மனசாட்சிக்கு நேர்ந்த அதீத சோதனை!

மனசாட்சிக்கு நேர்ந்த அதீத சோதனை!
Published on

கோடை தனது முழு உக்கிரத்தோடு கனன்றுக்கொண்டிருந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி ராஜஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தலின் ஓட்டுப்பதிவு நாள். பிஜேபி மத்தியிலும், காங்கிரஸ் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தன. ஜெய்ப்பூர் சரகத்தில் நான் ஐஜியாக பதவியில் இருந்தேன்.

முழு நாளும் வாக்குப்பதிவு பணி சார்ந்த நெருக்கடியில் பிடிபட்டிருந்தேன். தேர்தல் கண்காணிப்பாளராக வந்திருந்த நண்பர் ந. சத்தியமூர்த்தியும், தேசிய போலீஸ் அகாதமியில் இருந்து வந்திருந்த எனது ஐபிஎஸ் நண்பர் மதுசூதன் ரெட்டியும் இரவு உணவுக்காக வந்திருந்தார்கள். வாக்குப்பெட்டிகள் சேகரிப்பு கிடங்குவரை பிரச்னையின்றி போய்ச்சேர்ந்து எல்லாம் அடங்க நேரம் ஆனது. மிகத்தாமதமாகவே நாங்கள் இரவு உணவுக்காக உட்கார்ந்தோம். அந்த நேரம்பார்த்து என் மொபைலில் ஓர் அழைப்பு வந்தது. அடுத்த பக்கத்தில் பேசிய அல்வர் மாவட்ட எஸ்பியின் குரலின் தீவிரம் எனது தண்டுவடத்தை சொடுக்கியது. இத்தனை வருட பணியின் பழக்கம் குரலின் ஏற்ற இரக்கத்திலிருந்தே பிரச்னையின் பூதாகரத்தை கிரகித்துவிடும். எஸ்பியின் குரல் அவர் சொல்லவந்த விவரத்திற்கு முன்பே அதைக் காட்டிவிட்டது. இருப்பதிலேயே மிகமோசமான கூட்டுவன்புணர்வு சம்பவம் நடந்ததைப் பற்றி  சொன்னார் எஸ்பி. அக்குற்ற சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக ஊடகத்தில் பகிரப்பட்டு பற்றத்தொடங்கி இருந்தது. இரவு உணவுக்காக வந்திருந்த நண்பர்களை அவர்கள் போக்கில் விட்டுவிட்டு வரப்போகும் சூறாவளிக்காக நான் தயாரானேன்.

கொடூரமான அந்த கூட்டு வன்புணர்வுக்கு ஆளான இளம்பெண் பட்டியலின வகுப்பைச் சார்ந்தவர். அவருக்கு அதே சாதியைச் சேர்ந்த ஓர் ஆணுடன் சிறு வயதிலேயே குழந்தைக் கல்யாணம் நடந்திருந்தது. ராஜஸ்தானின் சிலபகுதிகளில் ஏழைக்குடும்பங்களிலும், சில சாதிகளிலும் இவ்வழக்கம் இப்போதும் இருக்கிறது. ஆனால் கணவனும் மனைவியும் பருவம் எய்தும் வரை பெற்றோருடன்தான்  வசித்துக் கொண்டிருப்பார்கள். “கோனா' எனப்படும் நிகழ்ச்சி நடந்தபின்னர்தான் அவர்கள் ஒன்றாக  வசிக்கத் தொடங்குவார்கள். இந்த தம்பதியருக்கு அப்படி “கோனா' இன்னும் நடந்திராததால் அவ்வப்போது ரகசியமாக பார்த்துக்கொள்வார்கள். அவ்வாறாக இருவரும் தங்கள் வீடுகளிலிருந்து அருகில் இருந்த ஒரு சுற்றுலாத் தலத்தை நோக்கி மோட்டார் சைக்கிளில் போய்க் கொண்டிருந்தபோது, குறிப்பிட்ட ஓர் இடைநிலை வகுப்பை சேர்ந்த ஐந்து பேரால் வழிமறிக்கப் பட்டார்கள்.

