மருத்துவக் கட்டுக்கதைகளும் மறுக்கும் உண்மைகளும்
சி றுவயதில் பள்ளியில் படிக்கும் போது நாம் நம்பிய கதைகள் பல. பென்சிலை சீவி வரும் மரத்தூளில் பால் ஊற்றினால் ரப்பர் கிடைக்கும் என்பது முதல், புத்தகத்திற்குள் வைத்தால் மயில் தோகை குட்டி போடும் என்பது வரை எத்தனையோ நம்பிக்கைகள்.
கட்டுக்கதைகளுக்கென்று சில கட்டுப்பாடுகள் உள்ளன. அவை உண்மையைப் போலவே நம்பும் படி இருக்க வேண்டும். ஆனால் உண்மையாக இருக்கக்கூடாது. கேட்டவுடனே பொய் என அறிந்து கொள்ளும் வகையில் இருக்கும் கட்டுக்கதைகள் பரவ ஆரம்பிக்கும் முன்னரே செத்துவிடுகின்றன. அதேபோல கட்டுக்கதைகள் தன்னை நம்புபவர்களுக்கு ஒரு சமாதானத்தை அளிப்பதாக இருக்கவேண்டும், உலகத்தின் பிரச்சனைகளுக்கு காரணம் இலுமினாட்டி என்பதைப்போல. நம்ப முயற்சித்தால் மனதை சிரமப்படுத்தும் கட்டுக் கதைகளும் அதிகமாக பரவுவது இல்லை. ஆனால் உண்மைகளுக்கு இத்தகைய கட்டுப்பாடுகள் இல்லை. கட்டுக்கதைகள் அதிகமாக புழங்கும் துறைகளில் முதன்மையானது மருத்துவத்துறை. சாமானிய மக்களுக்கு எழும் சந்தேகங்களும், சந்தேகங்களை எளிதில் தீர்த்துக் கொள்ள இயலாத சூழலும், புரிந்து கொள்ள உழைப்பைக் கோரும் மருத்துவ அறிவியலும் கட்டுக்கதைகள் பரவ சாதகமான சூழலை ஏற்படுத்துகின்றன. மருத்துவக்கட்டுக்கதைகள் பிறப்பதற்கு முன்னரே ஆரம்பித்துவிடுகின்றன.
கர்ப்பக்காலத்தில் குங்குமப்பூவைப் பாலில் சேர்த்து சாப்பிட்டால் குழந்தை சிவப்பாகப் பிறக்கும் & குழந்தையின் நிறம் மரபணுக்களால் தீர்மானிக்கப்பட்ட ஒன்று. இது தான் நிறம் எனக் கரு உருவாகும் முன்னரே மரபணுக்கள் முடிவு செய்துவிடுகின்றன. அம்முடிவுகளின் படிதான் தோல் உருவாகிறது. உணவுகளாலோ, வேறு க்ரீம்களாலோ அந்நிறத்தை மாற்ற முடியாது. வெள்ளைச்சட்டைக்கு சாயமேற்றுவதைப்போல குழந்தையின் நிறத்தை மாற்றமுடியும் என நினைப்பது அறியாமை தான்.
குழந்தைகள் வளர 23 ஊட்டச்சத்துகள் அடங்கிய பானம் அத்தியாவசியம் - பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தை நல மருத்துவர்களிடம் மறக்காமல் வைக்கும் கோரிக்கை ‘‘சாப்பிடவே மாட்டேங்கிறான், எதாவது எனர்ஜி டிரிங்க் எழுதி கொடுங்க''. ஹெல்த் டிரிங்க், எனர்ஜி டிரிங்க், சப்ளிமெண்ட், சத்து மாவு என பல பெயர்களில் அழைக்கப்படும் இப்பொருட்கள், குழந்தையை நன்றாக கவனித்துக் கொள்வதாக பெற்றோருக்கு ஒரு சமாதானத்தை அளிக்க வல்லவை. பக்கத்து வீட்டில் 48 சத்து அடங்கிய பானம் இருக்காம், நம்ம 60
சத்து பானம் வாங்கவேண்டும் என வாங்குவோரும் உள்ளனர். உண்மையில் வெகுசில குழந்தைகளைத் தவிர வேறு யாருக்குமே இத்தகைய ஊட்டச்சத்துப் பானங்கள் தேவையில்லை. காய்கறி, பழங்கள், இறைச்சி, பால், முட்டை, மீன் இவற்றை விட எந்த ஊட்டச்சத்துப் பானத்திலும் அதிக சத்துகள் இருப்பதில்லை.
அல்டிரா சவுண்ட் ஸ்கேனில் (USG scan) கதிர்வீச்சு உள்ளது & ஒலிஅலைகளில் பல்வேறு அலைக்கற்றைகள் உள்ளன.அவற்றில் 20 -20,000 ஹெர்ட்ஸ் அதிர்வெண் உடைய அலைக்கற்றைகளைத் தான் மனிதக் காதுகளால் கேட்கமுடியும். அதற்கு அதிகமான அதிர்வெண் உடைய அலைக்கற்றைகளைப் பயன்படுத்தி அல்டிரா சவுண்ட் ஸ்கேன் செய்யப்படுகிறது. ஒலி அலைகளில் கதிர்வீச்சு அபாயம் இருந்திருந்தால் முதலில் பாதிக்கப்படுபவர்கள் தொலைக்காட்சிகளில் விவாத நிகழ்ச்சி நடத்துவோர் தான். நல்லவேளையாக அப்படி எதுவும் இல்லை.
