எல்லோருக்கும் தெரிந்திருக்கும் ஜெயலலிதா பொதுச்செயலாளராக இருந்தபோது அதிமுகவில் பதவி உயர்வு பெறுவது எப்படி என்று.
அவர் கவனத்தைப் பெறும் வகையில் சிறப்பாகப் பேசினால் போதும். இதற்கு அர்த்தங்களில் ஒன்று திமுக தலைவர் கருணாநிதியைக் கடுமையாக விமர்சிப்பது. நேர்காணல்களில் சிறப்பாகப் பேசி ஜெ.வின் கவனத்தைக் கவர்ந்தால் தேர்தலில் போட்டியிட சீட் உண்டு. மாநிலங்களவைக்குக் கூட அனுப்புவார்.
திமுகவில் ஆரம்பகாலத்தில் இளைஞர்களாகத்தான் இருந்தார்கள். அறுபதுகளில் வென்று டெல்லிக்குப் போனவர்களைப் பார்த்து அண்ணாதுரை, ''பொடிப்பையன்களாகப் பிடித்து எம்பிகளாக ஆக்கிவைத்திருக்கிறார்' என்றுடெல்லி அரசியல்வாதிகள் கமெண்ட் செய்தது உண்டு. புதிய கட்சி என்பதால் அதில் இளைஞர்கள் முக்கிய பதவிக்கு வந்தார்கள். 44 வயதிலேயே கருணாநிதி முதலமைச்சராக உயர முடிந்தது.
அதன்பிறகு திமுகவில் பதவி உயர்வுக்கான போட்டியை மு.க. 1993 வரை கட்டுக்குள் வைத்திருந்தார். அதன் பின்னர் வைகோ வெளியேற்றப்பட்டு தனிக்கட்சி கண்டார். தனக்குப் பின் தன் மகன் என்று மு.க.ஸ்டாலினை கருணாநிதி வளர்த்தார் என்பதுதான் வைகோவும் அவருடன் பிரிந்துசென்றவர்களும் வைத்த குற்றச்சாட்டு. 1975&ல் மிசா கொடுமைக்கு எட்டாண்டுகளுக்குப் பின்னர் கட்சியின் பொதுக்குழுவில் 1983&ல்
சேர்க்கப்பட்டு அதற்கு அடுத்த ஆண்டுதான் அவருக்கு எம்.எல்.ஏ.வாகப் போட்டியிடும் வாய்ப்பே அளிக்கப்பட்டது. ஆனாலும் அவர்
தோற்றுத்தான் போனார். ஆயிரம் விளக்கு தொகுதியில் ஆறுமுறை நின்று நான்குமுறை எம்.எல்.ஏ ஆனார். இப்போது கொளத்தூர் தொகுதியில் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
அவருக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய பதவி உயர்வு தந்தை இருக்கும் வரையில் கிடைக்கவே இல்லை. தலைவராக ஆவதற்கு எல்லா சூழலையும் தயார் செய்து கொடுத்தாலும்கூட ஸ்டாலினை தலைவர் ஆக்கிப் பார்க்க கலைஞர் தயாராக இல்லை. அதிகப்பட்சமாக துணை முதல்வர் பதவி தான் கொடுத்தார். உடல் நலம் குன்றிவிட்ட நிலையில் 2016 தேர்தலில் கூட முக ஸ்டாலின் தான் முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்கவே இல்லை!
''நீங்கள் தலைமையைப் பற்றிப் பேசுகிறீர்கள். கீழ் மட்டத்தில் பாருங்கள். இளைஞர்களுக்கு கட்சி அரசியலில் பதவி உயர்வு என்பது அரிதாகத்தான் கிடைக்கிறது. அப்படிப் பெறுகிறவர்கள் பலர் அரசியல் வாரிசாகவே இருக்கிறார்கள். எந்த பின்னணியும் இல்லாத திறமைசாலி இளைஞர்களை கண்டெடுத்து வளர்ப்பது என்பது நீண்டகாலமாக இருக்கும் மாநிலக் கட்சிகளில் இல்லாத காட்சியாக மாறிவிட்டிருக்கிறது. இன்று அரசியல் என்பதே உள்ளூர் அளவிலும் மாநில அளவிலும் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு ஜால்ரா போடுவதுதான் என்று மாறிவிட்டிருக்கிறது! எனவேதான் புதிதாக கட்சிகள் ஆரம்பிக்கும்போது இந்த பழைய கட்சிகளில் வாய்ப்புக்கிடைக்காத இளம்
திறமைசாலிகள் அதில் சேர்வதைப் பார்க்கலாம்! செயல்பாட்டுக்கு மதிப்பா, ஜால்ராவுக்கு மதிப்பா என்றால் இரண்டாவதுக்குத்தான் மதிப்பு பதவி உயர்வு எல்லாம் என்று இருக்கிறது. இது காலப்போக்கில் தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளும் செயலாக அமையும்,'' என்று விமர்சிக்கிறார் ஓர் அரசியல் நோக்கர்.
