமிழ்த் தலைவர்களின் போலிமையினையும் ஒருங்கே உணர முடியும்.
அரங்கக் கூட்டங்களாகவே சைவச் சொற்பொழிவுகள் பெரிது அமைந்திருந்தாலும், பொதுக் கூட்டங்கள் ஆங்கில மொழியிலேயே அமைய முடியும் என்ற மாயையைத் தகர்ப்பதில் இவை வெற்றிபெற்றன.
சைவ சபைகளில் முதலில் அரங்கேறிச் செழுமைபெற்ற தமிழ், அரசியல் மேடை ஏறுவதற்கு இன்னும் கொஞ்சம் காலம் பிடித்தது. 1880களின் தொடக் கத்தில் சென்னை மகாஜன சபையின் சார்பாகத் தமிழக நகரங்கள் சிலவற்றில் பிரச்சா ரக் கூட்டங்களில் ‘சுதேசமித்திரன்’ ஜி. சுப்பிரமணிய ஐயர் தமிழில் பேசியதாகக் குறிப்புகள் கிடைத்தாலும், 1905ஆம் ஆண்டையொட்டிய சுதேசி இயக்கக் காலத்தில்தான் அரசியல் பரப்புரைக்குரிய மொழியாகத் தமிழ் வடிவம் பெற்றது. அரங்குகளுக்கு வெளியே, பொது வெளிகளில் பொதுக்கூட்டங்கள் நடைபெறுவது வாலாயமான நடைமுறையானதும் இக்கட்டத்தில்தான். 1906இல் தொடங்கப்பட்ட சுதேசி கப்பல் கம்பெனிக்குப் பங்குகள் திரட்டு-வதற்காகப் பிரச்சாரக் கூட்டங்களில் தமிழகமெங்கும் வ.உ.சி. உரை-யாற்றினாரென்றாலும் 1907 மே மாதத்தில் வங்காள சுதேசியத் தலைவர் விபின் சந்திர் பால் சென்னைக் கடற்கரையில் ஆற்றிய தொடர் சொற்பொழிவுகள் மேடைத் தமிழுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்ததை மறுக்க முடியாது. ஒலிவாங்கி இல்லாத காலத்தில் ஒரு பொது வெளியில் எப்படி உரையாற்ற வேண்டும் என்ற பாடத்தைத் தமிழ்நாட்டுச் சொற்பொழிவாளர்கள் கண்டுகொண்டார்கள். பாலின் ‘வாக்குத் திறமையும், விவகார நுட்பமும்’ பாரதியைக் கவர்ந்தன. ‘பதினாயிரக்கணக்கான ஜனங்கள் திருவல்லிக்கேணிச் சமுத்திரக் கரை மண்ணில் இவரது அற்புத உபந்நியாசங்களைக் கேட்டுப் பரவசமடைந்து போய்விட்டார்கள்’ என்று அவர் பாராட்டினார்.
‘நீர்க் கடல் ஒரு பக்கம்; ஜனக்கடல் இன்னொரு பக்கம். நடுவண் சிறு தீவென விளங்கியது மேடை. அதிலே பாலர் பொழிந்தார் அமிழ்தம்; சொல்லமிழ்தம்; வீரச்சுவை அமிழ்தம். அதைக் கடல் பருகியது; காற்று அருந்தியது; உடுக்-கள் உண்டன; திங்கள் நுகர்ந்தது. மனிதக் கடலில் அமைதி. புலன்களெல்லாம் செவியைச் சேர்ந்தன’ என்று திரு.வி.க., பாலின் உரைகளை மக்கள் எதிர்கொண்ட விதத்தைப் பதிந்துள்ளார். விபின் சந்திர பால் ஆங்கிலத்தில் ஆற்றிய சொற்பொழிவுகளின் தமிழாக்கம் உடனடியாக நூலாக்கமும் பெற்றிருக்கிறது. குருதியைச் சூடேற்றும் ஆற்றல் வெகுசன மொழிக்கு உண்டென்பதை உணர்ந்த சுதேசி இயக்கத்தினர் சென்னை மூர் மார்க்கெட்டையும் கடற்கரையையும் சுதேசியச் சொற்பொழிவுகளுக்குக் களமாகக் கொண்டனர்.
