‘பிரதமர் அவர்களே, நிகழ்காலம் மட்டுமே உங்களுக்கு உரியது. ஆனால் நூற்றாண்டுகள், கலைக்குச் சொந்தமானது!’- தன் நாவலைத் தடை செய்த ராஜிவ் காந்திக்கு சல்மான் ருஷ்டி எழுதிய கடிதத்தில்(1989).
அன்றைக்கு காதலர் தினம். வெளிச்சம் குறைவான அறையில் ஓய்வில் இருக்கிறார் ஈரானின் மதத் தலைவரான அயத்துல்லா கோமேனி.
அவரது மகன் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் சில முஸ்லிம்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை அவரிடம் கூறுகிறார். அதற்குக் காரணமான நாவலைப் பற்றியும் தெரிவிக்கிறார். சில மணி நேரம் கழித்து அவர் ஈரானிய தொலைக்காட்சி அலுவலகத்துக்கு வந்து ஒரு தாளைத் தருகிறார். அதை செய்திவாசிப்பவர் வாங்கி காமிரா முன்பு படிக்கிறார். அது ஒரு பத்வா. பிரிட்டனில் வாழும் இந்திய எழுத்தாளரான சல்மான் ருஷ்டியின் நான்காவது நாவலான சாத்தானின் கவிதைகளுக்கு எதிரானது. ‘இஸ்லாம், நபிகள், குரான் ஆகியவற்றுக்கு எதிரான நூலை எழுதிய எழுத்தாளர், பதிப்பித்தவர்கள் அனைவருக்கும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. உலகில் உள்ள துணிச்சலான முஸ்லிம்கள் இதைச் செய்யவேண்டும்” என்பதுதான் இதன் சாரம். அன்று ருஷ்டியின் நண்பர் ஒருவரின் இறுதிச்சடங்கு நடக்கவிருந்தது. ஒரு பிபிசி நிருபர் ருஷ்டியை அழைத்து இந்த செய்தியைச் சொல்கிறார். அன்றிலிருந்து அவரது வாழ்க்கையே திசைமாறிப்போய்விட்டது!
சாத்தானின் கவிதைகள் நாவல் ஒருவேளை இவ்வளவு பெரிய கவனத்துக்கு உள்ளாகாமல் கூடப் போயிருக்கலாம். இந்தியா டுடே பத்திரிகையாளரான மது ஜெயின் என்பவர் லண்டனில் ருஷ்டியைச் சந்தித்தார். அப்போதுதான் பதிப்பாளரிடம் இருந்து அந்த நாவலின் புரூப் வந்திருந்தது. அதை அந்த நிருபர், படித்துவிட்டு மிகவும் நன்றாக இருக்கிறது என்று சொல்லி அதிலிருந்து ஒரு பகுதியை இந்தியா டுடேயில் பிரசுரித்தார். நாவல் வெளிவருவதற்கு முன்பே இது வெளியானது. அத்துடன் எழுதப்பட்ட கட்டுரையில் இஸ்லாமை விமரிசிப்பது போல் இந்த நாவல் இருப்பதால் சர்ச்சை உருவாகலாம் என்று கூறப்பட்டிருந்தது. அவ்வளவே. இந்தியாவில் இந்நாவல் வருவதற்கு முன்பே எதிர்ப்புக் கிளம்பிவிட்டது. அப்போதைய காங்கிரஸ் அரசு உடனடியாக இந்த நாவல் இந்தியா வர தடை விதித்துவிட்டது. பாகிஸ்தானில் அமெரிக்க தூதரகம் முன்பாக இப்புத்தகத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு ஐந்துபேர் இறந்தார்கள். காஷ்மீரில் எதிர்ப்புப் போராட்டத்தில் ஒருவர் கொல்லப்பட்டிருந்தார். தென்னாப்பிரிக்கா இந்நாவலைத் தடை செய்தது. இந்தச் சூழலில்தான் ருஷ்டிக்கு மரண தண்டனை விதிக்கும் பத்வா விதிக்கப்பட்டது.
