பாலகுமாரனின் நாவல்கள் பெரும்பாலும் பெண்களை மையப்படுத்தியவை. அதில் வரும் ஆண்களும்கூட பெண்களுக்காக பெண்களைவிட அதிகம் யோசிப்பார்கள். மெர்க்குரிப் பூக்கள் நாவலில் பாலகுமாரன் இரண்டு ஆண்களை மையப்படுத்துகிறார். கம்யூனிஸ்ட் போராளியாக காம்ரேடாக வரும் கோபாலன் ஒருவன். இன்னொருவன் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் சங்கரன்.
கோபாலன் மிகவும் ஒரு நேர்மையான கம்யூனிஸ்ட்டாகவே நாவலில் சித்திரிக்கப்படுகிறான். அவன் மனத்தில் எந்த ஒரு கபடமும் திட்டமிட்ட பின்வாங்குதலும் இல்லை. ஆனால் போராட்டத்தின் மீதான அடக்குமுறை அவனுக்கு யதார்த்தமான வலியை நினைவுக்குக் கொண்டுவருகிறது. பயந்து ஓடுகிறான். முதல் அத்தியாயத்தில் கொலை செய்யப்பட்ட தோழர் கணேசனின் மனைவி சாவித்திரி வீட்டில் தஞ்சமடைகிறான்.
அங்கே சாவித்திரிக்கும் கோபாலனுக்கும் இடையில் நடக்கும் விவாதங்கள் அவனுக்குப் பலவற்றைப் புரியவைக்கிறது. காமத்திலிருந்து காதல் வரைக்கும் கம்யூனிஸத்திலிருந்து யதார்த்தம் வரைக்கும் கோபாலன் புரிந்து கொள்கிறான். இதில் முக்கியமானது, அவனை அவனே அறியாமல் தொடரும் அவனது ஜாதி சார்ந்த நிழல். கோபாலன் ஒரு பிராமணன். சாவித்திரியின் கேள்விகள் கம்யூனிஸம் என்பது ஒரு சாய்ஸ்தானே ஒழிய தன் லட்சியமல்ல என்பதை அவனை உணரவைக்கிறது. மா சே துங் நம் தேசத்துக்கானவர் அல்ல என்று புரிந்துகொள்கிறான். சியாமளா தண்டகம் நினைவுக்கு வருகிறது. அவன் சாவித்திரியைக் கைக்கூப்பித் தொழும் நிலைக்குப் போகிறான். அவனுக்கு உபநயனம் செய்வித்த நாளில் ஒரு குருவை நோக்கிக் கைக்கூப்பி நின்றிருந்த சிறுவனாய் மீண்டும் மாறிவிட்டான் என்று நாம் நம்ப இடமிருக்கிறது. காமத்தைக் கட்டறுத்து, நட்பார்ந்த காதல் சொல்லப் பழகுகிறான்.
கம்யூனிஸத்தைவிட யதார்த்தம் மேலென்று முன்னேறுகிறான். வேலைநிறுத்தம் முடிந்து வேலைக்குச் செல்லும் முதல் நாளில் முற்றிலும் ஒரு யதார்த்தவாதியாக அவன் வெளிப்படுகிறான். நக்ஸலைட்டுகளுடனான அவனது பேச்சுக்கள் நமக்குப் பின்புலமாக நினைவுக்கு வரும்போது நிச்சயம் நாம் ஒரு புன்னகை புரிவோம்.
கோபாலன் தீவிர கம்யூனிஸத்திலிருந்து யதார்த்தம் நோக்கி வருகிறான் என்றால், சங்கரன் யதார்த்ததில் இருந்து கம்யூனிஸம் நோக்கிப் போகிறான். இதில் முக்கியமானது, அவனுக்கும் கம்யூனிஸம் என்பது இன்னொரு சாய்ஸே அன்றி லட்சியமல்ல. இதில் இன்னொரு ஒற்றுமை, சங்கரனும் ஒரு பிராமணன். இந்த ஒற்றுமைக்குப் பின்னர் சில தீர்மானமான காரணங்கள் இருக்கலாம்.
மேலோட்டமான இலக்கியமும் சினிமாவும் சேர்த்து உருவாக்கிய ஒரு விடலைப் பிஞ்சாகவே நம்மால் சங்கரனைப் பார்க்கமுடிகிறது. ஆனால் அவனுக்குள் அவனைப் பற்றிய மிதமிஞ்சிய கற்பனைகள் உள்ளதையும் நாம் உணரலாம். மிகத் தீவிரமாக மிக உறுதியாக அவன் மேற்கொள்ளும் கள்ள உறவு இல்லாமல் போகும்போது அவன் தற்கொலைக்குப் போகிறான். அவனைப் பற்றிய அவனது கற்பனைகள் உடைந்து போகின்றன. தியாகராஜர் கீர்த்தனையும் பாரதி வரிகளும் அவன் எழுதித் தள்ளும் புதுக்கவிதைகளும் ஒரு சாய்ஸாகத்தான் அவனுக்கு இருந்திருக்கும். இந்தத் தற்கொலையும் அப்படியே. அப்போது கம்யூனிஸம் இன்னுமொரு சாய்ஸாக அவனை வரவேற்கிறது. மிகத் தெளிவாகவே அவன், சியாமளி இல்லையென்றால் கம்யூனிஸம் என்று போகிறான்.
கோபாலனுக்கும் சங்கரனுக்கும் சில ஒற்றுமைகளை நாம் பார்க்கமுடிகிறது. இந்த கதாபாத்திரங்களின் நிலையற்ற தன்மை ஒருவேளை நாவலாசிரியரிடம் இருந்து வந்திருக்கக்கூடும். பாலகுமாரன் நாவல்களில் பல்வேறு தெறிப்புகளில் நாம் பாலகுமாரனை சந்தித்துக்கொண்டே இருப்போம். ரங்கசாமியை அலைக்கழிக்கும் மாலனின் ‘வீடென்று எதனைச் சொல்வீர்’ கவிதையும், அவ்வப்போது ஆங்காங்கே வந்துசெல்லும் திரைப்பாடல்கள் தரும் அலைக்கழிப்பும் பாலகுமாரனின் அலைக்கழிப்புகளாக இருக்கக்கூடும். சிம்சன் தொழிற்சாலையில் நடைபெற்ற வேலை நிறுத்தத்தை முன்வைத்து அவர் எழுதிய இப்புனைவில் பல உண்மைச் சித்திரங்கள் பாலகுமாரனோடு சேர்ந்து உறைந்திருக்கிறது என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை.
(ஹரன் பிரசன்னா, எழுத்தாளர்)
நவம்பர், 2014.