போராட்டங்களின் அரசியல்

Published on

யுத்தம் நடந்து கொண்டிருந்த கடுமையான நேரம். சிங்கள படைகள் முன்னேறி கிளிநொச்சியை கைப்பற்றத் துடித்துக்கொண்டிருந்த நேரம். கிளிநொச்சியோ போராளிகளை சுமந்துகொண்டு சமராடிக்கொண்டிருந்தது.

2008 - செப்டம்பர் இறுதியில் அந்த தமிழீழ வீர மண்ணில் நானும் போராளிகளோடு நின்ற நேரம். மிக உயர்ந்த நோக்கத்திற்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள். சிங்கள ஆதிக்கத்திற்கு அடி பணியாமல் களமாடிக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் இடம் பெயர்ந்து மூட்டை முடிச்சுகளோடு கடந்து கொண்டிருந்தார்கள். இந்த சூழலில் ஒரு மரத்துக்கு அடியில் தளபதி புலித்தேவன் முடி வெட்டி முடித்து, டை அடித்து கொண்டிருந்தார். எனக்கோ அதிர்ச்சியாக இருந்தது. இப்படியான நெருக்கடியான காலத்தில் இதுவெல்லாம் தேவையா என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டு அவர் முன்பு நானும் தமிழீழ காவல்துறை பொறுப்பாளர் தளபதி இளங்கோவனும் நின்றோம். நான் பார்ப்பதை புரிந்து கொண்ட தளபதி புலித்தேவன், ‘ என்ன வன்னி டை அடிப்பது வேடிக்கையாக இருக்கா. எங்கட தலைவர் எமக்கு முதலில் கத்துக்  கொடுத்தது அக ஒழுக்கமும் புற ஒழுக்கமும் தான். இந்த ஒழுங்குகளை சாகும் போது கூட நாங்க கடை பிடிப்போம்’ என்று அவர் கூறியது ஆச்சர்யமாக இருந்தது. ஏனென்றால், நாளையோ நாளை மறுநாளோ சாவு அவர்களை தின்னக் காத்துக்கொண்டிருக்கும் சூழலில் கூட அந்த தலைவன் கற்று கொடுத்த ஒழுங்குகளை போராட்டக்களத்தில் கடைபிடிப்பது ஆச்சரியமாக இருந்தது. பிரபாகரன் சிங்கள இன வெறியர்களால் கொல்லப்பட்டதாக புகைப்படங்களை வெளியிட்ட போது, இந்த யுத்தக்களத்தில் தலைவர் இப்படி முகம் மழித்து நீட்டாக இருப்பாரா? என்று கேள்விகளை பலர் தொடுத்த போது எனக்கு புலித்தேவன் தான் நினைவுக்கு வந்தார்.

இன்றைக்கு போராட்டங்கள் உலகம் முழுக்க தீவிரமடைந்து கொண்டிருக்கின்றன. ஆதிக்கத்துக்கு எதிராக, சுரண்டலுக்கு எதிராக, ஒடுக்குமுறைக்கு எதிராக போராட்டங்கள் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

வளரும் நாடான இந்தியாவில் போராட்டங்கள் கூடுதலாகி கொண்டிருக்கிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. தமிழகத்தில் மட்டும் கடந்த ஓராண்டில் 580 க்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடைபெற்றதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது.

ஆனால் இத்தகைய போராட்டங்கள் அறத்தோடும் நியாயத்துக்காகவும் நடக்கிறதா என்பது தான் கேள்வி?

ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் முன்னெடுத்த போராட்டம் என்பது தமிழினத்தின் வலிமையையும் போர்க்குணத்தையும் உலகுக்கு எடுத்துக்காட்டியது. உணர்வுபூர்வமாக முன்னெடுத்த அந்த போராட்டம் தமிழர்களின் பண்பாட்டைப் பாதுகாக்கவும் திணிக்கப்பட்டுவரும் அந்நிய பண்பாட்டை தடுத்து நிறுத்தவுமாக  அமைந்ததாக தமிழ்த்தேசியவாதிகள் என்று சொல்லிக்கொள்வோர் பெருமையடித்துக்கொண்டனர். உண்மையிலேயே அந்த போராட்டம் அறத்துக்காக நடந்ததா என்றால் மாற்றுக்கருத்து இருக்கத்தான் செய்யும்.

முள்ளிவாய்க்கால் மண்ணில் லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது எழாத தமிழின ஓர்மை ‘மாட்டுக்கான அரசியலில்’ எழுந்தது கண்டு உலகமே ஆச்சரியப்பட்டது. ஆந்திர செம்மரக்காடுகளில் 50 க்கும் மேற்பட்ட தமிழர்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்ட போது வராத கோபம் ஜல்லிக்கட்டுக்காக வருவதன் பின்னணி அரசியலை நாம் கேள்வி எழுப்ப வேண்டியிருக்கிறது.

மக்கள் கொத்துக்கொத்தாக கொன்றழிக்கப்பட்ட சூழலில், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் ‘இது சிங்களவர்களுக்கும் சிறுபான்மை இந்துக்களுக்குமான போர்’ என்று அறிவிக்குமாறு இந்தியாவிலிருந்து அழுத்தங்கள் வந்த போதும், ‘இது சிங்கள பவுத்த பேரினவாதத்துக்கு எதிரான தமிழர்களின் அறப்போர்’ என்று பிரகடனப்படுத்தினார் அவர்.

தமிழினத்தின் மீதான ஒடுக்குமுறை, அடக்குமுறைகளை எதிர்கொள்ள நுட்பமான அரசியல் புரிதலோடு பார்க்க வேண்டியிருக்கிறது. போராட்டக்களத்தில் முதலில் வெளிப்படைத் தன்மையான அறம் தேவை. அந்த அறமே போராட்டக்காரர்களின் வீரமும் வெற்றியுமாகும்.

(வன்னி அரசு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலர்)

மே, 2017.

logo
Andhimazhai
www.andhimazhai.com