உங்கள் வாழ்வின் மிகப்பெரிய சொத்து உங்கள் துணைவர்தான். அதை பாதுகாப்பது அவசியமான ஒன்று.
இளைய தலைமுறையினரிடம் விட்டுக் கொடுப்பது குறைந்து, விவாகரத்துகள் அதிகரிக்கின்றன. பிரிவிற்கான காரணங்களும் பெரிதாக இல்லை.
நவீன தம்பதிகளின் பிரச்னைகள் பெற்றோர்களுக்கு பிடிபடுவதில்லை.
புதிய வீடு வாங்குவது எப்போது? வாஷிங் மிஷின் போடுவது யார் என்பது வரை கணவன் மனைவிடையே நீயா ? நானா ? யுத்தம் நகரங்களில் அதிகரித்து வருகிறது.
கணவன் மனைவி இருவரும் வேலைக்கு போகும் வீடுகளில் தினுசு தினுசாக இழுபறிகளும் சண்டைகளும் நிகழ்கின்றன. புதுப் புது பிரச்னைகளுக்கு தீர்வுகளும் புதிதாகவே தேவைப்படுகிறது. இந்திய நகரங்களில் வாழும் தம் பிள்ளைகளின் பிரச்னைகளை புரிந்து கொள்ள முடியாமல் பெற்றோர்கள் திணறுகிறார்கள். ‘எங்கள் காலத்தில் எல்லாம் இப்படி இல்லை ’ என்று அங்கலாய்க்கும் மாமியாரால் மருமகளின் சூழலை புரிந்து கொள்வது சிரமம்.
‘நான் இன்று வாஷிங்மிஷின் போட்டால் நாளை நீ போட வேண்டும். காலையில் நாயை நான் வாக்கிங் கூட்டி போனால் மாலையில் நீ கூட்டி போக வேண்டும்’ என்பதாக வேலையை சரிசமமாக பிரித்துக் கொள்ளும் போக்கு நகரத்து தம்பதியினரிடம் அதிகரித்து வருகிறது. இது சரியல்ல. ஒரு பத்திரிகை அலுவலகத்தில் உள்ள பலரும் தனித்தனியே ஒரு வேலை செய்து கூட்டாக ஒரு பத்திரிகை கொண்டு வருகிறார்கள். கதை எழுதுபவரை பிரிண்டிங் செய்யச் சொல்வதோ , பார்சல் கட்டுபவரை புகைப்படம் எடுக்கச் சொல்வதோ எவ்வளவு மடத்தனமோ அவ்வளவு மடத்தனம் வீட்டிலுள்ள எல்லா வேலைகளையும் சரிசமமாக பிரித்துக் கொள்வது.
‘ ஒரு குண்டூசி தொழிற்சாலையில் ஒயரை நீட்டுவது, நேராக்குவது, வெட்டுவது என்பதாக 18 விதமான வேலைகள் உள்ளது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலை செய்வார்கள். 10 பேர் தனித்தனியாக வேலைகள் செய்தால் ஒரு நாளில் 48,000 குண்டூசிகளைத் தயாரிக்க முடியும். மாற்றாக 10 பேரும் ஆரம்பம் முதல் கடைசி வரை எல்லா வேலைகளையும் ஒருவரே செய்தால் ஒரு நாளில் 10 லிருந்து 20 குண்டூசிதான் தயாரிக்க முடியும்’ என்று பொருளாதார அறிஞர் ஆடம் ஸ்மித் கூறுகிறார். கணவனோ மனைவியோ ஒருவருக்கு சரிவர செய்ய முடியாத வேலையைச் செய்யச் சொல்லி வற்புறுத்தாதீர்கள்.
ஆசையோடு கணவன் மனைவியை தொடும்போது ‘தலைவலிக்கிறது’ என்பதில் தொடங்கி பல நேரங்களில் போலியான பதில்களை தரும் வாடிக்கை மனைவிகளிடம் உண்டு. அதிருப்தி பொழுதுகளில் இது சகஜம். இது எதிர்மறையான விளைவுகளை குடும்பத்தில் ஏற்படுத்தும்.
