சினிமா விநியோகம், பைனான்ஸ், திரையரங்கத் தொழில் ஆகியவற்றில் நீண்ட அனுபவம் உடையவரான திருப்பூர் சுப்ரமணியத்துடன் அந்திமழைக்காக உரையாடினோம்:
தொழிலுக்குள் 1979ஆம் ஆண்டு தான் வந்தேன். நான், என்னுடைய நண்பர்கள் இரண்டு பேர் சேர்ந்து தலா நூறு ரூபாய் போட்டு, முந்நூறு ரூபாய் முதலீட்டில் பழைய திரைப்படங்களை வாங்கித் திரையிடும் தொழிலைத் தொடங்கினோம். அதற்காக, திருப்பூரில் இருந்த யூனிவர்செல் தியேட்டரையே வாடகைக்கு எடுத்தோம். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மதியக் காட்சியாக பழைய திரைப்படங்களைத் திரையிட்டோம். வாடகை போக மீதி இருக்கும் பணம் தான் எங்களுக்கு லாபம். ஆறு மாதத்தில் தொழிலில் நஷ்டம். அந்த சமயத்தில் ஒரு நண்பர் விலகிக் கொண்டார்.
அதன் பிறகு நானும் நண்பரும் சேர்ந்து, தினசரிக் காட்சிகள் போடலாம் என முடிவெடுத்தோம். முதல் முறையாக எம்.ஜி.ஆர். நடித்த ‘இதய வீணை' படத்தைத் திரையிட்டோம். அந்த படத்தை வாங்குவதற்காக 1750 ரூபாயும், விளம்பரம் செய்வதற்கு 150 ரூபாயும் செலவாகியது. 1972-இல் வெளியான படத்தை 1979ஆம் ஆண்டு திரையிடுகிறோம். ஒரு வாரம் படம் ஓடியதில், ஐயாயிரம் ரூபாய் வசூல். அதில், மூவாயிரம் ரூபாய் எங்களுக்கு லாபம். இரண்டாயிரம் ரூபாய் நாங்கள் போட்ட முதலீடு. அப்போது நான் வேலைப் பார்த்த இடத்தில், எனக்கு ஐந்நூறு ரூபாய் தான் மாதச் சம்பளமே. ஒரே வாரத்திலேயே மூவாயிரம் ரூபாய் லாபம் வருகிறதே, ஏன் இந்த தொழிலை செய்யக்கூடாது என முடிவெடுத்தேன். ஆறு மாதங்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி நடித்த பழைய திரைப்படங்களையே திரையிட்டோம். அந்த சமயத்தில் என்னுடன் இருந்த மற்றொரு நண்பரும் விலகிக் கொண்டார். எனக்கு சினிமா தொழிலைக் கற்றுக் கொடுத்தவர், யூனிவர்செல் தியேட்டரில் மேலாளராக இருந்த கலாம் பாய் தான்.
நண்பர் விலகிக் கொண்ட பிறகு, தனியாக நானே யூனிவர்செல் தியேட்டரை குத்தகைக்கு எடுத்தேன். ஆறு வருடங்கள் கழித்து, யூனிவர்செல் தியேட்டரின் பங்குதாரராகவும் ஆனேன். பின்னர், திரைப்பட விநியோகஸ்தரானேன். அந்த சமயத்தில் தியேட்டர்களில் மலையாள செக்ஸ் படங்கள் தான் ஓடிக் கொண்டிருந்தது. நான் என்ன செய்தேன் என்றால் மம்மூட்டி நடித்த ‘சிபிஐ டைரி குறிப்பு' படத்திற்கான கோயம்புத்தூர் உரிமையை வாங்கி வெளியிட்டேன். படம் பெரிய அளவுக்கு வெற்றி. அதனைத் தொடர்ந்து, சித்திரம், வந்தனம், வைசாலி போன்ற மலையாளத்தில் வெற்றி பெற்ற படங்களை தமிழகம் முழுவதும் வெளியிட்டேன். நண்பர் முகேஷுடன் சேர்ந்து. இந்த முயற்சி பெரிய அளவுக்குக் கை கொடுத்ததால், ஆங்கிலப் படங்களை வாங்கி விற்கும் விநியோகஸ்தரானேன்.
