மன்னனுக்குப் பிறகு மகன் ஆளவேண்டும் என்று குறளில் இல்லை

Published on

தமிழ் மக்களின் மாபெரும் கருவூலமாக காலமும் ஞாலமும் கைதொழுது போற்றுகிற சிறப்பு திருக்குறளின் தனிச்சிறப்பாகும். திருக்குறளுக்கு எத்தனையோ பெயர்கள் உண்டு. இருந்தாலும் கூட திருவள்ளுவம் அல்லது வாழ்க்கை விளக்கம் என்றுதான் அறிஞர் மு.வ. தன்னுடைய நூலுக்குப் பெயரிட்டிருக்கிறார். இந்திய நாட்டின் நிதியமைச்சரான சர்.ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்கள் திருக்குறளுக்கு வாழ்க்கைத் துணை நூல் என்ற பெயரைத் தந்தார்.

திருக்குறளில் இல்லாத பொருள் இல்லை; எல்லாப் பொருளும் இதன்பால் உள என்பதன் நோக்கம் என்னவென்று சொன்னால் ஒரு குழந்தையாக, ஒரு இளைஞனாக, போர்வீரனாக, படைத்தலைவனாக, திருமணம் செய்துகொண்டு வாழ்கிற இல்லத்தாளனாக, அரசனாக, அமைச்சனாக, தூதுவனாக, ஒற்றனாக வாழ்க்கையில் வாழும்போது அவன் காணும் இன்பம் துன்பம், களிப்பு,காதல், வெற்றி ஆகிய உள்ள உனர்ச்சிகளெல்லாம் பின்னிக் கிடக்கிற நூல் திருக்குறள் என்று சொல்லலாம்.

இதற்கு மேல் வாழ்வில் என்ன இருக்கிறது?

மழலைப் பருவத்தில் பிறக்கிறான். மானுடனாக வாழ்கிறான். மனைவி மக்களுடன் வாழ்கிறான். மன்னனுக்கு சிறந்த குடிமகனாக இருக்கிறான் என்று நினைப்பது போல வாழ்வின் எல்லா நிலைகளுக்கும் பொருத்தமாக திருக்குறள் இருப்பது நமக்கெல்லாம் பெருமை தருவது ஆகும்.

நீங்களே நினைத்துப் பாருங்கள். அரசனுக்குப் பிறகு யார் அரசனாக வருவது என்று இன்றுவரை உலகத்தில் பெரிய ஐயப்பாடு நேரவில்லை. அரசனின் மகன் தான் அரசனாக வருவான். அந்த பழக்கத்தின் விளைவாகத் தான் இப்போது ஆட்சியில் இருப்பவர்களின் மக்கள் கூட அந்த பெரும் தகுதிக்குத் தன்னை ஆட்படுத்திக் கொள்கிறார்கள். எந்த இடத்திலாவாது திருக்குறளில் மன்னனுக்குப் பிறகு மகன் ஆளவேண்டும் என்ற குறிப்பு இருக்கிறதா பாருங்கள். இல்லை.

ஆக, மன்னனைப் பற்றிச் சொல்லத் தெரிகிறதே தவிர மன்னனுடைய மகன் வருவான், மன்னனுடைய தலைமுறைதான் ஆளும் என்கிற கருத்து திருவள்ளுவருக்கு இல்லை.

வேந்தன் என்று சொன்னாலே அவனொரு வேலேந்திய வேந்தன். வாளேந்திய வேந்தன் என்றுதான் கூறுவார்கள். வேல்தான் அந்தக் காலத்தில் வேந்தனுக்கு, படைக்கு சிறப்பாக இருந்தது. அவன் பிடித்திருந்த செங்கோல் போல புகழ் வடிவமாகத் திகழ்ந்தது. வேந்தன் என்றாலே ஒரு நாட்டை வென்று வருவதுதான். இது இயல்புதான் என்று சொல்லவருகிற திருவள்ளுவர், உறுபொருளும் உல்குபொருளும் ஒன்னார் பெறுபொருளும் வேந்தன் பொருள் என்கிறார். ஒன்னாருடைய திருபொருளும் பெறுபொருளும் என்கிறபோது பகைவரிடம் இருக்கும் பொருளை வேந்தன் வெற்றியால் பெறவேண்டும் என்ற கருத்து திருவள்ளுவருக்கு உண்டு. ஆனால் வேலன்று வென்றி தருவது மன்னவன் கோல் அதுவும் கோடாது எனின் என்று ஒரு குறட்பா இருக்கிறது. வேல் வெற்றி தராது என்ற முடிவு அது. ஆனால் திருக்குறளில் வரும் வேல் என்ற சொல்லுக்கே வெல்வது வேல் என்று பொருள். ஆனால் வேலன்று வென்றி தருவது  மன்னவன் கோல் அதுவும் கோடாது எனின் என்று சொன்னால், வேலால் வெற்றி பெறலாம் என்று கருதுவது சிறந்த கருத்து இல்லை என்று வள்ளுவர் வலியுறுத்துகிறார் என்பது வியப்பாக இருக்கிறது.

வாழ்க்கையில் இன்பம் துன்பம் என்று இருந்தாலும் கூட இன்பத்துள் இன்பம் பெற விரும்பாதவன் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன் என்றே ஒரு குறள் உள்ளது. இன்னாமை இன்பமெனக் கொடின் என்று ஒரு கருத்து இருக்கிறது. எனவே வாழ்க்கையைப் போராடி வென்று வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்று போற்றுகிற அளவுக்கு தலையாய வாழ்க்கையை வாழ்வதற்குரிய விளக்கமாக திருக்குறள் உள்ளது.

இதற்கு ஓர் அதிகாரம் முழுமையும் உதாரணமாகச் சுட்டிக்காட்டமுடியுமா என்றால் வினைத்திட்பம் என்ற அதிகாரம் வாழ்க்கையில் எல்லா நிலைக்கும் எப்போதைக்கும் பொருந்துவதாகும்.

ஜனவரி, 2015.

logo
Andhimazhai
www.andhimazhai.com