முந்தானை முடிச்சு பரிமளம் இன்றைய சீரியல் புரட்சி பெண்களுக்கெல்லாம் முன்னோடி. அநேகமாக காதலுக்காக, தன்னுடைய கனவு வாழ்க்கைக்காக பலவித அக்னிப்பரிட்சைகளை எழுதித் தேர்ந்த ஆன முதல் தமிழ்நாயகி அவளே. படத்திற்கு என் வயது (40). தமிழ்சினிமாவில் அநேகமாக ஒரு கிராமத்து பெண் தனக்கான இணையை தானே முடிவெடுத்து போராடி அவனை அடைந்த முதல் கதை இதுவாகத்தான் இருக்கும்.
ஆண்கள் மட்டுமே வீட்டிலும் வெளியிலும் முடிவெடுக்கிற 80களின் கிராமம். பெண்களுக்கு எந்த உரிமையும் சுதந்திரமும் இல்லை. கல்வியோ காதலோ தனக்குரிய கணவனையோ கனவையோ தேர்ந்தெடுக்கிற உரிமையோ சுதந்திரமோ எதுவுமில்லை. அதே கிராமத்தில் பிறந்த பரிமளம் அவர்களிடமிருந்து வேறுபட்டு நிற்கிறாள். அவள் பையன்களோடு ஊர் சுற்றுகிறாள். கோயிலிலேயே திருடுகிறாள். பெண்கள் செய்யக்கூடாது என்கிற கட்டுப்பாடுகளை மீறுகிறாள். அப்பாவின் தண்டனைகளைக் கூட சமயோசிதமாக கையாண்டு வலியின்றி தப்புகிறாள்.
பெரிய மீசை வைத்துக்கொண்டு மனைவிகளை அடக்கிவைத்திருக்கிற சின்னவீடு வைத்திருப்பதை பெருமையாக நினைக்கிற படிப்பறிவு அதிகமில்லாத தன்னுடைய ஜாதி ஜனத்தில் மாப்பிள்ளை வேண்டாம் என்று அப்பாவோடு சண்டை போடுகிறாள். (படத்தில் இந்த ஜாதிஜனம் முழுக்க அதிமுக ஆட்களாக எம்ஜிஆர் ரசிகர்களாக இருக்கிறார்கள்!)
தனக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேண்டும் என்பதுதான் அவளுக்கான முதல் பாடல். ‘நான் போடுற கோட்டுக்குள்ள கட்டுப்பட்டு வாழணும் வீட்டுக்குள்ள கைகட்டி வாய்மூடி நில்லுன்னா நிக்கணும்டோய்' என்று பாடுகிறாள். தன் கனவு காதலனின் குணநலன்களையும் பட்டியலிடுகிறாள். வீடு பெருக்கணும், குழந்தையைத் தாலாட்டி தூங்கவைக்கணும், தனக்குக் கால் வலித்தால் பிடித்துவிடணும், கண்ணசைத்தால் தாழ்ப்பாள் போடணும் என நீள்கிறது அவளுடைய தேடல். அப்பாவோ மிலிட்டிரிகாரனை கட்டிவைத்தால்தான் இவளுடைய கைகாலை உடைத்தாவது இவளுடைய திமிரை அடக்குவான் என்று திட்டம் போடுகிறார்!
அவள் எதிர்பார்த்த அத்தனை குணங்களோடும் (படித்த, அடக்க ஒடுக்கமான, தாலாட்டுப் பாடி வீட்டை பெருக்குகிற) வருகிறார் வாத்தியார். (பாக்யராஜ் பெயரே படத்தில் வாத்தியார்தான். அவருக்குப் படத்தில் பெயரில்லை!) பார்த்தவுடனேயே அவள் இவர்தான் தனக்காக 100சதவீத பொருத்தமான ஆண் என்பதை முடிவெடுக்கிறாள். அவனை திருமணம் செய்துகொள்ள எல்லா எல்லைகளையும் தாண்டுகிறாள். குழந்தையை தாண்டி சத்தியம் பண்ணக்கூட துணிகிறாள். திருமணமான ஆணை காதலிக்கக் கூடாது என்றால் அதை மீறுகிறாள். மனைவியை இழந்த கணவனை திருமணம் செய்யக்கூடாது என்கிறார்கள் மீறுகிறாள். பாலியல் உறவு இருந்ததாக பொய் சொல்லத்தயங்குவதில்லை. கணவனின் உயிரைக்காப்பாற்ற அரிவாளை தன் கைகளால் தடுத்து ரத்தம் சிந்துகிறாள். உச்சபட்சமாக தன் கணவனின் காதலைபெற குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும் செய்துகொள்ளவும் துணிகிறாள்.
முந்தானை முடிச்சு படத்தின் நாயகன் பரிமளத்தின் கதையில் வருகிற ஒரு பாத்திரம் மட்டுமே. உண்மையில் அது பரிமளத்தின் கதைதான். அந்தக்காலக்கட்டத்துக்கு பரிமளம் செய்த விஷயங்கள் எல்லாமே சாதனைகளாகத்தான் இருக்கவேண்டும். அதனால்தானோ என்னவோ படம் அக்காலக்கட்டத்தில் பெண்களால் கொண்டாடப்பட்டிருக்கிறது. இந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் வெற்றி பெற்று இருக்கிறது!
மார்ச், 2023