பெர்லினிலிருந்து புறப்பட்ட நேதாஜி 90 நாட்கள் நீர் மூழ்கி கப்பலில் பயணம் செய்து மலேயாவைக் கடந்து பின் சிங்கப்பூரில் 1943ஆம் ஆண்டு ஜூலை 3-ஆம் தேதி இந்திய தேசிய ராணுவத்தின் (ஐ.என்.ஏ) தலைமை ஏற்றார். அதில் ஜப்பானியரால் பிடிபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்களில் பலர் ஐ.என்.ஏவில் சேர்ந்தனர். பல பெண்கள் ‘ராணி ஜான்சி’ படையில் சேர்ந்தனர். எனவே ஜெனரல் திலான், ஐ.என்.ஏ வின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள் என்றார். இப்படையில் 65% தமிழர்கள் தான். எனவேதான் தமிழர்கள் பங்கேற்ற முக்கியமான போர்களில் ஒன்றாக இதைக் கருதுகிறோம்.
ஆங்கிலேயர்கள் போர்க்குணம் மிக்க இனங்களான கூர்க்கா, சீக்கியர், ஜாட் போன்ற மக்களை ராணுவத்தில் சேர்த்தனர். தமிழர், வங்காளி போன்றவர்களை மென்மை குணம் படைத்தவர்களாகக் கருதி காலாட்படைக்கு தேர்வு செய்யவில்லை. எந்தத் தமிழர்களை ஆங்கிலேயர்கள் எடுத்துக்கொள்ளவில்லையோ அவர்களை நேதாஜி ஐ.என்.ஏ.வில் எடுத்துக்கொண்டது ஆங்கிலேயர்களுக்கு வெறுப்பைத்தந்தது. ஆங்கில பிரதமர் சர்ச்சில் “மலேயா தோட்டத்தில் ரப்பர் பால் உறிஞ்சும் தமிழர்களின் ரத்தம் நேதாஜி மூளையில் கட்டியாக உள்ளது” என்றார். இதற்கு நேதாஜி வானொலியில் இந்தத் தமிழர்கள் தான் ஆங்கிலேய ஏகாதிபத்யத்தை ஒழிப்பார்கள் என்று பதில் தந்தார்.
மலேயாவிலிருந்து 2832 மைல்கள் பயணம் செய்து ஐ.என்.ஏ. பர்மா வந்து அடைந்தது. 2,20,000 ஜப்பானியர்கள், 6000 ஐ.என்.ஏ. வீரர்கள் அடங்கிய படை தாக்குதலைத் தொடங்கியது. இரண்டாம் உலகப்போரில் பர்மா போர்க்களம் மிகவும் கொடிய கடுமையான களம் ஆகும். அடர்ந்த காடுகள், 200 அங்குல மழை, மலேரியா ஆகியவை அங்கு உண்டு. ஒருவர் போரில் இறந்தால் 120பேர் மலேரியாவால் இறந்தனர். கோடையில் 120 டிகிரி வெப்பம், தண்ணீர் பஞ்சம் வேறு! ஜெனரல் ஸ்டில்வெல், “மழை, மழை, சேறு, சேறு, டைபாய்டு, மலேரியா, உடல் சக்தி இழத்தல், புண்கள்” என பலவாறாக விவரித்தார்.
1944 ஆம் ஆண்டு பிப்ரவரி மூன்றாம் தேதி ரங்கூன் ரயில் நிலையத்திலிருந்து ஐ.என்.ஏ.வை போர்க்களத்திற்கு நேதாஜி கண்ணீருடன் அனுப்பினார். “ டெல்லி நோக்கி” என்பது அவரின் அறைகூவல்!