பத்வா விதித்தபின் பிரிட்டிஷ் காவல்துறை சிறப்புப்பிரிவின் பாதுகாப்பில் அவர் தலைமறைவாக வாழ்ந்தார். இந்த பத்வாவை அடுத்து ஈரானுக்கும் பிரிட்டனுக்குமான தூதரக உறவு துண்டிக்கப்பட்டது. ஜோசப் காண்ட்ராட், ஆண்டன் செகாவ் ஆகிய இரு எழுத்தாளர்களின் பெயரை இணைத்து ஜோசப் ஆண்டன் என்ற பெயரில் அவர் வாழ்ந்தார். அந்த வாழ்க்கை பதினோரு ஆண்டுகள் நீளமானது. சல்மான் ருஷ்டி தன் சுயசரிதையை ஜோசப் ஆண்டன் என்ற தலைப்பில் எழுதி 2012 ஆம் ஆண்டு வெளியிட்டார். மிக விறுப்பான மொழியில் ஆனால் மிக நீளமான நூல் அது. அதில் ஒரு சம்பவம்:
ருஷ்டியின் முதல் மனைவிக்குப் பிறந்த ஜாபர் என்றொரு மகன் உண்டு. அவன் அம்மாவுடன் வசித்தான். இந்த பிரச்னையின் போது அவன் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தான். அவனுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்பதுதான் ஒரு தந்தையாக ருஷ்டிக்கு பெரும் கவலை. குறிப்பிட்ட நேரத்தில் ஜாபருடன் பேசுவது என்ற ஏற்பாட்டைச் செய்துகொண்டார். ஒரு நாள் மாலை போன் செய்தார். யாரும் எடுக்கவில்லை. தொடர்ந்து யாருமே போனை எடுக்காததால் ருஷ்டி தவிக்க ஆரம்பித்தார். உடன் இருந்த காவலர்கள் விஷயம் அறிந்து அந்த முகவரிக்கு ஒரு வாகனத்தை அனுப்புகிறார்கள். முன்னிரவில் தகவல் வருகிறது. அந்த வீட்டின் வாசல் கதவு திறந்து கிடக்கிறது. உள்ளே விளக்குகள் எரிகின்றன. காவலர்கள் உள்ளே என்ன நடந்திருக்குமோ என்ன அபாயம் இருக்குமோ என்று கூடுதல் காவலர்களை அனுப்புமாறு கேட்டு வெளியே காத்திருக்கிறார்கள். “பயப்படாதீர்கள். உங்கள் பையனை யாராவது கடத்தியிருந்தால் என் உயிரைப் பணயம் வைத்து மீட்டுவருகிறேன்”என்கிறார் உடனிருக்கும் பாதுகாப்பு அதிகாரி.
ருஷ்டி கண்ணீர் வடிக்கிறார். வீட்டுக்குள் மகனும் முன்னாள் மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்டு கிடப்பார்களோ என்று தோன்றுகிறது. பெரும் பதட்டத்துக்கும் குற்ற உணர்வுக்கும் ஆளாகிறார். தொடர்ந்து போன் செய்துகொண்டே இருக்கிறார். இப்படியே கொஞ்ச நேரம் கழிந்தபிறகு போனை யாரோ எடுக்கிறார்கள். ‘சாரிப்பா.. நாங்க ஸ்கூல் நாடகத்துக்குப் போய்விட்டோம். தாமதம் ஆகிவிட்டது” என்கிறான் மகன். காவல்துறை தவறான முகவரிக்குப் போய்விட்டார்கள் என்பது தெரியவருகிறது. மெல்ல ஆசுவாசம் அடைகிறார் ருஷ்டி.
