மின்னிய நட்சத்திரத் திருமணங்கள்

மின்னிய நட்சத்திரத் திருமணங்கள்

Published on

தன் திருமண அறிவிப்பை வெளியிட நிருபர்களை அழைத்தார் ரஜினிகாந்த். அப்போது ரஜினி- லதா காதல், பத்திரிகைகளில் பரவலாக அடிபட்டது. இப்போது மட்டுமல்ல, அப்போதும் ரஜினி பெயர் பத்திரிகைகளில் வராத நாளில்லை. நிருபர்களுக்கும் அவருக்கும் அவ்வளவாக ஒத்துப்போனதும் இல்லை. 

“நாளைக்கு எனக்கு திருப்பதியில் திருமணம். யாரும் வர வேண்டாம். அதை சொல்வதற்காகத் தான் அழைத்தேன்” என்றார். “மீறி வந்தால்?” என்றொரு கேள்வியை எழுப்பினார் அப்போது வந்து கொண்டிருந்த ‘அலை ஓசை’ பத்திரிகை நிருபர் மணி. கொஞ்சம் கூட யோசிக்கவில்லை ரஜினி. புயல் வேகத்தில் பதில் சொன்னார். “வந்தா ஒதப்பேன்!” அப்படியிருந்தும் அவரது திருமணத்திற்கு சில பத்திரிகையாளர்கள் சென்றார்கள். புகைப்படங்கள் வெளிவந்தன.

1978 ல் கமலின் முதல் திருமணம் நடந்தது. வீட்டுப் பெரியவர்களால் பார்த்து நிச்சயம் செய்யப்பட்ட திருமணம் அது. மனைவி வாணி கணபதி பிரபல பரதநாட்டியக் கலைஞர். பத்து வருடங்கள் நன்றாகத் தான் ஓடியது திருமண வாழ்க்கை. அதற்கப்புறம் சரிகாவுடன் சேர்ந்து நடிக்கும் போது அவர் மீது காதலானார் கமல். இந்தக் கிசுகிசுக்கள் வாணிக்கு தெரியவர, முறைப்படி விவாகரத்து பெற்றார்கள் இருவரும். அதற்கப்புறம் கமல் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் தேவைப்பட்ட வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்ந்து கொண்டார். இன்றளவும்...

‘சோலைக்குயில்’ படத்தில் நடிக்கும் போதுதான் கார்த்திக்குக்கும் அப்படத்தின் நாயகி ராகினிக்கும் காதல் வந்தது. ராகினி படுகர் இனத்தை சார்ந்தவர். காதல் விஷயத்தில் ஜெமினிகணேசனுக்கே பாடம் எடுக்கிற அளவுக்கு பக்குவமானவர் கார்த்திக். வெகு

அசால்ட்டாக இந்தக் காதலை அவர் டீல் பண்ண, ராகினியின் உறவுகள் வளைத்துப் பிடித்தார்கள் கார்த்திக்கை. அப்புறமென்ன? நழுவ முடியாமல்          சிக்கிக்கொண்டார் அவர். இன்று மார்க்கெட்டில் இருக்கும் ஹீரோ கவுதம் கார்த்திக், ராகினி கார்த்திக் தம்பதியின் அன்பு மகன்!

திரைப்படங்களில் பொய் மேளமும் பொய் தாலியும் கழுத்திலும் காதிலும் ஏறுகிற அந்த வினாடியில் காதுகள் வேறொரு சொல்லுக்காக  கூர்மையாகும், “ஷாட் ஓகே. கட் இட்” என்ற குரல் கேட்டு, கழுத்தில் சுற்றியிருந்த தாலியை வெகு லாவகமாகக் கழற்றி அசிஸ்டென்ட் டைரக்டர் கையில் கொடுத்துவிட்டு நடையைக் கட்டும் ஹீரோயின்களுக்குதான் அதிகம் தெரியும்.... நிஜ திருமணத்தின் சிலிர்ப்பு.

