ம.செ பேசுகிறார்!

ம.செ பேசுகிறார்!
Published on

மணியம் செல்வன்

பல தொடர்கதைகளுக்கு மறக்கமுடியாத ஓவியங்களை படைத்த ஓவியர் மணியம் செல்வன் சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார்:

மிகவும் ரசித்து வரைந்த தொடர்கதை:

1979: சர்வதேச குழந்தைகள் ஆண்டாக அறிவிக்கப்பட்ட ஆண்டில் ஆனந்தவிகடனுக்காக ஒரு சிறுவர் கதையை சுஜாதா எழுத ஆரம்பிக்கிறார். அப்போது என்னை அதற்கு படம் வரைய சொல்ல, அதில் ஒரு புதுமையை நிகழ்த்த விரும்பினேன்.   அந்த கதையின் தலைப்பை ஒரு குழந்தையை போலவே எழுத முயன்றேன்.  இருந்தாலும் நேர்த்தியாகவே எதையும் செய்ய பழக்கப்பட்ட கைகளுக்கு குழந்தையை போல கிறுக்கல், கிறுக்கலாக எழுத வரவில்லை. இடது கையில் எழுத முயல, அதுவும் சரிப்பட்டு வரவில்லை.

சட்டென்று “சுப்பு, இங்கே வா” என்று என்னுடைய 5 வயது மகனை அழைத்து எழுத வைத்ததுதான் அந்த கதையின் தலைப்பாக விகடனில் வெளிவந்தது. அதன் பின்னர் விகடனின் ஆசிரியர் குழுவிடம் கலந்தாலோ சித்து ஒவ்வொரு வாரமும் கதையின் தலைப்பை ஒரு பள்ளி மாணவனைக்கொண்டே வரைய வைப்பது என்று முடிவெடுக்கப்பட்டு, அதையே ஒரு போட்டியாகவும் அறிவிக்கிறார்கள்.

இந்த பூக்குட்டி தொடருக்காக முழுக்க முழுக்க வாட்டர்கலரில் தான் ஓவியங்களை வரைந்தேன்.  குழந்தைகளை கவரவேண்டும் என்பதற்காகவே பெரும்பாலும் லைட் கலர் (பிங்க் கலர்), ஸ்ப்ரே செய்து வரைந்தேன்

வரைந்த தொடர்கதைகளிலேயே சவால்:

1980: குமுதத்தில் இரத்தம் ஒரே நிறம் என்ற சுஜாதாவின் சரித்திர கதைக்காக ம.செ. ஓவியம் வரைந்தபோது அதில் சர்ச்சில் நடக்கும் எமிலியின் திருமண காட்சி வரும். அதற்காக கோட்டையில் இருக்கும் சர்ச்சுக்கு நேரில் சென்று அதன் அமைப்பையும், மேடை, வளாக அளவுகளையும் கூர்ந்து கவனித்தேன்.

பின்னர் சுஜாதா பெங்களூரில் இருந்து ஒரு ஆங்கில புத்தகத்தில் இருந்து கிழித்து அனுப்பிய பக்கங்கள்,  திருச்சியில் இருக்கும் ஒரு பாதிரியாரிடம் பேசித் தெரிவித்த தகவல்களைப் பெற்று, எமிலியின் திருமண காட்சியை வரைந்தேன். அந்த திருமண காட்சிக்காக நான் வரைந்த ஓவியம் வந்த அடுத்த வாரம்தான் பிரிட்டிஷ் இளவரசர் சார்லசின் திருமணம் நடந்தது. அதில் டயானா அணிந்திருந்த திருமண உடையும் என் ஓவியமும் அச்சு அசப்பில் ஒத்து இருந்தது பெரும் ஆச்சரியம்!

டெக்னாலஜி சார்ந்த சவால்: ஆனந்த விகடனில் தேவிபாலாவின் மடிசார் மாமி தொடருக்காக ஸ்ரீவித்யாவை போட்டோ எடுக்கவைத்து பின்னர் அதனுடன் நான் வரைந்த ஓவியங்களை

சேர்த்து ஒரு காம்பினேஷன் ஆக வந்த போட்டோ ஓவியத்தொடர் மிகவும் பிரபலம் ஆனது.

இதற்காக சிரமப்பட்டு பல இடங்களை நேரில் சென்று கவனித்தேன். குறிப்பாக கோர்ட்டில் நடக்கும் காட்சிகளுக்காக பல நாட்கள் நீதிமன்றம் சென்று, வளாகம் எப்படி இருக்கும், கோர்ட் அறை எப்படி இருக்கும் என்று பார்த்து  வரைந்தேன்.

கற்பனைக்கு முழுமையாக இடம் கொடுத்த தொடர்

பாலகுமாரனின் மெர்க்குரிப்பூக்கள் என்ற அந்த தொடர் வந்த நேரத்தில் ஒவ்வொரு வாரமும் கதை சுருக்கமும், விளக்கமும் பத்திரிகை அலுவலகத்தில் இருந்து வந்தாலும், பாலகுமாரன் நேரில் சந்தித்து அளித்த அந்த முழுமையான விளக்கங்களே அத்தொடரின் ஓவியங்களை கதையின் பாத்திரங்களாக பார்க்கச்செய்தது என்றால் மிகையல்ல.

மிகவும் உணர்ச்சிபூர்வமாக வரைந்த தொடர்:

சிவகாமியின் சபதம் தொடர் முதலில் கல்கியில் வெளியானபோது அதற்கு என் தந்தையார்தான் வரைந்தார். பின்னர் அந்த தொடருக்கு நானும் வரைந்தபோது  உணர்ச்சி வயப்பட்டேன்.

வைரமுத்துவின் கருவாச்சி காவியம், கள்ளிக்காட்டு இதிகாசம் தொடர்களுக்காக வரைந்தபோது உலகெங்கும் இருந்து பல புதிய ரசிகர்கள் கிடைத்தார்கள். பல விஷயங்களை கூர்ந்து கவனித்து வாட்டர் கலர் மீடியம் கொண்டு வரையப்பட்ட தொடர்கள் இவை. கள்ளிக்காட்டு இதிகாசம் நூலாக வந்தபோது கவிஞர் கேட்டுக்கொண்டதன்பேரில் மேலும் கூடுதல் ஓவியங்கள் வரைந்து கொடுத்தேன்.

நவம்பர், 2014.

logo
Andhimazhai
www.andhimazhai.com