முட்டையில் மஞ்சள் கருவை ஒதுக்க வேண்டுமா?

முட்டையில் மஞ்சள் கருவை ஒதுக்க வேண்டுமா?
Published on

மருத்துவர் ஃபரூக் அப்துல்லா, மக்களின் உணவுப் பழக்கங்கள் குறித்த தவறான எண்ணங்களைப் போக்கும் விதமாக தொடர்ந்து எழுதுகிறவர்.

ஆதிகால குகை மனிதர்கள் உணவை கைக்கொள்வதால் இக்காலத்திய உடல்நோய்களைத் தவிர்க்க முடியும் என்கிற கொள்கை உடையவர். நம் அன்றாட வாழ்வில் உலவும் சில உணவு தொடர்பான கட்டுக்கதைகளை இங்கே உடைக்கிறார்.

1. சர்க்கரை நோயாளிகள் சப்பாத்தி சாப்பிடுவதால் உடலின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முடியும் என்று சொல்கிறார்களே?

அது ஒரு தவறான நம்பிக்கை. அரிசியால் செய்யப்பட்ட உணவுகள் எவ்வாறு ரத்த சர்க்கரை அளவுகளை உயர்த்துமோ, அதே அளவு தான் கோதுமையால் செய்யப்பட்ட சப்பாத்தி, ரொட்டி, தோசை போன்றவற்றாலும்  ஏறும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு கோதுமை சார்ந்த உணவுகள் பரிந்துரைக்கப்பட்டதின் பின்னால் உள்ள உண்மை யாதெனில் தமிழர்கள் அரிசி சார்ந்த உணவுகளை விரும்பி உண்பவர்கள். அவர்களுக்கு கோதுமையாக மாற்றினால் குறைவாக உண்பார்கள் என்பதாலேயே அவ்வாறு  பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் தற்போது நாம் கோதுமையையும் மைதாவையும் வட இந்தியர்களை விடவும் அதிகமாக விரும்பி உண்ண ஆரம்பித்து விட்டோம். நீரிழிவை

கட்டுக்குள் வைத்திருக்க விரும்பும் ஒருவர் கட்டாயம் அரிசி கோதுமை ஆகிய இரண்டை உண்பதிலும் வரம்பைக் கடைப்பிடிக்க வேண்டும்  

2. இறைச்சியை ( கோழி, ஆடு, மீன்)

சாப்பிடுவதால் உடல் பருமன், இதய நோய்கள், இரத்தக் கொதிப்பு போன்ற பிரச்னைகள் வரும் என்பது உண்மையா?

இந்த கூற்றில்  உண்மை இல்லை.

காரணம் இந்தியா பெரும்பான்மை மக்கள் அதிகமாக இறைச்சி உண்ணும் நாடன்று.  இறைச்சியை மக்கள் விரும்பினாலும் அவர்களின் பொருளாதார நிலை அதை வாங்கி உண்ணும் அளவு இல்லை.

எனவே வருடத்திற்கு சராசரியாக ஒரு இந்தியர் ஐந்து கிலோ இறைச்சிக்கும் குறைவாகவே உண்ணுகிறார்.

இதை வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் அமெரிக்காவில் வருட சராசரியாக ஒரு அமெரிக்க குடிமகன் 120 கிலோ

இறைச்சிக்கும் மேல் உண்கிறார்.

எனவே ஏனைய வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் நாம் மாமிசத்தை குறைவாகவே உண்கிறோம்.பிறகு ஏன் இதய நோய், உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் அதிகமாகிக்கொண்ட  வருகின்றன?

இரண்டாயிரமாவது ஆண்டுக்குப்  பிறகு கடந்த இரண்டு பத்தாண்டுகளில்  நம்மிடையே இந்த நோய்கள் மிக அதிகமாகி உள்ளன. ஆனால் இறைச்சி மேல் கட்டமைக்கப்பட்டுள்ள அச்சத்தின்  காரணமாக மக்கள் அதை உண்பதை 2000க்கு முன்பு இருந்ததை விட குறைத்து தான் இருக்கின்றனர். 

நம்மிடையே அதிகமாகி வரும் உடல் பருமன், நீரிழிவு, ரத்த கொதிப்பு, இதய நோய் போன்ற நோய்களுக்கு நாம் மிக அதிகமாக உண்ணும் மாவுச்சத்து சார்ந்த உணவுகள் தான் காரணம்.

எங்கு காணினும் பேக்கரிகள், சாக்லேட், கூல் ட்ரிங்க்ஸ், ஸ்நேக்ஸ் என்ற பெயரில் நாம் எதையாவது எப்போதும் கொரித்துக்கொண்டே இருக்கிறோம்.

நாம் உண்ணும் உணவுக்கு ஏற்ற உடல் உழைப்பு இல்லை.  அமர்ந்த இடத்திலேயே சம்பாதிக்கிறோம். இது போன்ற நம் வாழ்வியல் மாற்றங்களால் தான் மேற்சொன்ன நோய்கள் வருகின்றன.இதை எளிதாக இறைச்சியின் மீது குற்றம் சாட்டி தப்பித்துக்கொள்ள முயற்சிக்கிறோம். 

3. வாட்ஸ் அப் செய்தி : மீன் சாப்பிடும் போது கண்டிப்பாக தயிர் சேர்த்து சாப்பிடக் கூடாது. ‘Leucoderma'' என்னும் வெண்புள்ளிகள் தோன்ற இதுவே ஒரு முக்கிய காரணமாகும் .&  இது உண்மையா?

இந்த செய்தியில் உண்மை எள்ளளவும் இல்லை.

