கிராமத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு எண்பதுகளின் தொடக்கத்தில் சென்னை மாநகரம் பற்றித் தமிழ்த் திரைப்படங்கள் ஏற்படுத்தியிருந்த பிம்பம், தொந்தரவாக இருந்தது. நகரத்துத் தெருவில் எதிரில் வருகிறவர் பிக்பாக்கெட்டாக இருக்கலாம் என்ற சந்தேகம்.
கிராமத்திலிருந்து முதன்முதலாக நகரத்திற்கு வருகிற ஆளை நகரத்துப் போக்கிரி ஏமாற்றிப் பணம் பறிக்கிற காட்சியை எத்தனை படங்களில் பார்த்திருக்கிறேன். இப்படியான சூழலில் 1984 ஆம் ஆண்டு பணியின் காரணமாகச் சென்னை நகரில் தங்க வேண்டிய நிர்பந்தம். தங்குவதற்கு இடம் தேடி அலைந்தபோது, நண்பர் விமலாதித்த மாமல்லன், குங்குமம் பத்திரிகை அலுவலகம் போய் பிரபஞ்சனைப் பார்ப்போம் என்றார். பிரபஞ்சன் என் உறையுள் பிரச்சினையைச் சர்வதேசப் பிரச்சினைபோலக் கருதிப் பேசினார். அடுத்த நாள் ராயப்பேட்டை, ஜானிஜான் கான் தெரு, பனாமா மேன்ஷனில் குடியேறினேன். இப்படியாகத்தான் எனக்கும் மேன்ஷனுக்குமான பூர்வ ஜென்ம உறவு தொடங்கியது அல்லது தொடர்ந்தது.
வீடுகளும் மேன்ஷன்களும் முற்றிலும் எதிர் எதிரானவை. பொதுவாக சுதந்திரத்தையும் கொண்டாட்டத்தையும் வழங்குகிற மேன்ஷன்கள் பலரையும் கவர்ச்சியினால் ஈர்க்கின்றன. இதனால் சிலர் வாழ்நாள் முழுக்க வெவ்வேறு மேன்ஷன்களில் தங்கியிருக்கின்றனர். என்னைப் பொருத்தவரையில் விரைத்து நின்ற மேன்ஷன் கட்டிடம் முதல்
தோற்றத்தில் என்னை மிரட்டியது. ஒருவிதமான தயக்கமும் வெறுப்பும் எனக்குள். கையில் பெட்டியுடன் மேன்ஷனுக்குள் முதன்முதலாக நுழைந்தபோது ஒருவிதமான நாற்றத்தைச் சுவாசிக்க நேரிட்டது. கவிச்சி நாற்றம். இரண்டாவது மாடியில் இருக்கிற என் அறைக்குச் செல்கிற படிக்கட்டு, உச்சிவெய்யில் பொழுதில்கூட இருளாக இருந்தது. ஒவ்வொரு தளத்திலும் குளியல் அறைகளும் கழிவறைகளும் மணத்தைப் பரப்பிக்கொண்டிருந்தன. இந்த வாசத்துக்கு மூக்கு சில நாட்களில் பழகிவிடும். வேறு வழி? மேன்ஷனுக்கே உரிய வீச்சம், தெருவிலும் நிரம்பி வழிந்தது. அதுவும் மழைக்காலத்தில் சொல்லவே வேண்டாம். ஒவ்வொரு மேன்ஷனுக்கும் ஒருவிதமான வாசம் அல்லது நாற்றம் இருக்கிறது.
மேன்ஷன் என்பது உயிரற்ற கட்டிடம் அல்ல. அங்கே தங்கியிருக்கிற ஆண்களால் உயிர்ப்புடன் இருக்கிறது. எங்கிருந்தோ வந்து ஒரு கூரையில் கீழ்த் தங்கியிருக்கிறவர்களுக்கு இடையில் சாதி, மதம், பொருளாதார ஏற்றத்தாழ்வு இல்லை. ஒருவிதமான சமத்துவம் நிலவியது. அதிகாலையில் விழித்திடும் மேன்ஷன்காரர்களில் பலர் பரபரப்புடன் இயங்கிட, சிலரின் பொழுது பத்து மணிக்குத்தான் விடியும். மாநகராட்சி குழாயில் வரும் தண்ணீரை அடி பைப் மூலம் அடித்து வாளியில் வைத்துக் குளிக்க வேண்டும். தண்ணீர் இந்தியப் பெருங் கடல் நீரின் சுவையுடன் குளோரின் மணத்துடன் இருக்கும். தண்ணீரை தலையில் ஊற்றும்போது வாயை மூடிக்கொள்ள வேண்டும். மற்றபடி மேன்ஷன் பேலஸ்தான். மேன்ஷன்வாசிகள் இளவரசர்கள்தான்.
