இப்போ படம் எடுக்கறது ஈஸி, அதை வெளியிடுறதுதான் ரொம்ப கஷ்டம் என்று எல்லாத் தயாரிப்பாளர்களுமே சொல்கிறார்கள்.
புதியவர்களின் படங்கள் மட்டுமின்றி பெரிய நடிகர்களின் படங்கள் கூட சொன்ன நாளில்
வெளியாக முடியாத நிலை அண்மைக்காலமாக அதிகரித்திருக்கிறது. அதற்குக் காரணமாகச்
சொல்லப்படுவது, தயாரிப்பாளரின் பொருளாதாரச்
சிக்கல்.
சில வாரங்களுக்கு முன் விஜய்சேதுபதி நடித்த சிந்துபாத் படம் இந்தச் சிக்கலைச் சந்தித்தது. கடைசியில் அவர் ஒரு கோடி கொடுத்து அந்தப்படம்வெளியானது. கடந்த வாரம் (ஜூலை 19) வெளியான அமலாபால் நடித்த ஆடை
இச்சிக்கலைச் சந்தித்தது.
பின்னர் அமலாபால் பண உதவி செய்து படத்தை திரைக்கு கொண்டுவர உதவி உள்ளார். ஏன் இந்த நிலை? எதனால் தொடர்ந்து இப்படி நடக்கிறது?
திரைப்படத் தயாரிப்பு நிறுவனமொன்றில்
தேநீர் குடித்துக் கொண்டே தயாரிப்பில் உள்ள பலம் பலவீனங்களைப் பற்றிப் பேச்சு வந்த போது, இப்போது நாம் குடித்துக் கொண்டிருக்கும் தேநீரின் விலை பத்து ரூபாய், இதுவே இந்த நிறுவனத்தின் கணக்கில் வந்தால் பத்து பெருக்கல் முப்பத்தாறு சதவீதம்என்றார்.
எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. அப்போதிருந்து எந்த திரைப்பட அலுவலகம் போய் தேநீர் குடித்தாலும் அந்த எண்ணம் வருவதைத் தடுக்கமுடியவில்லை.
இது என்ன கணக்கு?
திரைப்படத்தயாரிப்பில் ஈடுபடுகிறவர்கள் பெரும்பாலும் சொந்தப்பணத்தை வைத்துக் கொண்டு படம் தயாரிப்பதில்லை.வட்டிக்குப் பணம்வாங்கித்தான் படமெடுக்கிறார்கள்.
எடுத்துக்காட்டாக, தினக்கூலி அல்லது மாத வருமானத்தில் குடும்பம் நடத்தும் சாமானியரான உங்களுக்கு ஏதோவொரு வகையில், நடிகர் விஜய் நண்பர் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
அவர் உங்களுக்கு உதவி செய்யும் விதமாக,
நீங்கள் படம் தயாரியுங்கள் நான் நடிக்கிறேன் என்று சொல்கிறார். அதற்காக உங்களிடம் ஒரு ஒப்பந்தமும்போட்டுவிடுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். உடனே நீங்கள் கோடீசுவரராகி விடுகிறீர்கள்.
விஜய் உங்கள் படத்தில் நடிக்கிறாராமே? எங்களிடம் ஃபைனான்ஸ் வாங்கிக் கொள்ளுங்கள் மற்றவர்களை விடக் குறைந்த வட்டிக்குத் தருகிறேன் என்று பத்துப்பேர் உங்களைச் சுற்றி வருவார்கள்.
விஜய் சம்பளம் ஐம்பது கோடி இயக்குநருக்கு இருபது, மற்றவர்களுக்குப் பத்து படப்பிடிப்பு நடத்த இருபது கோடி, மற்ற செலவுகள் பத்து கோடி ஆகமொத்தம் 110 கோடி பட்ஜெட் என்றால் படத்தின் நெகட்டிவ் உரிமையை வைத்துக்கொண்டு ஐம்பதிலிருந்து அறுபது கோடி வரை பணம்
கொடுக்க ஆட்கள்தயாராக இருக்கிறார்கள்.
அப்பணத்தில் நீங்கள் படமெடுத்துக் கொண்டிருக்கும்போதே, படத்தை வெளியிடும் உரிமையை எங்களுக்குக் கொடுங்கள் என்று பலர் போட்டிபோடுவார்கள். அவர்களிடம் முன்பணம் வாங்கி மொத்தப்படத்தையும் முடித்து வெளியிட்டுவிடலாம்.