வெண்புள்ளிகள் தோன்றும் பிரச்சனையான Leucoderma என்பது நமது சருமத்தின் நிறமிகளை (Melanin) நமது எதிர்ப்பு சக்தியே தாக்கி அழிக்கும் நோயாகும். vitiligo எனும் வெண் புள்ளிநோயும் இதே வகையைச் சேர்ந்தது. இதற்கு காரணம் நமது மரபணுக்களில் ஏற்பட்ட மாற்றங்களும் சுற்றுச்சூழல் மாற்றங்களுமே ஆகும்.  இதற்கும் தயிரோடு மீன் சேர்த்து உண்பதற்கும் சம்பந்தம் இல்லை

இதை பொய் என்று நம்ப வேண்டுமென்றால் நாம் மேற்குவங்காளத்தின் முக்கிய பிரபலமான மீன் வகை உணவான ‘டொய் மாக் (Doi maach)‘ எனும் உணவில் மீனுடன் தயிர் கலந்தே செய்து உண்பார்கள். 

ஒருவேளை வெண்புள்ளிகள் வரவேண்டுமென்றால் வங்காளிகள் அனைவரும் உடல் முழுவதும் வெண்புள்ளிகளுடன் இருக்க வேண்டும். எனவே அது ஒரு கட்டுக்கதை என்பதை நாம் அறிந்துணர முடியும்.

4. முட்டையை உண்பதால் கொலஸ்ட்ரால் அதிகமாகிறது.  கொலஸ்ட்ரால் அதிகமாவதால் இதய நோய் வருகிறது. எனவே வெள்ளை கரு மட்டும் உண்பதே நல்லதா?

முட்டை என்பது ஏழைகள் கூட உண்ண முடிந்த விலையில் கிடைக்கும் புரதச்சத்து மிக்க ஒரு முழு உணவு.

நம் நாட்டின் உணவு சார்ந்த முக்கிய பிரச்சனைகளுள் ஒன்று புரதச்சத்து குறைபாடு (Protein Energy Malnutrition)  புரதச்சத்து குறைபாட்டால் ஐந்துவயதுக்குட்பட்ட குழந்தைகள் லட்சக்கணக்கில் அவதிப்படும் நாடு நமது.

இப்படி இருக்கையில் அவர்களுக்கு உண்ணக் கிடைக்கும் முக்கியமான புரதச்சத்து உணவு & முட்டை.

ஆனால் அதன் பின்னும் பெரிய மூடநம்பிக்கை கட்டமைக்கப்படுவது மிகப்பெரும் குற்றம். முட்டையில் முழுமையான புரதம், கொலஸ்ட்ரால், கொழுப்பு, கால்சியம் அடங்கியிருக்கிறது. கொலஸ்ட்ரால் என்றாலே இதய நோய் என்று நினைப்பது மிகப்பெரும் தவறு.

நாம் கொலஸ்ட்ரால் சார்ந்த உணவுகளை தவிர்த்தாலும் நமது உடல் தினமும் 2000 மில்லி கிராம் கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்கிறது என்ற உண்மையை அறிந்தால்  நமக்கு ஒரு கேள்வி எழும்.

உடலுக்கு ஊறு செய்யும் கொலஸ்ட்ராலை ஏன் உடலே உற்பத்தி செய்கிறது?

உடலுக்கு கொலஸ்ட்ரால் ஊறு செய்கிறது என்று நாம் தான் தவறாக நம்புகிறோம். ஆனால் நமது உடலின் முக்கியமான அங்கமாக கொலஸ்ட்ரால் இருக்கிறது. நமது செல்களின் வெளிப்புறத்தை காக்கும் ப்ளாஸ்மா உறை, கொழுப்பால் ஆனது. நமது உயிர்காக்கும் ஸ்டீராய்டு ஹார்மோன்கள் மற்றும் நமது பாலினத்தை நிர்ணயம் செய்யும் பாலினம் சார்ந்த ஹார்மோன்கள் கொழுப்பினால் ஆனவை.  எனவே, கொலஸ்ட்ரால் என்றாலே கெட்டது என்ற எண்ணத்தை விட்டு நாம் வெளியே வர வேண்டும்.

முட்டை என்றால் அதை மஞ்சள் கரு மற்றும் வெள்ளைக்கரு இரண்டையும் கலந்தே உண்ண வேண்டும்.

5. புரதச்சத்து அதிகம் எடுத்தால்

சிறுநீரகம் செயல் இழக்கும் என்பது உண்மையா?

இந்த கூற்றை இப்படி பார்க்கலாம். செயல் இழந்த சிறுநீரகங்களுக்கு  அதிக புரதம் என்பது ஆபத்து. அதை நாம் ஏற்க வேண்டும். ஆனால்  நன்றாக வேலை செய்யும் சிறுநீரகங்களுக்கு நம் உடலுக்கு தேவையான அளவு புரதச்சத்தை எடுப்பதால் எந்த பிரச்சனையும் இல்லை.  மாறாக கட்டுப்படாத நீரிழிவு மற்றும் ரத்தக்கொதிப்பு ஆகிய இரண்டுமே சிறுநீரக அழற்சி நோய்க்கு முக்கிய காரணங்கள்.

ஆரோக்கியமான சிறுநீரகங்கள் இருப்பவர் தினமும் அவரது எடையின் அளவின்படி கிலோவுக்கு ஒன்று முதல் ஒன்றரை கிராம் புரதச்சத்து  உணவு எடுக்கலாம்.

ஜூலை, 2020.

logo
Andhimazhai
www.andhimazhai.com