சில நாட்கள் மேன்ஷன் வாசத்தில் சூழல் எனக்குப் பழக்கமானது. எத்தனை விதமான மனிதர்கள்? நேசத் தையும் நெருக்கத்தையும் மேன்ஷன் அறைகளில் எதிர்கொண்டேன். அங்கு வாழ்கிற ஆண்களின் உலகம் தனியானது. அறைகளில் இரும்பு கட்டில்கள் எப்பவும் ஒலி எழுப்பிக் கொண்டிருக்கும். வராண்டாவில் சிதிலமான கட்டில்கள் கிடக்கும். எங்கும் வெக்கையடிக்கும் ஆண்களின் மூச்சுக்காற்று பரவியிருக்கும். பகலில் தனிமையுடன் மௌனத்தில் உறைந்திருக்கும் மேன்ஷனில் ஒருவிதமான அவல ஒலி அருவருப்புடன் கேட்கும். மாலையில் உயிர்த்தெழும் மேன்ஷனில்தான் எத்தனைவிதமான மனிதர்கள். இங்குள்ள எல்லோருக்கும் ஏதோ ஒரு கணக்கு வழக்கு இருக்கிறது. தமிழ்நாட்டின் தென் கோடியில் இருக்கிற குமரி மாவட்டத்தில் இருந்து புலம்பெயர்ந்து சென்னை மேன்ஷனில் தங்கியிருக்கிற குடும்பஸ்தர்கள் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒருமுறைதான் வீட்டுக்குப் போவார்கள். அதுவரை விடுமுறை நாட்களில் புறாக்கூண்டு அறைக்குள் சுவரை வெறித்தவாறு படுத்துத் கிடப்பார்கள். மனைவி, பிள்ளைகளைப் பிரிந்து வாழ்கிறவர்களின் வாழ்க்கை, அவலம் தோய்ந்தது. சினிமாவில் இயக்குநர் அல்லது நடிகர் கனவுடன் சென்னைக்கு வந்த இளைஞர் பகல்வேளையில் அறையின் விதானத்தில் கொடூரமான சப்தத்துடன் சுற்றுகிற ஃபேனை வெறித்தவாறு படுத்திருக்கிறவர் நிச்சயம் பட்டினியுடன்தான் இருப்பார். குழி விழுந்த கண்களுடன் ஒடுக்கிய தோற்றத்துடன் தீராத பசியுடன் வெறித்த பார்வையுடன் வாழ்கிற ஆண்கள், வாரக் கடைசியில் ஓசியாகக் கிடைக்கிற மதுவினால் வாழ்வதற்கான சக்தியைப் பெறுகிறார்கள். ஏதோ ஒரு நம்பிக்கைதான் இவர்கள் எல்லோரையும் இயக்கிக் கொண்டிருக்கிறது.
இலகியவாதிகளுக்கும் மேன்ஷன்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ராஜமார்த்தாண்டன், பிரபஞ்சன் தொடங்கிப் பலரும் மேன்ஷன்வாசிகள்தான். நாவலாசிரியர் ப.சிங்காரம் மதுரை ஒய்.எம்.சி.ஏ. தங்குமிடத்தில் நாற்பது ஆண்டுகளாகத் தங்கியிருந்தார். பின்னர் அங்கிருந்து அவர் வெளியேற்றப்பட்ட சூழலில், கடைசி மூன்று மாதங்கள் விளக்குத்தூண், நாடார் மேன்ஷனில் தங்கியிருந்தார். அவர் உடல் நலம் குன்றி, ஆம்புலன்ஸில் உயிர் துறந்தபோது உடனிருந்ததுடன், தத்தனேரி இடுகாட்டில் சடலத்தைப் புதைத்தவர் மேன்ஷன் பணியாளர்தான். எழுத்தாளர் ஜி. நாகராஜன் தனது அந்திமக் காலத்தில் எஸ்.டி.சி. தங்கும் விடுதியில் தங்கியிருந்தார். குடும்பம், வீட்டுடன் முரண்படுகிற அல்லது ஒத்துப்போகாத சூழலில் வெளியேறிவர்களைத் தாங்கிப் பிடித்து உயிர் வாழச் செய்வதில் மேன்ஷன்களின் இடம் ஒப்பீடு அற்றது. இந்நிலைக்கு இலக்கியவாதிகள் விதிவிலக்கு அல்ல.
