மகிழ்விக்கும் சாதனம்தானா பெண்ணே ?

மகிழ்விக்கும்  சாதனம்தானா பெண்ணே ?
Published on

சில நாட்களுக்கு முன்பு முகப்புத்தகத்தில் ஒரு வீடியோ வலம் வந்து கொண்டிருந்தது. ஒரு மலைப்பிரதேசத்தில் சில ஆண்களுடன் ஒரு பெண் இருக்கும் வீடியோ அது. அந்த ஆண்களுடன் பெண் தோளில் கைப்போட்ட படி, ஒரே சிகரெட்டை பகிர்ந்தபடி நகர்கிறது அந்த வீடியோ. அதற்கு முகப்புத்தகத்தில் வந்த வசைகளைப் பற்றி

சொல்லவே வேண்டாம். தறுதலைகள் என்று தொடங்கி பல வசைகள். அந்த பெண் மட்டும் இல்லாவிட்டால் அது ஒரு சாதாரண வீடியோ. வைரலாகியிருக்காது. வசைகள் விழுந்திருக்காது. என் மனதில் ஒரு நொடி ஆட்டோகிராப், தீராத விளையாட்டு பிள்ளை, பிரேமம் என்று ஆண்களின் பல காதல்களை சித்தரித்த திரைப்படங்கள் மின்னி மறைந்தன.

ஆட்டோகிராப் வரும் போதே இப்படியொரு படம் பெண்ணின் பார்வையில் சாத்தியமா என்கிற கேள்வி பரவலாக எழுந்தது. அதற்கு பதிலாக அப்படியொரு படம் வந்திருக்க வேண்டும். வந்ததோ தீராத விளையாட்டுப்பிள்ளை. ஆட்டோகிராப் பல பருவத்து காதல் என்றால் தீராத விளையாட்டுப் பிள்ளையில் ஒரு ஆண் ஒரே பருவத்தில் மூன்று பெண்களை காதலித்து அதில் ஒருவரை தேர்வு செய்து திருமணம் செய்துகொள்கிறார். மற்ற எல்லோரும் நிராகரிக்கப்படுகிறார்கள். மனைவியை தேர்ந்தெடுக்க காதலை நேர்முக தேர்வாக பயன்படுத்தலாம் என்று போதித்தது அந்த படம்.

தமிழ் திரையில் பெண்கள் என்று பேசும் போதெல்லாம் என் நினைவுக்கு உடனடியாக வரும் படம் தீராத விளையாட்டு பிள்ளை. அதன் மீது தீராத கோபம் உண்டு. ஆனால் தீராத விளையாட்டுப் பிள்ளை மட்டும்தான் பெண்களை மோசமாகக் காட்டிய படமா?

சமீபத்தில் வந்த இறுதிச் சுற்று படம் பலராலும் சிலாகிக்கப்பட்டது. பெண்கள் குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் அது. கட்டு மீறிய சுதந்திர உணர்வு கொண்ட கதாநாயகி காதலில் விழுந்தவுடன் புடவை கட்டிக்கொண்டு மாஸ்டருக்கு மீன் குழம்பு செய்து எடுத்துச் செல்கிறார். அப்படி வெளிப்படுத்தினால்தான் காதல் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அவர் நம்பியிருக்கலாம்.

 36 வயதினிலே, ஒரு பெண் தனது தன்னம்பிக்கையை எப்படி மீட்டெடுக்கிறாள் என்பது பற்றியது. ஆனால் அப்படி மீட்டெடுப்பதே அவளது கணவரிடமிருந்து கிடைக்கும் அங்கீகாரத்துக்காகத்தான் என்று முடிகிறது. இந்தியில் பெரிய வெற்றி பெற்று இப்போது தமிழில் தயாராகிக்கொண்டிருக்கும் குயீன் படத்தில் நாயகி தனியாக தேனிலவு சென்று ‘பத்திரமாக’ திரும்புவார். ஒரு ஆண் அப்படி சென்றிருந்தால் அவனுக்கு சில காதல்கள் நிகழ்ந்திருக்கும்.

