அருவிக்கரையில்

Published on

எவ்வளவு பேரிடமோ மகிழ்ச்சியான தருணங்களைக் கேட்கிறோம், ஏன் நம் ஆசிரியர் குழுவிடமே இதைக் கேட்கக் கூடாது என்று நமது நிறுவிய ஆசிரியர் இளங்கோவன் நினைத்து, ஆசிரியர் குழு நோக்கி மைக்கைத் திருப்பினார். வந்துவிழுந்த சந்தோஷ தருணங்களையும் இதோ பதிவு செய்திருக்கிறோம்.

ரத்த தானம்!

விபத்தொன்றில் 40 பேர் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டிருந்தனர். அதிக இரத்தம் தேவைப்பட்டது. அருகில் இருந்த என்னுடைய கல்லூரி விடுதிக்கு இரத்தம் கேட்டு ஆஸ்பத்திரி நிர்வாகம் வேன் அனுப்பி இருந்தது. நாங்கள் 12 பேர் இரத்தம் கொடுப்பதற்காகச் சென்றோம். என்னுடைய இரத்தம் ஒரு  குழந்தைக்குக் கொடுத்திருக்கிறார்கள். மறுநாள் சென்று பார்த்தேன். குழந்தை ஆபத்து நிலை கடந்திருந்தது. ஒரு வாரம் கழித்து எங்கள் விடுதிக்கு ஒரு கார் வந்தது, வந்தவர்கள் இரத்தம் கொடுத்த அனைவருக்கும் நன்றி கூறி மாலை அணிவித்து பழங்கள் கொடுத்துச்சென்றார்கள். எனக்கு நெகிழ்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்த தருணங்களில் இதுவும் ஒன்று.

இரா.சுதாகர்

அருவியின் அருகில்

அருவியில் குளிக்க வேண்டுமென்பது சிறு வயதிலிருந்தே எனக்கு மிகப்பெரிய ஆசை. ஆண்டுதோறும் குற்றாலத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டிய செய்திகளைப் பார்க்கும்போதெல்லாம் அருவியில் ஆசைத்தீர குளிப்பதுபோல் கற்பனை செய்துகொள்வேன். பெரும் மலைச்சரிவின் நடுவே கொட்டும் அருவியில் குதித்து நீந்துவது போன்ற கனவுகள் எனக்கு அடிக்கடி வரும். பல ஆண்டுகள் போராட்டங்களுக்கு பிறகு வேலைக்குச் சென்று பணம் சேர்த்து நண்பர்களோடு வயநாடு சென்றேன். பெரும் மலைச்சரிவும், அடர் காடுகளும் பிரமிப்பூட்ட, அருவியில் குளிக்கப்போகிறோமென மகிழ்ந்தேன். ஆனால், அங்கு அருவியை பார்க்க மட்டுமே அனுமதி, குளிக்க முடியாது என

சொல்லிவிட்டார்கள். மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. என் உணர்வைப் புரிந்துக்கொண்ட உடன் வந்த நண்பர்,  ‘‘அருவியில் குளிக்கணும் அவ்ளோதானே'' என்று ஒரே இரவில் கல்பட்டாவில் இருந்து மதுரைக்கும், அங்கிருந்து தென்காசிக்கும் பேருந்தில் அழைத்துச் சென்றுவிட்டார். குற்றால அருவியை நேரில் பார்த்து வெகு நேரம் திகைத்து நின்றுக்கொண்டிருந்தேன். பிறகுதான் தெரிந்தது சீசன் முடிந்து குறைந்த அளவுதான் தண்ணீர் கொட்டுகிறது என்று. ஆனால் அதுவே எனக்கு போதுமானதாக இருந்தது. அருவிக்கு முன்னால் முகத்தை நிமிர்த்தி, கைகளை உயர்த்தி, கத்திக்கொண்டே குளித்தபோது பெரும் மகிழ்ச்சியாகவும், நீண்டகாலக் கனவு நிறைவேறியதாகவும் உணர்ந்தேன்.

