மன்னித்து விடு பாலகுமாரா

முதல் புத்தகம்
மன்னித்து விடு பாலகுமாரா
Published on

என் முதல் தொகுதியான “வெள்ளம்” நூலுக்கு வந்த விமர்சனக் கடிதங்களில் ஒன்று, “எனக்குத் திருப்தியாய் இல்லை. Page set-up கம்பாஸிட்டர் வேலையில்லை. நம்  வேலை. ஒரு artist மூளை  இவ்வளவு அசிங்கமாயிருக்கக் கூடாது. எல்லாக்  கவிதைகளும் வரவேண்டுமென்ற ஆத்திரம் உனக்கு. சசிகலாவுக்கு சிம்மாசனம், வெங்காயம் என்றெல்லாம் போட்டிருக்கிறாய். Dirty fellow.”  

இவ்வளவு தூரம் உரிமையோடு அர்ச்சனை செய்தது, பாலகுமாரன். அவன் எனது நெருங்கிய இலக்கிய சகா. ‘கசடதபற’ இதழ் சார்ந்தவர்கள், கசடதபற இதழில் வந்த கவிதைகளைத் தேர்ந்தெடுத்து குட்டியான சைசில்- ஞானக்கூத்தன்,வார்த்தைகளில் சொன்னால், ஒரு ரூபாய் நோட்டை இரண்டாக மடித்தது போன்ற ‘சைஸ்’ - “புள்ளி” என்ற தலைப்பில் ஒரு கவிதைத் தொகுப்பு கொண்டு வந்தார்கள். முப்பது காசுகள் விலை. கசடதபற இதழின் விலையே 30 காசுகள்தான். வருடச் சந்தா மூன்று ரூபாய். ‘புள்ளி’ தொகுப்பைப் பார்த்ததும் வண்ணதாசன், இதே போல உன்னுடைய கவிதைகளைக் கொண்டு வந்தால் என்ன என்று கேட்டார். என் முதல் கவிதை 1970 டிசம்பர் கசடதபற  இதழில் வந்ததிலிருந்து நிறைய எழுதி வைத்திருந்தேன். வண்ண நிலவன், ‘ஆராய்ச்சி’ இதழ்கள் அச்சடிக்கும், பேராசிரியர் நா. வானமாமலை அவர்களின் அச்சகத்திற்கும் அவர் நடத்தும் கூட்டங்களுக்கும் செல்வார். அவர் கையெழுத்துப் பிரதியை பாளையங்கோட்டைக்கு எடுத்துப் போய் அங்கே அச்சடிக்க முயற்சிகள் எடுத்தார். அங்கே உள்ள நண்பர்கள் மிக ஆர்வமாக அதைக் கம்போஸ் செய்து நீளமான வால்போல “வாலம் ப்ரூஃப்” எல்லாம் கொடுத்தார்கள். கவிதைகளை மிகவும் ரசித்ததாக அங்குள்ள ஃபோர்மேன் சொன்னார். ஆனால் இது என்ன கண்ணறாவிக் கவிதைகள், நம்ம கொள்கைக்கு ஒத்து வருமா என்று தோழர் வெ.கிருஷ்ணமூர்த்தி தடுத்து விட்டார். வண்ண நிலவன் மிகவும் வருத்தப்பட்டார். போனால் போகுது இங்கே டவுணில் இல்லாத அச்சகமா என்று இங்கேயே அச்சடிக்கலாம் என்று முடிவெடுத்தோம்.

