‘ப்ளீஸ் டோண்ட் ஷூட் மீ...'

 ‘ப்ளீஸ் டோண்ட் ஷூட் மீ...'
Published on

இன்று மெக்கார்த்தியிசம் என்று அறியப்படுகிற தகுந்த சாட்சியோ ஆதாரங்களோ இல்லாமல் குற்றவாளியாக நிரூபணம் செய்து தண்டிப்பது என்கிற ஜோசப் மெக்கார்தியின் செயல்பாடு ஒரு கருத்தியலின் குறியீடாக மாறியுள்ளது. மன்னராட்சிகளிலும் சர்வாதிகாரத்திலும் அத்தகைய நிகழ்வுகள் சர்வசாதாரணமான விஷயமே.

ஆயினும் ஜனநாயக நாடான அமெரிக்காவை கட்டிப்போட்ட மெக்கார்த்தியிசமும் இந்தியாவை ஸ்தம்பிக்க வைத்த எமர்ஜென்சியும் சுதந்திரத்திற்கு தடை விதிப்பதென்பது எல்லாவிதமான ஆட்சிகளின் அதிகாரமையத்திற்கு அருகாமையில் இருக்கும் அவாவாக இருப்பதை உணர்த்துகிறது.

சினிமா படங்களை தடைசெய்வது என்பது இதன் வெளிப்பாடாகும். சினிமாப்படங்கள் தடை செய்யப்படுவது பலவிதங்களில் நாம் சில கருத்துகளின் வெளிப்பாடுகளுக்கு ஒரு சமூகமாக அஞ்சுவதையும் நமக்கு வேண்டியதே எல்லோருக்கும் ஏற்புடையதாக இருக்கவேண்டும் எனும் குறுகிய நோக்கத்தினால் உந்தப்படுவதையும் காண்பிக்கிறது.  இதை தணிக்கை வாரிய நிறுவனத்தின் வரலாற்றிலிருந்து நாம் அறிந்துகொள்ளலாம். தொப்புளையும் மார்பகங்களையும் ஆபாசமாக காட்டுவதாக காட்சியை கத்திரிக்கும் அதன் உறுப்பினர்கள், உடலில் உள்ள குறைகளை அது எத்தகையதாயினும் கிண்டல் அடிப்பதையும் காமெடி என்கிற பெயரில் சுயமரியாதையற்ற ஒரு சக கதாபாத்திரத்தை சிருஷ்டிப்பதையும் கண்டுகொள்வதில்லை.

சினிமாப் படங்கள் தடைசெய்யப்படுவதும் பிறகு சில வெட்டுகளுடன் ரிலீஸ் செய்யப்படுவதும் சகஜமான விஷயமாக ஆகிவிட்டது. தமிழ்நாட்டில் அண்டைய மாநிலமான கேரளாவைப் போல கலைப்படங்களின் (அரவிந்தன், அடூர் கோபால்கிருஷ்ணன், ஜான் ஆபிரஹம் போன்ற இயக்குநர்களின்) வரலாறு இல்லை என்று புகார் சொல்பவர்கள் சென்சார் போர்டின் போக்கையும் அதன் சரித்திரத்தையும் கணக்கில் கொள்ளவேண்டும். சமீபத்தில் லீனா மணிமேகலையின் செங்கடல் சென்சார் போர்டின் பலவித கிடுக்கிப்பிடிகளுக்கு ஆளாகியது. லீலா சாம்ஸன் போன்ற ஒரு உன்னத கலைஞர் அச்சமயம் அங்கிருந்ததால் அது மேல்முறையீட்டுக்குச் சென்று தப்பித்தது. ஆயினும் பலவித கஷ்டங்களுக்கு நடுவில் எடுக்கப்படும் இததகைய சிறிய பட்ஜெட் சுயாதீன படங்களை நசுக்குவது வருத்தத்திற்கு உரிய செயலே. உதாரணத்திற்கு அந்த காலத்தில் புதிய இந்திய சினிமா எனப்படுகிற 1970களின் மைய நீரோட்ட சினிமாவிற்கு மாற்றாக வந்த அலையில் பெனெகல், நிஹலானியின் படங்களை சென்சார் போர்ட் தணிக்கை செய்த விதமும் மையநீரோட்ட சினிமாவை அணுகிய விதத்திலும் பெரிய மாறுதல் இல்லாவிடினும் ஒரு நுண்ணிய வித்தியாசம் இருந்தது. ஆயினும் அவர்களும் தங்களுடைய பலபடங்களுக்கு சர்டிபிகேட் வாங்குவதில் இருந்த பதட்டங்களைப் பற்றியும் அளவுகோள்களின் தெளிவின்மைப் பற்றியும் நேர்காணல்களில் கூறியுள்ளார்கள். நிஹலானியின் ஆகச்சிறந்த படைப்பான தமஸ் தேசிய ஒளிப்பரப்பு செய்யப்படக்கூடிய தருவாயில், எதிர்ப்பைச் சந்தித்தது. தில்லியில் பாஸ்கர் கோஷ் அன்றைய காலகட்டத்தில் தூர்தர்ஷனின் இயக்குநராக இருந்ததினால் அவர் துணிந்து ஒளிபரப்பினார். இவ்வாறு முக்கியமான நமது வரலாற்றின் இருண்மையை சுட்டும், நமது மனச்சாட்சியை சுட்டெரிக்கும்  நாட்டுப் பிரிவினையை மையமாகக் கொண்ட ஒரு மாபெரும் படைப்பே கூட தனது வெளியீட்டிற்கு யதேச்சையாக நிகழும் ஒரு அற்புதத்தை/அதிர்ஷ்டத்தை தான் நம்பியிருக்க வேண்டியிருக்கிறது.

