மாப்பிள்ளையை தூக்குடா

மாப்பிள்ளையை தூக்குடா
Published on

தமிழ்ப்படங்களில்தான் தூக்குடா பொண்ணை என்று சப்தம்போட்டுத் தூக்கிச் செல்வார்கள்.நிஜவாழ்க்கையிலும் பெண்ணை வீடுபுகுந்து தூக்கிச் சென்று தாலிகட்டிவிடும் சம்பவங்கள் சில பத்தாண்டுகளுக்கு முன்வரை கிராமப்புற யதார்த்தங்களாக இருந்தன.

ஆனால் யாரும் மாப்பிள்ளைகளைத் தூக்கிச் சென்று பெண்ணுக்குக் கட்டிவைக்கமாட்டார்கள். பல மாப்பிள் ளைகள் கட்டிக்கொள்ள பெண் இல்லாமல் தங்களை யாரும் கடத்திச் செல்லமாட்டார்களா என்றுகூட இங்கே காத்திருக்கலாம். அவர்கள் பீகாருக்குச் சென்றால் நல்ல வாழ்வு(?) காத்திருக்கிறது. ஆமாம். இளைஞர்களைக் கடத்திச் சென்று பெண்களுக்குக் கட்டிவைக்கும் பழக்கம் பீகாரில் ஜாம் ஜாமென நடந்துவருகிறது.

2009-ல் 1337 மாப்பிள்ளைக் கடத்தல் சம்பவங்கள் பதிவாயின. 2013-ல் 2529-ஆக இது உயர்ந்திருக்கிறது.

ராணுவத்தில் பணியாற்றும் இளைஞரான சோனு விடுமுறையில் வீட்டுக்கு வந்தார். விடுமுறை முடிந்து திரும்பிச் செல்ல ரிட்டர்ன் டிக்கெட் எடுக்க ரயில் நிலையம் சென்றார். நான்குபேர்  முகமூடி அணிந்து கையில் ஆயுதங்களுடன் காத்திருந்தார்கள். அப்படியே அவரைத் தூக்கி காரில் போட்டுக் கொண்டுபோனார்கள். ஒரு கிராமத்தில் மணவிழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மணப்பெண் அலங்காரத்துடன் மேடையில் காத்திருந்தார். சோனுவுக்குவேறு வழியே இல்லை. மேடையில் உட்கார்ந்தார். கல்யாணம் ஆகிவிட்டது. மணப்பெண் வீட்டை விட்டுத் தப்பிச் செல்லலாம் என்று யோசித்தால்  மவனே உன்னை குடும்பத்துடன் அழித்துவிடுவோம் என்று மாப்பிள்ளை மரியாதையாக மிரட்டப்பட்டார். கண்ணீரும் கம்பலையுமாக வாழ்க்கைப் பட்ட இடத்தில் நாட்களை ஓட்டுகிறார்.

பொதுவாக இப்படிப்பட்ட திருமணத்தில் வேறுவழியில்லை என்று சில நாட்கள்கழித்து இரு குடும்பத்தாரும் ஒப்புக்கொள்வார்கள். உள்ளூர் மொழியில் இது ’பக்கட்வா ஷாதி’ என்று அழைக்கப்படுகிறது.

அப்படியொன்றும் பீகாரில் மாப்பிள்ளை கிடைக்காத நிலை இல்லை. அங்கு ஆண்களைவிட பெண்குழந்தைகள் குறைவுதான். 2011 கணக்கீடுபடி 1000 ஆண்களுக்கு 751 பெண்குழந்தைகளே பிறக்கின்றன.

இந்த மாப்பிள்ளை கடத்தலுக்கு பீகாரில் நிலவும் வரதட்சணைக் கொடுமையே காரணம். பெருமளவும் நகைபோட்டு பெண்ணைக் கட்டிக் கொடுக்க முடியாதவர்கள் குண்டர்களை ஏற்பாடு செய்து மாப்பிள்ளையைப் பிடிக்கிறார்கள். அதற்காக வேறு சாதியில் மாப்பிள்ளை பிடிப்பார்கள் என்று எண்ணவேண்டாம். சுய சாதியில்தான். அங்குள்ள பூமிஹார், யாதவா சாதிகளைச் சேர்ந்தவர்கள் மத்தியில்தான் இந்த கடத்தல்கள் அதிகம் நடக்கின்றன.

இது பத்தாண்டுகளுக்கு முன்பாக மிக அதிகமாக நடந்துவந்தது. ஆனால் இப்போது குறைந்துவிட்டது. சமூகத்தில் இதற்கான எதிர்ப்பு வலுத்துவருகிறது. அரசு நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டது ஒரு முக்கியகாரணம். அதனால்தான் இதுபற்றிய புகார்கள் காவல்துறைக்கு வருவது அதிகரித்துள்ளது என்று சமூகவியலாளர்கள் சொல்கிறார்கள்.

“முன்பு வேலையில்லாமல் நிறைய இளைஞர்கள் இருந்தார்கள். அவர்கள் இதுபோன்ற கடத்தல் வேலைகளில் காசு வாங்கிக் கொண்டு ஈடுபட்டார்கள். ஆனால் இப்போது பலருக்கு அரசு ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர் பணி போன்றவற்றைத் தந்துள்ளது. எனவே இதுபோன்ற கடத்தல்வேலைகளில் ஈடுபட ஆட்கள் குறைந்துவிட்டார்கள். அத்துடன் இந்த கடத்தல் திருமணங்கள் பலவற்றிலும் கணவன்-மனைவி வாழ்க்கை திருப்திகரமாக இல்லை. பெண்கள் கைவிடப்படுகிறார்கள். எனவே ஆணாதிக்க சமூகத்தில் இந்தத் திருமணங்களுக்கு எதிர்காலமும் இல்லை. எனவே இது குறைந்துவருகிறது” என்று சொல்கிறார் பாட்னாவைச் சேர்ந்த சமூக ஆர்வலரான கோபால்கிருஷ்ணா.

சில  சமயங்களில் மாப்பிள்ளையை கடத்தல்காரர்கள் மாற்றிக்கடத்திவிடுவதும் உண்டாம். அப்போது பெண்வீட்டுக்காரர்களுக்கும் கஷ்டம். மாப்பிள்ளைக்கும் கஷ்டம்தான். ஆனால் இந்த கட்டாய கல்யாணம் செய்துகொள்ளும் மணமகள் நிலைதான் படுமோசம். திடீரென்று கணவன் கைவிட்டு ஓடிவிடும் வாய்ப்பை எதிர்நோக்கியே வாழ்க்கை நடத்தவேண்டும்!

ஆகஸ்ட், 2014.

logo
Andhimazhai
www.andhimazhai.com