தாம்பத்தியம் கொள்வதற்கு ஆணோ பெண்ணோ அதிக சிரமப்பட நேர்கையில் வேறு சிக்கல்கள் தலை நுழைக்கலாம்.
அமெரிக்காவில் நடந்த ஒரு ஆய்வு அதிகமான தாம்பத்திய உறவிற்கு மூன்று காரணங்களை முன் வைக்கிறது. 1. இளம் வயது 2. திருமணமாகி மூன்று வருடங்களுக்கு குறைவான காலம் 3. சந்தோஷமான திருமண வாழ்வு .
சந்தோஷமான தம்பதிகள் அதிகமாக தாம்பத்திய உறவில் ஈடுபடுகிறார்கள் அல்லது இதை உல்டாவாகவும் வைத்துக் கொள்ளலாம்.
பொருளாதாரத்தைப் போல திருமண வாழ்வில் சில விஷயங்களை வெளிப்படையாகப் பேசி விடுவது நல்லது.
பேச்சுவார்த்தைகள் சூடாகி, வார்த்தைகள் தடித்து வாக்குவாதங்கள் சண்டையாகி, ஒருவர் படுக்கையறையிலும் மற்றொருவர் ஹாலிலும் தூங்காமல் தகித்துக் கொண்டிருக்கும் இரவுகள் நகர குடும்பங்களில் சகஜமாகி வருகிறது. தம்பதியரில் சண்டை போடுபவர்களில் 34 சதவீதம் பேர் தங்கள் பக்கம் தவறு இருக்கிறது என்று தெரிந்தும் சண்டை போடுகிறார்கள். 53 சதவீதத்தினர் தங்கள் சொன்னதையே திரும்ப திரும்ப கூறுகிறார்களாம்.
34 சதவீதத்தினருக்கு தங்கள் சண்டை எதிலிருந்து எப்படி ஆரம்பித்தது என்று நினைவிருப்பதில்லை.
மேற்கூறியவை அதிகபொருட்செலவில் நடத்தப்பட்ட ஒரு கணவன்-மனைவி சர்வேயின் முடிவுகளில் சில.
குடும்ப வாழ்வில் எதையோ இழந்து விட்ட மனோநிலை வரும் போது கோபத்துடன் சண்டை போடும் மனோநிலைக்கு நாம் தயாராகி விடுவோம்.
சண்டையிடும் மனோநிலையில் நாம் இருக்கும் போது பங்கு வர்த்தகத்தில் இழப்புகளை கையாளும் முறையை பின்பற்றுவது நல்லது. கிரீன் லைட் கேபிடல் நிறுவனத் தலைவர் டேவிட் ஐன்ஹார்ன் ஆயிரக்கணக்கான கோடிகள் வர்த்தகம் செய்பவர். “இழந்து விடுவோமா என்ற பயம் வரும்போதெல்லாம் எல்லாவற்றையும் தள்ளி வைத்துவிட்டு தூங்கி விடுவது நல்லது. மறு நாள் காலை எழும்போது பிரச்னை தீர்ந்து விடாது ஆனால் புதிய தீர்வுகளை யோசிக்கவோ ஏற்றுக் கொள்ளவோ தயாராக இருக்கும் உங்கள் மனது” என்று கூறுகிறார்.
உங்கள துணைவர் சண்டைக்கு தயாராகும் போது தூங்கிவிடுங்கள். காலையில் பேசிக் கொள்ளலாம்.
இவை எல்லாவற்றையும் விட நமது முந்தைய தலைமுறையின் கணவன் மனைவி உறவின் உறுதியை படிக்கும் போது உங்களது பிரச்னைகள் அர்த்தமற்றதாக கூட ஆகலாம்.
இந்த இதழில் அடுத்துவரும் பக்கங்களைப் படித்தபின் உங்கள் தொடுகையில் வாஞ்சை கூடியிருக்கும்,புதிய முத்தத்தில் அன்பு பெருகியிருக்கும். இது உறுதி!
அக்டோபர், 2014.