நான் பூனே இன்ஸ்டிட்யூடில் படிக்கும் பொழுது சென்சார் போர்டிற்கான கருத்தரங்கில் கலந்திருக்கிறேன். அப்பொழுது பெருவாரியான இயக்குநர்கள் ரேட்டிங்கில் வித்தியாசத்தை ஏற்படுத்தி படங்களை வெட்டுகளில்லாமல் வெளியிடுவதற்காக வாதாடினார்கள். பின்னர் விஜய ஆனந்த் அவர்கள் சென்சார் போர்ட் தலைவராக ஆன பொழுது அவரும் சீரிய ஆய்வுகள் செய்து அதே முடிவுக்கு வந்தார். மேற்குலகைப் போல போர்னோகிராபிக்குக்கூட ஊருக்கு வெளியே இன்றைய மல்டிப்ளக்சைப் போல ஒரு வெளி உருவாக்குவதைப் பற்றி ஆலோசனை அளித்தார். அத்தகைய போக்கு ரசிகர்கள் மற்ற சினிமாப்படம் பார்க்கவரும் வேளைகளில் சினிமாச் சார்ந்து சீரிய மனநிலையை உருவாக்கி நல்ல படங்களுக்கான வெளியை உருவாக்கும் என்று நம்பினார். முப்பது வருடங்களுக்கு பின் இன்றைய இண்டர்நெட் யுகத்தில் அமரர் விஜய் ஆனந்த் அவர்களின் காலகட்டத்திலிருந்து போர்னோகிராபி எளிதாக வீட்டிற்குள்ளேயே புகுந்து விட்டது. ஆயினும் படங்களின் தரத்திலோ சென்சார் போர்ட் கத்திரிக்கோல்களை வைத்துக் கொண்டு கல்சர் போலீசாகப் போடும் கபட நாடகத்திலோ எந்தக் குறையும் இல்லை. இன்றும் இளம் இயக்குநர்கள் முத்தக்காட்சிகள் வைத்து ஏ சர்டிபிகேட் கிடைத்தால் டெலிவிஷன் மூலம் வருவாய் குறையும் பட்சத்தில் தயாரிப்பாளர்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டும். ஆகையால் ஒரு ஆபாசமான ஐட்டம் சாங்கை வைத்துக் கொள்ளலாம். அதுவே நமது பண்பாட்டுக் காவலர்களுக்கும் அவர்களை இயக்கும் நமது மைய நீரோட்ட கலாச்சாரத்திற்கும் ஏதுவானது என்று நினைக்கிறார்கள். எல்லோருக்குமான கிளர்ச்சியூட்டும் காட்சியை பார்க்கும் ஆர்வத்துக்குத் தீனிபோட்டுவிட்டால், கதையாடலுக்கு ஏற்றவாறு காதல் காட்சிகளில் பார்வையாளர்கள் மனம் லயிப்பார்கள் என்றெண்ணிய அமரர் விஜய் ஆனந்த் அவர்களின் கூற்றும் நம்பிக்கையும் இன்று அதன் அர்த்தமிழந்து விட்டது. 