இதற்குச் சில மாதங்களுக்குப் பிறகு (பிப்ரவரி - மார்ச் 1908) தூத்துக்குடி கடற்கரையிலும் திருநெல்வேலிப் பொருநைக் கரையிலும் நடந்த பொதுக்கூட்டங்களின் மூலமாக வ.உ.சி. என்ற அரசியல் ஆளுமை இந்தியாவெங்கும் அறிமுகமானது. வ.உ.சி.யும் சுப்பிரமணிய சிவாவும் ஆற்றிய சொற்பொழிவுகளைப் பதிவு செய்ய முடியாமல் போலீஸ் உளவாளிகள் திணறினார்கள். இதன் விளைவாகத் தமிழ்ச் சுருக்கெழுத்தை உருவாக்கும் முயற்சிகளை அரசாங்கம் தீவிரப்படுத்தியது. ராஜதுரோகத்தைத் தூண்டும் உரைகளையாற்றியதற்காக வ.உ.சி.க்கும் சிவாவுக்கும் நெடுஞ்சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ‘இந்தியனே உனக்கு மீசை எதற்கு? அது இறால் மீனுக்கும் இருக்கு’ என்ற முழக்கம் சுரேந்திரநாத் ஆர்யாவைச் சிறைக்குள் தள்ளியது. இந்தப் பின்னடைவிலிருந்து மீள ஒரு பதிற்றாண்டாகியது.
முதல் உலகப் போர் முடிவெய்திய காலப்பகுதியில் மேடைத் தமிழ் ஏறுமுகம் காட்டுவதற்கு அரசியல் தமிழும், சைவத் தமிழும் இணைய வேண்டியதாயின. இந்த இணைவின் பருவுருவமாகத் திரு.வி.க. விளங்கினார். சென்னை இராயப்பேட்டை பாலசுப்பிரமணிய பக்தஜன சபையை நிறுவி, சைவப் பிரச்சாரகர் கதிரைவேற் பிள்ளையின் செல்வாக்கால் சைவ உலகில் உழன்றுவந்த திரு.வி.க., விபின் சந்திர பாலின் சொற்பொழிவுகளைக் கேட்டு அரசியல்மயமானவர். 1917 தொடங்கி தொழிலாளர் இயக்கத்தில் பங்கேற்றதுடன் அவருடைய செந்தமிழ் வெகுசனத் தமிழோடு உறவாடிப் புது வடிவெடுத்தது. கற்றோர் அவையில் மட்டுமல்லாது, கல்லாத தொழிலாளர் கூட்டங்களிலும் திறமாகக் கருத்துப் பரிமாற்றம் செய்யக்கூடியவராகத் திரு.வி.க. உருமாறினார். இதன் நெருக்கடிகளை உணர்ந்தவராகவும் அவர் இருந்தார் என்பது முக்கியமாகக் கவனிக்க வேண்டிய செய்தி. ‘பிரசங்கம்’, ‘உபந்நியாசம்’ என்றெல்லாம் சுட்டப்பட்டு வந்த புதிய கருத்தாடல் வடிவத்திற்குப் ‘பொழிவு’, ‘சொற்பொழிவு’, ‘உரை’ என்று பெயரிட்டவரும் திரு.வி.க.வே ஆகலாம். 1928இலேயே அவருடைய தலைமையுரைகளெல்லாம் நூலாக்கம் பெற்று, அவருடைய காலத்திலேயே நான்கைந்து பதிப்புகளையும் கண்டன (‘தமிழ்த் தென்றல் அல்லது தலைமைப் பொழிவு’).
