சொத்துக்கு உயில் எழுதுவதுபோல் தான் எப்படி மரணத்தை அடையவேண்டும் என்பதுபற்றியும் வெளிநாடுகளில் உள்ளவர்கள் லிவிங் வில் என்ற ஒன்றை எழுதுவார்கள். அதில் ஒருவேளை எனக்கு உடல் நலம் குன்றி நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு என் வாழ்வு குறித்து சுயமான முடிவுகளை என்னால் எடுக்க இயலாமல் போய்விட்டால் எனக்கு வாழ்நாளை நீட்டிக்கும் முயற்சிகளைச் செய்யவேண்டாம். அதாவது வெண்டிலேட்டர் போடுவது, இதயத்தை மீண்டும் துடிக்கவைக்கும் சிபிஆர் (CPR ) போன்ற முறைகள், ரத்த அழுத்தம் குறையும்போது அதை ஏற்ற முயற்சிப்பது போன்றவற்றைச் செய்யவேண்டாம். என்னுடைய நேரம் வருகையில் என்னைப் போகவிடுங்கள் என்கிற அர்த்தத்தில் எழுதப்படுவது. இதை Living Well என்று சொல்வோம்.
இதைப்பற்றி பல்வேறுவிதமான சர்ச்சைகள் அங்கும் இருந்திருக்கின்றன. இதில் Withholding Life Support, Withdrawing Life Support என்று இரண்டு உள்ளது. முன்கூட்டியே சில சிகிச்சைகளைச் செய்யவேண்டாம் என்று கூறுவது Withholding Life Support ஆகும். சில சமயங்களில் நான் சுயநினைவு இல்லாமல் இருக்கும்போது எனக்குப் பதிலாக முடிவுகளை எடுக்க இன்னாரைக் கேட்கலாம் என்றும் குறிப்பிட்டு பெயர்களை எழுதி வைப்பார்கள். அப்படி எழுதா விட்டால் துணைவர், மகன் மகள்கள், பெற்றோர், சகோதர சகோதரிகள் இந்த வரிசையில்தான் முடிவுகளைக் கேட்போம். Withdrawing Life Support என்று வருகையில் நோயாளிக்கு செய்துவரக்கூடிய சில சிகிச்சை முறைகளை நிறுத்துமாறு கூறும்போது நாம் தவறாக முடிவு எடுக்கிறோமா, இது கொலை போன்றதா என்று தடுமாறுவார்கள். இங்குதான் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவரும் தீர்மானம்(End of Life Decision) என்பது வருகிறது. இது கருணைக்கொலை அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இந்த சொற்பிரயோகமே தவறானது. இதுகொலை அல்ல. இது ஒருவரின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றுவது ஆகும்
என்னுடைய நெருங்கிய உறவினர் ஒருவருக்கு நீண்டகாலமாக நுரையீரல் நோய் உள்ளது. அடிக்கடி மருத்துவமனையில் சேர்க்கப்படுவார். தீவிர சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்புவார். அவருக்கு இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை. வீட்டுக்குப் போனாலும் எழுந்து நடக்கமுடியவில்லை. மூச்சுவாங்குகிறது என்று சிரமப்படுகிறார். எனவே அவர் இறுதியாக முடிவெடுத்துக் கூறியிருக்கிறார்: “இனிமேல் எனக்கு முடியாமல் போய்விட்டால் இறுதிக்கட்ட தீவிர சிகிச்சைகளாக வெண்டிலேட்டர் போன்றவற்றைப் பயன்படுத்தவேண்டாம். என்னை வசதியாக சிரமப்படாமல் வைத்துப் பார்த்துக்கொள்ளுங்கள். முடிந்தால் ஐசியுவில் கூட வைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்’‘ என்று வெளிப்படையாகக் கேட்டுக்கொண்டுள்ளார். இது தற்கொலை அல்ல; கொலை அல்ல; கருணைக்கொலையும் அல்ல. இதை புரிந்து கொள்ளவேண்டும்.
