மாநிலத்துக்கு ஏற்ப குட்டிக்கரணம்

இடதுசாரிகள்
Published on

நேரடியாக விஷயத்துக்கு வந்துவிடுவோம்.எப்பொழுதிருந்து ஆரம்பிக்கிறது  இந்த இடதுசாரிக் கட்சிகளுக்கும் தமிழக மக்களுக்குமான ‘ஏழரை’? அற்புதமான தத்துவங்கள் இருந்தும் இவர்கள் மக்களிடம் இருந்து அந்நியப்பட்டுப் போனது எவையெவையால்?

அந்தத் தவறுகளின் வரலாறு முப்பதுகளின் மத்தியிலிருந்தே தொடங்கி விடுகிறது. அதாவது ஏறக்குறைய எண்பதாண்டுகளுக்கு முன்னரே. அதைத் தொடங்கி வைத்த ‘பெருமைக்குரியவர்கள்’ ப.ஜீவானந்தம், முத்துச்சாமி, வல்லத்தரசு போன்றவர்கள்தான்.

சமத்துவத்தையும், சமூகநீதியையும் ஏற்றுக் கொள்ளாத காங்கிரசை விட்டு வெளியேறிய பெரியாரின் வீச்சு வர்ணாசிரம அதர்மத்தை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருந்தவர்களை ஒரு ஆட்டு ஆட்டியது. அவரது சுயமரியாதை இயக்கம் சூறாவளியென சுழன்றடித்ததன் விளைவு சிற்சில சீர்திருத்த நடவடிக்கைகளில் மட்டுமே திருப்தி கொண்டிருந்த நீதிக்கட்சியினரையும் அசைத்துப் பார்த்தது.

இன்றைக்குச் சிற்சில என்று போகிற போக்கில்

சொல்லிவிட்டுப் போனாலும் அன்றைய காலகட்டத்தில் அவை கற்பனைக்கும் எட்டாத சீர்திருத்த நடவடிக்கைகள்தான்.

அன்று அவர்கள் போட்ட விதைதான் இன்றைக்கு 69 சதவீதம் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் பிரிவு மக்களுக்குப் பயன் தரும் மரமாக நின்று கொண்டிருக்கிறது. நீதிக்கட்சியினர் கொண்டு வந்த வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்பது சகல வகுப்பினருக்குமான அவர்களது எண்ணிக்கைக்குத் தக்க ஒதுக்கீடு. ஆனால் அதற்கும் ஆப்பு வைத்தவர்கள்தான் “சமதர்மத்தை ஏற்றுக் கொள்வார்கள்” என்று ஜீவா நம்பிப் போன காங்கிரஸ்காரர்கள்.

“ஜமீன்தார்களுக்கான கட்சி” என்று சில பொதுவுடைமைச் சித்தாந்தவாதிகளால் சித்தரிக்கப்பட்ட நீதிக்கட்சியை குட்ட வேண்டிய நேரத்தில் குட்டி தட்டிக் கொடுக்க வேண்டிய நேரத்தில் தட்டிக் கொடுத்து தமிழ் மக்களுக்கான காரியங்களைச் சாதித்து வந்தார் பெரியார்.

இந்த அழுத்தத்தின் விளைவே சென்னை மாகாணத்திலுள்ள ஜமீன் ரயத்துகளுக்கு உள்ளதைப் போலவே இனாம்தாரி நிலங்களில் உழுது பயிரிட்டோருக்கும் உரிமையை வழங்கும் மசோதா 1933 -இல் சென்னை சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த பெண்கள் மட்டும் கோயிலுக்கு தேவரடியார்களாக பொட்டுக்கட்டி விடப்பட்ட கொடுமைகளுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட “தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம்”

பச்சிளம் குழந்தைகளுக்குத் “திருமணமும்” அதன் மற்றொரு விளைவாய் பால்மணம் மாறாத குழந்தைகள் “விதவைகள்” என்கிற பெயரில் இம்மண்ணில் வலம் வந்த கொடுமையையும் சகிக்காது கொண்டுவரப்பட்ட “குழந்தைத் திருமணம் ஒழிப்புச் சட்டம்...”