சம்பவம் நடந்த நாள் 26 ஏப்ரல் 2019. இந்த ஜோடியை அவர்கள் பிடித்துக்கொண்டு மேடுபள்ளமான மண்குன்றுகள் நிறைந்த பகுதிக்கு சென்றார்கள். பின்னர் அப்பெண் கணவன் கண்ணெதிரே அவர்கள் ஐவரால் வன்புணர்வு செய்யப்பட்டார். இடையிடையே அவர்கள் இருவரையுமே தடியால் அடிக்கவும் செய்தார்கள். பெண்ணின் உடல் பாகங்களை கடித்துவைத்தார்கள். இந்த கேவலமான குற்றத்தை  வீடியோவும் எடுத்தார்கள். இருந்த பணத்தையும் பறித்துக் கொண்டார்கள். எல்லாம் முடிந்தபிறகு, இதை யாருக்காவது சொன்னால் வீடியோவை அம்பலப்படுத்தி மேலும் மானபங்கப்படுத்தி விடுவதாக மிரட்டிவிட்டு போனார்கள். போவதற்குமுன் கணவனின் மொபைல் நம்பரை குறித்துக்கொண்டார்கள்.

இக்கொடூரத்தால் முழுதாக உடைந்துபோன தம்பதியர் இரண்டு நாட்கள் மௌனம் காத்தார்கள். குற்றவாளிகளில் ஒருவன் இரண்டு நாட்கள் கழித்து கணவனுக்கு போன் செய்து பணம் கேட்டு மிரட்டினான். கொடுக்க வில்லை எனில் வீடியோவைப் பகிரங்கப் படுத்துவேன் என்றான். கேட்ட சொற்ப பணத்தையும் கொடுக்க அவர்களுக்கு வழியில்லை. எனவே நெருக்கமான உறவினர்களிடம் நடந்ததைச் சொன்னார்கள். அவர்கள் அப்பெண்ணை உடன் அழைத்துக்கொண்டு, அந்தப்பகுதி எம் எல் ஏ உடன் சேர்ந்து நான்கு நாட்கள் கழித்து அல்வர் எஸ்பியை போய்ப்பார்த்தார்கள். எஸ்பி இன்ஸ்பெக்டரிடம் தொலைபேசியில் பேசியதோடு அவர்களது மனுவை சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டருக்கு அனுப்பிவைத்தார். இங்கிருந்துதான் பிரச்னை இன்னும் மோசமாகிறது. இன்ஸ்பெக்டர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யாமல், இரண்டு நாட்கள் நேரத்தைக் கடத்துகிறார். தாமதத்திற்கு வெவ்வேறு காரணங்கள்  சொல்லப்படுகின்றன. முதல் அறிக்கையை பதிவு செய்யும் முன்னே குற்றவாளிகளைப் பிடிக்க தான் முயற்சித்துக்கொண்டிருந்ததாக இன்ஸ்பெக்டர் சொன்னார். ஆனால் மற்றவர்கள் ஊழல் அல்லது குற்றவாளிகளின் சாதியைச் சேர்ந்த அரசியல்தலைவர்களின் இடையீடு காரணம் என்றார்கள். இரண்டுநாட்கள் கழித்து முதல் அறிக்கை பதிவு செய்யப்பட்டும் (குற்றம் நடந்து ஆறு நாட்கள் கழித்து) குற்றவாளிகளைக் கைதுசெய்ய முடியவில்லை. நாட்கள் செல்லச் செல்ல எல்லாம் கடினமாவது எதிர்பாராத பிரச்னையல்ல. பின்னர் கொடூர சம்பவத்தின் வீடியோவும் அது சார்ந்த எதிர்வினைகளுமென மே ஆறாம் தேதி சமூக வலைத்தளம் இப்பிரச்னையால் தீப்பற்றிக் கொந்தளித்து எரியத் தொடங்கியது.