1989 ஆகஸ்டில் லண்டன் ஹோட்டலில் ருஷ்டியைக் கொல்வதற்காக புத்தகத்தில் குண்டு வைத்து தயாரித்துக்கொண்டிருந்தான் ஒருவன். அதுதவறுதலாக வெடிக்க, அந்த ஹோட்டலில் இரண்டு தளங்கள் நாசமாகிவிடுகின்றன. அவரது ஜப்பானிய மொழிபெயர்ப்பாளர் கொல்லப்படுகிறார். நார்வே பதிப்பாளர் தாக்கப்படுகிறார்.
ருஷ்டி, பிரச்சனை பெரிதான உடனேயே காவல்துறையின் ஆலோசனையில் பேரில் ஒரு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறார். அவர் மன்னிப்புக் கேட்டால் பத்வா விலகும் என்று சொல்லப்பட்டது. ‘என் நூலால் உலகெங்கும் வாழும் இஸ்லாமியர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக மன்னிப்புக் கேட்கிறேன்” என்கிற ரீதியில் இருந்த மன்னிப்பு அது. ஆனால் பத்வா விலக்கப்படுவதில்லை. ‘சல்மான் ருஷ்டி மிகச்சிறந்த பக்திமானாக மாறினாலும்கூட மரணதண்டனையில் இருந்து விலக்கு கிடையாது’ என்று கூறிவிடுகிறார் கோமேனி. பிரிட்டனில் ருஷ்டிக்கு எதிராக இருந்த முஸ்லிம் அமைப்புகளும் இந்த மன்னிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை!
ஒன்பது ஆண்டுகள் கழித்து ஈரானுக்கு புதிய அதிபர் ஆன முகமது கடாமி ஓரளவுக்கு மென்போக்கு உடையவராக இருக்கிறார். தொடர்ச்சியான மேலை நாடுகளின் முயற்சிக்குப் பலன் கிடைக்கிறது. ருஷ்டிக்கு எதிரான பத்வா காலாவதி ஆகிவிட்டது என்று சூசகமாகச் சொன்னார். இதற்கு அர்த்தம் ருஷ்டியைக் கொலை செய்யும் முயற்சியில் ஈரான் அரசு அமைப்புகள் ஈடுபடாது. ஊக்குவிக்காது. விலகிக்கொள்ளும்!
அதிலிருந்து ருஷ்டி கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விட முடிந்தது. இருப்பினும் அது அதிகார பூர்வமாக மத அமைப்புகளால் சொல்லப்படவில்லை. கால் நூற்றாண்டாக ஈரானில் அவ்வப்போது ருஷ்டிக்கு எதிராக பத்வா இன்னும் முடிவுறவில்லை என்று சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கிறது. ஆனாலும் அவருக்கான ஆபத்து நீங்கி விட்டதாக பிரிட்டிஷ் அரசு கருதியதால் சில ஆண்டுகளுக்கு முன்பாக அவருக்கு இருந்த பாதுகாப்பு விலக்கப்பட்டது.
ஒரு விதத்தில் ருஷ்டி அதிர்ஷ்டசாலி. சாத்தானின் கவிதைகள் நூலைத் தொடர்ந்து ஈரான் என்கிற நாடே அவரது தலையைக் கேட்டபோதும் மேற்குலக நாடுகள் அவரைப் பாதுகாத்தன. அவரது பாதுகாப்புக்காக ஈரானிடம் தொடர்ந்து பேசின. சல்மான் ருஷ்டிக்காக உலகமே இருதரப்பாகப் பிளவுண்டது. மேற்குலகுக்கும் இஸ்லாமுக்குமான மோதலில் சல்மானும் ஒரு மையப்புள்ளி ஆனார். ஆகவே பிரிட்டன் அவரைப் பாதுகாத்தது. அவர் மட்டும் கீழை நாடொன்றில் வசித்திருந்தால் இந்த பாதுகாப்பு கிடைத்திருக்குமா?
ஏப்ரல், 2017.