மான்கள் புலிகளை வேட்டையாடுகின்றன!

எம்ஜிஆர் நூற்றாண்டு
மான்கள் புலிகளை வேட்டையாடுகின்றன!
Published on

திமுகவின் முன்னாள் அமைச்சரும் 5 முறை சமஉ ஆக இருந்தவருமான ரகுமான்கான் எம்ஜிஆர் கால சட்டமன்றம் குறித்த தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்:

’எதிர்க்கட்சி வரிசையிலும் ஆளுங்கட்சி வரிசையிலும் சட்டமன்றத்திலே நான் இடம்பெற்று பல்வேறு விவாதங்களில் மணிக்கணக்கில் பேசியிருக்கிறேன். அதிமுகவின் முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது சட்டமன்றத்தின் நிலைக்கும், முன்னதாக எம்ஜிஆர் இருந்தபோது இருந்த நிலைக்கும் ஏராளமான வேறுபாடுகள் உண்டு. எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது நாங்கள் சுதந்திரமாக வாதங்களில் கலந்துகொள்ள, சபையில் பேச, கேள்வி கேட்க உரிமை இருந்தது. சட்டமன்றத்தில் ஜனநாயகம் பெரிய அளவில் இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு இருந்தது.

ஒருமுறை சட்டசபையில் விவசாயிகள் நிவாரணச் சட்டம் மீதான விவாதம் நடந்தது. அதற்கு முதல் நாள் இரவு தொலைக்காட்சியில் நான் எம்ஜிஆர் அவர்கள் நடித்த நாடோடி மன்னன் படத்தைப் பார்க்க நேர்ந்திருந்தது. அதில் வரும் காட்சியை நான் மனத்தில் இருத்திக்கொண்டேன்.  மார்த்தாண்ட ராஜா என்கிற எம்ஜிஆர் அவையிலே அமர்ந்திருப்பார். அங்கே அமைச்சராக அவரது சகோதரர் சக்கரபாணி நடித்திருப்பார். அப்போது கேள்விகள் கேட்கப்படும். எம்ஜிஆர் பதில்கள் சொல்வார்.

அமைச்சர்: நம்முடைய நாட்டிலே குடிசைகளை என்ன செய்வது?

எம்ஜிஆர்: தேவை இல்லாத காரணத்தால் குடிசைகள் கொளுத்தப்படும்.

இப்படியே பல சட்டங்களை எம்ஜிஆர் அறிமுகம் செய்வார். அதில் விவசாயிகளுக்கு நலன்களைச் செய்யும் முக்கிய அறிவிப்பும் உண்டு. அவர்களின் கடன் ரத்து செய்யப்படும் என்றும் கூறுவார். விவாதத்தன்று இந்த காட்சியை வைத்து  சட்டமன்றத்திலே பேசினேன்.  உங்கள் ஆட்சியில் விவசாயிகள் கஷ்டப்படுகிறார்கள். நாடோடிமன்னன் படத்தின் அறிவிப்புகளைத் தன் கொள்கைகளாகக் கொண்டிருப்பதாகச் சொல்லும் எம்ஜிஆர், விவசாயிகளின் கடன்களை ரத்து செய்து அறிவிக்கவேண்டும் என்றேன். இந்த விவாதம் நீண்டு சென்றது இன்னும் ஞாபகம் இருக்கிறது.

எம்ஜிஆர் ஆட்சியில் முனு ஆதி, பி.ஹெச். பாண்டியன், ராசாராம் போன்றவர்கள் சபாநாயகர்களாக இருந்தார்கள்.