இது என்னவெனில் நாம் தொடர்ந்து மருத்துவ சிகிச்சைகளைக் கொடுத்துவருகிறோம். ஆனாலும் மரணம் தவிர்க்க இயலாதது என்று தெரிகிறது. இதே சிகிச்சையை தொடர்ந்து கொடுத்துக்கொண்டே இருக்கவும் இயலாது. இச்சமயத்தில் மரணத்தை கௌரவமான முறையில் நிகழ அனுமதிக்கவேண்டும். இதை சரியாகப் புரிந்துகொள்ளாமல் மருத்துவர்கள் மரணத்தை அனுமதிக்கிறார்கள் என்று விமர்சிக்கப் படுகிறது.
இதை வேறுவிதமாகவும் யோசிக்கலாம். சில நோயாளிகள் பலநாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பார்கள். அவர்களின் குடும்பத்தினர் வந்து இனிமேலும் செலவை எங்களால் தாங்கமுடியாது. நாங்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்லவிரும்புகிறோம் என்று சொல்வார்கள். மருத்துவ ரீதியாக அவரை நீங்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்ல இயலாது. அவரைக் கொண்டு செல்லும் வழியிலேயே மரணம் ஏற்படலாம் என்று ஆலோசனை சொல்வோம். அதையும்மீறி அழைத்துச் செல்வார்கள். இதை என்னவென்று சொல்வது? இது கொலையா? தற்கொலையா? கருணைக்கொலையா? இதைத் தவிர்க்க இயலாத சூழல்.
இப்படி அழைத்துச் செல்கையில் வழியிலேயே இறந்துவிட்டால் அவர்கள் மருத்துவச்சான்றிதழ் பெறுவது உள்ளிட்ட சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். இதுபோன்ற சூழலில் நோயாளி கௌரவமான மரணத்தைத் தழுவ அனுமதிக்கவேண்டும்.
இந்த நேரத்தில்தான் கருணைக்கொலை என்ற சொல் வருகிறது. மருத்துவர்கள் எதையாவது கொடுத்து கொலைசெய்துவிடுவார்கள் என்று கருதுகிறார்கள். இதில் உண்மை இல்லை. எங்கள் நோயாளிக்கு எந்த சிகிச்சையும் வேண்டாம். ஆனால் அவரை துன்பப்படாமல் நல்லமுறையில் இருக்கவையுங்கள் என்று நோயாளிகளின் உறவினர்கள் கேட்டுக்கொள்ளும்போது, உதாரணத்துக்கு மார்பிஃன் (Morphine) போன்ற மருந்தைக் கொடுக்கலாம். இது அவரது வலியைக் குறைக்கும். ஆனால் அதே சமயம் அவரது இதயத்துடிப்பு கொஞ்சம் குறையலாம். ஆனால் எங்கள் நோக்கம் நோயாளியின் துன்பத்தைக் குறைப்பதே.
நம்பிக்கை என்பது ஒன்று. எதார்த்தம் என்பது வேறொன்று. அதிசயங்கள் நடக்கலாம். ஒரு லட்சம் பேரில் ஒருவருக்குத்தான் அது நடக்கும். எல்லா உடல்பாகங்களும் செயலிழந்த ஒருவரை எவ்வளவு நாளைக்குத்தான் வைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கமுடியும்? இதிலும் சில சமயத்தில் குடும்பத்தில் ஒருமித்த கருத்து இருக்காது. அந்த சமயங்களில் எந்த முடிவையும் நாங்கள் எடுக்கமாட்டோம். ஆனால் நோயாளியே இதில் ஒரு குறிப்பிட்ட வழிகாட்டுதலை முன்பே கொடுத்திருந்தால் அவர் சொன்னபடிதான் நடப்போம்.