இதற்கிடையே, திருப்பூரிலிருந்த தனலட்சுமி தியேட்டரை இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து குத்தகைக்கு எடுத்தேன். இதனால், எங்களிடம் இரண்டு தியேட்டர் கைவசம் இருந்தது.
1980களில் ஒரு படம் வெளியாகிறது என்றால், முதலில் சென்னையில் வெளியாகும். பிறகு கோயம்புத்தூரில் வெளியாகும், அதன் பிறகு தான் திருப்பூரில் வெளியாகும். யூனிவர்செல் தியேட்டரை நாங்கள் குத்தகைக்கு எடுத்ததும், புதுப் படம் வெளியாகும் அன்றே, திருப்பூரிலும் திரையிட்டோம். அப்படி முதல் முறையாகத் திரையிடப்பட்ட படம் ‘செந்தூரப் பூவே'. அதன் பிறகு நிறைய தமிழ் திரைப்படங்களை திரையிட்டோம். படிப்படியாக வளர்ந்துவந்த நிலையில், சொந்தமாக தியேட்டர் கட்டலாமே என முடிவெடுத்தேன். அந்த சமயத்தில் சென்னை சத்யம் தியேட்டரில் எஸ்-5 என்ற தியேட்டரை திறந்தார்கள். அந்த தியேட்டரின் வடிவமைப்பு பிடித்திருந்ததால், அதே போன்று ஏசி வசதியுடனும், டிடிஎஸ் சவுண்ட் சிஸ்டத்துடனும் ஸ்ரீ சக்தி என்ற தியேட்டரை திருப்பூரில் திறந்தேன். அப்போது திருப்பூரில் ஏறக்குறைய இருபத்தைந்து தியேட்டர்கள் இருந்தன. ஸ்ரீ சக்தியில் ஏசி வசதி இருந்தால், நிறைய மக்கள் இங்கு தான் படம் பார்க்க வந்தனர்.
தியேட்டரை சொந்தமாகக் கட்டி திறந்து திரையிடப்பட்ட முதல் படம் ரஜினி நடித்த பாபா. அப்போது நிறையப் படங்களை திரையிட்டிருந்தாலும், விக்ரம் நடித்த ‘சாமி‘, ரஜினிகாந்த் நடித்த ‘சிவாஜி‘ விஜய் நடித்த ‘போக்கிரி‘ போன்ற படங்கள் அதிக வசூல் செய்தன. 2002லிருந்து 2015 வரை எல்லா சூப்பர் ஹிட் படங்களையும் திரையிட்டிருக்கிறேன். மக்களின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கிறதோ அதற்கு ஏற்றார்ப்போல் தான் படங்களை வாங்குவேன்.
2015ஆம் ஆண்டு ஸ்ரீ சக்தி தியேட்டரையே மல்டிப்ளக்ஸ் தியேட்டராக மாற்றினேன். 2020ஆம் ஆண்டு இன்னும் நான்கு ஸ்கிரீனை கூடுதலாக சேர்த்துள்ளேன். இப்போது மொத்தம் எட்டு ஸ்கிரீன் உள்ளது. குடும்பத்துடன் வந்து படம் பார்ப்பதற்கு ஏற்ற தியேட்டராக ஸ்ரீ சக்தி இருக்கிறது. திருப்பூரிலும், மேட்டுப்பாளையத்திலும், பவானியிலும் எனக்கு சொந்தமாக மூன்று தியேட்டர்கள் இருக்கின்றன.
எனக்குத் தனிப்பட்ட விதத்தில் பிடித்த தியேட்டர் சென்னையில் இருந்த சபையர். ஆரம்ப காலங்களில் அங்கு தான் சென்று படம் பார்ப்பேன். தியேட்டருக்கு வந்து படம் பார்க்கின்ற அனுபவமே தனி. பிரம்மாண்டமான படங்களை ஓடிடியில் பார்த்து ரசிக்க முடியுமா? அப்படியான படங்களுக்கு சவுண்ட் எஃபெக்ட் முக்கியம். அது தியேட்டரில் தான் கிடைக்கும்.
மே, 2022