தயவு செய்து தபால் பெட்டியில் கடிதங்களை இடவேண்டாம். பறவைகள் கூடுகட்டியிருக்கின்றன''
இந்த 19. சிதம்பரம் நகர் , பெருமாள் புரம் வீட்டு வெளிக் கதவில் இருக்கும் தபால்பெட்டிக்கு முன், இப்படிக் கைப்படப் பெரிய உருட்டு எழுத்துக் களில், இரண்டு குருவிப் படங்களையும் சரியான இடங்களில் வரைந்து தொங்கவிட்டிருந்தேன். முழு வீடடைப்புத் தினங்களில் எந்தத் தபாலும் தபால்காரரும் வராமல் இருந்து பின்பு வர ஆரம்பித் ததும், எங்கள் போஸ்ட்மேன் அதைப் படித்துவிட்டு, ‘அப்படியா சார், குருவி கூடு கட்டியிருக்கா. ரொம்ப சந்தோஷம்' என்று எங்களைக் கூப்பிட்டுக் கையில் கொடுத்துவிட்டுப் போனார். இப்படி ‘சந்தோஷம்' தெரிவித்துச் சிரிக்கிற முகம் எங்களுடைய எல்லா வீட்டு முகவரிகளுக்கும் வருகிற தபால்காரர்களுக்கு இருந்திருக்கின்றன.
அதே போல, என் அத்தனை நல்லது கெட்டதுகளுக்கும் மத்தியில் ஒரு தபால்காரரிடம் இருந்து நேரில் தபால் வாங்கும் போது எல்லாம் என் முகத்தில் சந்தோஷம் தவிர வேறு எதுவும் இருந்திருக்காது. அது வேறு ஒரு முகம். அந்த முகத்தை இப்போதும் நான் தரித்திருக்கிறேன். அதுதான் தபால் பெட்டியில் மாம்பழக் குருவிகள் நான்கு முட்டைகள் இட்டு மூன்று குஞ்சுகள் பறந்து போவதற்கும், மறுபடியும் இரண்டு முட்டைகளை இட்டிருப்பதற்கும் சந்தோஷப்படுகிறது.
முதல் முதலாக, எங்கள் அப்பாவுக்கு நான் எழுதிய அந்தக் கடிதத்தை 21.உ. சுடலைமாடன் கோவில் தெரு, திருநெல்வேலி டவுன் என்ற எங்கள் வீட்டு விலாசத்தில் கொண்டு போய்ச் சேர்த்த தபால்காரர் யார் என்று தெரியாது. ஆனால் நான் அந்த போஸ்ட் கார்டை எழுதியது 5.ஆ ஐயர் சார்வா கிளாஸில் வைத்துதான். இப்போதும் எனக்கு அந்த அற்புதமான ஐயர் சார்வாவின் குரலும் முகமும் அப்படியே நினைவில் இருக்கிறது. அவருடைய குரல் வளை தொண்டையில் புடைத்திருக்கும். அவ்வளவு கனத்த, விரிசல் விழுந்த, அன்பான குரலை இதுவரை வேறு எங்கும் கேட்கவில்லை. எனக்கு ராஜன் மகள், தாண்டவராயன் கதை, வாரணாசி எல்லாம் எழுதியிருக்கிற பா,வெங்கடேசனின் படத்தைப் பார்க்கையில் ஐயர் சார்வா என் முன் வந்துவிட்டுப் போவார்.
நாங்கள் எல்லாம் 5. ஆ. மடத்துப் பிள்ளை சார்வா கிளாஸ்தான். அவர் லீவில் போயிருந்ததால் பூசை மடம் பக்கத்தில் இருந்த 5.ஆ யில் வைத்து எல்லோரும் ஒரு போஸ்ட் கார்டில் & சரி, அஞ்சல் அட்டையில் & பென்சிலால் எழுதினோம். ஐயர் சார்வா சொன்னாரா, போர்டில் எழுதிப் போட்டாரா ஞாபகம் இல்லை. பெயர் , விலாசம் தவிர எல்லோரும் எழுதியதும் அப்படியே சார் சொன்னதைத்தான், அதுவும் அப்பாவுக்குத்தான். (இந்த என்னுடைய 74 ஆம் வயதில் முள் தைக்கிற மாதிரி ஒரு கேள்வி வருகிறது. அன்றைக்கு என் கூடப் படித்த எல்லோருக்கும் அப்பா இருந்திருப்பார்களா?)
