மகிழ்ச்சி மட்டும்

மகிழ்ச்சி மட்டும்
Published on

இந்தியாவில் புகழ் பெற்ற மூன்று பேராசிரியர்களோடு எனக்குப் பரிச்சயம் உண்டு. வாழ்வில் புகழோடு சகல சௌகரியங்களையும் பெற்றிருந்த அவர்கள் மூவருக்கும் ஒரு நிறைவேறாத கனவு உண்டு. மூவரின் நிறைவேறாத கனவும் ஒன்றுதான். அது  “ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆக வேண்டுமென்பது” தான்.

உலகின் முதன்மையான தனியார் பல்கலைக் கழகமான ஹார்வேர்டின் பேராசிரியர் வருடத்திற்கு 2,07,100 அமெரிக்க டாலர்கள் சம்பளமாகப் பெறுகிறார். இந்திய ரூபாயில் ஒரு கோடியே முப்பத்தி ஆறு லட்சம். இது போக பெரும் நிறுவனங்களுக்கு கன்ஸல்டன்ஸி செய்து கூடுதல் வருமானம் ஈட்டுவார்கள். உலக முழுவதுமுள்ள தலைசிறந்த பேராசிரியர்களுக்கு ஹார்வேர்ட் பணி ஒரு கனவுதான்.

தனது பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் டாக்டரேட் என்று எல்லாவற்றிலும் முதன்மை பெறுவதோடு சிறப்புத் தகுதிகள் பெற்றிருப்பவர்கள் தான் ஹார்வேர்ட் பேராசிரியர்கள்.

நீல் பாஸ்க்ரிசா (Neil Pascricha) என்ற எழுத்தாளர் ஹார்வேர்டில் படிக்கும்போது அவரது பேராசிரியர் ஒருவர் தான் எதையும் சாதிக்காமல் தோற்றுப் போனதாக வருந்துவதுண்டாம். அந்த பேராசிரியரின் வருத்தம்: “ தினமும் நான் என் அலுவல அறையின் வாசலுக்குச் செல்லும்போது என் இடதுபுறம் இருக்கும் அறையில் உள்ள பேராசிரியர் நோபல் பரிசு பெற்றவர் என்பதைப் பார்க்கிறேன்.  எனக்கு நோபல் பரிசு கிடைக்கவே போவதில்லை என்பது தெரியும். என் வலதுபுறம் இருக்கும் அறையில் உள்ள பேராசிரியர்  12 நூல்களை எழுதியிருக்கிறார். எனக்குத் தெரியும் நான் 12 புத்தகங்களை எழுதப்போவதே இல்லை! நான் முதல் புத்தகத்தை ஆரம்பிக்கவும் இல்லை. ஒவ்வொருநாளும் நான் எவ்வளவு கீழானவன் என்று உணர்கிறேன். அது என்னை வேதனை செய்கிறது”

வாசிக்கும் போதெல்லாம் மகிழ்ச்சியைத் தரும் ஒரு வாசகத்தை எழுதித் தாருங்கள் என்று செல்வச் சீமான் ஒருவர் ஜென் துறவியிடம் வேண்டினார். ஒரு கணம் சிந்தித்தபின் ஜென் துறவி எழுதிக் கொடுத்தார். அதைப் படித்துப் பார்த்தவுடன் செல்வந்தருக்கு மித மிஞ்சிய கோபம் வந்தது. எனது தலைமுறைகள் படித்துப் போற்றக்கூடிய ஒரு வாசகத்தைக் கேட்டால் இப்படி ஒரு துன்பவியல் வாசகத்தை எழுதித் தர எப்படி மனம் வந்தது உமக்கு? என்று வார்த்தைகளைக் கொட்டினார்.

  “ அப்பாவின் மரணம், மகனின் மரணம், பேரக்குழந்தையின் மரணம்” இதுதான் ஜென் துறவியின் வாசகம்.