மேன்ஷனில் தங்கியிருந்தபோது, நிறைய இலக்கிய ஆர்வலர்கள், உதவி இயக்குநர்களைச் சந்தித்துப் பேசியது அருமையான அனுபவம். இன்றைக்குப் பிரபலமாக விளங்குகிற பலருடன் அன்றைய நாளில் கனவுடன் பேசியது நினைவுக்கு வருகிறது. நண்பர் விமலாதித்த மாமல்லன் வாரத்திற்கு மூன்று நாட்கள் தன்னுடைய சைக்கிளை ஓட்டிக்கொண்டு வருவார். எங்களுக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் இருப்பினும் பேச்சுகளும் நட்பும் தொடர்ந்தன. எனது அறையைப் பூட்டி, சாவியை நிலையின்மீது வைத்திருப்பேன். இதனால் நான் இல்லாதபோதும் நண்பர்கள் அறையைத் திறந்து உட்கார்ந்து அரட்டை அடித்துக்கொண்டு இருப்பார்கள். எனது அறை, ஆலமரம் போலப் பலரும் வந்து தங்கிப் போகுமிடமாக இருந்தது. அப்புறம் நாயர் கடையில் இருந்து தேநீர்க் கோப்பைகளும் பங்காரு கடையில் இருந்து சிகரெட்டுகளும் தொடர்ந்து வந்தன. நான்கைந்து நண்பர்களுக்கு மதிய உணவு வாங்கித் தர கையில் பணம் இருக்காது. அதுதான் துயரம். மதுரைப் பக்கத்தில் இருந்து நேர்காணல், வேலை, சொந்த அலுவல், பயிற்சி காரணமாகச் சென்னைக்கு வருகிற நண்பர்கள் எனது அறையில் தங்கினர். முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள்கூட நண்பர்களின் பரிந்துரையின்பேரில் ஓரிரு நாட்கள் என்னுடன் தங்கியிருந்திருக்கின்றனர். சென்னைக்கார நண்பர்கள் சரக்கடித்துவிட்டு, இரவுவேளையில் படுத்து உறங்குமிடமாகவும் என் அறையும் வராந்தாவும் இருந்து. இங்கு தங்கியிருந்தபோது, பெரும்பாலும் நான்காவது மாடியான மொட்டை மாடியில் திறந்தவெளியில்தான் உறங்குவேன். மாதக் கடைசியில் கையில் காசு இல்லாதபோது, மேன்ஷன்வாசிகள் தந்த பணத்தினால்தான் பட்டினி கிடக்காமல் தப்பிக்க நேர்ந்தது, தனிக்கதை.
நான் தங்கியிருந்த மேன்ஷனுக்கு எதிரில் பங்க் கடை வைத்திருக்கும் பங்காருவிற்குப் பூர்வீகம் எது? யார் அறிவார்? அவர் மேன்ஷன்வாசிகளுக்கு சிகரட், பற்பசை தொடங்கிச் சகலமும் கடன் தருவதற்காக ஈசன் படைத்த உயிரினம். அது அழியும்போது நகரத்தை ஆழிப்பேரலை மூழ்கடித்துவிடும்.