பல காதல்களும் மது அருந்துவதும் புகைப்பதும்தான் பெண்ணியமா என்றொரு கேள்வி வரும். அவை எல்லாம் பெண்ணியம் என்றால் அதை நிச்சயம் ஆண்கள் செய்திருக்க மாட்டார்கள்! பெண்ணியம் என்பது ஆண்கள் செய்வதை எல்லாம் செய்வோம் என்று நினைத்துக்கொள்வது மலினமான புரிதல். ஆனால் ஆண்கள் செய்யலாம் அதை பெண் என்பதால் நீ செய்ய முடியாது என்று சொல்வது ஆணாதிக்கம் இல்லையா? கற்பு நிலையென்று சொல்ல வந்தால் இரு கட்சிக்கும் அதை பொதுவில் வைப்போம் என்று பாரதி சொன்னதை எல்லா தளங்களுக்கும் விரிவுப்படுத்தலாம்தானே. மது இன்று தமிழ்நாட்டில் எவ்வளவு பெரிய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது? இன்று தமிழ்நாட்டில் கணவரை இழந்த இளம் பெண்களை அதிக அளவில் உருவாக்கியிருக்கும் டாஸ்மாக் கடைகள் இன்னும் இங்கு சமூக பிரச்னையாகக்கூட மாறவில்லை. ஆனால் அங்கு ஒரே ஒரு பெண் தென்பட்டால் கூட அது உடனடியாக கலாச்சார பிரச்னையாக மாறும் ரசவாதம் என்ன?

தமிழ் சினிமாவிலும் இதுதான் நடக்கிறது. தமிழ் சினிமா பேசும் ‘பெண்ணியம்’ யார் மனதையும் புண்படுத்தாத, பெண்களுக்கான ‘சமூக பிம்பத்தை’ சிதைக்காத ‘பெண்ணியம்.’ சுதந்திர உணர்வைகூட விட்டுவிடலாம். ஒரு பெண் தனக்காக மட்டுமே மகிழ்ச்சியாக இருந்தாலே அதை குற்றமாக பார்க்கும் சமூகம் நமது. பெண்கள் மீது கட்டமைக்கப்பட்டிருக்கும் தியாக பிம்பம் அத்தகையது. அதை சின்ன அளவில் கூட அசைத்துப் பார்க்கும் எதுவும் கலாச்சார எதிர்ப்பின் குறியீடு! அந்த வகையில் குயின் திரைப்படத்தின் முக்கியத்துவத்தை மறுக்கவும் முடியாது. திருமணம் செய்து கொள்ள காதலன் மறுத்தவுடன் திட்டமிட்டிருந்த தேனிலவுக்கு தனியாக சென்று தன்னளவில் மகிழ்ச்சியாக இருக்க முயல்கிறார் நாயகி.

குயீனும் இறுதி சுற்றும் 36 வயதினிலேவும் ‘வித்தியாசமான’ படங்கள். அதில் வரும் பெண் பாத்திரங்கள் தனித்துவம் மிக்கவர்கள். ஆனால் அவர்களில் பெரும்பாலானோரின் உச்சபட்ச கனவே அவர்களது வாழ்வில் இருக்கும் ஆண்களை மகிழ்ச்சிப்படுத்துவதுதான். அதில் என்ன தவறு என்று கேள்வி எழலாம். சக மனிதர் மீதான அன்பின் வெளிப்பாடு எப்போதும் தவறில்லை. ஆனால் தன் வாழ்வில் இருக்கும் பெண்ணை அவளுக்காகவே மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கும் ஆண்களை நாம் ஏன் திரையில் பார்ப்பதில்லை?

மாறாக பெரும்பாலான தமிழ் திரைப்படங்களில் ஏற்கனவே மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் திரிந்து கொண்டிருக்கும் பெண்களை தன்னை மகிழ்விக்கும் ஒரு சாதனமாக மாற்றுவதுதான் கதாநாயகர்களின் தலையாய கடமை. காதலை அடிப்படையாக கொண்ட பெரும்பாலான தமிழ்ப் படங்கள் ஏதோ ஒரு வகையில் சிவாஜி கணேசனின் அறிவாளி (ஷேக்ஸ்பியரின் நாடகமான tச்ட்டிணஞ் ணிஞூ tடஞு ண்டணூஞுதீ) படத்தின் விதவிதமான மறு ஆக்கங்களே. 