அந்த 21.உ.சுடலைமாடன் கோவில் தெரு விலாசம் என்பது 2014 இல் நிறைந்த அப்பாவின் வாழ்வுக்காலம் வரை, அனேகமாக, திருநெல்வேலி தபால் சரகம் முழுமைக்கும் தெரிந்த, இன்னும் மங்காதிருக்கிற ஒன்றுதான். அதனுடைய தி.க. சிவசங்கரன், தி.க.சி என்ற விலாசதாரரோடு பின்னால் 1980 செப்டம்பர் வரை எஸ்.கல்யாண சுந்தரம், வண்ணதாசன், கல்யாண்ஜி என்ற பெயர்களும் புழக்கத்தில் இருந்தன. பொங்கல் வாழ்த்துகள் முதலில் என் பெயருக்கு வந்திருக்கலாம். அப்புறம் தினத்தந்தியில் வந்த சிரிப்புப் படங்களுக்கான ஐந்து ரூபாய் மணியார்டர், அதன் பிறகு எனக்கு வரும் கடிதங்கள், பத்திரிகைகள். டி.என்.பி.எஸ்.சி என்ற சர்வீஸ் கமிஷன் தேர்வின் மூலம் தலைமைச் செயலகத்தில் சமூக நலத்துறையில் கிடைத்த வேலைக்கான ‘ஆர்டர்' அந்த On government Service only என்ற முத்திரையுடன் வந்த நீண்ட பிரவுன் கவர் எல்லாவற்றிலும் தலையாயது.
முட்டி மோதிப் படித்து முடித்து வேலை இல்லாமல் இருந்த அந்த 69,70 ஆம் வருடப் பகல்களின் உச்சிப் பொழுதை, அந்த நேரத்தின் வெயிலின் பளீரை, அதன் உக்கிரத்தை, அதன் நிழல் எங்கெங்கு விழும் அல்லது விழாதிருக்கும் என்பதை எல்லாம் என்னால் சொல்ல முடியும். தபால்காரரின் செருப்புச் சத்தத்தை, அது நடையேறி வாசலுக்கு வந்து நெருங்குவதையும் விட்டு விலகுவதையும் நான் உணர்ந்திருந்தேன். அப்போது எல்லாம் இரண்டு வேளைகளில் தபால் வரும். அதில் காலைத் தபால்களுக்குக் காத்திருப்பது தான் பெரிய அவஸ்தை. பதினொன்றுக்கு அடிக்க ஆரம்பிக்கிற அந்தக் காய்ச்சல் ஒன்று ஒன்றரை வரை உச்சத்திற்குப் போய் அப்புறம்தான் தணியும்.
எனக்கு இரண்டு தபால்காரர்களின் தோற்றத்தை அப்படியே வரைய முடியும். முதன் முதலாக என் பதின்வயதுப் போஸ்ட்மேனாக ஞாபகத்தில் இருக்கிறவருக்குத் திம்மராஜபுரம் என்று நினைக்கிறேன். அவர் நியமம் தவறாதவர். அப்போது எல்லாம் காக்கிச் சீருடை. கையில் குடை வைத்திருப்பார். வேறு யாரிடமும் சிரித்துப் பேசுபவராக இருக்கலாம். என்னிடம் ‘உன்னை மாதிரிச் சின்னப் பையனிடம் எல்லாம் எனக்கு என்ன?' என்பது போல் விரைப்பாக இருப்பார். இப்போது நினைத்துப் பார்த்தால், அவருக்குச் சிறு அதிகாரம் உடைய ஒரு நாற்காலியைக் கொடுத்திருந்தால், அவருடைய அலுவலக நிர்வாகம் சிறப்பாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. அவருடைய பெயர் என்ன என்று எனக்குத் தெரியாது. முகம் கொடுத்தே பேசாதவரிடம் ‘ உங்க பெயர் என்ன?' என்று கேட்க எப்படித் தோன்றும். மேலும் நான் இன்றைக்கு வரை அப்படி எல்லாம் ‘வெடிதுடி'யாக யாரிடமும் பேசுகிறவனும் இல்லை தானே.
எனக்குப் பிடித்த தபால்காரர் நந்தகோபால் தான். அவரைச் சுடலை மாடன் கோவில் தெருவில் மட்டும் அல்ல, ஒரு சுவாரசியமான நாவலின் எந்தத் தெருவிலும் நடமாட விடலாம். அவருக்கு வேறு வேறு புறங்கள் இருக்கலாம். ஆனால் எப்படி எந்தக் கோணத்திலிருந்து வரைந்தாலும் நெருக்கமான உருவம் நந்தகோபாலுக்கு. ஒல்லியாக இருப்பவர்களை மட்டுமே தபால்காரர் வேலைக்கு எடுப்பார்களோ என்னவோ. அதுவே நந்தகோபாலின் முதல் தகுதியாக இருக்க வேண்டும். கூடுதலாகச் சட்டைப் பைகள் உடைய காக்கி உடையை அவர் விருப்பத்தோடு அணிந்திருப்பார். கடிதக்கட்டுகளோடு அவர் ஒரு மகிழ்ச்சியான முகத்தையும் வைத்திருந்தார். அவருடைய குரலிலும் அது இருக்கும். சின்னப் பிள்ளைகள் கடிதம் வந்திருக்கிறதா என்று கேட்டால் கூட,'நாளைக்கு வரும். தாரேன்' என்று அவர் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். அவர் தபால் விநியோகிக்கும் தெருவின் பிள்ளைகள் எல்லோரும் ‘நாளைக்கு வரும்' தபால்களை ஒவ்வொரு நாளும் வாசித்துக்கொண்டே இருந்திருப்பார்கள்.