செக்ஸும் வயலென்சும் சினிமாவின் மைய கச்சா பொருளாக உள்ளது. அதற்கு அறிஞர்கள் பலவித காரணங்களை அடுக்கி உள்ளார்கள். சினிமா சென்சோரியத்தின் (புலனோர்மையின்) ஊடகம் என்றும் ப்ராயிடிய வழியில் ஆழ்மனதின் கூறான கனவு பிம்பங்களின் வழியே ஊடாடக் கூடியது என்றும், ஆகையினால் அதற்கு புலனின்பமும் வன்முறையும் ஆணிவேர்களாக உள்ளன என்று வாதாடும் பலவித சொல்லாடல்கள் தொடர்ந்து நம்மை சூழ்ந்து கொண்டுள்ளன. ஆகையினாலேயே ஆகச்சிறந்த ஆர்ட் சினிமாவிலும் கூட பாலுணர்வும் வன்முறையும் சித்தரிக்கப்படும் விதத்தில் கருத்துமாறுபாடுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. வன்முறையற்ற படங்களின் அரசியல் பற்றிய கேள்விகள் எழுகின்றன. உதாரணத்திற்கு, சத்யஜித் ராயின் படங்கள். பாலுணர்வின் வெளிப்பாடு இல்லாத படத்தின் இயல்பு கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. உதாரணத்திற்கு, மற்றபடி சிறந்த படம் என்று போற்றப்பட்ட கங்கனா ரனாவத் நடித்த க்வீன். (ஆய்வாளர் வெங்கடேஷ் சக்ரவர்த்தியின் முகநூல் பதிவைப் பாருங்கள். அவருடைய கூற்று முற்றிலும் ஒத்துக்கொள்ளக் கூடியதாக இருக்கிறது. செக்ஸைத் தவிர்த்து நட்பை நாடக்கூடிய அளவில்தான் கங்கனாவின் கதாபாத்திரத்தின் சுதந்திரம் கட்டமைக்கப் பட்டிருக்கிறது. கணவனிடமிருந்து விலகியிருக்கும் பெண்ணின் கற்பைப் பற்றிய கரிசனம் அவளை பழமையில் ஊறிய புதுமைப் பெண்ணாகத்தான் சித்தரிக்க உதவுகிறது.) சத்யஜித் ராயின் படங்களில் அரசியலில்லை என்கிற கூற்றை என்னைப் போன்ற பலர் மறுத்திருக்கிறோம்.  இவ்வாறு பிரச்சினை இல்லாமல் படம் எடுப்பவர் என்று எண்ணப்படும் ராய் கூட தமிழ்நாட்டுக்காரராக இருந்திருந்தால் என்னவாகியிருப்பார் என்றெண்ணும் பொழுது மனம் பதற்றமடைகிறது. மசாலா இல்லாத படங்களைப் பார்த்தாலே நமது சென்சார் போர்ட் உறுப்பினர்களுக்கு ஒவ்வாமை ஏற்படும். படங்களைப் பார்க்க வைத்து நாம் அவர்கள் மீது செய்யும் வன்முறையையும் கணக்கில் கொள்ளவேண்டும். வாரத்திற்கு ஐந்து படங்கள் அதில் மூன்று, கதையாடல் மற்றும் தொழில்நுட்பத்தில் டிஎஸ்எல்ஆர் கேமராக்களைக் கொண்டு எந்தவொரு குறிக்கோளுமில்லாமல் பயிற்சிபெற எடுத்த படங்கள் என்றிருக்கும் பொழுது நாம் ஆக்ரோஷம் கொள்ள அங்கு ஒன்றுமில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக மாற்றுக் குரல்கள் என்றாலே அலறி அடித்து அத்தகைய குரல்வளைகளை நசுக்குவதே தேசப்பற்று என்கிற இன்றைய நிலையில் சென்சார் போர்ட் என்பது ஒரு பெரிய அமைப்பின் ஒரு பகுதி. ஆயினும் அது ஒரு முக்கியமான மைய பகுதி.