நானே திருநெல்வேலி டவுணில் உள்ள  விநாயகா பிரஸ் அச்சகத்தில் விசாரித்து அங்கேயே அச்சிட ஆரம்பித்தோம். முதலில் சாதாரண ஏ 4 சைஸ் அளவுத் தாளில், வரிசையாக வராத (கலைத்துப் போட்டது போல) எட்டு எட்டுப் பக்கங்களாக அச்சிட்டிருந்ததின், அச்சும் அமைப்பும் நன்றாகவே இருந்தது. அதை பக்க வாரியான  புத்தகமாக்க, எட்டாக மடித்து வெட்டிய போது “புள்ளி” கவிதைத் தொகுப்பின் நேர்த்திக்கு அருகில் கூட போக முடியவில்லை ‘ வெள்ளம்’. அதைப் பார்த்த பா. செயப்பிரகாசம்,“ஐம்பது ரூபாய்தானே அச்சுக் கூலி, போனால் போகிறது, - அப்போது வண்ண தாசனின் சம்பளமே 280 ரூபாய்க்குள்தான் இருக்கும்.- வேறு ஒன்றை நன்றாக அச்சிடலாம்.’ என்றார். என்னுடைய ஆர்வம் அதை அனுமதிக்கவில்லை. தவிரவும் அதில் பாதிப் பக்கங்களை நானே கம்போஸ் செய்திருந்தேன்.

குறிப்பாக

என் கற்பனையில்- நீ

கருத்தரித்துப் பெற்ற

பால் தந்து பழக்கியிராத

பிள்ளைகள் அழுகின்றன:

“தங்களுக்கு-உன்

ரத்தம் வேண்டுமென”-

-“சசிகலாவுக்கு”- என்கிற சமர்ப்பணப் பக்கம்.

 அதனாலும் அதைக் கலைக்கச் சம்மதமில்லை. அப்படியே வெளி வந்து விட்டது. பா.செயப்பிரகாசம், என் நோட்டுப் புத்தகத்திலுள்ள கவிதைகளைப் படித்து விட்டு  “ கலாப்ரியாவின் தொட்டிலில்லாத குழந்தைக்கு ஒரு தாலாட்டு” என்று எழுதியிருந்த கட்டுரையிலிருந்தே பகுதிகளை எடுத்து, முன்னுரை ஒன்றைச் செய்திருந்தேன். இதற்காக என் அம்மாவிடம் கேட்டு அவள் தனக்குத் தெரிந்த தாலாட்டுப் பாடல்களையெல்லாம் எழுதித் தந்தாள். அதில் சில வரிகளை நான் தேர்ந்தெடுத்து, செயப்பிரகாசத்தின் முன்னுரைக்குத் தலைப்புப் போல அந்தப் பாடலை வைத்தேன்.

”மாலையாய் தந்தாக்க

வாடிவிடும் என்று சொல்லி

மார் பதக்கம் தான் கழற்றி

இந்த மழலை வைரம் தந்ததாரோ

ஆராரோ ஆரிரோ”

ஆக அம்மாவுடைய எழுத்தே முதலில் இருந்தது என் முதல் தொகுப்பில்.

அந்த மோசமான அச்சமைப்புக்காகத்தான் பாலகுமாரன், அப்படி ஒரு கடிதம் எழுதியிருந்தான். அவன் சொன்னது எனக்கு அப்போது சிறிது சுருக்கென்று தைத்தாலும் அதன் நிதர்சனம் போகப் போகப் புரிந்தது. நானும் தொகுப்பின் விலை 30 காசுகள் என்றே வைத்திருந்தேன். ஒரு ரூபாய் மணி ஆர்டர் செய்தால் மூன்று புத்தகங்கள் தபாலில் அனுப்பிவைக்கப்படும் என்று கசடதபற வில் விளம்பரம் வந்தது. கூடவே ஞானக் கூத்தனின் விமர்சனமும் வந்தது. ஞானரதம், வானம்பாடி, சோதனை என பல இலக்கிய இதழ்களில் விமர்சனம் வந்தது. ஞானரதத்தில் நகுலன் எழுதியிருந்தார். கணையாழியின் கடைசிப் பக்கத்தில் சுஜாதா குறிப்பிட்டிருந்தார். தீபம் இதழில் நா. பார்த்தசாராதி (மணிவண்ணன்)கேள்வி.- பதில் பகுதியில் குறிப்பிட்டிருந்தார். நான் அதையெல்லாம் சற்றும் எதிர்பாத்திருக்கவில்லை. மேகத்தில் மிதந்தேன். அங்கிருந்தும் இவள், எந்த வீதியிலாவது  தென்படுகிறாளா என்று தேடிக் கொண்டுமிருந்தேன். என்னை விட புத்தகம் வந்ததில் அதிக மகிழ்ச்சி அடைந்தது, வண்ணதாசனும் வண்ணநிலவனும்தான். வண்ணதாசன் விரும்பியிருந்தால் அவரது தொகுப்பைக் கொண்டு வந்திருக்கலாம்.  அல்லது அவரது தொகுப்பையும் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் அந்த நல்லாசிரியன் தன் மாணவனை முன்னிறுத்துவதில் அதிக மகிழ்ச்சி கொண்டிருந்தார்.