காந்தியின் வருகையோடு வெகு சனத்தன்மை பெற்றுவிட்ட தேசிய இயக்கத்தின் வளர்ச்சியோடு மேடைத் தமிழ் வளம் பெற்றது. இன்று பலரும் மறந்துவிட்ட ‘பெரியாரின் நண்பர்’ டாக்டர் பி. வரதராஜுலு நாயுடுதான் தமிழகம் முழுவதும் அறியப்பட்ட முதல் வெகுசனச் சொற்பொழிவாளர் என்றால் பலருக்கும் வியப்பாக இருக்கும். 1918இல் நடந்த மதுரைத் தொழிலாளர் வேலை நிறுத்தத்திற்கு நாயுடுவே காரணம் என்று அவர் சிறைப்பட்டது தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய நிகழ்ச்சியாகும். ஒன்றுக்கு மேற்பட்ட மேடைகளோடு 1919 ஏப்ரல் 9இல் சென்னைக் கடற்கரையில் நடந்த சத் தியாகிரக நாளும் மேடைத் தமிழ் வரலாற்றில் ஒரு மைல்கல்.
1920களில் ஊருக்கு ஊர், மாவட்டத்துக்கு மாவட்டம் என நடந்த மாநாடுகள், பொதுக் கூட்டங்கள் வழி மேடைத் தமிழ் வலுப்பெற்றது. 1925இல் காங்கிரசிலிருந்து பெரியார் பிரிந்தபின் சுயமரியாதை இயக்கமும் அதன் பங்கைச் செலுத்தத் தவறவில்லை. அரசியல் இயக்கங்களில் சொற்பொழிவாளர்களுக்குத் தனி இடம் கிடைக்கலானது. இந்தப் பின்னணியில்தான் கல்கி, ‘பிரசங்கமும் பிரசங்கிகளும்’ என்ற அற்புதமான கட்டுரையை 1931இல் ‘ஆனந்த விகடனி’ல் எழுதினார்.
மேடைச் சொற்பொழிவு என்ற அரசியல் கருத்தாடல் வடிவம் பருவமெய்திவிட்டதைக் கல்கியின் கட்டுரை காட்டுகிறது. மேடைத் தமிழ் பற்றிய முதல் விரிவான பரிசீலனையும் இதுவே. தமிழ்நாட்டுப் பேச்சாளர்களின் குறைபாடுகள் என்ன என்பதைத் தம் பாராட்டுரைகளினூடாகக் கல்கி உணர்த்திவிடுகிறார். நீண்ட பிரசங்கங்கள் கல்கிக்குச் சலிப்பைத் தந்திருக்கின்றன. ஆபிரகாம் லிங்கனின் கெட்டிஸ்பர்கு சொற்பொழிவு 272 சொற்கள் கொண்டது; இரண்டு நிமிடத்தில் முடித்துக்கொள்ளப்பட்டது என்பதையும் இங்கு நினைவுபடுத்திக்கொள்வோம். அண்ணாவின் அரசியல் நுழைவுக்கு முன்பே இக்கட்டுரையை எழுதிய கல்கி, அலங்கார நடையினையும் வெறுத்துள்ளார். இராஜாஜி, சத்தியமூர்த்தி, வரதராஜுலு நாயுடு, டி.எஸ்.எஸ். ராஜன், திரு.வி.க. ஆகியோரை விரிவாக மதிப்பிட்ட கல்கி, பெரியாருக்கு இப்பட்டியலில் தனி இடம் தருகிறார். ‘அதிக நீளம் என்னும் ஒரு குறைபாடு இல்லாவிட்டால், ஈரோடு ஸ்ரீமான் ஈ.வே. இராமசாமி நாய்க்கருக்குத் தமிழ்நாட்டுப் பிரசங்கிகளுக்குள்ளே முதன்மை ஸ்தானம் ஒரு கணமும் தயங்காமல் அளித்துவிடுவேன்’ என்று தொடங்கும் கல்கி, ‘அவர் உலகானுபவம் என்னும் கலாசாலையில் முற்றுணர்ந்த பேராசிரியர் என்பதில் சந்தேகமில்லை. எங்கிருந்துதான் அவருக்கு அந்தப் பழமொழிகளும் உபமானங்களும் கதைகளும் கற்பனைகளும் கிடைக்கின்றனவோ நான் அறியேன்’ என்றும் வியக்கிறார். ‘பாமர ஜனங்களை வசப்படுத்தும் ஆற்றல் தமிழ்நாட்டில் வேறெவரையும்விட அவருக்கு உண்டு என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இதிலிருந்து அவருடைய பிரசங்கம் படித்தவர்களுக்கு ரஸிக்காது என்று முடிவு செய்தல் பெருந்தவறாகும்,’ என்று முடிக்கிறார் கல்கி.