சமூகநீதியை நிலைநாட்ட கொண்டுவரப்பட்ட  “வகுப்புவாரிப் பிரதிநிதித்துவச் சட்டம்” எனச் சகலதும் வந்தது பொதுவுடைமைவாதிகள் எதிர்த்த நீதிக்கட்சி

ஆட்சிக் காலத்தில்தான். இவை எவற்றையும் ஏற்றுக் கொள்ளமாட்டோம் என எதிர்ப்புத் தெரிவித்து சண்டித்தனம் செய்ததுதான் அன்றைய காங்கிரஸ் செய்த “சமத்துவப்பணி”.

இந்தக் காங்கிரசில்தான் சமதர்மத்தை நிறைவேற்றுவார்கள் என்று நம்பி நாலணா உறுப்பினர் கட்டணம் கட்டி ஜீவாவும் பிறரும் அடைக்கலமானார்கள்.

ஒருபுறம் காங்கிரசின் பெயரால் ஒத்துழையாமை இயக்கமும்... மறுபுறம் சுயராஜ்யக் கட்சி என்கிற பெயரில் ராஜவிசுவாச பிரமாணம் எடுத்துக் கொண்டு ஒத்துழைப்பு இயக்கமும் நடத்திய இந்தக் காங்கிரசை நம்பிக் கரையேற நினைத்தவர்கள்தான் அன்றைய காம்ரேடுகள்.

வெள்ளையனுக்கு வால் பிடிப்பவர்கள்... ஜமீன்தார்கள்... என்று சாடிவிட்டு சரணாகதி அடைந்த இடம் எதுவென்று பார்த்தால்..

சட்டமறுப்பியக்கத்தை வாபஸ் பெற்ற கையோடு காந்தியார் “அரிசனங்கள் பிரச்சனையில் நாட்டு மக்களின் கவனத்தை ஈர்க்க உண்ணாநோன்பைத் தொடங்கிய இடம் எதுவென்று பார்த்தால்...

புனே நகரின் பெரும் ஜவுளி ஆலையின் முதலாளி சர் வித்தல்தாஸ் தாக்கர்சேவின் பளிங்கு மாளிகைதான்.

இதைத்தான் வெர்ரியர் எல்வின் என்பவர் எழுதினார்:“காந்தி ஒரு பளிங்கு மாளிகையில் சாகும்வரை உண்ணாநோன்பு இருப்பது... ஏசுநாதர் ஒரு ரோல்ஸ்ராய்ஸ் காரில் ஏறிக் கொண்டு சிலுவையில் அறையப்படுவதற்குச் செல்வதைப் போன்றது” என்று. அதைப்போலவே பரமஏழை ஜி.டி.பிர்லாவுக்கும் காந்திக்கும் காங்கிரசுக்கும் இருந்த உறவு உலகப்பிரசித்தம்.

எந்தச் சமரசமும் இல்லாத வர்க்கப்போரை காங்கிரசைக் கைப்பற்றி காம்ரேடுகள் நடத்திய கதை இவ்விதம் போகிறது. பழைய குப்பையைக் கிளறுவானேன்? மூக்கைப் பொத்துவானேன்?

ஆக சமூகநீதித் தளத்தில் திராவிட இயக்கங்கள் சாதித்த “அற்ப சீர்திருத்த” விஷயங்களிலும் இடதுசாரிகளுக்கு எந்தப் பங்குமில்லை..

சரி சமரசமேயற்ற வர்க்க விடுதலைப் பாதையில் எத்தனை தூரம் பயணப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் பார்த்தாலோ கேப்டன் கட்சி அலுவலகம் நம்மைப் பார்த்துப் பல்லிளிக்கிறது.

“வறட்டு நாத்திகவாதி”, “இயக்கவியல் பொருள்முதல் வாதம் புரியாத பேதை” என்று பெரியாரிடமே முரண்பட்ட இவர்கள் ஒருவேளை கேப்டன் விஜயகாந்திடம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கான பாதையைக் கண்டடைந்திருக்கலாம்.

சமூகநீதி கிடக்கட்டும்...