குளிர்ச்சியான பழங்கள், ஐஸ்கிரீம் சாப்பிட்டால் சளிப் பிடிக்கும் - சாதாரண சளி என நாம் அழைக்கும் ‘Comman cold'' வைரஸ்களால் உருவாவது. தூசி போன்ற அலர்ஜியை ஏற்படுத்தும் பொருட்களால் மூக்கு ஒழுகுதல் (allergic rhinitis) ஏற்படலாம். பழங்கள், ஐஸ்கிரீமில் இருந்து நேரடியாக சளியைப் பரப்பும் கிருமிகள் உருவாவது இல்லை. அவை காற்றின் மூலம் பிறர் தும்மும்போதும், இருமும் போதும், சளித்துகள் மூலமும் தான் பரவுகின்றன.
தடுப்பூசி போட்டால் ஆட்டிசம் வரும் - ஒரு தவறான மருத்துவக்கட்டுரையால் 22 வருடங்களுக்கு முன் இந்த கட்டுக்கதை பரவ ஆரம்பித்தது. அதன்பிறகு அக்கட்டுரை பொய்யாக எழுதப்பட்டது எனக் கண்டுபிடிக்கப்பட்டது. தடுப்பூசிகளால் ஆட்டிசம் வருவதில்லை என நிரூபிக்கப்பட்டும் உள்ளது. இருந்தும் இன்றுவரை உலகம் தட்டை என நம்பும் Flat earth society இருப்பது போல அந்த போலிக் கட்டுரையை நம்பும் மூடநம்பிக்கையாளர்களும் உள்ளனர்.
அடிபட்டவுடன் அழுத்தித் தேய்த்து சுளுக்கெடுத்தால், மசாஜ் செய்தால் சரியாகி விடும் - அடிபட்டவுடன், அடிபட்ட இடத்தில் உள்ள எலும்புகள், தசைநார்கள், இரத்தக்குழாய்கள், நரம்புகள் போன்றவை சேதம் அடைந்திருக்கும். அந்த இடத்திலேயே மேலும் அழுத்தித் தேய்ப்பதன் மூலம் சேதம் அதிகமாகுமே தவிர குறையாது. அழுத்தாமல் ஐஸ் ஒத்தடம் கொடுப்பது,
அசைக்காமல் வைப்பது, உடனடியாக மருத்துவ வசதியை நாடுவது போன்றவைதான் சிறந்த முதலுதவிகளாக இருக்கும்.
பாம்பு கடித்த இடத்தைச் சுற்றி இறுக்கமாகக் கட்ட வேண்டும். தமிழ் திரைப்படங்கள் பார்க்கும் வழக்கமுள்ள அனைவருக்கும் இது மிகவும் பரிச்சியமானது. ஆனால் உண்மை வேறு. பாம்பு விஷம் ஒரு வகைப்புரதம், அது கடிவாயில் இருந்து நிணநீர் மண்டலம் (Lym- phatics) வழியாகத்தான் பரவும். அனைவரும் நினைப்பதைப்போல இரத்த ஓட்டத்தின் வழியாகப்பரவாது. நிண நீரானது கை கால்களை அசைப்பதன் மூலமே உடலின் ஒரு பாகத்தில் இருந்து மற்றொரு பாகத்திற்கு செல்லும். இறுக்கமான கட்டுகளின் மூலம் நிணநீர் ஓட்டத்தை நிறுத்த முடியாது. எனவே கடிபட்ட கை கால்களை அசைக்காமல் வைப்பதுதான் சிறந்த வழி. இறுக்கமாகக் கட்டுவதன் மூலம் இரத்த ஓட்டம் தடைபட்டு வேறு பல பிரச்சனைகள் வரலாம். கடிவாயை கீறுவது, இரத்தத்தை உறிஞ்சுவது போன்றவையும் பலனளிக்காது.
வலிப்பு வந்தவர் கைகளில் சாவிக்கொத்தை கொடுத்தால் நின்றுவிடும் - இதுவும் திரைப்படங்கள் மூலம் பிரபலமான ஒன்று தான். வலிப்பு நோய் மூளையில் ஏற்படும் பிரச்சனைகளால் உருவாவது. தொடர்ச்சியாக சிகிச்சை மேற்கொள்வதன் மூலமே கட்டுக்குள் வைக்க முடியும். வலிப்பு வரும்போது அருகில் இருக்கும் கூரான, ஆபத்தான பொருட்களைத் தள்ளி வைப்பது, நாக்கைக் கடித்துக் கொள்ளாமல் துணியை வைப்பது, கோழைச் சுரப்பு சுவாசப்பாதையில் செல்லாமல் இருக்க தலையை பக்கவாட்டில் வைப்பது போன்றவை தான் சிறந்த முதலுதவிகள். சாவி அல்லது இரும்புப் பொருட்களை நோயாளியின் கையில் கொடுத்தால் காயம் ஏற்படத் தான் வாய்ப்பு அதிகம்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பேசிப்பேசி பரப்பப்பட்டு நம்பப்பட்ட மருத்துவக்கட்டுக் கதைகள் காலத்திற்கேற்ப தங்களையும் மாற்றிக் கொண்டே வந்துள்ளன. அவற்றில் சில கதைகளை மட்டும் இங்கே எழுதமுடிந்தது. இன்னும் பல உள்ளன. உண்மையைத் தேடும் ஆர்வமிருந்தாலே இந்த இணைய யுகத்தில் எளிதில் இனம் காணலாம்.
ஜூலை, 2020.