அடுத்த நாள் காலை (7/5/2019), பரபரப்பான செய்திகளுக்கு பெயர்போன ஓர் இந்தி தினசரி, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில் ஏற்பட்ட தாமதத்தையும் குற்றவாளிகள் அதுவரை கைது செய்யப்படாததையும் இணைத்து போலீஸைப்பற்றி எதிர்மறையாக எழுதியதோடு மட்டுமல்லாமல், நாடாளுமன்ற தேர்தல்போது மாநில அரசுக்கு கெட்டபெயர் வரக்கூடாது என்பதனால்தான் தாமதம் செய்யப்பட்டது என முதல்  பக்கத்துச் செய்தியாக்கியது. இச்செய்தியை எதிர்க்கட்சிகள் இரு கைகளாலும் அள்ளிக்கொண்டன. அதனால் தேசிய அளவில் இது பேசுபொருளானது. குற்றம் நடந்த உடனேயே மாநில அரசு, அல்வர் பகுதி எஸ்பியை மாற்றம் செய்தும் சம்பந்தப்பட்ட டிஎஸ்பியையும் இன்ஸ்பெக்டரையும் இடைநீக்கம் செய்தும் நடவடிக்கை எடுத்திருந்தது. தொடர்புள்ள காவல்நிலையத்தின் மொத்த காவலர்களும் மாற்றம் செய்யப்பட்டிருந்தனர். அந்த வகையில் சூழலை சமாளிக்கும் பொறுப்பு என்மீது விழுந்தது. இந்த பின்னணியில் சட்டம்ஒழுங்கைப் பேணவும், உடனேயே குற்றவாளிகளை சிறை பிடிக்கவும் ஜெய்ப்பூரில் இருந்து அல்வருக்கு அவசர அவசரமாகப் போய்ச்சேர்ந்தேன்.

குற்றவாளிகள் அனைவரும் குறிப்பிட்ட ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். இவர்கள் சாதி, பாதிக்கப்பட்டவர்களைவிட சமூக நிலையில் மேல்தட்டில் இருப்பது. அதனால் அந்தப்பகுதியில் சாதிநிலை உறவின் நிலைமையைப் புரிந்துகொள்ளலாம். இத்துடன் சம்பவம் நடந்த உடனேயே நேர்ந்த தாமதத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் மனதிலும் அவர்களது சமூகத்திலும் மிகுந்த அவநம்பிக்கை உண்டானது. குற்றம் நடந்த ஆரம்ப நாட்களில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் போலீஸிடம் பேசுவதற்கே தயாராக இல்லை. போதாது என சில சமூக அமைப்புகள் அவநம்பிக்கையை அதிகரிக்கவே செய்தன. குடும்பத்துடன் உரையாடலையும், புலன் விசாரனைக்கு தோதான சூழலையும் உண்டாக்குவதிலேயே எங்கள் துறைக்கு பெரும்பாடாய் போனது. சம்பந்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சில அதிகாரிகளை முன்னிறுத்தி, கொஞ்சம் கொஞ்சமாக நிலைமையை மேம்பட செய்தோம். சிலநாட்களின் உழைப்புக்குப் பின்னரே பாதிக்கப்பட்டவர்களிடமும், அவர்களது குடும்பத்தாருடனும் சுமுகமாக பேசி, பின்னர் புலன் விசாரணையை தீவிரமாக தொடங்கினோம்.

தினம்தினம் மருத்துவர்களுக்கு நோயாளிகளைப் பார்த்தும், பிரேதப் பரிசோதனையை செய்தும் நோயும் பிரேதமும் தினசரி அலுவல்களாகிவிடும். அதேபோலத்தான் குற்றத்தையும் குற்றவாளிகளையும் பார்த்துப் பார்த்து போலீஸ்காரர்களுக்கும் எல்லா குற்றங்களும் இன்னுமொரு தினசரி சம்பவமாகிவிடும் சூழல் உள்ளது. ஆனால் இந்த குற்றம் அப்படிப்பட்டதல்ல. அதன் கொடூரம், வீடியோ வழியாக அது வெளிவந்த அவலம், போலீஸார் ஆராம்பத்தில் செய்ய குளறுபடிகள் எல்லாம்

