அந்தச் செய்தி, பீஹாரில் இருந்து வந்தது. அங்குள்ள பெல்ச்சி என்ற இடத்தில் ஒன்பது தலித்துகள் நிலச்சுவான்தார்களால் கொல்லப்பட்டனர். அது 1977 ஜூலை மாதம்.
மத்தியில் அப்போது ஜனதா கட்சி ஆட்சி. தோல்வியுற்று ஓய்வில் இருந்த இந்திரா காந்தியின் கால்களில் இறக்கை முளைத்துவிட்டது. சிலமாதம் முன்பு நடந்த தேர்தலில் பீகாரில் காங்கிரஸ்
சுத்தமாகத் தோற்றுப்போயிருந்தது. அதனால் என்ன? என்ன பிரச்னையாக இருந்தாலும் 'ஆன் தி ஸ்பாட்' போகும் இரும்புப் பெண்மணி, புதுடெல்லியிலிருந்து ரயிலில் கிளம்பினார். பீகார்ஷெரிப் என்ற ஊர். அங்கே இறங்கியதும் பெல்ச்சிக்குப் போவதற்கு சாலை சரி இல்லை என்றார்கள் கூடியிருந்த ஆதரவாளர்கள். பரவாயில்லை.'நாம் நடந்தாவது செல்வோம். இரவானாலும் சரி' என்றார் அவர். அங்கிருந்து ஜீப் கிடைத்தது. மண்சாலையில் குறிப்பிட்ட தூரம் தாண்டி போக முடியவில்லை. அங்கிருந்து மூன்றரை மணி நேரம் சென்றால்தான் பெல்ச்சியை அடையமுடியும். இந்திராவுக்குக்
கிடைத்தது ஒரு ட்ராக்டர். அதில் ஏறிக்கொண்டார். அதுவும் வழியிலேயே நின்றுவிட்டது. சேறு நிறைந்த சாலை. மழை பெய்துகொண்டிருந்தது.
சேற்றில் இறங்கி நடக்கத் தொடங்கினார் இந்திரா. வழியில் இடுப்பளவு தண்ணீர் இருக்கும் போக முடியாது என்று உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் சிலர் பின் வாங்கினர். சேலையைத் தூக்கிச் செருகினார். தண்ணீரில் நடந்து செல்வோம் என்றார். உடனிருந்த தொண்டர்கள் தயங்கினர்.
ஒருவர் தயங்கியவாறு சொன்னார்: ''அம்மா, ஒரு யானையைக் கொண்டுவரவா?''
இந்திராவின் முகம் மலர்ந்தது. ''உடனே கொண்டுவருக'' என்றார்.
''அம்மா எப்படி யானைமேல் ஏறுவீர்கள்?'' என்றனர்.
''ஏன்? நான் நிறைய யானை சவாரி செய்திருக்கிறேன். என்ன.. அதெல்லாம் நடந்து கொஞ்ச நாள் ஆச்சு''
அதே ஆண்டு அக்டோபர் மாதம் அவரது இல்லத்தில் வைத்து சிபிஐ அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார். மாலை நேரம் வீட்டுக்கு வந்தவர்களிடம் இந்திரா சொன்னார்.''எனக்கு விலங்கு பூட்டுங்கள்.'' அவ்வளவு எளிதாக தன்னை அழைத்துச் செல்ல அவர் விடவில்லை. காங்கிரஸ் தொண்டர்கள் வீட்டுவாசலில் குவியும்வரை அவர் தாமதம் செய்தார். அவரை அழைத்துக்கொண்டு டெல்லிக்கு வெளியே ஹரியானா எல்லையில் ஓரிடத்தில் தங்க வைக்க முடிவு செய்தார்கள். அவரை ஜீப்பில் ஏற்றி அழைத்துச் சென்றனர். வழியில் ஓரிடத்தில் ரயில்வே கிராஸிங் குறுக்கிட்டது. ஜீப் நின்றது. அந்த இரவில் மெல்ல அதில் இருந்து இறங்கிய இந்திரா, சாலையோரமாக இருந்த கல் ஒன்றின்மீது அமர்ந்துகொண்டார். அதிகாரிகள் கேட்டுப்பார்த்தும் நகரவில்லை. கூட்டம் கூடிவிட்டது. இந்திராவை விடுதலை செய் என்ற கோஷம். சிபிஐ இயக்குநரிடம் பேசினார்கள். அவரை டெல்லியிலேயே ஓரிடத்தில் தங்க வைக்க முடிவு செய்யப்பட்டது.
