“மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்''

சி.திருநாவுக்கரசு
சி.திருநாவுக்கரசு
Published on

ஓ ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தக் கூடியது கருத்துக்கணிப்பு முடிவுகள். 

தேர்தல் முடிவுகளை கருத்துக்கணிப்பு முன்னதாகவே துல்லியமாக கணிக்கிறதா என்பதில் சில சிக்கல்கள் இருந்தாலும், கருத்துக்கணிப்பு முடிவுகள் ஏற்படுத்தும் தாக்கமானது புறம்தள்ள முடியாததாக உள்ளது. இந்த கருத்துக்கணிப்பு எவ்வாறு நடத்தப்படுகிறது என்ற நோக்கில் இதனை முன்னெடுக்கும் மக்கள் பண்பாட்டு தொடர்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் சி.திருநாவுக்கரசுவோடு உரையாடினோம்.

தமிழகத்தில் எவ்வளவு காலமாக கருத்துக்கணிப்பு நடத்துகிறீர்கள்?

லயோலா கல்லூரியின் முன்னெடுப்பில் தமிழகத்தில் தேர்தல் கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஃபாதர் ராஜநாயகம் தலைமையிலான தேர்தல் கருத்துக்கணிப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளராக களப்பணி செய்ததன் மூலம் தான் இத்துறையில் எனக்கு அனுபவம் கிடைத்தது. பின்னர் 2004 முதல் மக்கள் பண்பாட்டு தொடர்பகத்தின் குழு சார்பாக நாங்கள் கருத்துக்கணிப்பு நடத்தி வருகிறோம். எந்த பின்புலமும், யாருடைய ஆதரவும் இல்லாமல் எங்களது குழு சுதந்திரமாக இயங்கி வருகிறது. இதுவரை 21 தேர்தல்களில் நாங்கள் மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டிருக்கிறோம்.

உங்களது கருத்துக்கணிப்புகள் மக்களின் மனநிலையை எந்த அளவுக்கு பிரதிபலிக்கின்றன?

கடந்த காலங்களில் எங்களது குழு நடத்திய கருத்துக்கணிப்பின் அடிப்படையில் வெளியிடப்பட்ட முடிவுகள் நிச்சயம் மக்களின் மனநிலையை கணிசமாக பிரதிபலித்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக ஆட்சியை யார் கைப்பற்றியிருக்கிறார்கள் என பார்க்காமல் நாங்கள் குறிப்பிட்டு சொல்லிய தொகுதிகள், வாக்கு
சதவீதம் போன்றவற்றை ஆய்வு பூர்வமாக நோக்கினால் எங்களது கருத்துக்கணிப்பு மக்களின் கூட்டு மனநிலையை வெளிப்படுத்தியிருப்பதை காணமுடியும். அதையும் தாண்டி மக்களுக்கு வேட்பாளர்கள் மீது இருக்கும் அதிருப்தி, பகுதிவாரியான நிர்வாகிகளின் மீதான கோபம் போன்றவை கருத்துக்கணிப்பு முடிவுகளிலிருந்து தேர்தல் முடிவுகளில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு கட்சியின் மீது பொதுவாக மக்களுக்கு இருக்கும் அபிப்பிராயத்தை நாங்கள் கருத்துக்கணிப்பில் கூறுகிறோம். ஆனால், அதேகட்சி வேட்பாளர் தேர்வு மற்றும் பகுதியளவில் செயல்படும் நிர்வாகிகளின் மீதான மக்களின் அதிருப்தியை பொருட்படுத்தாதது போன்றவற்றில் செய்யும் தவறினால் மக்களிடம் வாய்ப்பை தவற விடுகின்றது. இதுபோன்ற நிகழ்வுகளே பெரும்பாலும் எங்களது கருத்துக்கணிப்பு முடிவுகள் பொய்த்துப்போக காரணமாகிறது. தேர்தலுக்கு முந்தைய நாளில் நடக்கும் பணப்பட்டுவாடாவும் ஒருபக்கம் இதில் தாக்கம் செலுத்துகிறது எனலாம்.