கொடிய போருக்குப் பிறகு மார்ச் - 18 ஆம் தேதி ஐ.என்.ஏ. ஆங்கிலேயரை வென்று இந்தியாவிற்குள் ‘மொய்ராங்’ என்ற இடத்தைப் பிடித்தது. ‘மூவர்ணக்கொடி’ ஏற்றப்பட்டது. இந்த மாபெரும் நிகழ்ச்சி இந்திய வரலாற்றில் இடம் பெறவில்லை. ஆனால் வெற்றி நீடிக்கவில்லை. ஆங்கிலப்படைகளுக்கு அமெரிக்கா உதவ ஆரம்பித்தது. போர் மிகவும் கோரமானதாக இருந்தது. கடல்மட்டத்தில் இருந்து 6000 அடி உயரத்தில் இருந்த கோஹிமாவில் உக்கிரமான போர். குடிப்பதற்கு தண்ணீர் கூட கிடைக்காமல் இரு தரப்பினரும் கஷ்டப்பட்டனர்.
கோஹிமாவை காப்பாற்ற வெள்ளையர்கள் பெரும்பாடுபட்டனர். தங்களைக் காப்பாற்றிக்கொள்ள வெட்டப்பட்ட ‘டிரஞ்சுகள்’, கழிப்பிடங்கள், பிணங்களைப் புதைக்கும் இடங்கள் அருகாமையிலேயே இருந்தன. பிணங்களை புதைக்க தோண்டினால் அதற்கு கீழேயும் பழைய பிணங்கள் இருந்தன. அவ்வளவு மரணம். தங்களை காப்பாற்றிக்கொள்ள வெள்ளையர்கள் ஜப்பானிய பிணங்களை மதில் சுவர் போல் அடுக்கி அதற்குப் பின்னிருந்து எதிரிகளைச் சுட்டனர். அழுகிய பிணங்களிடமிருந்து ‘பிளேக் நோய்’ வராமல் இருப்பதற்கு வெள்ளையர்கள் விமானம் மூலம் மருந்து தூவினர். பல இடங்களில் இரு துருப்புகளும் நேருக்கு நேர் கைகளால் யுத்தம் நடத்தினர். 60 நாட்கள் தண்ணீர் மற்றும் தளவாடங்கள் போதிய அளவில் இல்லாதிருந்தும் ஐ.என்.ஏ. படையினர் கடைசிவரை போரிட்டனர்.
அமெரிக்க விமானங்கள் ஜப்பானியரையும், ஐ.என்.ஏ. வீரர்களையும் வானிலிருந்து சுட ஆரம்பித்தன. அவர்களின் மருத்துவமனைகளைச் சுட்டுத் தள்ளின. அடிபட்ட ஆங்கில வீரர்களை அவர்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். பிப்ரவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை 6000 டன் வெடிகுண்டுகள் அமெரிக்க விமானங்களால் வானிலிருந்து வீசப்பட்டன.
2,20,000 ஜப்பானிய வீரர்கள் இம்பால் போரில் பங்கு பெற்றனர். இவர்களில் 1,30,000 பேர்தான் உயிரோடு வீடு திரும்பினர். ஐ.என்.ஏ. வீரர்கள் ஆயிரக் கணக்கில் இறந்தனர். ஜூலை 8ஆம் தேதி இம்பால் போரை நிறுத்த ஜப்பானியப் பிரதமர் டோஜோ ஆணையிட்டார். போரியல் நிபுணர்கள் “ நேதாஜியை ஒரு வருடம் முன்பே சிங்கப்பூருக்கு அழைத்து வந்து பர்மாவில் போர் ஆரம்பித்திருந்தால் ஐ.என்.ஏ. தரப்புக்கு வெற்றி கிடைத்திருக்கும்” என்றனர்.
பர்மாவின் அடர்ந்த காடுகளிலும், மலைகளிலும் மரணப்பள்ளதாக்கிலும் இன்னுயிர் இழந்த இப்படையின் முகம் தெரியாத தமிழர்களை என்று நாம் பாராட்டப்போகிறோம்?
(மா.சு.அண்ணாமலை இந்திய தேசிய ராணுவம் பற்றி ஆய்வு நூல்கள் படைத்தவர்)
மே, 2015.