இப்போதைக்கு திமுகவில் ஓர் இளைஞருக்கு பதவி உயர்வு அளிக்கச்சொல்லி மாவட்டம்தோறும் தீர்மானம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்றால் அது உதயநிதிக்குத்தான்! சரி விடுங்கள் இப்படியாவது ஓர் இளைஞருக்கு பதவி தர விழைகிறார்களே. இதை சாக்காக வைத்து மேலும்சில இளைஞர்களைக் கொண்டுவந்து புதுரத்தம் பாய்ச்சுவதைச் செய்வார்களா பார்க்கலாம்!
பிராந்தியக் கட்சிகள் ஒரு புறமிருக்க தேசியக் கட்சிகளில் பதவி உயர்வு என்பது ஒரு கட்டத்துக்கு மேல் எப்படி நிகழ்கிறது என்பது சுவாரசியமானது. பாஜகவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புதான் முக்கியமான பதவிகளுக்கு யார் வரவேண்டும் என்று அவர்களின் திறமையைப் பொறுத்து முடிவுசெய்து டெல்லிக்கு அனுப்புகிறது.பாஜகவின் பிற்படுத்தப்பட்டோரின் சார்பாக மூன்று முகங்கள் முன்னிறுத்தப்பட்டன. கல்யாண்சிங், உமாபாரதி மற்றும் நரேந்திர மோடி. இதில் மற்ற இருவரையும் விட மோடி குஜராத்தில் தனக்குக் கிடைத்த வாய்ப்பை மக்கள்
செல்வாக்காகவும் தொண்டர்களின் செல்வாக்காகவும் மாற்றி அமைத்தார். 2007 தேர்தலின் போது எப்படி தொண்டர்கள் மோடி முகமூடி அணிந்துகொண்டு தேர்தல் பணி செய்தார்கள் என பத்திரிகைகள் மாய்ந்து மாய்ந்து எழுதின. 2012 தேர்தலில் இந்த தொண்டர் செல்வாக்கு அங்கே இமாலய உயரத்தை எட்டியது. மோடி கலந்துகொள்ளும் அகில இந்திய பாஜக கூட்டங்களில் மோடிஜி மோடிஜி என தொண்டர்கள் கோஷமிட்டனர். மோடியை பிரதமர் வேட்பாளராகக் கொண்டுவரும் நடவடிக்கைகள் 2012&ல் இருந்து தொடங்கின. ஆனால் ஆர்.எஸ்.எஸ்சில் ஒரு பிரிவினரும் பாஜகவில் ஒரு பிரிவினரும் எதிர்த்தனர். அத்வானி மீண்டும் பிரதமராக முன்னிலைப்படுத்தப்பட விரும்பினார். ஆனால் இந்நிலையில் மோடிக்கு உதவியது அவரது தொண்டர் செல்வாக்குதான்! மோடி பிரதமர் வேட்பாளர் என்றால் நான் கூட்டணிக்கு வரமாட்டேன் என்று பீகாரில் நிதீஷ்குமார் சொன்னது நினைவிருக்கலாம்!( அவர் இப்போது வழிக்கு வந்து பல மாதங்கள் ஆகிவிட்டன). அப்போது பாஜக தலைவராக இருந்த ராஜ்நாத் சிங், ஒரு கட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் சொல்படி மோடியை தட்டி வைக்கவும் முயற்சி செய்தவர்தான். ஆனால் 2013&ல் அவருக்கு ஆர்.எஸ்.எஸ்சில் இருந்து கட்டளை பிறந்தது மோடிக்கு கதவுகளைத் திறக்கும்படி! பல எதிர்ப்புகள் இருந்தும்கூட மோடி தன் பதவி உயர்வை தானாகவே போராடி வென்றவர் என்றுதான் சொல்லமுடியும்!
காங்கிரஸில் ராகுல் காந்தி பொறுப்பேற்ற பின் நாடு முழுக்க கட்சிக்கு இளைஞர்களைத் தேர்வு செய்ய திறனறி சோதனைகளை நடத்தினார். திறமை வாய்ந்த இளைஞர்களைக் கண்டறிந்து கட்சிக்கு முக்கியப் பொறுப்புகளில் சேர்த்தார். முற்றிலும் புதிய முகங்களை தேர்தல்களில் போட்டிக்கு களமிறக்கவும் அவர் தயங்கவில்லை! விருதுநகர் தொகுதிக்கு 2009 தேர்தலில் மாணிக் தாகூர் களமிறக்கப்பட்டபோது, ''யாரு அவர்? வட நாட்டு சேட்டா?'' என்று இக்கட்டுரையாளரிடம் ஒரு மூத்த அரசியல்வாதி கேட்டார். ஆனால் இந்த நடவடிக்கை எல்லாம் ஒரு சின்ன அளவிலான இளரத்தம் பாய்ச்சவே பயன்பட்டது. அவரால் பழம்பெரும் மூத்த தலைவர்கள் தங்கள் வாரிசுகளை உள்ளே திணிப்பதை பதவிகள் பெறுவதைத் தடுக்கவே முடியவில்லை! அவரே ஒரு வாரிசு என்ற அடிப்படையில் தாயால் கட்சி என்னும்
சொத்து கைமாற்றப்பட்டவர் என்பதுதான் அவருக்கு தடையாக இருந்திருக்கலாம்!
ஜூலை, 2019.