ஜனநாயகம் என்பது பலகுரல்களின் மூலமாக பலவிதமான கருத்தியல்கள் மூலமாக விமர்சனங்களின் வாயிலாக முன்னேறும் ஒரு வாகனம் என்று கொண்டால் அர்த்தமில்லாத புலணுணர்வும் வன்முறையும் வடிகட்டப்பட வேண்டியதே. வடிகட்டுதல் என்பது நாம் சில அளவுகளைக் கொண்டு நமக்காகச் செய்துகொள்வதாக இருக்க வேண்டும். அது தேவையில்லாமல் காலத்தையும் சக்தியையும் விரயம் செய்விப்பது ஆகையால் அதீத வன்முறையும் பாலியல் வன்மமும் தேவையில்லை அல்லது தேவையுள்ளது என்று நிர்ணயிப்பது ஒரு பெரும் பொறுப்பு. விழுமியங்கள் மனச்சாட்சி சம்பந்தப்பட்ட விஷயம். அத்தகைய வடிகட்டலுக்கு சுயதணிக்கையாக  தணிக்கை குழுவைவிட அது எந்த வகையறாவைச் சார்ந்த படம் எத்தகைய பார்வையா ளர்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்று படமெடுப்பவர்களே ஆலோசித்து தீர்மானித்து சான்றிதழ் கொடுப்பது சிறந்தது. ஆயினும் அதுவும் சிக்கல் நிறைந்த ஒரு வழியே. மைய நீரோட்ட சினிமாவின் கட்டுப்பாடற்ற வன்முறை இன்று பார்த்துப்பார்த்து இயல்பானதாகிவிட்டது. இது பார்க்கும் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது எதிக்ஸ் சார்ந்த விஷயம். இங்கு ஏ சர்டிபிகேட் வாங்கி வணிகத்தை இழக்க முன்வராத சூழலில் சென்சார் போர்ட் எனும் அமைப்பை மட்டும் குற்றம் கூறுவது தவறு. 

ஆயினும் சென்சார் போர்டு பற்றிய விமர்சனம் அது அரசியலை தணிக்கைச் செய்யும் போக்கில் வீரியமும் நியாயமும் கொள்கிறது. இன்று காத்திரமான அரசியல் படங்கள், அன்றைய பராசக்தி, அந்த நாள் அளவிற்குக் கூட வராமலிருப்பது தணிக்கை குழு கை வைத்துவிடுவார்களோ என்ற பயத்தால் மட்டுமே. இப்படிச் சொல்ல முடியாவிட்டாலும் அது ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம். ஆழமான அரசியலைச் சொல்லும் படத்தில் ஆரவாரம் இருக்காது ஆகையினால் படம் ஓடாது என்கிற வணிக காரணத்தையும் கருத்தில் கொள்ளவேண்டும். இடதுசாரிகள் காத்திரமாக ஆட்சி செய்த காலகட்டத்தில் வங்காளத்திலும் கேரளாவிலும் மிக முக்கியமான அரசியல் படங்கள் வந்ததற்கு மிருணாள் சென், ஜான் ஆபிரஹாம் போன்ற ஆளுமைகளே சான்று. இந்தியில் கிஸ்ஸா குர்ஷிக்கா (ஒரு நாற்காலியின் கதையாடல்) என்கிற படம் எமர்ஜென்ஸியை விமர்சித்ததால் தடை விதிக்கப்பட்டு பிரபலமாகியது. ஆயினும் அது சினிமா என்ற அளவில் மிகச்சாதாரணமானது.

