அன்று லேசான தூறலிருந்தது. முற்ற மேடையில் ஐம்பது அறுபது பேர் உட்கார்ந்திருந்தார்கள். ஒரு நீண்ட இடைவெளிக்குப்பின் சுந்தர ராமசாமி பேச ஆரம்பித்தார். ஓர் இலக்கியக் கூட்டத்திற்கு இந்தளவிற்கு ஆட்கள் போதுமானது. நான் ஒரு சந்தோஷமான மனநிலையிலிருக்கிறேன். இந்த மேடையும், இந்த மழையுமே அதற்குக் காரணம். என் பேச்சிற்கு பின்னணி இசைமாதிரி இந்த தூறல் லயம் சேர்க்கிறது. நான் ஒரு நல்ல பேச்சாளனில்லை என பவா சொன்னார். அது உண்மைதான். நான் பேச்சில் நம்பிக்கையற்றவன். எழுத்தாளன் பேச ஆரம்பிக்கும்போது, அவன் தன் மன நுட்பத்தை இழந்துவிடுகிறான். எதிரில் கிடைக்கும் ஆரவாரத்தில் எழுத்தைத் தொலைத்துவிடுகிறான். என அவர் துவங்கின விதம் அம்மழையைவிட மகத்துவமானது.
அன்றிரவு ஒரு மணிக்கு மேல் அவர் அன்று ஆற்றிய ஒன்றரை மணி நேர உரையை டேப்ரிக்கார்டரில் போட்டுக் கேட்டேன். அவ்வுரையிலிருந்து ஒரு வார்த்தையைக் கூட என்னால் நீக்க முடியவில்லை.
பேச்சின் இலக்கணமாக இதை எனக்குள் வரையறுத்துக்கொண்டேன். அதற்கு அடுத்தமாதமே எங்கள் முற்ற மேடைக்கு ஜெயகாந்தன் வந்திருந்தார். அறுநூறு எழுநூறுபேர் கூடியிருந்தார்கள். அங்கு சூழ்ந்த மௌனத்தை உடைத்து அவர் பேச ஆரம்பித்தார். சூடு தாங்காமல் நான் தள்ளி உட்கார்ந்து கொண்டேன். அம்மேடையை நடமாடும் களம்மாதிரி அவரே அமைத்துக் கொண்டார். உடலும் மனமும் மொழியை சுவீகரித்து உமிழ்ந்த உரை அது. அது இயல்பற்றது. குறிப்புகளோ, தாட்களோ, தேவைப்படாத பிரவாகமது.
ஜே.கே. தன் உரையை இப்படி ஆரம்பித்தார்.
‘நான் கடவுள் நம்பிக்கையற்றவன். ஆனால் என் சிறுவயதில் அப்படி ஒரு நம்பிக்கை எனக்கு இருந்திருந்தால் கடவுளிடம் ஒரு கோரிக்கையை திரும்ப திரும்ப வேண்டினேன். அது “என் அப்பன் எப்ப சாவான்?” என்ற ஒற்றை வரிக் கோரிக்கை. திரும்பி அடிக்க முடியாத, உறவுமுறைகளால் சிறுமைப்படுத்தப்பட்ட ஒரு சிறுவனின் கையாலாகாதனத்தின் வெளிப்பாடு அது’ கூட்டம் முன்னிலும் மௌனத்தில் கரைந்திருந்திருந்தது.
‘யாரோ வீட்டில் தென்னங்கன்றுகளை நட்டுவிட்டார்கள். ஊற்றிய நீரிலும், பெய்த மழையிலும் அவை திமிர்த்தனமாக வளர்ந்ததோடு மட்டுமல்ல காய்த்தும் தீர்த்தன. வளர்க்கத் தெரிந்த எனக்கு அதை மரமேறிப் பறிக்கத் தெரியவில்லை. பரந்து விரிந்து சென்னையில் மரமேறிப் பறிப்பவர்களைத் தேடி கண்டுபிடிக்கவும் முடியவில்லை. ஓரு பிந்தைய இரவில் மரத்திலிருந்து காய்கள் சரமாரியாகத் தரையில் விழுகின்றன. கண்விழித்துப் பார்த்தால் மரத்தின் உச்சியில் ஒருவனும் தரையில் ஒருவனுமாய் இயங்குகிறார்கள். நான் ஜன்னலைத் திறந்ததை கவனித்த அவர்கள் ஓட யத்தனித்தார்கள். அவர்களை வார்த்தையால் தடுத்தேன்.