நந்தகோபாலுக்கு இரண்டு குடும்பம் என்று யாரோ சொன்னார்கள். இருக்கட்டுமே. அவருடைய யாதவர் தெரு எங்கள் தெருவில் இருந்து இரண்டு மூன்று தெரு தள்ளி இருக்கும். மேல ரதவீதியில் இருந்து பேட்டை ரோடில் இருக்கும் பல தெருக்களுக்கு எங்கள் தெரு ஒரு குறுக்குத் தெருவைப் போல. ஒரு தடவைக்கு மேல், நந்தகோபாலை அவருடைய சாதாரண உடையில் குடும்பத்தோடு நடந்து போவதைப் பார்த்திருக்கிறேன். இடமும் வலமும் பிள்ளைகளிடம் திரும்பிச் சந்தோஷமாக உரத்துப் பேசிக்கொண்டே போவார். நான் எதிரே வருவதைப் பார்த்தால் எனக்கும் ஒரு சிரிப்பைத் தருவார். இப்படி அவரும் சிரித்து, எனக்கும் கொஞ்சம் தருகிறவருடன் வருவது ஒன்றாவதோ, இரண்டாவதோ எந்தக் குடும்பமாக இருந்தால் தான் என்ன?
நந்தகோபாலை ஒரு தபால்காரராக அல்லாமலும் நான், கலாப்ரியா எல்லோரும் ஞாபகம் வைத்திருப்பது அவர் போடுகிற காளி வேஷத்தால். அவர் சமூகத்துக்குப் பாத்தியப்பட்டது ‘திருவடி அம்மன் கோவில்' என்று சுருக்கமாகப் பெண்களால் அழைக்கப்படும் ‘திரிபுரசுந்தரி அம்மன் கோவில்'. அந்தக் கோவில் கொடைக்கு வருடா வருடம் நந்தகோபால் தவறாமல் காளிவேஷம் போடுவார். என்னிடம் காளி எப்படி இருப்பாள் என்று கேட்டால் நந்தகோபால் போடும் காளியைத் தான் சொல்வேன். அதிலும் அந்த நாக்கும், நாக்குத் தொங்கலும் உண்டாக்கும் காளிமையைச் சொல்லி முடியாது. கொடை முடிந்து அவர் மறுநாளோ இரண்டாம் நாளோ டூட்டிக்கு வந்த பிறகும் அவரிடம் அந்தக் காளி நாக்கும் கோரைப் பல்லும் எனக்குத் தெரியும். தபால்காரரில் இருந்து அவர் கொஞ்சம் கொஞ்சமாகக் காளிக்குள் நுழைவதையும், காளிக்குள் இருந்து வெளியேறி அவர் அன்றாடத்தின் தபால்காரர் ஆவதையும் பற்றி அவரைச் சொல்லச் சொல்லிக் கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அப்படி ஒரு கதையை நான் எழுதிக் கூடப் பார்த்திருக்கலாம்.
அகம்புறம் தொடர் விகடனில் வந்துகொண்டு இருந்த சமயம் அதில் தபால்காரர்களைப் பற்றிய பகுதி ஒன்றுக்காக வின்சென்ட் பால் சில படங்களை எடுத்திருப்பார். 21.உ முகவரிக்குத் தபால் விநியோகிக்கிற அவருடைய பெயர் பாலசுப்ரமணியம் என்று நினைக்கிறேன். அந்தப் படத்தில் அவர் நிற்கிற கல் ‘தார்சா'வும், பின்னால் தெரியும் மச்சுப் படிகளை ஒட்டிய உயரமான மரக்கதவின் முதிர்ந்த வயதும் இந்த நிமிடத்தில் உண்டாக்கும் நினைவேக்கம் ஒரு துயரமிக்க பழைய கண்டசாலா பாடல் போன்றது.