செக்ஸ் சார்ந்த நமது இலை மறைவு காய் மறைவு அணுகுமுறை தணிக்கைமுறையிலும் குழப்பமாக பிரதிபலிப்பதாகக் கொள்ளலாம். அதற்கு விலை கொடுப்பவர்கள் நடிகைகளும், குறிப்பாக, துணைநடிகைகளும்தான். நடிகைகள் அட்டைப்படங்களை ஆக்கிரமிப்பது உலகளாவிய போக்கு. ஆயினும் எண்ணற்ற வாராந்திரப் பத்திரிகைகளின் அட்டைப்படங்களில் தொடர்ந்து நடிகைகள் தோன்றுவது நமது பொதுஜன கலாசா ரத்தில் நடிகைகளின் முக்கியத்துவத்தைச் சொல்கிறது. ஆயினும் அன்றைய இந்துநேசனிலிருந்து இன்றைய உலகமயமாதலின் குறியீடான இண்டெர்நெட் வரை பார்த்து/உபயோகித்து தூக்கி எறிந்துவிடும் பண்டமாகவே அவர்களைப் பார்க்ககூடிய ஆணாதிக்கப் பார்வையில் எந்த மாற்றமும் இல்லை. அதன் பிரதிபலிப்புத்தான் அரைகுறையாக உடம்பை மறைப்பதில் உள்ள கண்ணாமூச்சி விளையாட்டிலும் அதன் மையத்திலுள்ள வக்கிரத்திலும் மனம் லயித்திருக்கும் சென்சார் போர்டும் அதன் தணிக்கை சார்ந்த செயற்பாடும். பாலியல் வன்முறை என்பது செக்ஸிலிருந்து ஆணாதிக்க ஜாதி மதம் சார்ந்த அரசியலாக விரிகிறது. அங்கு பாலுணர்வும் வன்முறையும் ஆணாதிக்க அரசியலும் ஒரு புள்ளியில் சந்தித்துக் கொள்கின்றன. அரைநிர்வாணத்தை அலசும் சென்சார் போர்ட் அத்தகைய வன்முறையை அலசுகிறதா என்று தெரியவில்லை. யூ சர்டிபிகேட் படங்களிலுள்ள பாலியல் வன்முறைக் காட்சிகளைப்பாருங்கள். ஏ சர்டிபிகேட்டுடன் வரும் பருத்திவீரன் போன்ற படங்களின் க்ளைமேக்ஸ் நம்மை உறைய வைத்து நமது பண்பாட்டின் மையத்திலுள்ள இருண்மையின் மேல் ஒளிப்பாய்ச்சுகிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஜாதியின் தோளில் தாண்டவமாடும் ஆணாதிக்கமும் காமமும் பெண்ணுடலின் மேல் அது எழுதத் துடிக்கும் (வீரியமற்ற) எதிர்ப்பும் வன்மமும் கற்பு என்பது செய்ற்கையாகக் கற்பிக்கப் பட்ட ஒன்று என்று அன்று பெரியார் கூறியது இன்றைய தமிழ்நாட்டில் காற்றில் கரைந்துவிட்டதைக் கூறுகிறது. 

அரசியல் ரீதியாக உலகளாவிய அளவில் சினிமாக் கலைஞர்கள், குறிப்பாக ஆவணப்பட ஆளுமைகள் கொலை செய்யப்பட்டதும் நாடு கடத்தப்பட்டதும் தங்களது கருத்தியலால் சிறையிலடைக்கப்பட்டதும் அன்றிலிருந்து இன்றுவரை தொடரும் ஒரு சோகமான உண்மைதான். ஹவர்ஸ் ஆப் த பர்னாஸஸ்(Hours of the Furneces )  இயக்குநர் பெர்னாண்டோ சோலானாஸ் மற்றும் ஆந்த்ரே தார்கோவ்ஸ்கியின் வாழ்வு இதற்கு சான்று. ரஷ்யாவை சுற்றி அதன் மக்கள் கலாச்சாரம் கலை வரலாறு என்பதில் மையம் கொண்ட தார்கோவ்ஸ்கி கடைசி இரண்டு படங்களான் நாஸ்டால்ஜியா (1983) மற்றும் த சேக்ரிபைஸ் (1986) தனது கலை ஆன்மாவிலிருந்து துண்டிக்கப்பட்ட கலைஞனின் ஏக்கத்தை கவிதையாக வடிக்கின்றன. க்ரிஸ் மார்க்கரின் உந்துதலுடன் பேட்ரிக் கஸ்மன் இயக்கிய மூன்று பாகங்கள் கொண்ட ஆவணப்படமான பேட்டில் ஆப் சிலீயில் அதன் முதல் பாகத்தில் தனது கேமராவை இயக்கிக் கொண்டிருக்கும்  போதே குண்டுப்பட்டு சரியும் ஒளிப்பதிவாளரின் ஷாட் இருக்கிறது. அதைப் போலவே ஆவணப்படங்களில் பெண் இயக்குநர்களுக்கான வெளியை தனது படமான ஹார்லன் கௌண்டி யூஎஸ்ஏ (1976) மூலமாக விரிவு செய்த பார்பரா காப்பலின் குரல் என்றென்றும் காதில் கேட்டவாறே உள்ளது: தனது காரை நோக்கி துப்பாக்கியுடன் இரவில் வரும் நிலக்கரி சுரங்கத்தின் உரிமையாளர்களால் நியமிக்கப்பட்ட ரௌடியிடம், ‘ப்ளீஸ்...டோண்ட் ஷூட் மீ... ப்ளீஸ் டோண்ட் ஷூட் மீ’ என்று  கெஞ்சும் குரல். ஐம்பது வருடங்களுக்கும் முன்னர் ட்யூக் பவர் கம்பெனியின் தெற்கு மாநிலமான கென்டக்கியின் ஹார்லன் மாவட்டத்தில் இருந்த சுரங்க தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக காப்பல் தனது ஆவணப்படத்தை எடுக்கும்பொழுது மரணத்தை வெகு அருகாமையில் இவ்வாறு நுகர்ந்துள்ளார். நூற்றி எண்பது நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பங்கள் மாதக்கணக்கில் ட்யூக் பவர் கம்பெனியின் அராஜகத்திற்கு எதிராக ஸ்ட்ரைக் செய்ததை அவர்களுடனேயே தங்கி, தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்கும் காப்பல் ஆழமாகப் பதிவு செய்துள்ளார்.