ஏராளமான ஜீப்களை தேர்தல் பிரசாரத்துக்கு அனுப்புமாறு தொழிலதிபர்களைக் கேட்டதாகவும் அதற்குப் பரிகாரமாக இந்திரா அவர்களுக்கு ஒப்பந்தங்களை அளித்ததாகவும் குற்றச்சாட்டு. இது ஜீப் ஊழல் எனப்பட்டது. மறுநாள் நீதிமன்றத்தில் அவரை நிறுத்தியபோது சிபிஐயின் கேஸ் டைரியில் சரியான பதிவுகள் இல்லை. அவசரகதியில் செய்ததால் குளறுபடி செய்திருந்தார்கள். உடனே அவரை நீதிமன்றம் விடுதலை செய்துவிட்டது. உள்துறை அமைச்சர் சரண்சிங், இந்திராவை
நடுச்சாலையில் நிறுத்தி சாட்டையால் அடிக்கவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அதனால் சட்ட அமைச்சக அனுமதி இன்றியே நேரடியாக சிபிஐயை அவசரப்படுத்தி கைது செய்ய வைத்தார். கையைச் சுட்டுக்கொண்டார். அரசுக்கு இது பெரிய அவமானமாகப் போய்விட்டது.
1977 தேர்தல் தோல்விக்குப் பின் இந்திரா கொஞ்ச காலம் ஒதுங்கி இருந்தாலும் பின்னர் அவர் ஆச்சார்யா வினோபா, ஜெயபிரகாஷ் நாராயணன் ஆகியோரையும் நேரில் சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் மீண்டும் அரசியலில் தீவிரமாக நுழைந்தார். இது காங்கிரஸ் தலைவராக இருந்த பிரமானந்த ரெட்டி, நாடாளுமன்றக் கட்சித் தலைவர் ஒய்.பி. சவான் ஆகியோருக்குப் பிடிக்கவில்லை. அப்போது இந்திரா ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்த ஒரு கூட்டத்துக்கு இவர்களும் மேலும் பலரும் வரவில்லை. பாதிக்கும் மேல் காங்கிரஸ் எம்பிகளும் வரவில்லை. கட்சி உடைவது உறுதி ஆகிவிட்டது. பிரம்மானந்த ரெட்டி தலைமையில் ஒரு அணியும் இந்திரா தலைமையில் இன்னொரு அணியுமாக ஆகிவிட்டது. பசுவும் கன்றும் என்கிற காங்கிரஸ் சின்னம் பிரம்மானந்த ரெட்டி வசமே இருக்க, இந்திரா காந்தி இரண்டு காளை மாடும் உழவனும் என்ற பழைய
சின்னத்தைக் கேட்டார். அதுவும் மறுக்கப்பட்டு கை சின்னத்தை புதிதாக தேர்வு செய்துகொண்டார்.
அடுத்த ஆண்டு 1978 தொடக்கத்தில் இந்திராவுக்கு இனிப்பான செய்திகள் வர ஆரம்பித்தன. ஆந்திராவில் சட்டமன்றத் தேர்தல். இந்திரா காங்கிரஸ் வெற்றி பெற்றது. மகாராஷ்டிரத்தில் யாருக்கும் பெரும்பான்மை இல்லை. இந்திரா காங்கிரஸும் பிரம்மானந்த ரெட்டியின் தலைமையிலான காங்கிரஸும் உடன்பாடு செய்து கொண்டு ஆட்சி அமைத்தன. கர்நாடகத்தில் இந்திரா காங்கிரஸ் வென்று தேவராஜ் அர்ஸ் ஆட்சி அமைத்தார். பிரம்மானந்த ரெட்டி தோல்விக்குக் பொறுப்பேற்று தலைவர் பதவியிலிருந்து விலகினார். ஸ்வரண்சிங் தலைவர் ஆனார். எந்த காங்கிரஸ் வலிமையானது என்பது மக்கள் மன்றத்தில் உறுதி செய்யப்பட்டிருந்தது.
