மலையாள சினிமாவை ஈன்றெடுத்த தமிழர்

மலையாள சினிமாவை ஈன்றெடுத்த தமிழர்

Published on

சினிமாங்கிற கனவுலகில் தன்னை முற்றிலுமாகக் கரைத்து கொண்ட கலைஞன்’னு தாத்தாவ சொல்லலாம். ஏன்னா சினிமா மீது அவருக்கிருந்த காதல் எல்லையற்றது. அவர் உயிர் பிரியும் வரை அவரோடு அந்தக் காதல் ஒட்டியே இருந்தது” - ஜே.சி.டேனியலைப் பற்றி சிலாகித்து பேசுகிறார்கள் அவரது பேத்தியான ஜெனட் பூர்ண சந்திரிகாவும், பேரன் அலெக்ஸ் மோதிலாலும். இன்று மலையாள சினிமா உலகின் தந்தை எனப் போற்றப்படும் ஜோசப் செல்லையா டேனியல் என்கிற ஜே.சி.டேனியல் ஒரு தமிழர். மலையாள சினிமாவின் முதல் திரைப்படத்தையும், முதல் ஸ்டூடியோவையும் உருவாக்கியவர் அவர். அவரது மகள் வழிப் பேத்தி ஜெனட் நாகர்கோவிலில் வசித்து வருகிறார். அவரது பேரன் அலெக்ஸ் கோவையில் இருக்கிறார். தாத்தாவைப் பற்றிய நினைவுக் குறிப்புகளை ‘அந்திமழை’க்காக இருவரும் பகிர்ந்து கொண்டார்கள். கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரம் கிராமத்தில் 1900ம் ஆண்டு தமிழ் கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்தவர் ஜே.சி.டேனியல். இவரது தந்தை ஜோசப் டேனியல் லண்டனில் மருத்துவம் பயின்று திருவனந்தபுரத்தில் அரசு தலைமை மருத்துவராக இருந்தவர். இதனால் பெரும் செல்வந்த ராக வாழ்ந்த ஜே.சி.டேனியல் தனது திரைப்படத் தயாரிப்பிற்காக சொத்துக்கள் அனைத்தையும் இழந்து கடைசி காலம் வரை அங்கீகாரம் கிடைக்காமலே 1975ம் வருடம் காலமானார். ஆனால் அவர் மறைந்து 15 ஆண்டுகள் கழித்து கேரள அரசு அவரை மலையாள சினிமாவின் தந்தை என அங்கீகரித்தது. இந்த வருடம் ஜே.சி.டேனியல் வாழ்க்கைப் பற்றிய ‘செல்லுலாய்ட்’ திரைப்படம் மலையாளத்தின் முன்னணி இயக்குநரான கமல் இயக்கத்தில் வெளிவந்து கேரள மாநில அரசின் சிறந்த படம் உட்பட ஏழு விருதுகளை பெற்றுள்ளது. சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் பெற்றுள்ளது. 

“தாத்தாவின் முதல் படம் நஷ்டமான பிறகு பல்மருத்துவம் பயின்று சிறந்த பல்மருத்துவ நிபுணராக புகழ்பெற்று விளங்கினார். ஒருமுறை சிகிச்சைக்காக வந்த பி.யு.சின்னப்பா வுடன் பழக்கம் ஏற்பட்டு இரண்டாவதாக ஒரு படம் எடுக்க எண்ணி விவாதத்துடனே அந்த கதையும் முடிந்து போனது. அதிலும் ஏகப்பட்ட நஷ்டம். இப்படி அவர் சினிமா வேட்கையுடன் எப்போதும் இருந்தார். எங்களையெல்லாம் தோளில் தூக்கிக் கொண்டு அன்று கொட்டாரத்தில் இருந்த கொட்டகைக்கு படம் பார்க்க கூட்டிச் செல்வார்.

ஆனால் சினிமா வைப் பற்றி எந்த விவாதமும் தகவல்களையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டதில்லை. சினிமாவிற்கு பிறகான அவரது வாழ்க்கை மருத்துவம், சிலம்பம் என்றே கழிந்தது” என்கிறார் பேரன் அலெக்ஸ் மோதிலால். இவர் ஜெனடின் மூத்த சகோதரர். “‘அவர் எடுத்த முதல் படத்தின் சுருள் அனைத்தையும் மாமாக்கள் சிறு வயதில் விளையாடும் போது தெரியாமல் எரித்துவிட்டனர். இதனால் முதல்படம் பற்றி ஆவணங்கள் எதுவும் தற்போதில்லை. மத்திய அரசில் டில்லியில் பணிபுரிந்த எங்கள் உறவினர் ஒருவர் மூலம் தாத்தாவைப் பற்றி தெரியவந்து அப்போதிருந்த இந்திராகாந்தி அரசு தாத்தாவிற்கு ஆயிரம் ரூபாய் நிதியுதவி அனுப்பியது. அப்போது தாத்தா படுத்தபடுக்கையாய் இருந்தார். அந்த நிதியுதவியைப் பார்த்து எதுவும் பேசவில்லை. ஆனால் கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் வந்து கொண்டிருந்தது.

அவர் தான் அங்கீகரிக்கப்பட்டுள்ளோம் என நினைத்திருப்பார் என்று நினைக்கிறேன். ஏனெனில் அதற்கு கொஞ்ச காலத்திற்கு முன்பு மலையாள இதழ் ஒன்றில், ‘தன்னைப் போன்றவர்களை எவரும் அங்கீகரிக்கவில்லை’ என்று பேட்டி கொடுத்திருந்தார். ஆனால் இன்று மலையாள சினிமாவின் தந்தை என அவர் கொண்டாடப்பட்டு வருவதை பார்க்க அவரில்லை” என வேதனையுடன் குறிப்பிடுகிறார் பேத்தி ஜெனட் தற்போது கேரள அரசு அகத்தீஸ்வரத்தில் இருக்கும் அவரின் கல்லறையை நினைவிடமாக மாற்ற கேட்டு வருகிறதாம். டேனியல் குடும்பம் நாகர்கோவில் பகுதியில் பெரிய குடும்பமாக இன்றும் விளங்குகிறது. ஜே.சி.டேனியலும், ரெட் டீ (தமிழில், எரியும் பனிக்காடு) நாவலாசிரியர் பி.ஹெச்.டேனியலும்  பங்காளிகள். செல்லுலாய்ட் திரைப்படம் ஜே.சி.டேனியலையும் பரதேசி திரைப்படம் பி.ஹெச்.டேனியலையும் தமிழ் உலகிற்கு இன்று நினைவுபடுத்தியுள்ளன.

ஏப்ரல், 2013.

logo
Andhimazhai
www.andhimazhai.com