முன் பனியா முதல் மழையா

காதல் சிறப்பிதழ்
முன் பனியா முதல் மழையா
Published on

இயக்குநர் விக்கிரமன் இயக்கத்தில் விஜய் நடித்த மிகப்பெரிய வெற்றிப்படம் பூவே உனக்காக. அதன் நூறாவது நாள் வெற்றிவிழா கோவையில் ஒரு திரை அரங்கில் நடக்கிறது. அதில் பேசிய  விக்கிரமன் பாடலாசிரியரைச் சிலாகித்தார். ‘சொல்லாமலே யார் பார்த்தது? மழை சுடுகின்றதே அடி.. அது காதலா?..தீ குளிர்கின்றதே.. அடி இது காதலா?’ என்ற அருமையான வரிகளுக்குச் சொந்தக்காரர்.  உள்ளத்தை அள்ளித்தா படத்தில் எல்லா பாடல்களையும் எழுதியவர் இவர்தான்’ என்கிறார். கூட்டம் ஓவென ஆர்ப்பரிக்கிறது. அந்த விழா முடிந்ததும் கவிஞரால் வெளியே வர முடியவில்லை. கூட்டம் நெருக்குகிறது. அவரது கையெழுத்துக்காக அலைமோதுகிறது. கவிஞரின் பேனாவை கூட்டத்தில் ஒரு ரசிகன் கைப்பற்றிக்கொள்கிறான். பின் காவலர்கள் வந்து அன்பு நெருக்குதலில் இருந்து மீட்கிறது. அந்தக் கவிஞர் பழநிபாரதி.

பெரும்புள்ளி படத்தில் முதல் பாடலை எழுதியவர், நான் பேச நினைப்பதெல்லாம் அன்னை வயல், கோகுலம், புதிய மன்னர்கள் என்று தொடர்ந்து எழுதினார். உள்ளத்தை அள்ளித்தா அவரை உச்சாணிக்கொம்பில் வைத்த படம். 90களில் ஏராளமான அழகிய பாடல்களை எழுதிக்குவித்தவர் பழநிபாரதிதான்.

‘ஏலேலங்கிளியே..எனைத் தாலாட்டும் இசையே’ (நான் பேச நினைப்பதெல்லாம்,)  செவ்வந்திப் பூவெடுத்தேன்(கோகுலம்).  என சிற்பியின் இசையில் காதல் பாடல்களை எழுதினார்.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் புதிய மன்னர்கள் படத்தில், ’நீ கட்டும் சேலை மடிப்பில நான் கசங்கிப் போனேண்டி.. உன் எலுமிச்சம்பழ நிற இடுப்பில கிறங்கிப் போனேண்டி..” என்பது இளசுகளின் மனதைக் கொள்ளை கொண்டது.

இப்பாடலில் வரும் ‘நீ வெட்டி வெட்டிப் போடும்  நகத்திலெல்லாம் ஏ குட்டி குட்டி நிலவு தெரியுதடி’ இது இளைஞர்களிடம் புகழ்பெற்ற காதல் வரியாக இன்றும் நிலைத்துள்ளது.

“உள்ளத்தை அள்ளித்தா படம் எனக்கு பெரும் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. அதில் எல்லாம் வணிக ரீதியாக வெற்றி பெற்ற பாடல்கள். அதற்கடுத்து வந்த பூவே உனக்காக முழுக்க மெலடி பாடல்கள். இவற்றின் வெற்றியைத் தொடர்ந்து முழு நேரப் பாடலாசிரியராக மாற வேண்டிய கட்டாயம் வந்தது.  அதன் பின்னால் வந்த காதலுக்கு மரியாதையில் என்னைத் தாலாட்ட வருவாளா? என்ற பாடல் பெரும் புகழையும் தொடர்ந்த வாய்ப்புகளையும் அளித்தது. நான் எழுதிய காதல் பாடல்களிலே இது நிறைய பேருக்குப் மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்றாக  இருக்கிறது’ என்கிறார் கவிஞர்.

“பூவே உனக்காக படத்தில் எழுதிய ’மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும்போது..வாழ்க்கை இன்ப வரமாகும்’ என்ற வரி பெருமளவில் பலரைப் பாதித் ததாகச் சொல்லக் கேட்டுள்ளேன்.” என்ற பழநிபாரதி “பொதுவாக எனக்கு கண்ணதாசன் பிடிக்கும். அவர் இயற்கையையும் பெண்ணையும் வேறுபடுத்திப் பார்க்காதவர்.  பெண்மையை  உடமைப் பொருளாகப் பார்க்கிற இடத்தில் இருந்து வேறு வேறு உயரங்களுக்குக் கொண்டுபோய் தேவியாக ஆராதித்தவர். அவரால் கொண்டாடப்படும் இயற்கையை நானும் கொண்டாட முயற்சி செய்கிறேன்’‘ என்கிறார் அடக்கமாக.

