மகத்தான காவிய நாயகி

செடல்
இமையம்
இமையம்
Published on

ஒரு சிறுகதையை, நாவலை எழுது என்று ஏன் மனம் தூண்டுகிறது என்பது ஒரு மாயச் செயல். மனதில் ஏற்படும் மாயச் செயலுக்கு செவி கொடுப்பவனே எழுத்தாளன். நான் இதுவரை எழுதியுள்ள சிறுகதைகள், நாவல்கள் எல்லாமே தற்செயல் நிகழ்வுகளால் ஏற்பட்டதுதான். செடல் நாவலை நான் எழுதியதும் அப்படித்தான்.

1992இல் கரிநாள் அன்று ‘பொங்க காசு கொடுங்க சாமி' என்று கேட்டுவந்தார்,செடல். ஐந்து ரூபாய் கொடுத்தேன். செடல் திரும்பிச் செல்லும்போதுதான் அவர் தமிழ்நாட்டில் மிகவும் முக்கியமான ஆளாயிற்றே என்ற எண்ணம் உண்டானது. அந்த கணத்திலிருந்துதான் செடலைப்பற்றி யோசிக்க ஆரம்பித்தேன். அடுத்த ஏழு ஆண்டுகள் நான் செடலாகவே இருந்தேன். பொட்டுக்கட்டி விடப்பட்ட பெண்களுடைய வாழ்வோடு, அரிய கலையான தெருக்கூத்து குறித்தும், அதையே வாழ்வாக நம்பி வாழ்ந்த மனிதர்கள் குறித்தும் முழுமையாக பேசிய ஒரே நாவல் செடல்தான்.

செடல் என்னுடைய ஊரைச் சேர்ந்தவர். ஊரின் கடைசியில் இருக்கக்கூடிய தெருவில் இருப்பவர். கூத்தாடி இனத்தைச் சார்ந்தவர். செல்லியம்மன் சாமிக்கு எட்டு வயதிலேலேயே பொட்டுக்கட்டிவிடப்பட்டவர். திருவிழாவிற்கு மட்டுமல்ல, சாவிற்கு வைக்கக்கூடிய ‘கர்ணமோட்சம்' தெருக்கூத்திலும் ஆடக்கூடியவர். அவருடைய குடும்பத் தொழிலே கூத்தாடுவதுதான். ஒரு விதத்தில் மாதவியின் தொடர்ச்சி, பாணர்களின் தொடர்ச்சிதான் செடல்.

பொதுவாக தமிழ்நாட்டில் இசைவேளாளர் இனத்தைச் சேர்ந்த பெண்களைத்தான் பொட்டுக்கட்டிவிடுவார்கள் என்ற கருத்து இருக்கிறது. அது உண்மைதான். அதே நேரத்தில் குடும்ப வறுமைக்காக, தீராத நோய் தீர வேண்டும் என்பதற்காக, தொடர்ந்து பெண் குழந்தைகள் பிறப்பதை தடுப்பதற்காக என பல காரணங்களுக்காக வேண்டிக்கொண்டு பெண் குழந்தைகளை கோவிலுக்கு நேர்ந்து விடுவது, பொட்டுக்கட்டி விடுவது என்ற வழக்கம் முதலியார், வன்னியர் என்று பல சமுதாய மக்களிடமும் இருந்திருக்கிறது. சாதிய படிநிலையில் ஆதிதிராவிடர்களுக்கும் கீழான நிலையில் இருக்கக்கூடிய கூத்தாடி இனத்தைச் சேர்ந்த பெண் குழந்தைகளையும் பொட்டுக்கட்டிவிடுவது வழக்கமான ஒன்றாக இருந்திருக்கிறது. அப்படி பொட்டுக்கட்டி விடப்பட்டவர்தான் செடல். அவருடைய அத்தையும் பொட்டுக்கட்டி விடப்பட்டவர்தான்.

இசை வேளாளர் இனத்தை சார்ந்த பெண்களை பொட்டுக்கட்டி விடப்பட்டது ராஜாக்கள் கட்டிய பெரிய கோயில்களுக்கு. முதலியார், வன்னியர், ஆதிதிராவிடர், கூத்தாடி, தொம்ப இனத்துப் பெண்கள் பொட்டுக்கட்டிவிடப்பட்டது கிராமத்து தெய்வமான செல்லியம்மன் என்ற சாமிக்கு. இந்த சாமிக்கு பெரிய கட்டடமோ, சொத்துகளோ இருக்காது. திருவிழா சமயத்தில் மட்டுமே கொண்டாடப்பட்டு படையல் போடப்படும் சாமி. பொட்டுக்கட்டிவிடுகிற மரபு தமிழ்நாட்டில் மட்டுமல்ல, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, ஒரிசா என்று பல மாநிலங்களில் இன்றும் நடைமுறையில் இருக்கிறது.