ஓடாதப்பா, உங்களைத்தான் நான் பகலெல்லாம் தேடினேன். நீங்க கூப்பிடாமலேயே ராத்திரியில வந்திருக்கீங்க. எவ்வளவு முடியுமோ அவ்வளவு பறிங்க. எனக்குப் பத்துகாய் வச்சிட்டு மீதியை எடுத்திட்டு போங்க என்று நான் ஜன்னலை சாத்தினேன். விடியும் வரை காய்கள் விழும் சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது. விடியும் போது நான் ஒரு முடிவுக்கு வந்தேன்.
‘திருடுபவனெல்லாம் திருடனில்லை இந்த சூத்திரம் புரிகிறதா? எழுதுபவனெல்லாம் எழுத் தாளனில்லை’ எனக்கு அச்சூத்திரம் புரிய பெருநாட்களானது. ஒரு நல்ல உரை நமக்குள் எப்போதோ கேட்ட சங்கீதத்தின் உச்சம் மாதிரி ரீங்காரமிட வேண்டுமென்பதை எனக்கு ஜே.கே.வின் உரைதான் உணர்த்தியது. அது இயல்பு போலவும், அவரே வலிய வர வழைத்துக் கொண்டது போலவும் தோன்றும் அந்த கம்பீரம், எதிரிலிருக்கும் பார்வையாளனை அசையவிடாமலும், அவனுக்குள் வேறெதுவும் நுழைந்துவிடாமலும் பார்த்துக் கொள்ளும். எப்போதுமே இதே கம்பீரம்தான் என்பதற்கு இல்லை, சில சமயம் அதுவேறு மாதிரி பரிணமிக்கும். நல்ல வெயிலில், நதிநீரில் மின்னும் ஒற்றை ரூபாய் நாணயம் மாதிரி.
“குழந்தைகள் பெண்கள் ஆண்கள்” நாவலை வெளியிட்டு சென்னையில் ஜே.கே. பேசினார். இன்னும் என் மனதில் அவ்வுரை வரி வரியாய், காதலியின் முதல் கடித வரிகளைப் போல ஒட்டிக்கிடக்கிறது.
“நான் ஒரு நல்ல வாசகனில்லை என்று அவ்வுரையை ஜே.கே. ஆரம்பிக்கிறார். ‘ஒரு நல்ல வாசகன் சங்கீதம் கேட்பதுமாதிரி வாசிக்க வேண்டும். நான் தமிழ்சினிமா பார்ப்பதுமாதிரி வாசிப்பவன். இந்நாவலில் வரும் லச்சம் என்கிற பத்துவயது கூட நிரம்பாத ஒரு சிறுவன் இறந்து போகிறான். நிஜவாழ்வில் மனிதர்களின் மரணத்தை ஏற்றுக் கொள்கிற என்னால், படைப்பில் அது நிகழுகிறபோது மனம் பதறுகிறது. கோடானுகோடி பேர் சேர்ந்து ஜீவிக்கும் இவ்வுலகில் அச்சிறுவனையும் ராமசாமி வாழவிட்டிருக்கலாம் என்று தொடர்ந்த அந்த உரையை, அதன் அளவிற்கு கவித்துவத்தோடு கொண்டு போனார். அது அவரோடு சேர்ந்து ஒரு உச்சத்திற்குப் போய்க் கொண்டேயிருந்தது. கேட்டுக் கொண்டிருந்த என்னை மாதிரியான வாசகர்கள் அவர்களைப் பின் தொடர்ந்து போய்க் கொண்டேயிருந்தோம். யாரும் எதிர்பாராத ஒரு கணத்தில் அவர் அப்படியே நிறுத்துகிறார். ஆகவே, ஒரு நல்ல வாசகன் என்பவன் சங்கீதம் கேட்பது மாதிரி வாசிக்க வேண்டும், நான் நல்ல வாசகனில்லை என முடிக்கிறார். கூட்டம் மௌனத்திற்கும் கண்ணீருக்கும் தன்னை ஒப்புக் கொடுக்கிறது. என் சமகாலப் படைப்பு வாழ்வில் நான் சந்தித்த மிகச்சிறந்த பேச்சாளர்களில் ஜே.கேவிற்கே முதல் நாற்காலி.