சேர்ந்து என்னையும், அந்நாளைய மாநில டிஜிபி கபில் கர்க் மற்றும் நிறைய பேரை தூங்கவிடாமல் செய்தது. குற்ற உணர்ச்சி, வேலை அழுத்தம், டென்ஷன் எல்லாம் கலந்த உணர்ச்சிக்குவியல். போதாதென்று மேலதிக டென்ஷனான அந்த சில நாட்களில் எஸ்பிபதவியில் யாரும் இல்லாத மாவட்டமாக ஆன அல்வர். மோசமான கட்டத்தில் சட்டம்ஒழுங்கு, கமிஷன்களையும் மீடியாவையும் எதிர்கொள்ளல், குற்றவாளிகளை சட்டத்தின் பிடியில் கொண்டுவருவது என எல்லாவற்றுக்குமான பொறுப்பு என் தோள்மீது வந்தமர்ந்தது. எதிர்க்கட்சிகள் தலித் அமைப்புகள், சிவில் அமைப்புகள், மீடியாவின் காட்டமான முகம் என சட்ட ஒழுங்கை சமாளிப்பதில் மணிகணக்கிலும், பொழுதுகணக்கிலும் நேரத்தை எண்ணினோம். என்ன ஆனதென்று எந்நேரமும் டிஜிபியோ சிஎம் அலுவலகமோ போன் செய்துகொண்டிருந்தார்கள். கடையடைப்பு, சாலைமறியல், ஊர்வலம், கருப்புகொடி காட்டுதல் என எல்லாவித போராட்டங் களும் அரங்கேறின. இந்த உச்சகட்ட டென்ஷனில், தேசிய எஸ்சி கமிஷனின் உதவித்தலைவர் எல்.முருகன் (தற்போதைய மத்திய அமைச்சர்) குற்றம் நடந்த ஊருக்கே வந்தார். ராஜஸ்தானில் அலுவலக வேலையின்போது உதவியாக தமிழ் மொழி வந்த அபூர்வ தருணம் அது.

ஐந்து குற்றவாளிகளையும் பிடிக்க வெவ்வேறு தனிப்படைகளை அமைத்தோம். அப்பகுதி புகழ்பெற்ற சரிஸ்கா புலிக்காப்பகத்தை அடுத்த அராவல்லி மலைபகுதியும் காடுகளுமான பகுதி. வாகனமும், மொபைலும், அறிவியலும் புலனாய்வுக்கு பெரிதாக உதவிசெய்யமுடியாத குறிஞ்சியும் முல்லையுமான நிலக்காட்சி. குற்றத்தின் பயங்கரம் கிளப்பிய சூறாவளியினால் குற்றவாளிகள் நாட்டின், மாநிலத்தின் வெவ்வேறு மூலைக்கு ஓடிப்போயிருந்தார்கள். முதல் குற்றவாளியைப் பற்றி மட்டும்

மேற்சொன்ன குறிஞ்சிப்பகுதியில் மறைந்து இருப்பதாக இரவு நேரத்தில் தகவல் வந்தது. போலீஸ் போய்சேரும் முன்னே வேறொரு இடத்திற்கு நகர்ந்திருந்தான். காடு, மலையென அவனைப் பின்தொடர்ந்த போலீஸ் முழுஇரவும் டார்ச்சின் வெளிச் சத்திலும், இருளின் ரகசியத்திலும் மாறிமாறி அதிகாலை நேரம் மலை உச்சியில் வைத்து அவனை பிடித்தது. அந்த நல்ல செய்தியை எங்களுக்குச் சொல்ல, நிறைய தூரம் நடந்தபின்னே போலீஸுக்கு மொபைல் அலைவரிசை கிட்டியது. ஒரு குற்றவாளியைப் பிடித்ததே சாதனை என்பதுபோல நாங்கள் கொஞ்ச நேரம் சந்தோஷப்பட்டுக்கொண்டோம்.