2006--ல் பணி ஓய்வு பெற்ற பிறகுதான் மறுபடியும் எனக்கும் ஒரு தபால்காரருக்குமான உறவை நேரடியாகப் புதுப்பித்துக்கொள்ள முடிந்தது. காக்கிச் சீருடைகள் மாறி இள நீல வண்ணச் சட்டைக்கு வந்திருந்தது. பத்மநாபனின் பரந்த முகத்துக்கும் ஐம்பதுகளில் இருக்கிற அவருடைய தோற்றத்திற்கும் அந்த உடை மிகப் பொருத்தமாக இருக்கும். நாடகத்தின் அடுத்த சீனில் அப்பாவாக மேடையேறப் போகிற ஒரு திருத்தமான முகமும் மீசையும் அவருக்கு.
ஏற்கனவே தபால்களை விடக் கூடுதல் மடங்குகள் கூரியர்கள் வருகின்ற காலம் அது. ப்ரொஃபெஷனல் கூரியர் முத்துக்குமார் என்னுடைய அன்றாடங்களை நிரப்புகிற தவிர்க்க முடியாத மனிதர் ஆகியிருந்தார். என் கவிதைகளில் முத்துக் குமார் நிறைய தடவைகள் அதே பெயரிலும் பெயர் இல்லாமலும் வந்துகொண்டு இருந்தவர். என்னைப் போலவே கருப்பு நிற பால் பாயிண்ட் பேனாக்களைப் புதிது புதிதாக உபயோகிக்கிறவர். 'நல்லா எழுதுதே' என்று பேனாவின் பெயரை உருட்டிப் பார்த்தால் அப்படியே அதை என் கையில் கொடுத்துவிட்டுப் போய்விடுவார்.
இன்னொரு கூரியர் நிறுவனம் சார்ந்த லட்சுமணனை அவருடைய தனிப்பட்ட சுபாவங்களுக்காக எனக்குப் பிடிக்கும். அவரிடம் எதோ ஒரு விலகல் உண்டு. நெடு நெடு என்று போகாமல், இரண்டு மூன்று வளைவுகள் உள்ள தென்னை மரத்தின் விலகல். பிற்பகல் எல்லாம் தாண்டி, நான்கு மணி, ஐந்து மணிக்கு எல்லாம் வருவார். ‘என்ன லட்சுமணன் அஞ்சு மணிக்கா கூரியர் கொண்டு வருவாங்க?' என்று கேட்டால், ‘சார். சாப்பிட்டுப் போட்டுக் கொஞ்சம் ரெஸ்ட் எடுப்பீங்க. உங்களை டிஸ்டர்ப் பண்ணக்கூடாதுல்லா' என்று சொல்வார். அது கெட்டிக் காரத்தனமானது அல்ல. நான் குறிப்பிட்ட அந்த இரண்டு மூன்று வளைசல் அது.
ஒரு விடுகதை, அல்லது புதிர்க்கணக்குப் போட்டு விடுவிக்கச் சொல்வார். 'தெரியலையே… லட்சுமணன்' என்று சொன்னால் சிரித்தபடி அதன் விடையைச் சொல்வார். ‘சார். நாளைக்கு இத்தனை மணிக்கு ஹலோ எஃப். எம். கேளுங்க. நான் கேட்டிருக்கிற பாட்டு எல்லாம் போடுவாங்க' என்பார். சம்பந்தமே இல்லாத ஒரு புள்ளிவிபரத்தை மிகத் துல்லியமாகச் சொல்லி, அதை எங்கே படித்தார் என்ற விபரம் தருவார்.
ரொம்ப நாளைக்கு அப்புறம், சமீபத்தில் ஒரு கூரியர் கொடுக்க வந்தவர், வாடினது போல இருந்தார். 'இந்த கொரோனா ரொம்ப டேஞ்சர் பண்ணிட்டு சார். நூறு ரூபா கூட ஒரு நாளைக்குக் கிடைக்காட்டா மனுஷன் சாப்பாட்டுக்கு என்ன சார் பண்ணமுடியும்?' என்று சைக்கிளில் கால் வைத்தபடியே சொன்னார். அவருக்கு ஏதாவது கொடுக்கலாமா என்று யோசித்தபடி நான் கையெழுத்தைப் போட்டுப் பேனாவைத் திருப்பிக்கொடுப்பதற்குள் போயிருந்தார். உள்ளே போய் எடுத்துவந்து, அவருக்கு என்னால் முடிந்ததைச் செய்கிறவரை, நான் ஏதாவது அவரிடம் பேச்சுக் கொடுத்திருக்க வேண்டும்.
அவர் நான் எழுதிப் போட்டிருப்பதைப் பார்க்காவிட்டால் என்ன? ‘தபால் பெட்டியில குருவி முட்டை போட்டிருக்கு லெச்சுமணன்' என்று நான் அவரிடம் சொல்லியிருக்க வேண்டும்.
ஒரு குருவியின் ஆகாரம் என்ன என்ன என்று அவர் நிச்சயம் சொல்ல ஆரம்பித்திருப்பார்.
ஆகஸ்ட், 2020.