கொஞ்ச நாட்களுக்கு தினமும் ஒரு ரூபாய் மணி ஆர்டர் ஒன்றாவது வந்து விடும். அதைப் பெற்றுக் கொள்ள அப்பா பெயருக்கு ஆதரைசேஷன் லெட்டர் போஸ்ட் ஆஃபீஸில் கொடுத்திருந்தேன். மணி ஆர்டர் கூப்பனில் முகவரி இருக்கிறதா என்று தவறாமல் பார்த்து வாங்கி பத்திரமாக வைத்திருப்பார்.இப்போது நினைக்கையில் இதுதான் நான் அவருக்குத் தந்த பெரு  மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இந்த இரண்டு குட்டிப் புத்தகங்கள் தந்த பாதிப்பில் பல குட்டிப் புத்தகங்கள் வந்தன. விக்ரமாதித்யன், அம்பை பாலன், சு.அரங்கனாதன், லயனல் எல்லாம் சேர்ந்து அம்பையிலிருந்து ’உதயம்’ என்று ஒன்று கொண்டு வந்தார்கள். ராஜபாளையத்திலிருந்து, கொ.ச.பலராமன், ‘ரசிகன்’ என்று ஒன்று கொண்டு வந்தார்.பாலா, தமிழ்நாடன் போன்ற வானம்பாடி நண்பர்கள் “நீ” என்ற தலைப்பில் ராசிபுரத்திலிருந்து ஒரு புத்தகமும், பாதசாரி ஒரு தொகுப்பும் கொண்டு வந்தார்.

சேலம் தமிழ்நாடன் ஆச்ஞத ஆணிணிடுண்ட்டிtட என்று வித்தியாசமான பெயரில் ஒரு பதிப்பகம் தொடங்கி தன்னுடைய மூன்று கவிதைத் தொகுதிகளைத் தயாரித்துக் கொண்டு வந்தார். அழகான 1/8 கிரௌன் சைஸில் வந்தது. அவர் ஒரு சகலகலா வல்லவர். அருமையான லினோ கட் எல்லாம் செய்து மூன்றையும்- மண்ணின் மாண்பு, வேள்வித் தீ, காமரூபம்- கொண்டு வந்தார். ஒவ்வொன்றும் ஒரு ரூபாய் விலை. காமரூபம் சமூகப் பகடியுடன் கொஞ்சம் எராட்டிக்கான விஷயமும் கொண்டிருந்தது, அதனால் அதற்காக அவர் கடுமையான விமர்சனத்தை எதிர் கொண்டார்.அதனாலேயே அதற்கப்புறம் தமிழில் அந்த மாதிரிப் புத்தகங்கள் வரவில்லை. அந்த மூன்று புத்தகங்களின் வடிவம்,  போல எனது இரண்டாவது தொகுப்பான ‘தீர்த்த யாத்திரை’யை நல்ல அச்சுடன் அழகாகக் கொண்டு வந்திருந்தார் வண்ணதாசன்.