இன்னொருவனைப் பிடிக்க குஜராத்தின் ஒரு தொழில்பேட்டை நகரம் வரை தனிப்படை ஓடவேண்டி இருந்தது. மூன்றாவது குற்றவாளியை கிருஷ்ணரின் மதுரா நகரத்தில் இருந்து வேறு எங்கோ தப்பி ஓடுவதற்குள் பிடித்தோம். நான்காவது குற்றவாளி ஓடிஒளிந்து பார்த்து, ஒரு கட்டத்தில் பணமோ சமூகத்தின் உதவியோ இன்றி தவித்து, போலீஸிடமே தானே வந்து சரண் அடைந்தான். கடைசிக் குற்றவாளி எங்கோ தொலைதூரத்துக்குத் தப்பித்துச் செல்ல ஒரு லாரியில் பதுங்கி உட்கார்ந்திருந்தான். அது கிளம்புவதற்குமுன் கடைசி நிமிடங்களில் முயற்சியின் மற்றும் அதிர்ஷ்டத்தின் பலனாக பிடிபட்டான்.

யூடியூபில் அக்கொடூர வீடியோவை பகிர்ந்த ஒரு குற்றவாளியை ஐடி சட்டத்தின்படி கைது செய்தோம். எல்லா குற்றவாளிகளும் பிடிபட்டாலும் ஆர்ப்பாட்டம் நின்றபாடில்லை. மாநில அரசு வலுவான செய்தி சொல்லும் நோக்கத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசாங்க வேலை கொடுத்தது, அப்பெண் போலீஸ் கான்ஸ்டபிளாக வேலைக்கு சேர்க்கப்பட்டார். இப்படி நடந்தது மிகமிக அபூர்வமான செயலாகவே இருக்கவேண்டும்.

அதன்பின், சில சம்பவங்களுக்குப் பின், மெல்ல சட்டம்ஒழுங்குப் பார்வையில் எல்லாம் சுமுகமாக மாறின. அதன்பின்னரே, நாங்கள் முழுதாக புலன்விசாரணையில் முழு கவனத்தைச் செலுத்தினோம். இடையில், சோசியல் மீடியாவில் பகிரப்பட்ட வீடியோவையும், போட்டோவையும் தளத்திலிருந்து அகற்ற மீண்டும் மீண்டும் அந்நிறுவங்களுக்குப் பேசியும் எழுதியும் போராட வேண்டியிருந்தது.

குற்றவாளிகளை கைது செய்தது வழக்கின் ஆரம்ப கட்டம் மட்டுமே. அவர்களுக்கு எதிராக கறாரான சாட்சியங்களோடு கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்து அதிகபட்ச தண்டனை வாங்கி கொடுத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்தோம். தவறுக்கும் அலட்சியத்திற்கும் இடமே இல்லை. பாதிக்கப்பட்ட மனைவியும் கணவனும் குற்றவாளிகளை புலன் விசாரணையின்போதே மாஜிஸ்ட்ரேட் முன்னர் அடையாளம் கண்டார்கள். கற்பழிப்புக்கான ராசாயன சாட்சியங்கள் பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்தும், குற்றவாளிகளிடம் இருந்தும் சேகரிக்கப்பட்டு, அவை குற்றவாளிகளுக்கு எதிராக சாட்சியங்களாக மாறின. குற்றத்தின்போது குற்றவாளிகள் துண்டு போன்ற ஒரு துணியை உப்யோகித்தது தெரியவர,  சிரமப்பட்டு அதை ஒரு குற்றவாளியின் தகவல்மூலமாக மீட்டு ஜப்தி செய்தோம். அதை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தினோம். குற்றத்தையும் குற்றவாளிகளையும் தொடர்புபடுத்த அது முக்கியமான சாட்சியமாக மாறியது. குற்றவாளிகளின் குரல்கள் மொபைலில் சேகரிக்கப்பட்ட ஆடியோ கற்றைகளுடன் ஒப்பீடு செய்யப்பட்டன. சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோவும் போட்டோவும் குற்றவாளிகளின் மொபைல்களில் இருந்து மீட்கப்பட்டதோடு அவர்களோடு ஒத்துப்போனதை தடயவியல் ஆய்வகத்தின் ரிப்போர்ட் உறுதிசெய்தது. எனது முந்தைய சிபிஐ பணி அனுபவமும், தனிப்படையினர் தொடர்ந்து வக்கீலுடன் கலந்தாலோசனை செய்ததாலும் நல்ல தீர்ப்பு வாங்கி கொடுக்கும் வலுவான புலன்விசாரணையை முடிக்கமுடிந்தது. இவை எல்லாம் 16 நாட்களுக்குள் திட்டமிட்டு முடித்தோம்.

