கோடம்பாக்க ஆசாமிகள் மதுரக் காரப் பயலுகளைப் பற்றி எடுக்கிற படங்களில், அக்கா, அண்ணி, சித்தி, அத்தை என்று ஏதாவது ஒரு கேரக்டரில் நிச்சயம் இருப்பார் இந்த ‘பருத்தி வீரன்‘ சுஜாதா. முதலில் நடிப்பைத் துவங்கியது கமலின் ‘விருமாண்டி‘யில் என்றாலும் என்ன காரணத்தாலோ ‘பருத்திவீரன்‘சுஜாதாவாகவே டைட்டில் கார்டுகளில் வலம் வருகிறார்.
‘மதுரைக்குப் பக்கத்துல இருக்குற திருமங்கலம் தான் என்னோட சொந்த ஊர். அந்தப் படத்துல நடிக்கிறதுக்கு முன்னாடி சில நாடகங்கள்ல நடிச்ச அனுபவம் இருந்தாலும், ஆக்சுவலா எனக்கு சினிமாவுல நடிக்கணுங்குற ஆசையோ எண்ணமோ கிடையாது. கமல் சாரோட நண்பர் ஒருத்தர் என் கணவர் கிட்ட பேசி படத்தோட நாயகி அபிராமிக்கு மதுரை வட்டார வழக்குல பேசச்சொல்லிக்குடுக்குறதுக்குத்தான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போக ஆரம்பிச்சேன். அப்பிடி அபிராமிக்கு வசன உச்சரிப்பை சொல்லிக்குடுக்குறதை பக்கத்துல இருந்து கவனிச்ச கமல்தான் பசுபதியோட மனைவி ரோல்ல நீங்க நடிங்கன்னு சொன்னார். முதல்ல ரொம்ப தயங்கி அவர் வற்புறுத்தவே சம்மதிச்சி நடிச்சேன்.
உண்மையில என் வீட்டுக்காரர் பாலகிருஷ்ணனுக்குத்தான் நடிகராகணும் ரொம்ப ஆசை. ஆனா சிக்குனது நான்.
விருமாண்டிக்கு அப்புறம் நிறைய வாய்ப்புகள் வந்தாலும் அப்ப நான் கர்ப்பமா இருந்ததால அடுத்த 3 வருஷத்துக்கு எந்தப் படத்திலயும் நடிக்கலை. அந்த ஒரு படமே போதும்னு இருந்தப்பதான் அமீர் சாரோட ‘பருத்தி வீரன்'ல நடிச்சே ஆகணும்னு இழுத்து விட்டுட்டாங்க. இதோ நடிக்க வந்து பதினைஞ்சு வருஷத்துக்கும் மேல ஓடிப்போச்சு. இப்போது நினைத்துப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது. காலம் ஓடுகிறது. ‘விருமாண்டி' படம் வந்தப்போ பிறந்த என்னோட இளைய மகள் சுபிக்ஷா இப்போ கல்லூரி மாணவி. இன்னும் ஒரு நாலு படம் முடிச்சா நூறாவது பட எண்ணிக்கையும் வந்துரும்,' என்றவரிடம் ‘இவ்வளவு பிசியா இருக்கீங்க... சென்னைக்கு ஷிஃப்ட் ஆகாம ஏன் இன்னும் மதுரையிலேயே இருக்கீக?' எனக் கேட்டோம்
‘நீங்க ஒரு மதுரைக்காரரா இருந்தா இப்பிடி ஒரு கேள்வியையே கேட்டிருக்க மாட்டீங்க. மதுரையிலேயே ஏன் இருக்கேன்னு நான் சொல்றதைப் புரிஞ்சிக்கணும்னா அதுக்கு கொஞ்ச காலமாவது நீங்க மதுரையில வந்து இருக்கணும்.
இன்னொரு பக்கம் பெரும்பாலும் எனக்கு வர்ற வாய்ப்புகள் மதுரை சம்பந்தப்பட்ட சப்ஜெக்ட் படங்கள்தான். நான் நடிச்ச படங்களுக்கு டப்பிங் பேசத்தான் அடிக்கடி சென்னைக்குப் போயிருக்கேனே ஒழிய என் பட ஷூட்டிங் நடக்குறது எல்லாமே மதுரைப்பக்கம்தான்.
அப்புறம் சென்னைக்கு ஷிஃப்ட் ஆகாததுக்கு இன்னொரு முக்கிய காரணம் எனக்கு சினிமாவை விட குடும்பம் முக்கியம். இதுவரைக்கும் ஒரு பட வாய்ப்பைக்கூட நான் தேடிப்போனதே இல்லை. நம்மள தேடி வர்ற படங்கள்ல நடிச்சாப்போதும்னு எப்பவும் நினைப்பேன், என் இத்தனை வருட சினிமா அனுபவத்துல ஒரு தவறான அணுகுதல்களைக் கூட நான் சந்திச்சதில்ல. காரணம் என்னோட டைரக்டர்களை, கூட நடிக்கிற நடிகர்களை முதல் சந்திப்புல துவங்கி கடைசிவரைக்கும் அண்ணன், தம்பிங்குற உறவுமுறையோடதான் பழகுவேன்,' என்றவரிடம் ‘சமீபத்துல நடந்த ஒரு விழாவுல உங்களுக்கு ‘மினி ஆச்சி'ன்னு ஒரு பட்டம் குடுத்திருக்காங்க...?' என்ற நம் கேள்விக்கு மிகவும் சந்தோஷப்படுகிறார். இருந்தாலும் அடக்கமாக பதில் தருகிறார்.
‘ஆயிரம் படங்களுக்கு மேல நடிச்சி அசுர சாதனைகள் புரிந்த மனோரமா ஆச்சி எங்க... நான் எங்க? ஒரு நடிகையா அவங்க கால் தூசுக்குக் கூட பெறமாட்டேன் நான்ங்குறதுதான் நெஜம். ஆனாலும் பெருமையாத்தான் இருக்கு. ' என முடித்தார் சுஜாதா.
செப்டம்பர், 2022