மேன்ஷன்வாசிகளுக்குக் கடனில் பொருள்கள் வழங்குகிற பங்காருவிடம் ஒருநாள் கேட்டேன், ‘கடனைத் தராமல் மேன்ஷனைக் காலி பண்ணிட்டுப் போனால் என்ன செய்வீங்க' என்று. ‘சார் உன்னை மாதிரி தங்கியிருக்கிறவங்கள எவ்வளவு பேரைப் பார்த்திருக்கிறேன். யாரும் பாக்கியைத் தராமல் போக மாட்டாங்க. அப்படி போனவுங்க சில மாதங்கள் கழிச்சு வந்து பணத்தைத் தந்திட்டுப் போவாங்க. மனுஷனை நம்பனும் சார்' என்றார். இது எப்படி சாத்தியம்? ஒருநாள் இரவுவேளையில் கடையில் ஊசி, நூல் கண்டு கேட்டபோது. அவர் ‘ராத்திரி நேரம் ஊசி விற்கக்கூடாது, அது ஆகாது' என்று பங்காரு மறுத்து விட்டார். அது என்ன சாஸ்திரம்? யார் யாரோ வந்து போகிற மேன்ஷனில் தங்கியிருக்கும் மனிதர்களை நம்புகிற அந்தக் கடைக்காரரின் நம்பிக்கையை என்னவென்று சொல்ல?
சென்னையில், நான் தங்கியிருந்தபோது, ஐஸ்ஹவுஸில் உணவகம் வைத்திருந்த ஃபிரண்ட்ஸ் மெஸ் உரிமையாளர் என்னிடம் தினமும் சாப்பிட்டுவிட்டு மாதக் கடைசியில் பணம் கொடுத்தால் போதும் என்றார். எனக்கு ஒரு கணம் ஒன்றும் புரியவில்லை. நான் வழக்கம்போல சாப்பிட்டுவிட்டுப் பணம் தருகிறேன், கடன் வேண்டாம் என்று சொன்னேன். என்றாலும் முன்பின் அறிமுகம் இல்லாத என்னை நம்பி அவர் கடன் தர முன்வந்தது நெருடலாக இருந்தது. சில நாட்கள் கழித்து மெஸ் உரிமையாளரிடம்
‘சாப்பிட்டுவிட்டுக் கடன் பாக்கி தராத ஆட்கள்' பற்றிக் கேட்டபோது, அவர் ‘‘ஸார் எல்லாருமா அப்படி இருப்பாங்க. ஒண்ணுரெண்டு பேரு காசு இல்லாமல் தரமாட்டாங்க. மற்றபடி யாரும் சாப்பிட்ட காசைத் தராமல் போகமாட்டாங்க'' என்று நம்பிக்கையுடன் சொன்னார். எத்தனையோ ஆண்டுகள் மெஸ் நடத்துகிறவருக்கு மனிதர்கள் மீதான நம்பிக்கை, வலிமையாக இருப்பதுதான் அவர் கற்ற பாடம். எந்தவொரு வறட்சியான, நெருக்கடியான சூழலிலும் மனித இயல்பு மேன்மையானது என்பதற்கு இவர்களை நம்பி கடன் தருகிறவர்களைச் சொல்ல வேண்டும். சக மனிதர்கள் மீதான நேசத்தை மேன்ஷன் வாழ்க்கையில் காண முடியும்.
மேன்ஷன் என்பது சோர்வான கட்டடம் அல்ல. காலங்காலமாக வந்துபோன மனிதர்களின் தடங்கள் எங்கும் பதிவாகியிருக்கின்றன. மேன்ஷனில் தங்கியிருக்கிற முத்துராமன் சாரை எப்பொழுதும் கிளப் சோடா பாட்டில்களுடன் பார்க்கலாம். எல்.ஐ.சி. நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றினார். அவருடைய அறைக்குள் ஒருமுறை நுழைந்தவன், கட்டிலில் குவிந்திருந்த குதிரை ரேஸ் புத்தகங்களைப் பார்த்துப் பிரமித்துப் போனேன். எப்பவும் துல்லியமாகப் பேசுகிறவரின் விழிகள், சோர்வுடன் தத்தளிக்கும். குடும்பம் என்ற சொல் அவரைக் கைவிட்டு விட்டது.
மேன்ஷன் மூன்றாவது மாடியில் இருபத்திரண்டு ஆண்டுகள் ஒற்றையாக வசித்த கிருஷ்ணன் திடீரென இறந்தபோது மேன்ஷன் சுவர்கள் இறுக்கமாக இருந்தன. அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவருக்குக் கணிசமான பென்ஷன். எப்பவும் சீரியஸான முகத்துடன் கடந்து போனவர், விவாகரத்துப் பெற்றவர் என்று கேள்வி. வீடும் சதமில்லை, உற்றாரும் சதமில்லை. மேன்ஷன் விடும் மூச்சுக்காற்றில் சுவர்களுடன் பேசிக் கொண்டிருந்தவர்கள் காற்றில் கரைந்து போயினர். ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் துப்பப்பட்ட எச்சில் கறைகளுக்குப் பின்னல் கதைகள் உறைந்திருக்கின்றன. ‘உம்' என்றவுடன் எல்லாம் கதைகளாக மாறிவிடும்.