என்ன சொல்ல வருகிறார்கள் என்று கேட்பதற்கு முன்னே தன்னுடன் ஒத்திசையாத குரல்களை அழித்துவிடவேண்டும் என்கிற வன்மம் தடையிலிருந்து கொலையாக விரிகிறது. ஆயினும் இன்றளவிலும் சினிமாவின் அரசியல் சாத்தியங்களை அறிந்த இயக்குநர்கள், முக்கியமாக இளம் கலைஞர்கள், அத்தகைய இடையூறுகளையே வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

காப்பல் 16 எம்.எம். கலர் பிலிமில் ஹார்லன் கௌண்டியை ஷூட் செய்தார்கள். அதன் குறுணிழை நயம் நிலக்கரி மண்ணிற்கும் தொழிலாளர்களின் வாழ்வுக்கும் அருகாமையில் நம்மை இட்டுச் செல்கிறது. அதைப்போலவே இந்தியாவில் அரசியல்-ஆவணப்படங்களில் நிகரில்லாத ஆனந்த் பட்வர்தனின் வரலாறும் பலதடைகளையும் மீறி  மக்களை சென்றடைந்த வரலாறே. இன்றைய டிஜிடல் சினிமா செல்லூலாயிட் போன்று அத்தகைய க்ரெயினி டெக்ஸ்சரை நமக்கு கொடுக்காவிட்டாலும் போஸ்ட் புரொடக்‌ஷனில் அதை செய்து கொள்ளலாம்-பிலிம் ரோலைப் போல இல்லாவிட்டாலும் அதற்கு நிகரான ஒன்றை செய்து கொள்ளலாம். மற்றும் இந்தியாவில் பிலிம் ரோலில் எடுத்தவரை கடைசியாக படம் லேபுக்குப் போகும். புனைவுப் படங்களைப் பொறுத்தவரை அஙகிருந்து சென்சார் சர்டிபிகேட் அப்புறம் ரிலீஸ் என்ற நிகழ்முறையினால் அரசின் கட்டுப்பாடும் அடக்குமுறையும் எளிதாக இருந்தது. இன்றைய டிஜிடல் யுகம் அதைத் தகர்த்துள்ளது. இத்தகைய மாற்றுவெளிக்கான சந்தர்ப்பம் நிறைந்த இன்றைய காலகட்டத்தில் உணர்வுபூர்வமான எதிர்வினைகள் மிகுந்த படங்களைத் தவிர ஆழமான அரசியல் படங்கள் அதற்குரிய அழகியலுடன் அரிதாகவே வந்துகொண்டு இருக்கின்றன.

ஏப்ரல், 2017.

logo
Andhimazhai
www.andhimazhai.com