‘அமர்க்களம்’ பட ஷுட்டிங்கில்தான் அஜீத்திற்கும் ஷாலினிக்கும் காதல் மலர்ந்தது. நல்லவேளை... எவ்வித முட்டுக்கட்டையும் பெரிதாக வரவில்லை. பெற்றோர் ஆசியுடன் நடந்த அந்தத் திருமணத்திற்கு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா வருவதாக இருந்தார். ஆனால் காலையில் முதலில் வந்து வாழ்த்தியவர் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி. அவர் மட்டும் வரவில்லை. தன் குடும்பம், உற்றார் உறவினர் புடைசூழ வந்தவர், அப்படியே மண்டபத்திலேயே உட்கார்ந்துவிட்டார். பிற்பகல் வரைக்கும் நகரவே இல்லை. முதல்வர் அலுவலக அதிகாரிகள், எதிர்க்கட்சித் தலைவர் போயிட்டாரா என்று கேட்டுக் கொண்டேயிருந்தார்கள். ஆனால் கலைஞர் மிகத் தாமதமாகவே கிளம்பினார். வேறு வழியில்லாமல் அன்று மாலையில்தான் வந்தார் ஜெ.

விஜய் சங்கீதா திருமணம் காதல் திருமணமா, பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமா என்ற டவுட் இன்றளவும் இருந்து வருகிறது. உண்மை அவ்விருவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். கனடாவில் வசிக்கும் புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்தான் சங்கீதா. இங்கு ஷுட்டிங்கை வேடிக்கை பார்க்க வந்தவரை எஸ்.ஏ.சி யும் அவரது மனைவி ஷோபாவும் பார்த்த மாத்திரத்தில், மருமகளாக ஆக்கிக்கொள்ள ஆசைப்பட்டதாக ஒரு தகவல் உலவுகிறது. ஆனால் லண்டனுக்குப் போன விஜய், அங்கேயே சங்கீதாவை சந்தித்ததாகவும், காதலில் விழுந்ததாகவும், அதற்கப்புறம் விஜய்யின் பிடிவாதத்தை எஸ்.ஏ.சி தம்பதி ஏற்றுக் கொண்டதாகவும் இன்னொரு தகவல் உண்டு.

எதிர்ப்பில்லாத காதல் நெருப்பில்லாத சமையலுக்கு சமம்! அப்படி எதிர்ப்புக்கு இடையில் எல்லோரையும் சமாதானப்படுத்தி ஜோதிகாவை மணந்தார் சூர்யா. இன்று “என் மகள் ஜோதிகா” என்று சிவகுமாரே பொது மேடையில் புளகாங்கிதப் படுகிற அளவுக்கு வாழ்ந்து காட்டுகிறார் ஜோதிகா.

ஒரு சினிமாவை மிஞ்சிய அத்தனை சாகசங்களும் நிறைந்ததுதான் தேவயானி ராஜகுமாரன் காதல். அழகிலும் அந்தஸ்திலும் நெப்டியூன் தூரத்திலிருந்தார் தேவயானி. ஆனால் ‘இன்னும் கூட தொலைவிலிருக்கட்டுமே, என் ஏணி அதை விட நீளம்’ என்று படியேற ஆரம்பித்தார் ராஜகுமாரன். கிசுகிசுக்கள் கிளம்பியது. இருவரும் காதலிப்பதா? ‘வெட்டிப்புடுவேன் வெட்டி...’ என்று கத்தி சுற்ற ஆரம்பித்தார்கள் சிலர். திருத்தணியில் திருட்டுக் கல்யாணத்தை பிக்ஸ் பண்ணிய ஜோடி, ராவோடு ராவாக எஸ்கேப் ஆகி நிஜ காதலுக்கு ஏது அழிவு? என்ற எண்ட் கார்டுடன் தங்கள் புது வாழ்க்கைக்கு வெல்கம் கார்டு போட்டது.

ஒரு வேடிக்கை என்ன தெரியுமா? இந்த கல்யாணம் நடக்கப் போவதற்கு முதல்நாள் பிற்பகல் நிருபர்களைச் சந்தித்து, எனக்கும் தேவயானிக்கும் லவ் இல்ல. இல்லவே இல்ல என்று சத்தியம் செய்தார் ராஜகுமாரன். மறுநாள்தான் இப்படியொரு திருப்பம்!