என்னுடன் அறையைப் பகிர்ந்துகொண்ட சின்னப்பதாஸ் எப்பொழுது பார்த்தாலும் யாராவது பேனா நண்பர்களுக்குக் கடிதம் எழுதிக்கொண்டிருப்பார். அழகான லெட்டர் பேடில் வண்ண மையில் அச்செழுத்து போல தாஸ் எழுதுவது, தேவன் அவருக்கு அருளிய கலை. ஒருபோதும் தீராத கடித வரிகளில், பிரேமம் என்ற சொல் இருக்காது. கடவுள், தாஸைக் கடிதம் எழுதுவதற்காகப் படைத்து விட்டாரா? ஒரே அறையில் ஆறு மாதங்களாக உடன் இருக்கும் எனக்குக் கடிதம் ஏன் எழுதவில்லை என்றவுடன், புன்னகைத்தார். பேனா நண்பர்கள் இன்றிருந்தால் விசைப்பலகை நண்பர்கள் என அழைக்கப்படுவார்களா? தாஸ், கடிதங்களின் வழியே என்ன தேடினார்? மர்மம் என்ற சொல் தாஸ் ஆக உருமாறி விட்டது.
மேன்ஷன்வாசிகளின் காதல் அனுபவங்கள், பாலியல் பேச்சுகள் அறைகளில் பொங்கி வழிந்தன. அறைகளில் புழங்கிய பாலியல் வேட்கையைத் தூண்டுகிற போர்னோகிராபி புத்தகங்கள், காமத்தில் உடல்களை வாட்டின. ஆண் உடல்கள் பாலியல் வேட்கையினால் தக்கையாக வாடி வதங்கின. உடலின் இயல்பான காமத்தைத் தொலைத்திட வழியற்ற மேன்ஷன்வாசிகளின் வாழ்க்கை, ஒருவகையில் சபிக்கப்பட்டதுதான்.
எனக்கு வாரத்தில் மூன்று நாட்கள் மாலைவேளையில் மட்டும்தான் பணி. பகலில் நானும் மேன்ஷனும் தனித்து இருப்போம். அறையில் ஒற்றைக் கட்டிலில் படுத்தவாறு வலதுகால் பெருவிரலை உற்றுப்பார்க்கும் என் மீது வழிந்திட்ட தனிமை, தகிக்கும். சகிக்க முடியாத ஓசையுடன் காற்றாடியின் றெக்கைகள் வீசிட்ட அனல் காற்று, உடலைத் துளைக்கும். இருபத்தாறாவது வயதில் உடலும் மனமும் வேறு ஒன்றாக உருமாறின. ராஜகுமாரன் கனவில் மின்னி மறைந்த மனுஷி அல்லது தேவதையைத் தேடிப் பயணப்பட்ட மந்திரிகுமாரன் பிம்பம், எனக்குள் கலைக்க முடியாததாக இருந்தது. அறைச் சுவரில் தொங்கும் மாதக் காலண்டர் நாட்களைப் பிடித்து வைத்துள்ளது. மேன்ஷன் வாசத்தை சுவராசியப்படுத்தும் கருப்புப் பூனை எங்கே போனது? காரை பெயர்ந்து கரும்பச்சை பாசி படர்ந்திருக்கும் மேன்ஷனின் சுவர்கள், நிச்சயம் பூனைக்கு அலுப்பைத் தந்திருக்கும். நல்லவேளை எலிகள் புலம் பெயரவில்லை. மேன்ஷன் என்பது பகல்வேளையிலும் நிழல்கள் உலாவும் கூடாரமாகி விட்டது. நிழல்களின் சாயை தேடிப் போனவர்கள், திகைப்பூண்டை மிதித்தவர்களாகத் திக்குத் தெரியாத காட்டில், திசையறியாமல் அலைகின்றனர்.
செப்டம்பர், 2021