  “எப்போதும் குடும்பத்துக்கு மகிழ்வைக் கொடுக்கும் வாசகத்தைக் கேட்டீர்கள். உங்களுக்கு முன் உங்களது மகன் இறந்தால் அது தீராத துயரத்தைக் கொடுக்கும். உங்கள் இருவருக்கும் முன் பேரனைப் பறிகொடுத்தால் குடும்பத்தின் மொத்த மகிழ்ச்சியும் தொலைந்து போகும். மரணம் தவிர்க்க முடியாததுதான் ஆனால் நான் சொன்ன வரிசையில் நடந்தால் உனது குடும்பம் மகிழ்வுடன் வாழ்வாங்கு வாழும்” என்றார் ஜென் துறவி.

அழகான அன்பான வாழ்க்கைத்துணையை அடைந்து விட்டால், இந்த நிறுவனத்தில் வேலை கிடைத்தால், இந்தப் பதவி உயர்வு பெற்றால், இவ்வளவு பணம் / சொத்திருந்தால்.. மகிழ்ச்சியில் துள்ளாட்டம் போடலாம் என்று நினைப்பவர்கள் அதை அடைந்த பின் எவ்வளவு காலம் தொடர் மகிழ்வில் இருந்தார்கள் என்று கேளுங்கள்.

மகிழ்ச்சிக்கு வழி என்று எதுவும் இல்லை! மகிழ்ச்சியே வழி!- இது புகழ்பெற்ற புத்தத் துறவி திச் நாட் சென்னின் வார்த்தைகள். இதையே நான் எப்போதும் பின்பற்றுகிறேன்.

மற்றவர்களையோ மற்றொரு பொருளையோ சார்ந்துதான் மகிழ்ச்சி அமையும் என்பது அடிப்படை இல்லாத நம்பிக்கை. நம்மில் பெரும்பாலானவர்கள் கார்ப்பரேட் நிறுவனங்களின் சக்கர வியூகத்தில் சிக்கித் தேவைப்படாதவைகளை வாங்குவதற்காக தேவையற்று ஓடிக்கொண்டிருக்கிறோம். நுகர்வுக் கலாச்சாரத்தைக் கட்டமைத்து வேண்டாத ஆசைகளை மனிதர்கள் மனதில் நட்டுவிட்டு லாபத்திற்காகக் காத்திருக்கின்றன நிறுவனங்கள்.  இந்த வேலையை அவர்கள் ஆரம்பித்து தொன்னூறு வருடங்கள் ஆகிறது. “  தங்களிடம் இருக்கும் பொருட்கள் பழசாவதற்கு முன்பே புதிய பொருட்கள் மீது ஆசைப்படுவதற்கு மக்களைப் பழக்கப்படுத்தவேண்டும். அமெரிக்காவில் ஒருபுதிய மனநிலையை உருவாக்க வேண்டும். மனிதனின் ஆசை அவனது தேவைகளை மீறி அதிகரிக்கவேண்டும்.” இது லேமன் பிரதர்ஸ் நிறுவனத்தைச் சார்ந்த பால் மாஸர், 1927 ஆம் ஆண்டு ஹார்வார்ட் பிசினஸ் ரிவியூவில் எழுதிய கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்து. 

சூழ்ச்சியின் வாக்குமூலம்?

இதுதான் மன அழுத்ததின் ஆரம்பம். ஆசைகள் தேவையை மீறி வளரும் போது நம்மை நாமே கசக்கிப் பிழிகிறோம். தலைமுறைக்கு தலைமுறை மன அழுத்தம் அதிகரிக்கிறது. ஆனால் இன்றும் பலர் குதூகலத்துடன் மன அழுத்தமின்றி சிறகடித்துப் பறக்கின்றனர்.

கொண்டாட்டமான மன நிலையை எல்லோரும் எப்படி அடைவது என்பதற்கான விவாதத்தின் தொடக்கம் வரும் பக்கங்களில்.

 “ என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் அது உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்” என்கிறார் பாவ்லோ கொய்லோ ( Paulo Coelho). இச்சொற்களை வழிகாட்டியாக ஏற்கலாம்.   வாருங்கள். மகிழ்ந்திருப்போம்.

என்றும் உங்கள்,

அந்திமழை இளங்கோவன்.

அக்டோபர், 2017 அந்திமழை இதழ்

logo
Andhimazhai
www.andhimazhai.com