 வசந்தன்

முதல் 'க்ளிக்'

உதவி இயக்குநராக வாழ்க்கையை வெறுத்திருந்த சமயம்.தோழி ஒருவர் எனது மனநிலையை புரிந்து கொண்டு அவர் செல்லவிருந்த பயணம் ஒன்றிற்கு என்னையும் வருமாறு அழைத்தார்.  நான்கு நாட்கள் கேரளாவில் உள்ள தட்டக்காடு பறவைகள்

சரணாலயத்தில் தங்கல். எனது தோழி, பறவைகளைப் படம் எடுப்பதில் ஆர்வம் கொண்டவர்.  எனக்கு கேமராவில் படம் எடுக்கக் கற்று தந்தார். ஆனாலும், ஒரு பறவையைக் கூட என்னால் நன்றாக எடுக்க முடியவில்லை.

சலிப்பு மீண்டும் தொற்றிக் கொண்ட போது, பேசாமல் பறவைகளை மட்டும் ரசிக்க ஆரம்பித்துவிட்டேன். மூன்றாம் நாள், மாலைப்பொழுதில் கையில் செகண்டரி கேமராவை சுமந்து கொண்டிந்த போது ஒரு சிறிய பறவை அருகில் இருந்த மரத்தடியில் அழகாக விளையாடியது. எனக்கு அந்த பறவையை மிகவும் பிடித்திருந்தது.. அந்த சிறிய பறவையின் விளையாட்டை எப்படியாவது பதிவு செய்ய வேண்டும் போல் இருந்தது. அந்த உந்துதலில் நான்  படம் எடுத்தேன். அதில் ஒரு காட்சி மிக அழகாக விழுந்தது.

'ஸ்டார்லிங்' என்ற பறவையின் அந்த புகைப்படத்தை முதலில் க்ளிக்கிய போது நான் அடைந்த மகிழ்ச்சியை என்றுமே மறக்க முடியாது!

கார்த்திக் சுந்தர்

சுஜாதா சாப்பிட்ட ஸ்வீட்

1998 அக்டோபர் மாதம். சென்னை கால் நடை மருத்துவக் கல்லூரியில் அந்திமழை ஆண்டு இதழ் வெளியீட்டு விழா. இப்போது அந்திமழையின் நிர்வாக ஆசிரியர் அசோகன், அன்று மாணவர் இதழ் ஆசிரியர். நான் இணை ஆசிரியர். விழாவிற்கு

 எழுத்தாளர் சுஜாதா வருவதாக ஒப்புக் கொண்டிருந்தார். அவரை அழைத்து வர நாங்கள் புறப்பட்டோம். என் எழுத்துலக கனவு நாயகனை காணப்போகும் உற்சாகத்தில் மிதந்து சென்றேன். அவர் வீட்டில் காப்பி கொடுத்த ஓர் அம்மா,

 ‘‘சாயந்திரமா ஒரு காபி கொடுங்க, ஸ்வீட் எதுவும் கொடுக்க வேண்டாம், அவர் சாப்பிட மாட்டார்,'' என்றார்கள். காரில் வரும்போது அவருடைய சினிமா அனுபவங்களை சொல்லிக்கொண்டு வந்தார்.

விருந்தினர்களை கலையரங்கத்திற்கு அழைத்துச் செல்வதற்கு முன்பாக துணை வேந்தர் அறையில் சிறிய உபசரிப்பு நடந்தது. சுஜாதாவின் முன் வைக்கப்பட்ட ஸ்வீட்டை அவர் சாவகாசமாக சாப்பிடும்போது என்னைப் பார்த்து லேசாக கண்  சிமிட்டினார்.

மேடையில் பேசிய பிறகு அடுத்த ஆண்டு அந்திமழையின் ஆசிரியர் யார் என்றார்.

