எஸ்தர்- முதல் சிறுகதைத் தொகுப்பு வெளியானபோது எந்த சந்தோஷத்தையும் வெளிப்படுத்தாத ராமச்சந்திரனின் ( வண்ண நிலவன்) உயர்ந்தபட்ச மனநிலையை எப்போது நாம் அடையப் போகிறோமோ, தெரியவில்லை”வண்ண நிலவன் என்கிற ராமச்சந்திரனைப் பற்றி அவருடைய நெருங்கிய நண்பரான வண்ணதாசன் எழுதிய கடித வரிகளே வண்ணநிலவனின் மனநிலையின் சாயலை வெளிபடுத்தப் போதுமானவை.
வல்லிக்கண்ணன், தி.க.சி போன்றவர்களின் ஒத்துழைப்போடு சிறுகதை உலகிற்குள் வண்ணநிலவனின் எழுத்தின் வசீகரம் எளிமையும், அழகியலும் சார்ந்து அவர் எழுதும் அற்புதமான நடை.
நெல்லை வட்டாரமொழி சார்ந்து வறட்சியான சூழலிலும் அன்பையும், நிதானத்தையும் மென்மையாக போதிக்கிறவை அவருடைய படைப்புகள். அவருடைய நண்பர்களின் முயற்சியோடு, அவருடைய சிறுகதைகளைப் பற்றிய சிறிய கலந்துரையாடலுடன் வெளிவந்த வண்ணநிலவனின் முதல் தொகுப்பான எஸ்தர் அவரைத் தனித்துக் கவனிக்க வைத்தது. சுற்றிலும் வறட்சியும், கொடுமையான பஞ்சத்திற்கிடையில் முதுமையின் காரணமாக ஒருவரைத் தனியே வீட்டில் விட்டுவிட்டு வெளியேற முயல்கிற குடும்பத்தின் தவிப்பு ‘எஸ்தர்’ சிறுகதையின் அழகாக வெளிப்பட்டிருக்கும்.
ரெய்னீஸ் ஐயர் தெருவில் வெளிப்பட்டிருக்கிற கிறிஸ்துவம் இழையோடிய மனிதர்கள்,‘ கடல் புரத்தில்’ - நாவலில் வெளிப்பட்டிருக்கிற மிக நுணுக்கமான மீனவக் குடும்பத்துச் சூழல், அதில் நடமாடும் வெகுளியும், அன்புமான மனிதர்கள், சில இளைஞர்களின் ஒரு நாள் வாழ்வை விவரிக்கிற போது போர்னோவை விருப்பத்துடன் பார்க்கிற ஒரு இளைஞனைக் காட்டிவிட்டு, அந்த போர்னோவில் தன்னைக் காட்டும் பெண்களுக்குப் பின்னாலும் ஒரு குடும்பம் இருக்கிற பின்னணியை விவரிக்கிற கவனமான இன்னொரு பக்கம்-இளம் வெளிச்சம் வடிகிற தெருவில் சைக்கிள் டயரை உருட்டிக்கொண்டு போகும் பையனைப் பற்றிய மனச்சித்திரம்,அன்பைப் புதைத்து வைத்திருக்கிற மாதிரியான பலவிதமான மனிதர்களின் இந்த உணர்வு தான் அவருடைய எழுத்தின் மையம்.
க.நா.சு மொழி பெயர்த்த “அன்புவழி” போன்ற நாவலைப் படைக்க முடியுமா என்கிற ஏக்கத்தை “ கடல்புரத்தில்” முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிற வண்ணநிலவனின் எழுத்துப் பாணி துவக்கத்தில் மிகுந்த எளிமையுடன் துவங்கி, பாம்பும் பிடாரனும் போன்ற தொகுப்பில் இறுக்கம் கண்டு , மீண்டும் எளிமைக்குத் திரும்பியிருப்பதை நுட்பமாக அவருடைய படைப்புலகை நெருங்குகிற யாரும் அவதானிக்க முடியும். இன்னொரு விதத்தில் சுந்தர ராமசாமிக்குப் படைப்புலகில் நேர்ந்த எளிமை, இறுக்கம், மீண்டும் எளிமை என்றிருந்த அதே பயணத்தை வண்ணநிலவனிடமும் உணர முடியும்.
இதே விதமாக சாணை பிடிக்கிறவர்கள் முதற்கொண்டு பல சாயல் சார்ந்த அவருடைய கவிதைகளில் வந்து போயிருக்கிறார்கள். ஆனந்த விகடனில் வெளிவந்த அவருடைய மிக எளிமையான கவிதையின் சில வரிகள் காலத்தை மீறி நினைவில் நிற்கின்றன.“எத்தனையோ முரண்பாடுகள்,சிடுக்கல்கள் இருந்தாலும்- அதையும் மீறி மனிதர்களை நேசிக்கின்றேன்” என்பதாக இருக்கும் இந்த நேசமான உணர்வு தான் வண்ணநிலவன் என்கிற எழுத்தாளருக்கான ஆதாரம். ராமச்சந்திரன் என்கிற மனிதருக்கான ஜீவனான வாழ்வாதாரமும் இது தான்!
