‘பொழைக்க வந்தவன தான்யா இந்த மெட்ராஸ் வாழவைக்குது’

‘பொழைக்க வந்தவன தான்யா இந்த  மெட்ராஸ் வாழவைக்குது’
Published on

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்... இங்கே மெதுவா போறவங்க யாருமில்ல ‘ என்று பாட்டெழுதிய கவியரசர் இன்றிருந்தால் எப்படி எழுதுவாரோ ?

இத்தனைக்கும்  அப்போதைய மெட்ராஸ் ஒரு பெரிய கிராமமாகத்தான் இருந்தது. விமான நிலையம், இரயில் சந்திப்புகள், சட்டமன்றம், பொது மருத்துவமனை, துறைமுகம், இசை மற்றும் நாடக அரங்குகள், சினிமா ஸ்டுடியோக்கள், பத்திரிகை அலுவலகங்கள் ‘மாநில தலைநகர் என்ற பெயர் & இவைகளை பதக்கங்களாக அணிந்த பெரிய கிராமம் அப்போதைய மெட்ராஸ் .

ராணுவத்தை சந்திப்பேன் என்று எம்.ஜி.ஆர் பேசிய தி.மு.க மாநாட்டுக்கு நான் சின்னப்பையனாக போயிருந்தேன். அசோக் நகரில் நடந்தது, கண்ணுக்கெட்டிய தூரம் வரை குடியிருப்புகள் ஏதும் கண்ணில் படவில்லை, அவ்வளவு ஏன் அமுத கானத்தில் பழைய கருப்பு வெள்ளை பாடல்கள் ஒளிபரப்பாகியபோது எங்கள் கல்யாணம், கலாட்டா கல்யாணம் பாடல் வரும் போது உள்ளே கவனியுங்கள் நடிகர் திலகமும், ஜெயலலிதாவும் பாடிக்கொண்டே அண்ணா நகர் டவரில் ஏறி உச்சிக்கு போவார்கள். உச்சியில் அவர்கள் தலைக்கு மேலிருந்து அவர்களின் பாயிண்ட் ஆப் வியூ ஷாட்டாக ஒரு காட்சி வரும் 360 டிகிரியில் காமிரா சுழன்று அண்ணாநகரை காட்சிப்படுத்தும். சுற்றிலும் மருந்துக்கு கூட ஒரு வீடு இருக்காது, அதுதான் அறுபதுகளின் அண்ணா நகர்.

வயல் வரப்புகள் மீது தான் சைக்கிள் ஓட்ட பழகினோம். இப்பொழுது நேஷனல் ஜியாகிரபி சானலில்  பார்க்கிற எல்லா சூழலியலும் நுண்ணுயிர்களும் வீட்டைச்சுற்றி இருந்தன.

சென்னையின் பிரதான வீதிகள், நெரிசல் மிக்க தெருக்கள், வணிக அங்காடித்தெருக்கள் என்று அறியப்படும் எல்லா தெருக்களிலும் ஈச்ச மரங்கள், புளிய மரங்கள், பனைமரங்கள், வேப்பமரங்கள், புங்க மரங்கள்,அடர்ந்து இருந்தன. அந்த மரங்களில் பேய்களும் மோகினிகளும், வாடகையில்லாமல் குடியிருந்தன. இரவுகளில் நரிகள் கூட்டமாக வந்து ஊளையிடும்,  ஊர் மையங்களில் இருந்த திடல்களிலிருந்து சிம்ம கர்ஜனைகள் கேட்கும், தீப்பொறிகள் அணுகுண்டுகள் வீசி கொடையென Cizx பேச்சாளர்கள் வாக்காள பெருமக்களுக்கு பூசை வைத்ததில் நரிகள் காணாமல் போயின , தாமஸ் ஆல்வா எடிசனின் புகழ் பரவலில் காணாமல் போன பேய்களும் மோகினிகளும் 50 வருடங்களுக்கு பின் தொலைக்காட்சி தொடர்களுக்கு வந்து விட்டன. அம்மா என்னை ரிக்ஷாவில் அமர வைத்து ‘கர்ணன்  ‘ திரைப்படம் பார்க்க அழைத்துப்போன சயானி திரையரங்கம் இப்போது குடியிருப்பு அடுக்ககம்.

எட்டாங் கிளாஸ் பி பிரிவு வரை ஸ்கூல் வாசலில் வலபுரங்காய், கொரக்கலிக்காய், எலந்தபழம், கலாக்காய், மிளகாய் தூள் தடவிய மாங்காய்களுக்கு பாகப்பிரிவினை கேட்ட ஜாய்ஸ் பரிமளா, அதற்கப்புறம் தாவணிப்போட்டு பங்கு சந்தையில் கோடிக்கணக்கில் முதலீடு செய்தவள் போல எங்களை அலட்சியப்படுத்த, அவள் குடும்பத்தோடு எம்.ஜி.ஆர் படம் பார்க்க போகும் ‘ மோகன்' திரையரங்கம் எங்கள் வயசுப் பையன்களுக்கு புனிதஸ்தலம் ஆகிவிட்டது. அந்த இடத்தில் இப்பொழுது இருப்பது வணிக வளாகமா, உண்டு உறைவிடப்பள்ளியா என்று நண்பர்களுக்குள் பட்டிமன்றம் நடக்கிறது.

அப்பொழுதெல்லாம் ரப்பர் பந்தை வைத்துக் கொண்டு ஊர் ஊராக போய் கால்பந்தாட்ட போட்டிக்கு சவால் விட்ட ஹேமநாத வீரமுத்து இப்பொழுது திரிபலா சூரணம் மூட்டு வலிக்கு கேட்குமா என்று விசாரிக்கிறான், பாவம் அவனின் திமிர் அடக்கிய சிவபெருமானாக வந்தது கிரிக்கெட் அல்லவா? நடைப்பயிற்சி செய்யும் பூங்காவில் குழுவாகி விட்டவர்களில் மதுரை , திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர் ,திருச்சி என பல மாவட்டத்துக்காரர்களும் இருக்கிறார்கள், முப்பது வருட கடின உழைப்பு, ரசனைகளை தியாகம் செய்த சேமிப்பு என வாழ்வை அர்த்தமுள்ளதாக்கி சொந்தவீடு வாங்கி விட்டார்கள். சென்னையில் பிறந்து சென்னையிலேயே வாழ்கின்ற தன்னால் ஒரு அறுநூறு சதுர அடியை வாங்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் வாடகை வீட்டில் வசிக்கின்ற இளங்கோவன் ‘பொழைக்க வந்தவன தான்யா இந்த மெட்ராஸ் வாழவைக்குது' என பொறுமினார், திருநெல்வேலியில் பிறந்து சென்னைக்காரராகிவிட்ட தமிழாசிரியர் நவனிதம் விவேக சிந்தாமணியில் இருந்து ஒரு பாட்டை ராகத்தோடு பாடினார். ‘தாமரையின் தேன், குளத்திலே இருக்கும் தவளைக்கும் தெரியாதாம்; எங்கிருந்தோ வந்த வண்டுதான் அந்த தேனை சுவைக்குமாம்!' அர்த்தம் எல்லோருக்கும் புரிந்தது, இளங்கோ தன் காது மெஷினை அந்த நேரத்தில் நழுவ விட்டது தற்செயலா, தன் முயற்சியா தெரியவில்லை.

ஆகஸ்ட், 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com