திருவண்ணாமலையில் நிகழ்ந்த ஒரு முழுநாள் கருத்தரங்கில் முதல் பேச்சாளனாக பங்கேற்று கோணங்கி பேசினான். அப்படி ஒரு பேச்சை அதுவரை எவரும் கேட்டிருக்க முடியாத பிரகாசமது.
நாவிலிருந்து தெறித்த சொல்லின் கணம் தாங்காமல் பார்வையாளர்கள் சரிந்தனர். முன் வரிசையிலிருந்து எழுந்துபோய், பாரதி கிருஷ்ணகுமார் ‘கோணங்கி என் வாழ்வில் நான் தரிசித்த முதல் பேச்சாளன் நீ, கத்தியையும் கோடாரியையும் ஒருவனால் நாக்கிற்குள் மறைத்து வைத்திருக்க முடியுமென நிரூபித்தவன் நீ... யாருடைய அனுமதியுமின்றி நான் அறிவிக்கிறேன். இந்த கருத்தரங்கு இத்தோடு நிறைகிறது. பேச இருக்கும் மற்ற அழைப்பாளர்கள் இதற்கு சம்மதிக்க வேண்டும்.” என்றார். சம்மதித்தார்கள். அந்த உரையால் நீளவாக்கில் வெட்டுப்பட்டவர்களில் நானும் ஒருவன். இது எப்போதும் நிகழாது. ஒரு மைக் முன்னால் நிற்கும் கோணங்கியைப் பார்த்தவர்கள் அரிது. எப்போதாவது எதிர்பாராத தருணங்களில் இது நிகழும். கேட்டவர்களும், பார்த்தவர்களும் பாக்யவான்கள்.
எப்போதும் நிகழும் நிச்சயத்தோடு பாரதி கிருஷ்ணகுமாரின் உரைகள் தமிழகத்தின் எல்லா திசைகளிலும் கடந்த கால் நூற்றாண்டாய் தொடர்ந்து ஒலிக்கிறது. அவர் தன் உரையை மனதுள் திட்டமிடுகிறார். எதிரிலிருக்கும் ஆயிரக்கணக்கான மனிதர்களை அழவைக்க, விம்மவைக்க, ஆர்ப்பரிக்க வைக்க அமைதியாக்க எல்லாமும் அவருக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் அவர் ஒருபோதும் மேடைகளை நிறைக்கும் ஒரு சராசரியான தொழில் முறை பேச்சாளனில்லை. சில சமயங்களில் யாராலும் துரத்திப் பிடிக்க முடியாத ஒரு புலியின் பாய்ச்சலாய் அது நீளும். நம் மனம் எட்டிப்பிடிக்க முடியாத பாய்ச்சலாய் அவர் உரை அமைய, தினம் தினம் அவர் வாசிக் கும் படைப்புகளின் சாரமே உரமாகிறது. தமிழ்ச் சமூகம் தங்கள் சூட்டுக் கதகதப்பில் வைத்து அடைகாக்க வேண்டிய கலைஞன் கிருஷ்ணகுமார்.
இதுதான் என அடையாளப்படுத்த முடியாத ஒரு மலையுச்சி ஊற்றுக் கண் மாதிரித் துவங்கி, காடு, மேடு, மலை, முகடு, கசடு என எதன் மீதும் பயணித்துச் செல்லும் ஒரு காட்டாற்றின் இயல்பு மாதிரி பேச்சின் இயப்பில் என்னை பிரமிக்க வைப்பவர் மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், இரண்டு முறை தமிழகச் சட்டமன்ற உறுப்பினராக மிளிர்ந்தவருமான தோழர். நன்மாறனின் உரை. அவர் பேச்சைத் தமிழ்நாட்டின் எங்காவது ஒரு நகர எல்லையில், கிராமத்து சாவடியில் நீங்கள் கேட்க வேண்டும். வெளிச்சத்தைப்பற்றி நான் விரிவுரையாற்றுவதைவிடவும் நீங்களே ஒரு விளக்கை ஏற்றிக் கொள்ளுங்கள்.
ஆகஸ்ட், 2013.