பெரியாரின் சொற்பொழிவு பாணிக்கு முற்றிலும் மாறான ஒரு முறை அவருடைய வழித்தோன்றலிடமிருந்தே உருவானது என்பதுதான் வியப்பு. 1935ஆம் ஆண்டு திருப்பூரில் பெரியாரை நேரில் சந்தித்த அண்ணா இரண்டொரு ஆண்டுகளிலேயே தமிழகம் அறிந்த பேச்சாளராக ஆகிவிட்டார். அதுவரையான பேச்சுத் தமிழ் முறையை அண்ணா புரட்டிப்போட்டார் என்றால் அதில் மிகை இல்லை. அடுக்குமொழியை கையாண்டது மட்டுமல்லாமல் தமிழின் மரபான எழுவாய் பயனிலை வரிசையையும் குலைத்து, தமிழ்த் தொடரமைப்பையே புரட்டிப்போட்டார். அணியிலக்கணம் கூறும் எந்த அலங்காரத்தையும் அண்ணா கையாளாமல் விடவில்லை. கேட்போருக்கு, முக்கியமாக இளைஞர்களுக்கு, புதுமையாகவும் பரவசமூட்டுவதாகவும் அவர் பேச்சு அமைந்தது. பெரியாரின் கடுமையான கருத்துகளில் தண்ணீர் விளாவி, இனிப்புச் சேர்த்து, பரந்துபட்ட மக்களை அணிதிரட்டும் கருவியாக மேடைத் தமிழை ஆக்கியவர் அண்ணா. ஒலிபெருக்கித் தொழில்நுட்பம் மேடையேறிய தருணத்தில் அண்ணாவின் அரசியல் நுழைவு அமைந்தது. காது குருத்து தெறிக்கும் அளவுக்கு உரக்கப்பேச வேண்டிய தேவை இதனால் தவிர்க்கப்பட்டது. தமிழ்நாட்டுப் பேச்சாளர்கள் இதற்கேற்பத் தம் குரலையும் பேசுமுறையையும் தகவமைத்துக்கொள்வதற்குக் காலம் பிடித்தது. உரக்கப் பேசியே தம் உடல் நலிந்ததாக முதிய திரு.வி.க. நொந்துகொண்டிருக்கிறார். ஜீவா செவித்திறனை இழந்ததில் இதற்குப் பங்குண்டு. ஒலிவாங்கிக் கருவியோடு அண்ணா கொண்ட உறவு அலாதியானது. ஏற்ற இறக்கங்களுக்கும், இடைவெளிகளுக்கும், நிறுத்தங்களுக்கும் இடமளிக்கும் தொழில் நுட்பம் அது. தொடக் கத்தில் இறைந்து பேசிய கருணாநிதி பின்னர் அப்பாணியை மாற்றிக் கொண்டார். ஈ.வெ.கி. சம்பத், ம.பொ.சிவஞானம் பேன்றோர் ஒலிவாங்கியை நன்கு கையாளத் தெரிந்த பேச்சாளர்கள். ஒலிபெருக்கித் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்ட செய்தியை இதுவரை வைகோவுக்கும் சீமானுக்கும் யாரும் தெரிவிக்கவில்லை எனத் தெரிகிறது.
1943இல் கம்பராமாயணம், பெரியபுராணம் எரிப்புத் தொடர்பாக ரா.பி. சேதுப்பிள்ளை, சோமசுந்தர பாரதி ஆகியோருக்கும் அண்ணாவுக்கும் இடையே நிகழ்ந்த விவாதத்தை முதலில் குறித்த சைவச் சொற்பொழிவு மரபுக்கும் திராவிட அரசியல் உரை மரபுக்குமான மோதலாகப் பார்க்கலாம்.