“இப்படிதான் இருக்க வேணும் பொம்பள” என்று பாடி கே.ஆர் விஜயாவை திருத்திய விவசாயி எம்.ஜி.ஆர், அதிரடி நடவடிக்கைகள் மூலம் மாதவியின் ஆணவத்தை அடக்கும் தம்பிக்கு எந்த ஊரு ரஜினிகாந்த், பெண்கள் எப்படி உடை உடுத்த வேண்டும் என்று அசினுக்கு வகுப்பெடுத்த சிவகாசி விஜய் என்று இதற்கு ஒரு மரபும் தொடர்ச்சியும் இருக்கிறது. கூர்ந்து கவனித்தால் இப்படி தொடர்ந்து பெண்களின் தனித்தன்மையை அழித்து அவர்களை தங்களை மகிழ்விக்கும் இன்னொரு சாதனமாக மாற்றும் கதாப்பாத்திரங்களில் தோன்றும் கதாநாயகர்கள்தான் நமது எல்லா கொண்டாட்டங்களுக்கும் தகுதியான சூப்பர் ஹீரோக்களாக உருவாகி இருக்கிறார்கள். என்ன மாதிரியான நோய்க்கூறு இது?

இந்த நாயகர்கள் மீது பெண்களுக்கு வருவது உண்மையிலேயே காதலா என்ன? ஒரு பெண்ணை துரத்தி தொந்திரவு செய்வதும், அவளது உடை,  நடவடிக்கைகள் பற்றி பேசி கூனிக் குறுக வைப்பதும் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றங்கள். ஆனால் தமிழ் சினிமாவில் அந்த நொடியில்தான் பெண்களுக்கு அவர்கள் மீது காதல் வருகிறது. அப்போது தமிழ் சினிமா காட்டும் காதல் எவ்வளவு போலியானது!

உண்மையில் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் பெண்ணுக்கு காதல் என்கிற உணர்வே இருக்க கூடாது. காதலிக்கப்படவும் காதலிப்பவருக்கு துணையாயிருக்கவும்தான் கதாநாயகிகள்.  பெரும்பாலானவர்கள் இப்படிதான் என்றாலும் சில விதிவிலக்குகள் இருக்கவே செய்கின்றன. பெண்ணின் தீவிரமான அகவுணர்வையும் அவளுடைய அசலான காதலையும் திரையில் காட்டிய ஒரே படம் இயக்குநர் சசி இயக்கிய பூ.  மென்னுணர்வு ததும்ப வலம் வந்த மகேந்திரன், பாலு மகேந்திராவின் சில நாயகிகளிடம் காதலின் தனித்த சாயல் மிளிர்ந்திருக்கிறது. மிக அரிதான தருணங்களில் கௌதம் மேனனின் சில நாயகிகளிடத்திலும். ஆனால் இதெல்லாம் விதி விலக்குகளே.

பொதுவான விதி, தமிழ் கதாநாயகிகள் சீண்டலுக்கு பயந்து காதலில் விழுவதுதான்.  காதலிலேயே இதுதான் நிலை என்றால் பிற தளங்கள் பற்றி சொல்லவே வேண்டாம். காதல் சார்ந்த ஒற்றை பரிணாம கதாப்பாத்திரங்கள் தாண்டி மிக மிக அரிதாகவே பெண்களுக்கு அரசியல், சமூக அக்கறை அல்லது அது போன்ற ஒன்றை வெளிப்படுத்தும் கதாப்பாத்திரங்கள் அமைகிறது.  அவள் அப்படித்தான் மஞ்சுவுக்கு பிறகு பெண்ணியம் என்கிற வார்த்தையை திரையில் சொன்ன ஒரு கதாநாயகியாவது தோன்றினாரா என்று தெரியவில்லை. அரசியல்வாதிகளாக திரையில் பெண்கள் தோன்றினால் அவர்கள் எப்படி சித்தரிக்கப்படுகிறார்கள் என்பதை சொல்ல தேவையில்லை. சகுனி படத்தில் இரண்டு பெண் அரசியல்வாதிகள். எதிர்மறை சாயல் கொண்ட கிரணின் கதாப்பாத்திரம் ஒரு முக்கியமான அரசியல்வாதியுடன் நெருக்கமாக இருப்பதன் மூலம் அரசியலில் முன்னுக்கு வருவதாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. நேர்மறை சாயல் கொண்ட ராதிகாவின் கதாப்பாத்திரத்திற்கு சொந்தமாக சிந்திக்கவோ செயல்படவோ தெரியாது. அவருக்கு எல்லாமே கதாநாயகன் சொல்லித்தருவதுதான். பெரும்பாலான பெண் அரசியல்வாதி பாத்திரங்கள் இந்த சட்டகத்துக்குள்தான் அடைப்பட்டிருக்கின்றன. தூள் திரைப்படத்தில் உருவாக்கப்பட்ட சொர்ணாக்காவை அடியொற்றி பிறகு நிறைய கதாப்பாத்திரங்கள் உருவாகின.