அசோகன் என்னைச் சுட்டிக்காட்ட, ‘‘வழக்கமா மத்த பத்திரிகையில வருவது போன்ற படைப்புகள் தான் இதிலேயும் இருக்கு. நீங்கள் அறிவியல் மாணவர்கள். எனவே அறிவியல் செய்திகளையும், அறிவியல் புனைகதைகளையும் அந்திமழையில் இடம்பெற செய்யுங்கள்'' என்று உரிமையான கண்டிப்புடன் கூறினார்.

விழா முடிந்து அவரை வீட்டில் விட்டுவிட்டு திரும்பும்போது உடனிருந்த நண்பர் ரமேஷிடம் நான்:  ‘‘அவங்க அம்மா அவருக்கு ஸ்வீட் குடுக்க வேண்டாம்னு சொன்னாங்க. ஆனா அவரு ரசிச்சு ஸ்வீட் சாப்பிட்டார்''

‘‘ என்னது, அம்மாவா? அவங்க, அவரோட ஃவைப்'' & ரமேஷ்

அப்போதுதான் எனக்கு உறைத்தது. சுஜாதா அறுபதைக் கடந்திருந்தார். ஆனால் என்னுடைய மனதில் அவர் எப்போதும் குறும்புத்தனமான கணேஷ்&வசந்த் உருவமாகவே பதிந்திருக்கிறார். அதனால்தான் உண்மையான சுஜாதாவை அவரின் அம்மாவாக நினைத்திருக்கிறேன். சுஜாதாவுடன் இருந்த அந்த அரை நாள் வாழ்வில் என்றுமே மறக்கமுடியாத தித்திப்பான நாள்.

இரா.கௌதமன்

சைக்கிளில் வந்த செய்தி!

பன்னிரண்டாம் வகுப்பு முடித்து மதிப்பெண்களைப் பார்த்தபோது, பொறியியலா, கால்நடை மருத்துவமா எது கிடைக்கும்? அல்லது எதுவுமே கிடைக்காதா என்ற கேள்விக்குறி. கால்நடை மருத்துவப் படிப்பில் சேர கலந்தாய்வுக்கு அழைத்தார்கள். எனக்கு முன் இருந்த மாணவரோடு இடங்கள் நிரம்பிவிட ஏமாற்றத்துடன் வீடு திரும்பினேன். அதன் பின்னர் பொறியியல் படிக்க இடம் கிடைத்தது. அந்த படிப்போடு ஒரு மாதம் கல்லூரியில் சேர்ந்து மல்லுக்கட்டிக் கொண்டிருந்தேன். பிடிக்கவே இல்லை. ஒரு விடுமுறையில் வீடு திரும்பி இருந்தேன். அன்று காலை குலதெய்வம் கோவிலுக்குப் போனபோது அங்கே குறி சொல்பவர், 'வீட்டுக்குப்போ நல்ல செய்தி கிடைக்கும்' என்று திருநீறை அடித்தார். எப்போதும் சொல்வதுதானே என்றெண்ணிவாறு வீட்டுக்குத் திரும்பியபோது அரக்கப் பரக்க ஒரு சைக்கிள் எங்கள் வீட்டை நோக்கி வேகமாக வந்தது. கையில்  தந்தியுடன் அஞ்சல் துறை ஊழியர் இறங்கி, ‘உங்களுக்கு கால்நடை மருத்துவப் படிப்பில் சேர அழைப்பு வந்திருக்கிறது' என அறிவித்தார். அது யாரோ சேர்ந்துவிட்டு பின் விட்டுச் சென்றதால் காலியான இடம்! என்னோடு சேர்ந்து எங்கள் ஊரே சந்தோஷப்பட்டதை நினைத்துப் பார்க்கிறேன்! அந்த நிமிடத்தின் மகிழ்ச்சி இன்றும் நினைவில் நிற்கிறது!

நா.அசோகன்

logo
Andhimazhai
www.andhimazhai.com