2017-இ-ல் வெளிவந்த மகளிர் மட்டும் திரைப்படத்தில், பிரபா, கோம்ஸ், ராணி மற்றும் சுப்பு எனும் நான்கு பெண் கதாபாத்திரங்களை முன்நிலைபடுத்தி கதை நகர்கிறது. திருமண வாழ்வில் 50 வயதிற்கு பிறகும், பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை இதுவரை எந்த திரைப்படத்திலும் காண்பிக்கப்படாத விஷயங்களை கையாண்ட பெருமை இத்திரைப்படத்திற்கு உண்டு. ஆனாலும் கூட அவை ஒட்டுமொத்த பெண்கள் சந்திக்கும் சிக்கல்களில், ஒரு பகுதி என்றே கூற வேண்டும்.
கோம்ஸ் எனும் கதாபாத்திரத்தை தாங்கி வரும் நடிகை ஊர்வசி, பி.யூ.சி. வரை படித்தவர், டியுஷன் மூலம் இன்னும் சிறுவர்களுடன் தொடர்பில் இருந்து வருவதால், தற்கால நவீனத்தை ஏற்றுக்கொள்ளும் மாமியாராகவும், அதே வேளையில் தனது நடிப்பால் அவ்வப்போது குறும்புடன் சிறு குழந்தையாகவே மாறுவது அக்கதாபாத்திரத்தை முழுதாக உணர்து நடித்ததின் வெளிப்பாடு. இத்தகைய நடிகை தமிழ் திரையுலகிற்கு கிடைத்த கலைக்களஞ்சியம் என்று தான் குறிப்பிட வேண்டும். இவரிடமிருந்து தான் கதை நகர்கிறது.
ராணி எனும் கதாபாத்திரத்தை தாங்கி வரும் நடிகை பானுப்பிரியா, தனது கல்லூரி வாழ்க்கைக்கு பொருத்த மில்லாத பெண்ணாக, தனது கணவர் மற்றும் மகனின் வார்தைகளுக்கிணங்க, தனது பிள்ளைகளையும் மருமகளையும், பேரப்பிள்ளைகளையும் கவனித்து, முழு நேரமும் அடுப்படியில் காலத்தை கடத்தும் அதிக பொறுப்புகள் நிறைந்த வீட்டம்மா.
சுப்புவாக வரும் நடிகை சரண்யா, கல்லூரி படிக்கும் பொழுது இவர்கள் மூவரும் அடித்த லூட்டியுடன் ஒப்பிடுகையில், திருமணத்திற்கு பின் வரும் இவரின் கதாபாத்திரம், அனுதாபப்படும்படியான கதாபாத்திரம், இருந்தாலும் பல பெண்ணிய கருத்துக்களை வெளிபடுத்தும் கதாபாத்திரமாக அமைந்துள்ளது.
இத்தகைய மூன்று பேரையும் மீண்டும் இணைக்கும் நவீன நங்கை பிரபா வாக வரும் நடிகை ஜோதிகா. இவர் தாங்கி வரும் கதாபாத்திரம் நவீனத்துவத்துடன், சில பெண்ணிய கருத்துக்களை உதிர்கிறது. 50 வயது கடந்த, பாலிய காலத்தில் ஒன்றாக படித்த பெண்களை மீண்டும் இணைத்து அவர்களை மூன்று நாட்கள் பல இடங்களுக்கு பயணப்பட வைத்து, அவ்வப்போது அவர்களின் நிலை மறந்து சிரிக்க வைத்து மகிழ்கிறது. பிரபாவின் ஆவணப்படத்தில் வரகூடிய செம்மலர் அன்னம் உதிர்க்கும் பெண்ணிய வசனங்கள் அனைத்து வகை பெண்களின் மனக்குமுறல்கள் எனலாம்.
மார்ச், 2023