ஐஸ்வர்யாவை காதலிக்கும்போது தனுஷின் மார்க்கெட் அவ்வளவு பெருசு இல்லைதான். ஆனால், காதல் என்பது அந்தஸ்து பார்த்து வருவதில்லையே? முதன் முதலில் காதலைச் சொன்னவர் ஐஸ்வர்யாதான். மகளின் ஆசைக்கு ரஜினி இசைந்து கொடுத்ததுதான் இந்தக்காதலில் நடந்த ஆகப்பெரிய அதிசயம். ரஜினியை, கன்வின்ஸ் செய்தவர் இயக்குநர் சிகரம் பாலசந்தர்தான் என்றொரு தகவல் உண்டு.

அந்தக் காலத்து ரஜினி என்று பாராட்டப்படுகிற அளவுக்கு கலெக்‌ஷனை அள்ளிக்குவித்த ராமராஜன், நடிகை நளினியைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால் ராமராஜனின் டாப் கிளாஸ் மார்க்கெட்டை பார்த்துக் காதலிக்கவில்லை நளினி. இராம.நாராயணன் படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோதே, அவரிடம் உதவி இயக்குனராக இருந்த இவரைக் காதலிக்க ஆரம்பித்துவிட்டார் நளினி.  முதல் படமான புதிய பாதை படத்திலேயே தனக்கு ஜோடியாக நடித்த சீதாவை காதலிக்க ஆரம்பித்துவிட்டார் பார்த்திபன். இந்தத் திருமணம் மார்க்கெட்டில் பலரையும் பொறாமைப்பட வைத்த திருமணம். கண் திருஷ்டியோ என்னவோ? பத்து வருஷம் கூட சேர்ந்து வாழவில்லை இருவரும்.

மேடம் மேடம் என்று தன்னிடம் பணிவாக இருந்த சுந்தர்சியிடம், காதலை ஓப்பன் பண்ணியவர் குஷ்புதான். பிரபல நட்சத்திர ஓட்டலில் நடந்தது திருமணம். பலருக்கும் அழைப்பு போனது. ஆனால் ஒரு நிருபரை மட்டும், உள்ளேயே விடாதீங்க என்று வாசலில் குண்டர்களை நிறுத்தியிருந்தார் குஷ்பு. ஏன்? இத்தனை வருஷம் கழித்து ஏன் அந்த காரணத்தை ஆராய வேண்டும். லீவ் இட்!

‘அச்சமுண்டு அச்சமுண்டு’ என்ற படத்தின் ஷுட்டிங்கிற்காக அமெரிக்காவில் ஒரே வீட்டில் தங்கியிருந்தார்கள் அப்படத்தின் ஜோடி பிரசன்னாவும் சினேகாவும். படம் முடிவதற்குள் இருவரும் சினிமா ஜோடியிலிருந்து நிஜ ஜோடியாக பிரமோஷன் ஆனார்கள்.

ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்த ராம்கியும் நிரோஷாவும் இருபத்தைந்து வருஷம் கழித்துதான் தங்களுக்கு கல்யாணம் ஆன விஷயத்தையே ஒப்புக் கொண்டார்கள்.  நட்சத்திர ஜோடிகளை கணக்கில் எடுத்துக் கொண்டால் சரத்குமார் ராதிகா , முகேஷ் சரிதா ,பிரியதர்ஷன் லிஸி , ரஞ்சித் பிரியாராமன், அமலா நாகார்ஜுனா , செல்வமணி ரோஜா .. இப்படி நீள்கிறது அந்த வரிசை.

என்னதான் இருந்தாலும், ‘மருதநாட்டு இளவரசி’ படத்திலேயே தன்னுடன் நடித்த ஜானகியைக் காதலித்து மணந்த எம்.ஜி.ஆரின் தெய்வீக காதலுக்கும் கல்யாணத்திற்கும் இருந்த மதிப்பே தனியல்லவா?

ஆகஸ்ட், 2017.

logo
Andhimazhai
www.andhimazhai.com