ராசாராம் நகைச்சுவை உணர்வுடையவர். ஆளுங்கட்சி எதிர்க்கட்சி வேறுபாடு பார்க்கமாட்டார். உறுப்பினர்களுக்குப் பேச வாய்ப்புகள் தருவார். ஒருமுறை வணிகவரி சம்பந்தமான திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.  என்ன திருத்தம் என்று மட்டும் சொல்லப்பட்டதே தவிர ஏற்கெனவே இருந்த சட்டத்தையும் திருத்தம் இணைத்துவைக்கப் படவில்லை. இந்தத் திருத்தம் மீது நான் பேச வாய்ப்பு வந்தது. முதல்நாளே நான் அச்சட்டத்தை வாசித்தேன். மறுநாள் சட்டமன்றத்தில் இந்த சட்டத் திருத்தப் பிரிவு பற்றிய முழு தகவல் உறுப்பினர்களுக்குக் கொடுக்கப்படவில்லை. எனவே எப்படி நீங்கள் இந்தத் திருத்த மசோதாவைக் கொண்டுவரமுடியும் என்று கேள்வி எழுப்பினேன். இதற்கான பதில் துரதிருஷ்டவசமாக அத்துறை அமைச்சராக இருந்த எஸ்.டி.சோமசுந்தரம் வசம் இருக்கவில்லை. உடனே எப்படிப் பேசமுடியும் என்று கேட்டேன். அமைச்சரோ, நீங்கள் வக்கீல் நீங்கள் பேசலாம் என்றார். முதல்வராக இருந்த எம்ஜிஆர் அங்கே இவற்றைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார். சபாநாயகர் ராசாராம் அனைவரிடமும் உரிமையுடன் பேசக்கூடியவர். “ சோமு, ரகுமான்கான் கேட்பதுதான் நியாயம். இந்த மசோதாவை இன்று நிறைவேற்ற அனுமதி இல்லை” என்று கூறிவிட்டார். மறுநாள் பத்திரிகைகளில் அரசு கொண்டு வந்த ஒரு மசோதா இப்படி நிறைவேற்றாமல் தள்ளிப்போனது இதுதான் முதல்முறை என்று செய்திவந்தது. அந்த அளவுக்கு  சட்டமன்றத்திலே அப்போது ஜனநாயகம் இருந்தது.

கலைஞரும் எம்ஜிஆரும் நாற்பதாண்டு கால நண்பர்கள் என்பதால் அவர்களிடையே ஒரு புரிதல் இருக்கும். எம்ஜிஆர் திமுகவை உடைத்துக் கொண்டு சென்று புதுக்கட்சி தொடங்கி ஆட்சியைப் பிடித்தவர்தான் என்றாலும் திமுகவில் பொருளாளராக இருந்ததால் எங்களுக்கு அறிமுகமானவர். அனைவருடனும் பழகியவர் என்பதால் சூழல் இணக்கமாகவே இருக்கும். எல்லோரையும் மரியாதையாக நடத்துவார்.

ஒரு ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து கலைஞர் பேசுகிறார். பிறகு எம்ஜிஆரைப் பார்த்து: கண்ணகியாக இருந்தால் சிலம்பை உடை; சீதையாக இருந்தால் அக்கினிப்பிரவேசம் செய் என்று சொன்னார். எம்ஜிஆர் அதை ரசித்துக் கேட்டதைப் பார்த்தோம். எம்ஜிஆர் கூட ஒரு முறை குறிப்பிட்டார். “கலைஞர் எழுதிய வசனங்களிலே எனக்கு மிகவும் பிடித்தமானது, நான் நடித்த மருத நாட்டு இளவரசி படத்தில் எழுதிய வசன வரிகள்தான். காட்டில் புலிகள் மான்களை வேட்டையாடுகின்றன; நாட்டிலே மான்கள் புலிகளை வேட்டையாடுகின்றன என்ற வசனம்தான் அது”  என்று.

எம்ஜிஆர் காலத்தில் சட்டமன்றத்தில் இருந்து துரைமுருகன், சுப்பு, நான் மூவரும் இடைநீக்கம் செய்யப்பட்டோம். கலைஞர் எங்களை நீங்கள் சட்டமன்றத்திலே பேசமுடியாமல் போனால் என்ன? இந்த ஆட்சியின் அவலங்களை மக்கள் மன்றத்திலே பேசுங்கள் என்று மாநிலம் முழுக்க கூட்டங்களை ஏற்பாடு செய்து பேச அனுப்பினார்.

டிசம்பர், 2017.

logo
Andhimazhai
www.andhimazhai.com