எழுத்தாளன் என்கிற பிம்பத்திற்குள் எப்போதும் தன்னை நுழைத்துக் கொள்ளாமல், எழுத்து பலருக்கு உருவாக்குகிற சகலவிதமான பிரமைகளிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டு, அந்தந்த கணங்களுக்கான எளிமையோடு இருக்கிற மனிதராகத் தான் வண்ணநிலவன் என்கிற ராமச்சந்திரனைப் பார்க்க முடிகிறது.
அவருடைய குறிப்பிடத்தக்க நாவல்களும், சிறுகதைகளும் எழுப்புகிற தாக்கத்தை “ அதை விடுங்கய்யா” என்று மிகச் சுலபமாகக் கடந்து போகிற மன நிலை அவருடையது. எழுத்தை இடையறாத சுமையாக அவர் மூளையில் தாங்கிக் கொண்டிருப்பதில்லை என்பதை அவருடன் பழகிய குறுகிய காலத்திற்குள்ளேயே பலரால் இனம் கண்டு விட முடியும்.
விரிந்த வாசிப்பு, நுட்பமான திரைப்பட ரசனை, சமூகம்,கலாச்சாரம் சார்ந்து வெளிப்படும் கோபம்,இயல்பான மொழிபெயர்ப்பு- என்று பன்முகத் தன்மை கொண்ட அவரை துக்ளக் அலுவலகத்தில் 35 ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்தேன். உற்சாகம் ததும்பிய சொற்களால் பிறரை எழுதத் தூண்டுகிறபடி இருந்தது அவருடைய பேச்சு.
அவர் மூலமாகவே ஆசிரியர் சோ-வுடன் தொடர்பு ஏற்பட்டது. துக்ளக்-கில் சுமார் பதினான்கு ஆண்டு காலம் நான் பணியாற்றியதற்கும் அவர் தான் காரணம். மதுரையிலிருந்து சென்னைக்கு வந்த நாட்களில் அவருடைய வீட்டில் பல முறை தங்கியிருந்திருக்கிறேன். அவருடைய தாயார், அவருடைய மனைவி, பிள்ளைகள் எல்லோரும் கவனித்துக் கொண்ட உபசரிப்பும், கரிசனமும் அற்புதமானவை. எந்தவிதத்திலும் மனதில் அந்நியத் தன்மையைத் தோற்றுவிக்காத நேசத்தை அவரிடமும் உணர முடிந்த அவருடைய ஈரமான பண்பு தான் நெல்லை மண்ணிலிருந்து மனசில் ஏற்றி அவர் கொண்டு வந்த அருமையான கொடை.
சென்னைக்கு வந்து பல வருடங்கள் ஆனாலும் நெல்லை வட்டாரம் சார்ந்த அந்தப் பேச்சுவழக்கு அவரிடமிருந்தும், அவருடைய படைப்புகளிலிருந்தும் மாறவே இல்லை.
துக்ளக்-கில் துர்வாசராக தார்மீகக் கோபத்துடன் எழுதியபோது அதற்குக் கிடைத்த எதிர்வினை ஏராளம். சுள்ளிக்குச்சிகளை ஒடித்துப் போட்ட மாதிரியான கையெழுத்துடன் எழுதுகிற எந்த அவசரமான எழுத்திலும் அவருக்கான பிரத்யேகச் சாயலைக் காண முடியும்.
நட்பூ என்கிற நான் ஆசிரியராகப் பணியாற்றிய இணைய இதழுக்காகத் தன்னுடைய வாழ்வனுபவங்களை “ பின்னகர்ந்த காலம்’ என்கிற தலைப்பில் தொடராக நீண்டகாலம் எழுதினார். எழுத்து பெரிய அளவில் அவருடைய பொருளாரத்தை உயர்த்தி விடவில்லை என்றாலும், சில சமயங்களில் மனரீதியாக ஒத்துப் போக முடியாத நிலையில் சில நிறுவனங்களை விட்டு வெளியேறியிருக்கிறார் என்றாலும், யாருடனும் தீவிரமான துவேஷத்தையோ, வெறுப்பையோ வெளிப்படுத்தாத, சந்தித்த கணத்தில் இடைப்பட்ட கால இடைவெளியை உணர வைக்காத நெருக்கமும் தான் ராமச்சந்திரன் என்கிற மனிதரின் இயல்பு. “ என்னய்யா.. இப்படி இருக்கீங்க? உடம்பைக் கவனமாப் பார்த்துக்கக் கூடாதாய்யா? கவனமா இருங்கய்யா.. வீட்டிலே எல்லோரும் எப்படி இருக்காங்கய்யா?” என்கிற அன்பும், அக்கறையும் பொதிந்த விசாரிப்புகளுடன் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாத அந்த இயல்பு தான் வண்ணநிலவனை எப்போதும் அடையாளப்படுத்தி நம்முடன் நெருக்கமாக்கும். அவருடைய எழுத்தின் அடிப்படையும் அது தான். அவருடைய எழுத்தின் கனிவுக்கும், பேச்சின் கரிசனத்திற்கும் இடையில் எந்த இடைவெளியும் இல்லை.
ஜனவரி, 2017.