மறைந்து போன ஆறு!

கம்பாநதி
வண்ணநிலவன்
வண்ணநிலவன்
Published on

1977இல் எனது திருமணத்திற்கு மறு நாள் காலை நானும் நம்பிராஜனும் (விக்ரமாதித்யன்) பேட்டை ரோட்டில் காலாற நடந்து கொண்டிருந்தோம்.

டவுனிலிருந்து பேட்டை செல்லும் ரோட்டில், ஊரின் முடிவில் ‘கம்பாநேரி மண்டபம்' என்ற இடம் உண்டு. நெல்லையப்பருக்கும் காந்திமதிக்கும் திருக்கல்யாணம் நடந்த பிறகு இருவரும் கம்பாநேரி மண்டபத்தில் எழுந்தருள்வார்கள். அந்த மண்டபத்தை தாண்டிப் போகும்போது தம்பிராஜனிடம் நாவலைப் பற்றிக் கூறினேன். அப்போது தோன்றியதுதான் ‘கம்பாநதி' நாவலின் கரு.

பொதுவாக திருநெல்வேலிக்காரர்கள் எதாவது அரசாங்க வேலையிலோ, அல்லது கடை கண்ணிகளிலோ வேலை பார்ப்பார்கள். கொஞ்சம் வசதியானவர்கள் கடை வைத்திருப்பார்கள். இவர்களுக்கெல்லாம் கொஞ்சம் நிலமும் வீடும் இருக்கும். நிலத்தை காலப் போக்கில் விற்று, அந்த வருமானத்தில் ஜீவனம் செய்பவர்களும் உண்டு. வாழ்ந்து கொண்டிருக்கிற வீட்டை இரண்டாக மறித்து அதில் ஒரு போர்ஷனை வாடகைக்கு விட்டுப் பிழைக்கிறவர்கள் பலர். பெரும்பாலும் வாழ்ந்து கெட்ட குடும்-பங்களே தெருவுக்கு தெரு இருந்தன. ஊரை விட்டுப் பிழைக்கப் போவதும் அவர்களுக்கு பிடிக்காது. இந்த திருநெல்வேலி வாழ்க்கையைப் புதுமைப்பித்தன் தனது பலசிறுகதைகளில் அற்புதமாகச் சித்திரித்துள்ளார்.

இப்போது போலவே எழுபதுகளில், வீட்டுக்கு வீடு வேலையில்லாத இளைஞர்கள் இருந்தனர். நானும் ஏதேதோ தற்காலிக வேலைகளில் காலத்தை ஓட்டியவன் தான். வண்ணதாசன், கலாப்ரியா, விக்ரமாதித்யன் எல்லோரும் வேலையில்லாமல் தான் அப்போது இருந்தார்கள். நான் கணையாழியில் ‘இண்டர்வியூ' என்ற சிறுகதை எழுதி-யிருந்தேன்.

திருநெல்வேலியில் ‘வாழ்ந்து கெட்ட குடும்பத்து இளைஞனின் கதையை; என்னுடைய, நம்பி

ராஜனுடைய கதையை; எங்களைப் போன்ற எண்ணற்ற இளைஞர்களின் அகவுலக புறவுலக நெருக்கடிகளைத்தான் ‘கம்பா நதி' என்ற நாவலாக எழுதினேன். ‘கம்பாநேரி'யை ‘கம்பாநதி' என்று மாற்றினேன். அப்படி எந்த நதியும் திருநெல்வேலியில் இல்லை.‘மறைந்து போன நதி' என்று அதற்கு ஒரு குறியீட்டுத்தன்மையை அளித்து நாவலில் எழுதினேன்.

ஜனவரி - 2022

logo
Andhimazhai
www.andhimazhai.com