இதற்கு மாறாக என் நினைவுக்கு வரும் ஒரு திரைப்படம் 1939ல் வெளியான தியாக பூமி. படத்தைப் பற்றி நான் கே.பாரதியின் தமிழ் சினிமாவில் பெண்கள் என்கிற புத்தகத்தில்தான் வாசித்தேன். படத்தை பார்க்கும் வாய்ப்பு இன்னும் எனக்கு கிடைக்கவில்லை. ஆனால் பாரதி எழுதியிருந்த பதிவிலிருந்து அந்த படம் தமிழில் பெண்ணிய சலனங்களை முதலில் ஏற்படுத்தியிருக்க கூடும் என்று தோன்றியது. கல்கியின் கதையை அடிப்படையாக கொண்டு உருவான இந்த படத்தின் நாயகி கணவனின் கொடுமைகளுக்கு ஆளாகி அவனிடமிருந்து விலகி, பிறகு வேலை தேடிக்கொண்டு திரும்பவும் வீடு திரும்புகிறார். கணவரை ஏற்றுக்கொள்ள சொல்லி அவரை சமூகம் நிர்பந்திக்கிறது. கணவனுக்காகத் தியாகம் செய்யச் சொல்லும் தந்தையிடம் நாயகி இப்படிச் சொல்கிறார்: “எப்பேர்ப்பட்ட தியாகம் வேண்டுமானாலும் செய்ய தயார் அப்பா! ஆனால் சுதந்திரத்திற்காகத்தான் தியாகம் செய்வேனே தவிர, அடிமைத்தனத்திற்காக ஒரு போதும் செய்ய மாட்டேன்.”

படித்தவுடன் எழுந்து நெடுநாள் அடங்காதிருந்த சிலிர்ப்பை ஒரு கூட்டத்தில் கலைத்துப் போட்டார் நாடகவியலாளர் ப்ரீத்தம் சக்கிரவர்த்தி. “அவர் சுதந்திரம் என்று சொல்வது, தனது சுதந்திரத்தை அல்ல. நாட்டின் சுதந்திரத்தை” என்று பிரீத்தம் சொன்ன போது, அது உணர்வு ரீதியாக மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்தது. ஆனால் பின்னர் யோசிக்கும் போது அந்த காலக்கட்டத்திற்கு அது மிக முக்கியமான விஷயமாக இருந்திருக்க கூடும் என்றே தோன்றியது. இந்திரா போன்ற ஒரு திரைப்படத்தில் கதாநாயகி அரசியல் பேசினாலும் அவருக்கு பக்கபலமாக ஒரு ஆண் இருக்கிறார். தியாக பூமி சாவித்திரியோ கணவரால் கைவிடப்பட்ட பிறகும் அப்பா எதிராக வலியுறுத்தும் போதும் அரசியல் பேசுகிறார் என்பது ஆறுதல் தானே.

சினிமா உருவான காலம் தொட்டு இன்று வரையில் பெண்கள் சித்தரிப்பு பற்றிய ஒரு பரந்துப்பட்ட பார்வையை வழங்குகிறது பாரதியின் புத்தகம்.

தமிழ் சினிமாவில் பெண்களின் சித்தரிப்பு அந்தந்த காலகட்டங்களின் அரசியல் தாக்கங்களிலிருந்து விடுபடவில்லை என்கிற உண்மையை தர்க்கப்பூர்வமாக கட்டமைக்கும் படைப்பு அது. அப்படிப்பார்க்கும் போது பெண்களுக்கு தமிழ்திரையில் இப்போதும் இனியும் மோசமான சித்தரிப்பே காத்திருக்கிறது என்கிற பயம் தோன்றாமல் இல்லை. மேற்குறிப்பிட்ட வீடியோக்கள் எல்லாம் நமது தமிழ் இயக்குநர்களின் பார்வையில் படாமல் இருக்க கடவது!

மார்ச், 2016.

logo
Andhimazhai
www.andhimazhai.com