பொதுவாக எந்தவகை குற்றமாக இருந்தாலும், புலன் விசாரணை முடிந்தபின் கோர்ட்டில் நடக்கும் வழக்கு விசாரணை போலீஸ் கையில் முழுமையாகக் கிடையாது. அரசுத்தரப்பு வக்கீல்கள் வேறு துறையால் கட்டுப்படுத்தப்படுபவர்கள். இப்படி இருக்கும்பட்சத்தில், இந்த கொடூர வழக்கிற்காக தரமான வக்கீலை நியமிக்க முயற்சியெடுத்து மாநில அரசிடம் இருந்து தனி ஆணையைப் பெற்றோம். இந்த வழக்கில் தீர்ப்பு தனது பணிக்காலத்திலேயே வரவேண்டும் என தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருந்த எங்கள் டிஜிபி விரும்பினார். குற்றம் நடந்தபோது குற்றவாளிக்காக யாரும் வாதாடமாட்டோம் என அல்வர் மாவட்ட வழக்குரைஞர்கள் கூறியிருந்தனர். ஆனால் கொஞ்ச காலம் கழித்து குற்றவாளிகளின் வகுப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் தயாரானார். அதுவரை எல்லா குற்றவாளிகளும் 18 வயதை தாண்டியவர்கள் என புரிந்துகொண்டுதான்  விசாரணை செய்துவந்தோம். வேறுவகை தரப்பு எதுவும் எங்கள் முன்னர் வரவில்லை. வழக்கு  விசாரணை தொடங்கிய உடனேயே, ஐந்து பேரில் ஒரு குற்றவாளி தான் ஒரு பாலகன் என சான்றிதழ்களை இணைத்து வழக்கு தொடர்ந்தார். அரசுத்தரப்பு, எதிர்த்தரப்பு என இழுத்து, ஒருவழியாக  அக்குற்றவாளி பாலகன் என கோர்ட் தீர்மானித்தது. நான்கு வன்புணர்வுக் குற்றவாளிகள், வீடியோவை பகிரங்கப்படுத்தியவர் ஒருவர் என இவர்கள் மீது மாவட்டநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கியது. சிறார் நீதிமன்றத்தில் ஒருவனுக்கு எதிராக தனிவழக்கு ஆரம்பமானது.