பலகோடி மக்கள் வாக்களிக்கும் நிலையில், குறிப்பிட்ட மக்களிடம் மட்டும் கருத்துக்கணிப்பு நடத்தி அதுவே ஒட்டுமொத்த மக்களின் எண்ணமாக கருதுவது சரியா? இதன் புள்ளியில் அடிப்படை என்ன?

வாக்களிக்கும் அனைத்து மக்களிடமும்
சென்று ஆய்வு நடத்தி கருத்துக்கணிப்பு செய்வது சாத்தியமற்றது. மாறாக, சமூகத்தின் அனைத்து படிநிலை மக்களிடமும் எங்களது ஆய்வு நடைபெறுகிறது. குறிப்பிட்ட ஒரு துறை அல்லது பகுதியின் பிரதிநிதி அவர் சார்ந்த குழுவின்
சாட்சியமாக இருக்கிறார். அவரது மனநிலையும் அவர் சார்ந்த மக்களின் மனநிலையும் பெரிதாக வேறுபடுவதில்லை. அதன்படி, தொகுதியில் உள்ள ஒட்டுமொத்த மக்களின் எண்ணப்போக்கை நாங்கள் சந்திக்கும் வெவ்வேறு வகைமையிலான மக்களின் மூலம் கணிக்கிறோம். இதே முறையில் தான் புள்ளிவிவரங்களும் வகுக்கப்படுகின்றன.

பெரும்பாலும் உங்களது கருத்துக்கணிப்புக்கு முரணாகவே தேர்தல் முடிவுகள் வந்துள்ளன. சில நேரங்களில் சரியாக கணிக்கிறீர்கள். அதுபற்றி?

2004 - ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தான் எங்களது குழு சார்பாக முதன்முதலில் கருத்துக்கணிப்பு வெளியிட்டோம். மற்றொரு கருத்துக்கணிப்பில் அதிமுக கணிசமான இடங்களை பெறும், கோபிசெட்டிபாளையம் மற்றும் பெரியகுளம் தொகுதிகள் கணிக்கமுடியாத நிலையில் உள்ளன என்று கூறப்பட்டது. ஆனால் நாங்கள் 30 - க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெல்லும், இழுபறியாக கருதப்படும் இரண்டு இடங்களையும் திமுக கூட்டணி தான் கைப்பற்றும் என கூறியிருந்தோம். தேர்தல் முடிவுகள் எங்களது கருத்துக்கணிப்பு துல்லியமாக இருந்ததை உணர்த்தின. இதன்பிறகு பல்வேறு இடைத்தேர்தல்களில் எங்களது ஆய்வுகள் சரியாக இருந்தன. 2014 மக்களவைத் தேர்தல், 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் நாங்கள் கணித்ததைப்போல் தேர்தல் முடிவுகள் வரவில்லை. இவ்வாறு பல சமயங்களில் எங்களது கருத்துக்கணிப்பு வெற்றிபெறாமல் போவதற்கு முன்னமே குறிப்பிட்டதைப்போல் கட்சிகளின் செயல்வடிவிலான தவறுகள் தான் காரணமென நினைக்கிறேன்.

நடைபெற்றுமுடிந்த மக்களவைத் தேர்தலுக்காக கருத்துக்கணிப்பு நடத்தியபோது மக்களின் மனநிலை எப்படி இருந்தது?

எளிமையாக சொல்லவேண்டுமென்றால் தமிழக மக்கள் மிகப்பெரிய மாற்றத்தை விரும்புகின்றனர். திமுக மற்றும் அதிமுக இரண்டும் தமிழகத்தை தக்கவைத்திருக்கின்றன. மாற்றத்தை எதிர்பார்க்கும் மக்கள் இரண்டு கட்சிகளின் மீதும் கணிசமான அதிருப்தியில் உள்ளனர் என்பதே நிதர்சனம். இதன் காரணமாக நாம் தமிழர், அமமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளுக்கு மக்கள் ஆதரவளிக்கும் மனநிலையில் இருப்பதை இம்முறை உணரமுடிந்தது. ஆட்சி பொறுப்பு வகித்த பிரதான இருகட்சிகளும் தம்மை மறுசீரமைப்பு செய்யாவிட்டால் மக்கள் முழுமையாக மாற்றை தேர்வு செய்ய இன்னும் வெகு காலம் ஆகாது.

மே, 2019.

logo
Andhimazhai
www.andhimazhai.com