முதல்த் தொகுப்பு அளவிற்கு இது வரவேற்பைப் பெறவில்லை. ஆனால் என்னைப் பொறுத்து என் கவிதை மொழி என்பது இதிலிருந்துதான் தொடங்கியது எனலாம்.முதல் தொகுப்பை தி.ஜானகிராமனுக்கு அனுப்பி வைத்திருந்தேன். அவர் புதுக்கவிதைக்கு எதிர்காலம் இல்லையென்று சொன்னதாகப் பாலகுமாரன் சொல்லிக் கொண்டிருப்பான். அதை நினைவில்க் கொண்டு ஒரு கவிதை,

புதுக்கவிதை

(தி.ஜானகிராமனுக்கு சமர்ப்பணம்)

கூட்டிலிருந்து

தவறி விழுந்த

குஞ்சுப்பறவை

தாயைப் போலவே

தானும் பறப்பதாய்

நினைத்தது-

தரையில் மோதிச் சாகும் வரை

என்று எழுதியிருந்தேன். அதனால் புத்தகத்தை அவருக்கும் அனுப்பி இருந்தேன். “ இல்லையே நான் புதுக்கவிதைக்கு எதிரி இல்லையே, பால குமாரன் ‘பால்யத்தினால்’ சொல்லியிருப்பார். பழசும் புதுசும் இல்லாத பல இரண்டுங் கெட்டான்கள், இவர்களைப் பார்த்து நான் அருவருப்படைவது உண்டு அவை கிவிதைகள். ஆனால் சத்தம் போடுபவர்கள் இவர்கள்தான்.

பெண் பிள்ளைகள் தனியாக இருந்தால் காதலிக்கவும் தொடங்குவார்கள். இவர்களுக்கும் புதுக் கிவிகளுக்கும் வேற்றுமை கிடையாது. அது கிடக்கிறது சனி. வெள்ளம் மீண்டும் மீண்டும் படிக்கத் தோன்றுகிறது. நல்ல ஆண்பிள்ளை, அல்லது பெண்பிள்ளைக் கவிதைகள்.” என்று தி.ஜா கடிதம் எழுதியிருந்தார். தேவதச்சன் கடுமையாக விமர்சித்து எழுதியிருந்தார். நா.காமராசன், “ கலாப்ரியாவின் சிறு சிறு கண்ணீர்த் துளிகள் வெள்ளமாகப் பிரவாகம் கொண்டிருக்கின்றன. காதல் தோல்வியின் ஏக்க அலைகள் ஒரு நளினமான கவி நெஞ்சின் சோகப் பாடல்கள் ஆகியிருக்கின்றன. என்னை அழ வைத்த தொகுப்பு அது. கலாப்ரியா எங்கள் தலைமுறையின் ‘கண்மணிக் கவிஞன்’. என்று உசுப்பேற்றியிருந்தார். (பின்னாளில் சிலர் “கண்மணிக் கழுதைகள்” என்று திட்டியும் இருக்கிறார்கள்.)எல்லாக் கடிதங்களும் எங்கோ பத்திரமாக இருக்கின்றன.

எல்லாவற்றையும் விட, முதல் தொகுப்பைப் படித்து விட்டு, வண்ணதாசனின் அண்ணனும் எங்களின் குருநாதருமாகிய கணபதியண்ணன் எழுதியிருந்த,

Poor girl! You have influenced Tamil Literature (T.L) without being aware of the same: unaware and unconsciously of your influence on T.L you are leading the life of an ordinary woman!!. அடீ பெண்ணே உனக்குச் சூட்டப்படும் கிரீடங்களை உன்னால் உணர முடியவில்லையே...” என்ற கடித வரிகளே, “எழுதியதெல்லாம் உன் புகழ் பாடும் எனக்கது போதும் வேறென்ன வேண்டும்”  என்று  இன்னும் என்னை நெக்குருக வைத்துக் கொண்டிருக்கிறது, மன்னித்து விடு பாலகுமாரா...!

ஜூன், 2016.

logo
Andhimazhai
www.andhimazhai.com