இப்போது இந்திரா காந்தி நாடாளுமன்றத்துக்கு தேர்வாகவேண்டும். சிக்மகளூரில் இடைத்தேர்தல் வந்தது. அதில் நிற்க அவர் முடிவு செய்தார். அவரை எதிர்த்து ஜனதா கட்சி சார்பில் வீரேந்திர பாட்டீல் நிறுத்தப்பட்டார். ஜார்ஜ் பெர்னாண்டஸ் தேர்தல் பொறுப்பாளர். அனல் பறந்தது அங்கே. எப்படியும் அவரைத் தோற்கடிக்க ஆளும் கட்சி விரும்ப, இந்திரா அதை முறியடித்து 60,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ஆனால் அவர் வெற்றி பெற்று நாடாளுமன்றம் வந்த சில நாட்களில் அவரை மீண்டும் நாடாளுமன்ற உரிமை மீறல் பிரச்னை கொண்டு வந்து தண்டிக்குமாறு ஆளும் கட்சி கோரியது. நாடாளுமன்றத்தில் வாக்குகள் எடுக்கப்பட்டு, இந்திராவை சிறையில் அடைக்க முடிவெடுக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் இருந்தே சிரித்தவாறு அவர் சிறைக்குப் போனார். அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிக்கப்பட்டது. அவரை திஹார் ஜெயிலில் அடைத்து தன் தலையில் தானே மண்ணைப் போட்டுக்கொண்டது ஜனதா அரசு. ஒரு வாரம் காலமே சிறையில் இருந்தார் அவர். அவர் கைதானதும் பெங்களூரில் இரு காங்கிரஸ் காரர்கள் ஒரு பொம்மைத் துப்பாக்கியைக் காட்டி விமானத்தைக் கடத்தி அவரை விடுதலை செய்யும் மாறு கோரப்பட்டதும் நடந்தது.
இந்த பழிவாங்கும் நடவடிக்கைகள் போதாதா அவருக்கு?
வெளியே வந்தததும் ஜனதா அரசை மேலும் வலுவுடன் எதிர்கொண்டார். எந்த ஊழலிலும் என்னைச் சிக்க வைக்க அரசால் முடியவில்லை. பழிவாங்கும் முடிவோடு செயல்படுகிறது'' என்று அவர் சொன்னார்.
ஜனதா உடைந்து மொரார்ஜி தேசாய் ஆட்சி கவிழ்ந்ததும் எந்த சரண்சிங் இந்திராவை பழிவாங்கத் துடித்தாரோ அதே சரண்சிங் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவை விரும்பினார். அவருக்காக ராஜ்நாராயண், சஞ்சய் காந்தியிடம் பேசினார். மொரார்ஜிக்கு பதிலாக சரண்சிங்கை பிரதமர் ஆக்க ராஜ்நாராயண் நம் ஆதரவைக் கேட்கிறார் என சஞ்சய்காந்தி சொன்னபோது இந்திராவே நம்பவில்லை. ஏனெனில் ராஜ்நாராயண் ரேபரேலியில் இந்திராவுக்கு எதிராகப் போராடியவர். தேர்தலில் தோற்கடித்தவர்.
ஆதரவு தருவதாக இந்திரா சார்பில் சொல்லப்பட்டது. ஆனால் அது ஒரு அரசியல் தந்திரம்! அதில் சரண்சிங் கோஷ்டி வீழ்ந்தது.
சரண்சிங் பிரதமர் ஆனார். ஆனால் இப்போது இந்திராவை சரண்சிங் நேரில் சந்தித்து ஆதரவு கேட்கவேண்டும். அப்போதுதான் பெரும்பான்மையை நிரூபிக்க ஆதரவு தரப்படும் என்றார் சஞ்சய் காந்தி. மானத்தைக் காப்பாற்றிக்கொள்ள நாடாளுமன்றம் கூடும் முன்பே சரண் சிங் பதவி விலகிவிட்டார். இந்திரா மீதான வழக்குகளை வாபஸ் வாங்க வலியுறுத்துகிறார்கள் என்று சொன்னார்.
இதற்கிடையில் ஸ்வரண்சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சியும் இந்திரா காங்கிரஸும் ஒன்றாக இணைந்து ஒரே கட்சி ஆகி இருந்தன. 1980 நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. தமிழகத்தில் எல்லா பகையையும் மறந்து திமுகவுடன் கூட்டணி. தேர்தல் முடிவுகள் வந்தபோது அவர் 351 இடங்களில் வென்று ஆட்சிக்கு வந்தார். பிளவுபட்ட ஜனதா வென்றது 32 இடங்கள் மட்டுமே.