“இசைஞானி இளையராஜாவின் இசையில் நான் எழுதிய மூன்றாவது பாடல் பூமணி படத்தில் தோள் மேலே தோள்மேல.. பூமாலை.. பூமாலை.. என்ற பாடல். அதில்

நானிருந்தேன் வானிலே மேகமாய்..

ஏன் விழுந்தேன் பூமியில்

வீழ்ந்ததும் நல்லதே

தாகமாய் உள்ளதே

என்ற வரிகளை இளையராஜா பெரிதும் ரசித்தார். அடிக்கடி வந்து போய்யா.. பழநிபாரதி என்று பெயர் வைத்திருக்கிறாய்...உன்னை அழைக்கும் சாக்கில் அந்த பாரதியை அழைத்துக்கொள்கிறேன்’ என்று சொன்னார். அத்துடன் ஒரு பிரபல பத்திரிகைப் பேட்டியில் தனக்குப் பிடித்த பாடலாசிரியராக அறிவுமதியின் பெயரோடு  என் பெயரையும் சொல்லிப் பெருமைப்படுத்தினார்” என்கிறார்.

புதிய சொற்பிரயோகங்களில் பழநிபாரதி விற்பன்னர். பிகாசோவின் ஓவியம் ஒன்று, பீதோவானின் சிம்பொனி ஒன்று என்று ஐ லவ்யூ லவ்யூ சொன்னாளே என்ற உள்ளத்தை அள்ளித்தா பாடலில் எழுதினார். இந்தப் பாட்டில் கூட அடடா பூவின் மாநாடா? என்ற புதுமையான வரியையும் எழுத முடிந்தது.

அவள் வருவாளா படத்தில்  சேலையில வீடு கட்டவா என்று உருகினார். இந்தப் பாடல் வெளிவந்து சில ஆண்டுகளுக்கு பலரும் சேலையில் வீடு கட்டுவதைப் பற்றியே பேசிகொண்டிருந்தார்கள். மிக சிக்கனமான கொத்தனார் பழநிபாரதிதான், அவர்தான் சேலையில் வீடு கட்டுவார் என்ற ஜோக் கூட உலா வந்தது. ஒரு  பிரபல பத்திரிகையில் பாடல் வெளிவந்த ஆறு மாதம் கழித்து இந்த பாடலை எப்படி எழுதினீர்கள் என்று கேட்டு கட்டுரை வெளியிட்டார்கள்.

இலங்கையிலிருந்து வந்த அகதிப்பெண் ஒருத்தி. ராமேஸ்வரத்தின் இளைஞன் ஒருவன். அவனுக்கு அவள் மீதும் அவளுக்கு அவன் மீதும் இனம் புரியாத உணர்வு. பாலாவின் நந்தா படத்தில் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் இதுதான் காட்சிப் பின்னணி. பழநிபாரதி எழுதினார்:

 முன் பனியா? முதல் மழையா..என் மனதில் ஏதோ விழுகிறதே.. விழுகிறதே

 உயிர் நனைகிறதே.. - எப்போது கேட்டாலும் சிலிர்ப்பூட்டும் காதல் வரிகள் அல்லவா?

சுடிதார் அணிந்து வந்த

சொர்க்கமே (பூவெல்லாம் கேட்டுப்பார்)

இரவா பகலா வெயிலா மழையா? என்னை ஒன்றும் செய்யாதடி..(பூவெல்லாம் கேட்டுப்பார்)

நீ தூங்கும் நேரத்தில்  என் கண்கள் தூங்காது

( மனசெல்லாம்)

வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா?( உல்லாசம்)இன்றும் ரசித்துக் கேட்கப்படும் அழகான காதல் வரிகளைக் கொண்ட சில பாடல்கள்.

இவரது பாடல்களில் பல்லவியிலில் இருந்து

சரணம்  முழுமையான தொடர்ச்சியைக் காணமுடியும். உன் சமையலறையில் இவர் சமீபத்தில் எழுதிய படம்: அதில் வரும் காதல் பாடல் இது:

ஈரமாய்

ஈரமாய் பூமழைப் பூங்காற்று

தூரமாய் தூரமாய்

மூங்கிலின் ஓர்பாட்டு

பாடுவது யாரங்கே

பாட்டுக்கென்ன பேரிங்கே

இந்த பாடலில்தான்

’தென்றல் செல்கின்ற வழியில்

உள்ளம் செல்கின்றது

கள்ளச் சிரிப்பொன்று வந்து நிற்கச்சொல்கிறது

நிற்கவா போகவா

கேட்குதே பாதங்கள்

வாழவா வாடவா

ஏனிந்த தாபங்கள்?

என்கிறார். நம்மையும் காதல் மெல்லிய பூமழையாய் வருடிச் செல்கிறது.

பிப்ரவரி, 2015.

logo
Andhimazhai
www.andhimazhai.com