ஒருபக்கம் தேவர்கள், மறுபக்கம் வாலி, சுக்கிரீவன் என்று பாற்கடலில் தேவாமிர்தம் கடைந்தார்கள். கணபதியைத் துதிக்காமல் கடைந்ததால், கோபப்பட்ட கணபதி, அமிர்த குடத்தில் போய் ஈ வடிவில் அமர்ந்தார். அந்தக் குடம் சாய்கையில் வழிந்த அமுதத்திலிருந்து, ஐந்து தேவிகள் பிறக்கிறார்கள். அதில் பார்வதி, சரஸ்வதி லட்சுமியை சிவன், விஷ்ணு, பிரம்மா மணந்துகொள்ள, நான்காவதாக செல்லி அம்மன். வாலியையும் சுக்ரீவனையும் மணந்துகொள்ளச் சொல்கிறார்கள். இரண்டு ஆண்களைத் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று கோபித்துக்கொண்டு தேவலோகத்தில் இருந்து பூமிக்கு வருகிறாள். தேவலோகப் பெண் மானிடர்கள் வாழும் பூமிக்கு வந்துவிட்டதால் மீண்டும் தேவர்கள் வாழும் உலகிற்கு செல்ல முடியாது. அதனால் ஒரு ஏற்பாடு செய்கிறார்கள். கன்னிப்பெண்ணாக இருக்கும் செல்லி அம்மனுக்குத் துணையாக அவளைப்போலவே ஒரு கன்னிப் பெண்ணை ஏற்பாடு செய்கிறார்கள். அதுதான் பொட்டுக்கட்டி விடப்பட்ட பெண்.

சொல்லாமல் அம்மன் கோவிலை விட்டு வெளியேயும் வரக்கூடாது, உள்ளேயும் போகக்கூடாது. செடல் போன்ற பெண்கள் இல்லாமல் செல்லியம்மன் கோவில் திருவிழா நடைபெறாது. காலனியில் வாழும் பெண்ணாக இருந்தாலும் செடல் அந்த கோவிலுக்குள் சென்று திருவிழா காலத்தில் தங்கி இருப்பார். சிந்தியதையும் சிதறியதையும் சேர்த்தெடுத்து உருவாக்கியவள்தான் செல்லியம்மன் என்ற ஐதீகக் கதைக்காக பொட்டுக்கட்டி விடப்பட்டவர்தான் செடல்.

செடல் அதிசயமான வாழ்க்கை வாழ்ந்த பெண். அதனால்தான் அவருடைய வாழ்க்கையை நாவலாக எழுதினேன். இது செடலுடைய வாழ்க்கையை மட்டுமே பேசக் கூடிய நாவலல்ல. செடல் போன்று பொட்டுக்கட்டி விடப்பட்ட பல பெண்களுடைய வாழ்வைப் பேசுகிற நாவல்.

என்னுடைய இளமைக் காலத்திலிருந்தே செடலை நான் அறிவேன். அவர் ஆடிய கூத்துகளை எல்லாம் பார்த்திருக்கிறேன். அவருடைய ரசிகனாக இருந்திருக்கிறேன். பொதுவாக செடல் கிருஷ்ணன் வேசம்தான் கட்டுவார். அவருடைய ஆட்டத்தை பார்ப்பதாற்காக ஊரே திரண்டிருக்கும். ஒரு காலத்தில் எனக்கு அவர் ஓர் அதிசயமாக இருந்தார். என் வாழ்நாளில் நான் பார்த்த முதல் நடிகை அவர்தான். என்னுடைய அப்பா இறந்தபோதும், அம்மா இறந்தபோதும் செடல் கர்ணமோட்சம் நாடகத்தில் ஆடினார். ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் நம் நாட்டில் மண்ணோடு மண்ணாக, காற்றோடு காற்றாக, தண்ணீரோடு தண்ணீராக மாற்றியவர்கள் செடல் போன்ற கூத்தாடிகள்தான். அவர்களால் புராண, இதிகாச, சாமி கதைகள் எல்லாம் இன்றும் உயிரோடு இருக்கின்றன.

செடலைப்பற்றி எழுத வேண்டும் என்று தீர்மானித்த பிறகு செடலை வரவழைத்து பல நாட்கள் பேசியிருக்கிறேன். அவருடைய அண்ணன் ராஜலிங்கம், தம்பி பாலுவுடனும் பல நாட்கள் பேசியிருக்கிறேன். தெருக்கூத்தின் அத்தனை விஷயங்களையும் அவர்களிடம் கேட்டிருக்கிறேன். பொட்டுக்கட்டி விடப்பட்டதின் வரலாற்றையும், அதற்கான காரணத்தையும், எந்தெந்த ஊரில் எல்லாம் பொட்டுக் கட்டிவிடப்பட்ட பெண்கள் இருக்கிறார்கள், அவர்களுடைய குடும்பக் கதைகளையும் கேட்டிருக்கிறேன். பேச வைத்து, பாட வைத்து, ஆட வைத்து கேட்டிருக்கிறேன். எங்களுடைய ஊரைச் சேர்ந்த நாடக ஆசிரியர் கோவிந்தனுடைய மகன் குணசேகரனுடன் நாள் கணக்கில் பேசிக் கொண்டிருந்திருக்கிறேன். செடல் நாவலுக்கு பெரிய பங்களிப்பை அவர் செய்திருக்கிறார்.

கடலூர் மாவட்டத்தில் பொட்டுக்கட்டிய பெண்களை சென்று சந்தித்தேன். இறந்துபோன பெண்களுடைய குடும்பத்தார்களை சந்தித்தேன். அதில் கர்ண நத்தம் லட்சுமி முக்கியமானவர். ஒரு விதத்தில் செடல், அவருடைய சகோதரர்கள், குணசேகரன், கர்ண நத்தம் லட்சுமி போன்றவர்களால் எழுதப்பட்ட நாவல்தான் செடல்.

செடல் நாவலல்ல. தமிழ் சமூக வாழ்வின் ஒரு பகுதி. என்னை எழுத்தாளனாக்கியதில் செடலுக்குப் பெரும்பங்குண்டு. நிஜ வாழ்வைவிட மேம்பட்டதல்ல இலக்கியம்.

ஜனவரி - 2022

logo
Andhimazhai
www.andhimazhai.com