கல்கி.ரா. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னியின்செல்வன் கல்கியில் முதன்முதலாக 1950-55களில் வெளியாகிக் கொண்டிருந்த காலத்தில் நான் பிறந்தேன். என் தந்தையார் சு.ஆதிமூலம் கல்கியை வாங்கி தன் நண்பர்களுக்கு உரத்த குரலில் படித்துக்காட்டுவார். அவரது உள்ளம் கவர் உயரிய புதினமாக பொன்னியின் செல்வன் விளங்கியதால் எனக்கு வந்தியத்தேவன் என்று பெயர் சூட்டினார்! என் இரண்டு தங்கைகளுக்கும் அவர் இட்ட பெயர்கள் பூங்குழலி, குந்தவை.
நான் பயின்ற கல்விச்சாலைகளில் வந்தியத்தேவன் என்ற பெயரில் வேறு எவரும் இல்லை. எனவே எளிதில் மற்றவர்களிடம் அறிமுகமானேன். இந்தப் பெயரில் உள்ள வேறொருவர் செய்த தவறுக்காக என் மீது புலனாய்வுத் துறை விசாரணை நடத்தப்பட்டதையும் இங்கே குறிப்பிடவேண்டும்.
பொன்னியின் செல்வனின் முதல் பாகமான புது வெள்ளத்திலே, ‘ஆடித்திருநாளில்’ ஆடித்திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை நேரத்தில் அலைகடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிப வீரன் குதிரை ஏறிபிரயாணம் செய்து கொண்டிருந்தான். அவன் தமிழகத்து வீரசரித்திரத்தில் புகழ் பெற்ற வாணர் குலத்தை சேர்ந்தவன். வல்லவரையன் வந்தியத்தேவன் என்பது அவன் பெயர் என்று தான் வந்தியத்தேவனை கல்கி நமக்கு அறிமுகம் செய்து வைப்பார். காஞ்சி நகரின் புதிய பொன் மாளிகையில் இளவரசர் ஆதித்த கரிகாலர் இரண்டு கடிதங்களை வந்தியத்தேவனிடம் கொடுத்து, அவைகளை தன் தந்தையிடமும், சகோதரியிடமும் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளும்போது, வந்தியத்தேவா நீ சுத்த வீரன் என்பதை நான் அறிவேன். அத்துடன் நீ நல்ல அறிவாளி என்று நம்பி இந்த பொறுப்பை ஒப்படைக்கிறேன் என்று குறிப்பிடுவார். அதனை செய்து காட்டி தனது ஆற்றலை நிருபிக்கும் செயல் மறவன் தான் வந்தியத்தேவன்!
பொன்னியின் செல்வன் புதினத்தின் ஐந்து பாகங்களிலும் வந்தியத்தேவன் நீக்கமற நிறைந்திருப்பான். அவனது காதல் உணர்வுகள் நம் நெஞ்சத்தில் இன்பத்தை கிளர்ந்தெழச்செய்யும்! அஞ்சாநெஞ்சுடன் எதிரிகளுடன் களமாடும் அவனோடு நாமும் தொடர்ந்து நடப்போம். ஆழ்கடலில், காடுகளில், இருண்ட சுரங்கங்களில்,
சதியாலோசனை மண்டபங்களில் அந்த இளைஞனுடன் நடந்த வாசகர்களில் நானும் ஒருவன். ஈழத்தில் அருள்மொழிவர்மனுடன் வாட்போரில் அவன் ஈடுபட்டபோது அதை வேடிக்கை பார்த்தவர்களில் இந்த எளியேனும் ஒருவன். ஆழ்வார்க்கடியான் வைஷ்ணவ வாதத்தில் ஈடுபட வாளுடன் உடன் நின்ற வந்தியத் தேவனுடன் சோழமண்டலத்தின் நிலப்பரப்பில் அலைந்து திரிந்திருக்கிறேன்.
பொன்னியின் செல்வனின் இறுதியில் ‘மலர் உதிர்ந்தது’ என்ற அத்தியாயம் மிக சோகமானது. தன்னை உயிரினும் உயிராக நேசித்த மணிமேகலை மரணப்படுக்கையில் கிடக்கிறாள். அவனை கடைசியாக காண வருமாறு அண்ணன் கந்தமாறன் ஓலை கொடுத்து அழைக்கிறான். வீர நாராயண ஏரிக்கரையில் முதல் காட்சியில் வீர உலா வந்த வந்தியத்தேவன் இப்போது அதே பகுதியில் கவலையுடன் குதிரையில் பயணமாகிறான். நிறைவு காட்சியில் அவன் மடியில் மணிமேகலை உயிரை விடுவதை துயரத்துடன் எழுதுவார் கல்கி. “வேடிக்கையும் விளையாட்டும் ,குறும்பும் குதூகலமும், துணிவும், துடுக்கும், துணிச்சலும் உருக்கொண்டவனாக இருந்த வந்தியத்தேவன் இனி நாம் காணப்போவதில்லை. கனிந்த உள்ளமும், கருணையும் வந்தியத்தேவனை அந்தக் கணத்தில் வந்து அடைந்தன“ என்ற கல்கியின் வரிகளைப் படிக்கையில் தொண்டை அடைக்கும். பண்பாட்டுப் பெருமகனாய் கல்கி வந்தியத்தேவனை அடையாளம் காட்டுகிறார்.
“என் மனதை வரித்துக்கொண்ட பெயர் தாங்கிய ஒரு இலட்சிய இளைஞரை 25 ஆண்டுகளுக்கு முன்னர் நான் சந்தித்தேன். அவர் தான் அறிவாசான் தந்தை பெரியாரின் கருத்துப்பட்டறையில் வார்ப்பிக்கப்பட்ட இலட்சியப் போர்வாளான வந்தியத்தேவன் ஆவார் ” என்று எனது ஒரு நூலுக்கான அணிந்துரையில் என்னை அறிமுகம் செய்து வைத்தவர் என் இலட்சியத்தலைவர் வைகோ! அந்த பெருமைக்கும் காரணம் இந்தப் பாத்திரம்தான்!
(ஆ.வந்தியத்தேவன், மதிமுகவின்வெளியீட்டுஅணிசெயலாளர்)
நவம்பர், 2014.