சைவச் சொற்பொழிவு மரபு குன்றக்குடி அடிகளார்வழிப் பின்னர் தனிப்பாதையில் பயணப்பட்டது.
1940கள் மேடைத் தமிழின் பொற்காலம். ‘அக்கிராசனாதிபதி’ (கூட்டத்/விழாத்) ’தலைவ’ரானார். ‘சகோதர, சகோதரிகளே’ என்ற விளி, ‘பெரியோர்களே, தாய்மார்களே’ என்றானது. மேடைப் பேச்சு அரசியலுக்கு மூலதனம் என்றாயிற்று. காசு கொடுத்துப் பேச்சைக் கேட்கவும் மக்கள் தயங்கவில்லை. அண்ணாவின் பேச்சுக்கு ஒரு ரூபாய் டிக்கெட் விற்கப்பட்டிருக்கிறது. மறைமலையடிகள் கூட்டத்திற்கு ஓராயிரம் ரூபாய் கட்டணம் வாங்கியிருக்கிறார்.
தங்குவதற்குத் தனிவீடு, குளிக்க வெந்நீர், முனைமழுங்காத பச்சரிசி, புத்துருக்கு நெய்... இவை வேறு!
பேச்சுக்கலை பற்றிய கையேடுகள் 1940களில் வெளிவரலாயின. இன்று ‘மறைந்துவிட்ட’ மா.சு. சம்பந்தன் ‘சிறந்த பேச்சாளர்கள்’ என்றொரு நூல் எழுதினார். திரு.வி.க.,
சோமசுந்தர பாரதி, பெரியார், ரா.பி. சேதுப்பிள்ளை, அண்ணா, ஜீவா முதலானவர்கள் பற்றிய சித்திரங்கள் இவற்றில் உண்டு.
சத்தியமூர்த்தியின் உரைகள் 1943இல் அவர் மறைந்த பிறகு ‘சத்தியமூர்த்தி பேசுகிறேன்‘ என்று நூலாக வந்தது. அன்புப்பழம்நீ, வீரராகவன் என்பவரோடு சேர்ந்து ‘பேச்சுக்கலை‘ என்றொரு சிறு நூல் எழுதினார். அண்ணாவின் சொற்பொழிவுகள் சிலவற்றை அவர் பேசப்பேசப் பெயர்த்தெழுதி நூலாக்கியவர் அன்புப்பழம்நீ என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.
1949இல் தி.மு. தெய்வசிகாமணி ஆச்சாரியார் ‘மேடைத் தமிழ்‘ என்ற பெரியதொரு நூலை வெளியிட்டார். காங்கிரஸ் மாநாட்டில் முதன்முதலில் (1887 சென்னை) தமிழில் பேசியவர் என்ற பெருமைக்குரிய தி.மு. மூக்கண்ணாச்சாரியின் மகன் இவர். ‘ஆச்சாரி’ என்ற பெயர் தாங்கும் உரிமை விசுவகர்மாவினர்க்கே உரியது என்றும், வைணவப் பார்ப்பனர் ‘ஆசாரி’ என்று எழுதுவதே முறை என்றும் இராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது போராடி வென்றவர் இவர். 41 இயல்களில் மேடைத் தமிழின் இலக்கணத்தை வகுக்கும் தெய்வசிகாமணி ஆச்சாரியார் தமிழின் முக்கியச் சொற்பொழிவாளர்களை உதாரணமாகவும் மேற்கோளாகவும் காட்டுகிறார்.
விடுதலை பெற்றபின் தேர்தல் அரசியலோடு மேடைத் தமிழ் இணைந்து வளர்ந்தது தனிக்கதை. சமூக ஊடகங்களே தலையாய தொடர்பாடல் முறையாக மாறிவிட்ட நிலையில் மேடைத் தமிழின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி மட்டும் இப்போது எஞ்சி நிற்கிறது.
ஆகஸ்ட், 2013.