எல்லா சடங்குகளும் காலப்போக்கில் மாறுவது தான்; மறைந்து வருவதுதான். தமிழ் சமூகத்தில் நிறைய சடங்குகள் மாறி இருக்கின்றன. நிறைய மறைந்து இருக்கின்றன. மாறி வருவதற்கும் மறைந்து இருப்பதற்கும் காரணம் ஒன்று பொருளாதார நெருக்கடி, மற்றொன்று நகரமயமாதல், விருப்பமின்மை, அறியாமை.
குறிப்பாக தாய்மாமன் சம்பந்தப்பட்ட சடங்குகள் மறைந்தே போய் விட்டன. இந்த சடங்குகள் திரைப்படங்களில் மட்டுமே உயிரோடு இருக்கின்றன. நடைமுறையில் அவ்வாறு இல்லை. திருமணத்தில் தாய்மாமனுக்கு செய்கிற சடங்கு முக்கியமானது. பூப்பூநீராட்டுச் சடங்குகளின் போது தாய்மாமனுக்கும் அவரது மனைவிக்கும் செய்கிற சடங்குகள், இறப்பின் போது தாய்மாமனுக்கு செய்கிற சடங்குகள், மறைந்து விட்டன. இறப்பு சடங்கின் போது பேரன், பேத்திகளுக்கு சில நடைமுறைகள் உண்டு. வாய்க்கரிசி போடுதல் தாத்தாவின் மறைவின் போது பேரன் நெய்ப்பந்தம் பிடித்தல், பத்திகட்டை கொளுத்தி வழிஅனுப்பி விடைபெறுவது, வெள்ளை துண்டு வீசி வழி அனுப்பி வைப்பது ஆகிய சடங்குகள் மறைந்து விட்டன. இப்படி எல்லா சடங்குகளும் மறைந்து விட்டன.
மண மேடை இல்லாதது திருமண சடங்கு மறைவதற்கு காரணமாகி வருகிறது. மண மேடை இருந்தால் தாய்மாமனுக்கு உரிய மதிப்பு தரப்படும். கோவில்களில் திருமணம் நடப்பது சடங்குகள் மறைவதற்கு மற்றொரு காரணமாகும்.
மறைந்துவிட்ட சடங்குகளுக்குப் பதிலியாக பலவற்றை கொண்டு வருகிறார்கள். அவை நெடுங்காலம் நிற்காது குறிப்பாக மெகந்தி, கேக் கட் பண்ணுதல்.
உதாரணமாக முக்கியமான சடங்குகளும் திருமணத்தின் போது கடலைப்பருப்பு தேங்காய் சடங்கு அதாவது மஞ்சளையும் பாக்கையும் விரவி கொத்துக் கொத்தாக மணப்பெண் உறவினர் மடியில் இடுவார்கள். அந்த சடங்குகள் இப்போது இல்லாமல் போய்விட்டது. பொருளாதார காரணங்களால் திருமண சடங்குகள் மாறி வருகின்றன. திருமணத்திற்கு ஊர்ஊராக சென்று பத்திரிகை கொடுப்பதற்கு ஆட்கள் இல்லை. திருமணத்தின் போது உறவினர் உதவியே இப்போது இல்லை. 50 பேருக்கு உணவு செய்வது என்பது கூட சிரமமான காரியம். திருமணத்திற்கான ஹோட்டல் சாப்பாடு என்பதே விருந்து இல்லை என்பதன் அடையாளம் தான், திருமணத்தின் போது யார்; வந்தார்கள் போனார்கள் என்பதே தெரியாது. மொய் கவரை பார்த்து தான் ஆட்கள் வந்ததை அடையாளம் காண வேண்டியிருக்கிறது. திருமண சடங்கு கலாச்சாரமே கவர் கலாச்சாரமாகிவிட்டது.
(சந்திப்பு: கண்ணன்)
ஆகஸ்ட், 2016.