பொதுவாக வழக்குவிசாரணையின் போது அரசுத்தரப்பு சாட்சிகள் நேர்கோட்டில்தான் செல்லும். ஆனால் இங்கே அரசுத் தரப்பின் மிகமுக்கியமான சாட்சிகள் பாதிக்கப்பட்ட இருவரும் வயது குறைந்தவர்கள். அத்துடன் சமூகத்தின் கீழ்த்தட்டில் இருந்து வருபவர்கள். கோர்ட்டின் கடுமையான குறுக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். குற்றவாளிகளை எல்லோர் முன்னும் அடையாளம் காட்டவேண்டும். எதிர்த்தரப்பு வக்கீலின் கேள்விக்கணைகளுக்கு ஈடுகொடுப்பதோடு மட்டுமல்லாமல், தங்கள் வாக்குமூலத்தில் இருந்து பிறழாமல் இருக்கவேண்டும். ஆனால் நாங்கள் எதிர்பார்த்தைவிட, பாதிக்கப்பட்ட இளம்பெண் பலநாட்கள் நடந்த குறுக்குவிசாரணை சோதனையை எதிர்கொண்டு சிறப்பாக சாட்சி அளித்து எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினார். அப்பெண்ணின் மனவைராக்கியமும், அடிமனதில் கனன்றுகொண்டிருந்த அனலும்தான் அவ்வாறு செய்ய வைத்திருக்கவேண்டும். அவரை ஒப்பிடும்போது அவரது கணவனும் மற்ற சாட்சியங்களும் சுமாராகத்தான் சாட்சி சொன்னார்கள். முக்கிய போலீஸ் சாட்சிகள் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்ததால், அப்பிரச்சனையையும் மீறி அவர்களிடம் இருந்து வழக்குக்கு தோதாக சாட்சியம் பெற்றாக வேண்டிய கட்டாயம். அதேபோல வழக்கு விசாரணையும், துறை விசாரணையும் ஒரே நேரத்தில் போய்க்கொண்டிருந்தது. இரண்டுக்கும் ஏதாவது வித்தியாசம் வந்தால் அது பாதகத்தில் முடியும். என்ன ஆகுமோ என்ற பரபரப்பான சமயத்தில் எப்படியோ சமாளித்துவைத்தோம். அவர்கள் பெரிதாக வழக்குக்கு எதிராக பாதகத்தை ஏற்படுத்தவில்லை. போலீஸ் செய்யும் தவறுக்காகவோ, நடக்ககூடிய அசம்பாவிதத்துக்காகவோ காத்திருப்பதுபோல ஒவ்வொரு செயலையும் உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தனர் ஊடகத்தினர். எவ்வளவுதான் கவனமாக புலன் விசாரணையை செய்திருந்தாலும், சில விடுபடல்கள் இருந்தது பின்னர் தெரியவந்தது. கோர்ட்டின் முன் தாக்கீது செய்து நீதிபதியின் அனுமதியின்பிறகு விடுபடல்களை இட்டு நிரப்பினோம்.

ஓரிரு மாதங்களில் தண்டனையை வாங்கிக் கொடுத்துவிடலாம் என நாங்கள் திட்டமிட்டாலும், யதார்த்த உலகில் ஒன்றரை வருடங்கள் கழித்துத்தான் தண்டனையை வாங்கித்தர முடிந்தது. இந்த வழக்குக்காகவே தனிப்பட்ட திறமையான வக்கீலும், அவருக்கு உதவியாக ஒரு போலீஸ்படை முழு நேரமும் உழைத்தாலும், தீர்ப்பு வர இவ்வளவு நாட்கள் ஆகிவிடுகிறது என்பதுதான் நிதர்சனம். 33 சாட்சிகள், 56 சான்றிதழ்களின் வழியாக குற்றவாளிகளுக்கு எதிராக வழக்கு நிரூபணம் ஆகி அதிகபட்ச தண்டனையை நீதிபதி வழங்கி தீர்ப்பளித்தார்.

அந்த பரிதாபத்துக்குரிய தம்பதியினரும், அவர்களது குடும்பங்களும் அடைந்த கொடுமைக்கும் எத்தனையோ போலீஸார் பட்ட டென்ஷன் / அவஸ்தைக்கும் கடும் உழைப்புக்கும் பிராயச்சித்தமாக, 100 சதவீத வெற்றி கிடைத்தது. எல்லா குற்றவாளிகளும் தண்டிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு அதிகபட்ச  தண்டனையும் கிடைத்தது. இரட்டை ஆயுள்தண்டனை வன்புணர்வுக் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டது. வீடியோவை பகிர்ந்தவனுக்கு ஐந்து ஆண்டுகள்  சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பு வந்த சமயத்திலும் நான் அதே பதவியில் இருந்தேன். குற்ற சம்பவத்தையும் அதற்காக தண்டனையையும் ஒரே பதவியில் இருக்கும்போதே பார்த்ததுகூட அபூர்வமான அனுபவம்தான். குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்த உடன் உழைப்புக்கான பலன் கிட்டியதே என ஒரு திருப்தி கிடைத்தது. இவ்வழக்கை என்னால் வாழ்நாள் முழுதும் மறக்கவே முடியாது.

(செங்கதிர் ஐபிஎஸ், காவல்துறை துணைத் தலைவர், ராஜஸ்தான்)

மே, 2023

logo
Andhimazhai
www.andhimazhai.com