எல்லாம் சரியாக நடந்தால் பத்து முதல் இருபது கோடி வரை இலாபம் கிடைக்கும். இது பெரிய நடிகர்களின் படங்களின் கணக்கு.
சின்ன பட்ஜெட் படங்களின் கணக்கு என்னவென்றால், மொத்தம் மூன்று கோடி பட்ஜெட், வீட்டையோ நிலத்தையோ அடமானம் வைத்து மூணு வட்டிக்குக்கடன் வாங்குவார்கள்.
மாதம் ஒன்பது இலட்சம் வட்டி. ஆறு மாதங்களில் படத்தை எடுத்து வெளியிட்டுவிடலாம் என்று கணக்குப் போடுவார்கள். ஆறு மாதத்துக்கு 54 இலட்சம் வட்டி. ஆக மொத்த பட்ஜெட் 3.54 கோடி. நம்ம படம் நல்ல படம் கண்டிப்பாக ஐந்து கோடிக்கு விற்றுவிடலாம், கடைசியில் சுமார் ஒன்றரை கோடி இலாபம் கிடைக்கும் என்று கணக்குப்போடுவார்கள்.
இரண்டு வட்டி மூணு வட்டி என்று பேச்சு வழக்கில் சொல்லப்படும் கணக்குக்கு, ஆண்டுக்கு 24 சதவீதம் 36 சதவீதம் என்று அர்த்தம்.
திட்டமிட்டபடி எல்லாம் நடந்துவிட்டால், ஓரிரு கோடி இலாபம் கிடைக்கலாம். படம் பெரிய வெற்றி என்றால் இன்னும் கூட இலாபம் கிடைக்கும். ஆனால் திட்டமும் இல்லை, திட்டமிட்டபடி நடப்பதும் இல்லை என்பதால் எல்லாப் படங்களுக்குமே சிக்கல் வருகிறது.
பத்து கோடி பட்ஜெட் போட்டு தொடங்கிய படம் முடியும்போது பதினைந்து ஆகிவிட்டால், உடனே அடுத்த படத்தை அறிவித்து அந்தப்படத்தின் பெயரில் கடன் வாங்கி இந்தப்படத்தை வெளியிடுவார்கள். இப்படித்தான் கடன் சேருகிறது.
ஒரு கட்டத்தில் சமாளிக்க முடியாமல் போகும். அப்போது விசயம் வீதிக்கு வரும். இயக்குநர்கள் லிங்குசாமி, சசிகுமார் உள்ளிட்டோர் இந்த வகைக்கு சிறந்த எடுத்துக்காட்டு.
திரைப்படம் என்பது இயக்குநர்களின் மீடியம் என்பதை உணர்ந்து, சரியாகத் திட்டமிட்டுப் படமெடுக்கும் இயக்குநரை மட்டும் தேர்ந்தெடுத்து விட்டால்இவற்றில் ஐம்பது சதவிகித சிக்கல்கள் குறையும். வட்டி, வட்டிக்கு வட்டி என்று கட்டி பலர் அழிந்திருக்கிறார்கள்.வட்டிக்கு வாங்கிப் படமெடுத்து புகழடைந்தவர்களும் இருக்கிறார்கள். பலனடைந்தவர்களை விட பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் வாழ்க்கையையே தொலைத்தவர்கள் ஏராளம் என்பதால் இது தவறானதாகத் தெரிகிறது.
கடந்த ஆண்டு விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் 96. அப்படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபாலின் முந்தைய பட சிக்கல்கள் காரணமாக பட வெளியீடு தடைபட்டது. அப்போதும் விஜய்
சேதுபதி ஒன்றரை கோடி கொடுத்து படம் வெளிவர உதவி செய்தார். அப்பட வெற்றிக்குப் பிறகு அனைவருக்கும் நன்றி சொன்ன விழாவில் பேசிய விஜய்சேதுபதி,''தயாரிப்பாளர் நந்தகோபால் பட்ட கஷ்டத்தை நான் நேரில் பார்த்தேன். வலித்தது. இது என்னமோ என்னுடைய படக்குழுவினருக்கு மட்டும் நடந்த விசயமில்லை. காலங்காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது,'' என்றார்.
கந்துவட்டிக் கொடுமை என்று பலர் கொதிக்கிற நேரத்தில், சிலர் உயிர்விடும் அதே நேரத்தில், இன்னொரு இடத்தில் ஒருவர் கையெழுத்துப் போட்டு வட்டிக்குப் பணம் வாங்கிக் கொண்டிருப்பார். இதுதான் எதார்த்தம்!