ஒருவர் இங்கே அனுமதிக்கப்பட்டு நினைவே இல்லாமல் ஓராண்டுக்குமேல் இருந்தார். அவர் சம்பாதித்த சொத்து முழுக்க அவருக்காகவே செலவழிக்கவேண்டும். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று உறவினர்கள் சொல்லிவிட்டனர். ஆனால் எத்தனை பேரால் இந்த செலவைத் தாங்க முடியும்? பணம் மட்டுமே இல்லை. இப்படி ஒரு நோயாளியைப் பார்ப்பதே மிகவும் கஷ்டம். அவரே இப்படி ஒரு நிலையில் இருக்கவிரும்பமாட்டார்.
எனக்கு இன்னும் 50 வயது ஆகவில்லை. ஆனால் எனக்கு இப்படியொரு நிலை ஏற்பட்டால் எனக்கு இப்படியொரு வாழ்க்கை தேவையில்லை. இது பற்றி நானும் ஒரு உயில் எழுதிவிட்டேன். என் மனைவியிடமும் கூறிவிட்டேன். அதற்காக மருத்துவ சிகிச்சையே வேண்டாம் என்று சொல்லவில்லை. நாளைக்கு ஒரு மாரடைப்பு என்றால் அதற்கான
சிகிச்சை தேவை. ஆனால் வெண்டிலேட்டரிலேயே ஒரு வாரத்துக்கு மேல் நீடிக்கும். அதைத்தாண்டி நீண்டகாலம் இழுக்கும் என்றால் எனக்கு அந்த நிலை வேண்டாம் என்று நான் கூறி உள்ளேன். குணமாகிவிடும் என்றால் பரவாயில்லை. ஆகாது என்றால் என்ன செய்வது? என்னுடைய இந்த உயிலுக்கு இருவர் சாட்சிக் கையெழுத்தும் போட்டிருக்கிறார்கள்.
வேண்டாம் என்று ஒருவர் தெளிவாக சொல்லாத வரைக்கும் நாங்கள் உயிரை நீடிக்க வைக்கும் எல்லா சிகிச்சைகளையும் தொடர்ந்து செய்வோம்.
ஒரு நோயாளியின் விஷயத்தில் மகள், மகன் இருவரும் மாறுபட்ட கருத்துகொண்டிருந்தார்கள். அப்போது குடும்பத்தினர் அனைவரையும் அழைத்து சிகிச்சை அளிக்கும் மருத்துவர் அல்லாத வேறு சில மருத்துவர்களைக் கொண்ட நெறிமுறைக் குழு மூலம் உண்மைகளை விளக்கி முடிவுகளை எடுத்தோம். உறுப்புகளைத் தானம் செய்கிற நிலையிலும் இப்படி கடினமான முடிவுகளைக் குடும்பத்தினர் எடுக்கவேண்டிய நிலை வரும்.
இந்த விஷயத்தில் இந்தியன் சொசைட்டி ஆஃப் கிரிட்டிகல் கேர் மெடிசின் வழிமுறைகளை உருவாக்கி உள்ளது. நாங்கள் இந்த வழிமுறைகளைப் பரிந்துரைக்க முடியும்.
நாம் கருணைக்கொலை பற்றிப் பேசவே இல்லை. நாம் பேசுவது மரணம், அதன் இயல்புப்படி கௌரவமாக நடக்க அனுமதிப்பதே. யோசித்துப் பார்த்தால் இந்த விவாதங்களுக்குத் தேவையே இல்லாதபடி நாம் ஏற்கெனவே வீடுகளில் இதைத் தான் செய்துகொண்டிருக்கிறோம். மிகவும் வயதான நிலையில் உள்ள பெரியவர்களுக்கு வீட்டில் வைத்து அடிப்படையான சிகிச்சையே செய்கிறோம். அவர்கள் ஐசியுவில் மரணம் அடைவதை விரும்பவே மாட்டார்கள்.
(நமது செய்தியாளரிடம் பேசியதிலிருந்து)
செப்டெம்பர், 2014.