முப்பதுகளின் மத்தியில் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட இந்திக்கு எதிராக எத்தகைய போராட்டங்களை நடத்தினார்கள் இவர்கள்?

மொழிவாரி மாநிலங்கள் பிரிவினையின் போது “ஐக்கிய கேரள”த்திற்காக மொத்த மலையாள தேசமே கூடி நின்று கூக்குரலிட்டபோது தமிழகப் பொதுவுடைமைக் கட்சியினர் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

எண்பதுகளின் தொடக்கத்தில் தமிழகமே ஈழப்படுகொலைகளுக்காக குரல் கொடுத்தபோது எங்கே போயிருந்தார்கள்? ஈழத்தை ஆதரிக்காவிடினும் சரி. ஆனால் இந்திய அமைதிப்படை காலங்களில் நிகழ்ந்த அத்துமீறல்களையும், வல்லுறவுகளையும்... ஒரு குறைந்தபட்ச மனித நேயத்தோடு அணுகி உலக அரங்கிற்கு எடுத்துச் சொன்னார்களா இவர்கள்?

2009 இல் மனிதகுலம் கற்பனைசெய்துகூட பார்த்திராத இனப்படுகொலை ஈழத்தில் நிகழ்ந்தபோது..  “பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் பதறுகின்ற மனிதர்களைக்” காக்கக் கிளம்பியவர்கள் எங்கே போயிருந்தார்கள்?

அப்போது நான் சந்தித்த ஒரு “இடதுசாரி” சொன்னார் : “காவல் கோட்டம் நாவலை எடுத்தா கீழே வைக்கவே முடியல. இந்த மாசத்துல மட்டும் மூணு முறை படிச்சேன்.”

வயிறு எரிந்தது. எதையும் படிக்கக்கூடாது என்பதல்ல. அந்நாவலில் உடன்பாடோ அல்லது முரண்பாடோ இருக்கிறது என்பதனாலும் அல்ல.. படித்தவேளைதான் மனதை உலுக்கிப் போட்டுவிட்டது. ஓர் எளிய பெட்டிக்கடைக்காரர் கூட இவர்கள் முல்லைப் பெரியார் பிரச்சனையிலும்... காவிரியில் நீர் திறந்துவிடும் பிரச்சனையிலும் எத்தனை குட்டிக்கரணங்கள் மாநிலத்துக்குத் தக்கபடி போடுவார்கள் என்பதைத் துல்லியமாகச் சொல்வார்.

மாநிலங்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளில் மௌனம் சாதித்துவிட்டு... பிறமொழித் திணிப்புகளின்போது குப்புறப்படுத்துத் தூங்கிவிட்டு... சமூகநீதிக்கான போராட்டங்களின் போது மாவட்ட அளவிலும்கூட முணுமுணுக்காது விட்டுவிட்டு... ஆபத்துமிக்க அணு உலைகள் விஷயத்தில் தமிழகத்திற்கு ஒன்றும், மேற்கு வங்கத்திற்கு ஒன்றுமாய் நிலைப்பாடுகள் எடுத்துக் கொண்டு இருப்பவர்கள் தமிழகத்தில் ஆட்சியை 2216 இல் மட்டுமல்ல... 8018 இல் கூட பிடிக்க இயலாது.

இடதுசாரி அமைப்புகளில் இருந்தாலும் அதிலுள்ள எண்ணற்ற அர்ப்பணிப்புமிக்க தோழர்களை அறிவேன் நானும். இங்கு சுட்டுவது அனைத்தும் பேரன்புமிக்க அந்த எளிய தோழர்களை நோக்கியல்ல. அத்தலைமைகளை நோக்கித்தான். இவைகளை இனியாவது இவர்கள் மறுபரிசீலனை செய்யவேண்டும்.

இல்லாவிட்டால் வழக்கம்போல் நாவல் படித்துக் கொண்டோ... அல்லது கேரம் போர்டு விளையாடிக் கொண்டோ இருக்கலாம். அவ்வளவே.

டிசம்பர், 2016.

logo
Andhimazhai
www.andhimazhai.com