ராத்திரி நேரத்தில் நான்கு நாய்கள் ஒன்றாக ஊளையிட்டாலே நம்மை பயந்து நடுங்கி உச்சா போகுமளவிற்கு செய்து விட்ட தமிழ்ப் பேய் படங்கள். மக்களை பயமுறுத்தி கல்லா கட்டுவது சிறப்பாக அன்றைய காலம் தொட்டே நடந்து வருகிறது.
கறுப்பு வெள்ளை படங்களுக்குப் பிறகு பேய் படம் என்றால் எல்லோருக்கும் நினைவில் வருவது ஜகன் மோகினி (1978) படம் தான். ஒரு ராஜாவால் ஏமாற்றப்பட்ட பெண் மரணமடைந்து பிறகு பேயாக வந்து அடுத்த ஜன்மத்தில் அவனை பழி வாங்கும் கதை. கவர்ச்சி, நகைச்சுவை, பழி வாங்குதல், அந்த காலத்து தந்திரக் காட்சிகள் என்று அனைத்து
அம்சங்களும் விட்டலாச்சார்யாவால் சரியாக கலக்கப்பட்ட படம். வசூலில் சக்கை போடு போட்டது என்பதை சொல்லவும் வேண்டுமா? அதுவும் பேய் அடுப்பில் தன் காலையே விறகாக வைத்து எரிக்கும் காட்சியை மறக்கவே முடியாது.
பஞ்சு அருணாச்சலத்தின் கதையில் உருவான கல்யாணராமன் (1979) கமல், ஸ்ரீதேவி என்ற
நட்சத்திர பட்டாளத்தில் உருவான பழி வாங்கும் பேய்ப் படம். ஒரு வகையில் தமிழில் பேய் படங்களுக்கான டெம்பிளேட் மிகச் சரியாக அமைந்த படம் என்றும் சொல்லலாம். எஸ்டேட் சொத்துக் காக அப்பாவி கமலை மேனேஜர் கும்பல் கொலை செய்ய, இன்னொரு கமல் உடலில் புகுந்து பேய் பழி வாங்கும்.
பஞ்சு அருணாச்சலம் 'திரைத்தொண்டர்' புத்தகத்தில் இப்படிச் சொல்கிறார்: ' உங்க 'கல்யாணராமன்' எனக்கு ரொம்பப் பிடிச்ச படம்ண்ணே. அந்த ஐடியாவை வெச்சு நான் ஒரு கதை பண்ணலாம்னு இருக்கேன். பண்ணிக்கலாமாண்ணே?' என நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் வந்து என்னிடம் கேட்டார். ‘தாராளமா பண்ணிக்கப்பா' என்றேன். மறுநாளும் வந்தார். எனக்கே ஆச்சர்யம், 'வெச்சுக் கங்கண்ணே' என ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்தார். ஆனால், நான் அவரிடம் பணம் எதுவும் கேட்கவே இல்லை. என் எத்தனையோ கதைகளை எடுத்து, மரியாதைக்குக்கூடச் சொல்லாமல் படம் பண்ணுபவர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவரா?!' என்று எனக்கு ஆச்சர்யம்.
'கல்யாணராமன்' கதையை மையமாக வைத்து அவர் எடுப்பதாகச் சொன்ன 'முனி' மிகப்பெரிய வெற்றி. அடுத்து வந்த 'காஞ்சனா'வும் வெற்றி. 'பயந்த சுபாவம் உள்ள ஹீரோ' என்ற ஒரு விஷயத்தைத் தவிர 'கல்யாணராமனு'க்கும் அவரின் படங்களுக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை. அந்த ஐடியாவை வைத்து எடுக்கலாம் என நினைத்து டெவலப் பண்ணும்போது, அது வேறு ஒரு கதையாக மாறிப்போயிருக்கிறது. 'என்னப்பா... என் பட ரைட்ஸை வாங்கிட்டு வேற படங்கள் எடுத்திட்டிருக்க?' என்றேன். 'கல்யாணராமன்' இன்ஸ்பிரேஷனை வெச்சு இன்னும் எத்தனை படங்கள் வேணும்னாலும் எடுக்கலாம்ணே' என்றார் லாரன்ஸ். சந்தோஷமாக இருந்தது.'
கல்யாணராமன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜப்பானில் கல்யாணராமன் (1984) வெளியாகி சரியான வரவேற்பைப் பெறவில்லை. தமிழ்
சினிமாவின் முதல் சீக்வெல் படமும் இதுதான். இன்றைக்கு வரும் அரண்மனை 2, காஞ்சனா 2,3,4 .. எல்லாவற்றுக்கும் முன்னோடி.
எண்பதுகளில் யார் (1985), மை டியர் லிசா (1987) என்று உண்மையிலேயே பயமுறுத்தும் பேய் படங்களும் வந்தன. அழகான நாயகனான மோகனை அகோரமாகக் காட்டிய உருவம்(1991) திரைப்படம் வெற்றி பெறவில்லை. ஆனால் இவையெல்லாம் ஹாலிவுட் பேய் படங்களின் தழுவல்களாக அமைந்ததுதான் சோகம்.
தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த தக்காளி சீனிவாசன் ஹாலிவுட் பட பாதிப்பினால் அதே போல நாளைய மனிதன் (1989), அதிசய மனிதன் (1990) என்று அடுத்தடுத்த இரண்டு பேய் படங்களை எடுத்தார். இறந்து போன மனிதனுக்கு உயிர் கொடுக்கும் மருந்தை ஆராய்ச்சியாளர்கள் செலுத்த அதனால் ஏற்படும் விபரீதங்கள் தான் கதை. இதற்கடுத்து ஓமன் படத்தை தழுவி ஜன்ம நட்சத்திரம் (1991) படத்தையும் இயக்கினார்.
ஜென்மங்களைத் தாண்டி தான் விரும்பிய பெண்ணுக்காக காத்திருக்கும் சசாங்கன் என்கிற பழங்கால போர்வீரனின் கதையான நாசர் இயக்கிய தேவதை (1997) கவனம் பெற்றது. முதல் முப்பது நிமிடங்களில் வரும் பழங்கால காட்சியில் அசத்தி யிருப்பார்கள். ஓவியர் மருதுவின் கைவண்ணம்
சிறப்பாக வெளிப்பட்ட படம். காஷ்மோரா(2016) இதே பாணியில் சிரிப்பு கலந்து வந்த படம்.
2000 க்குப் பிறகான பேய் படங்களின் தொடக்கமாக ரஜினியின் சந்திரமுகி (2005) மீண்டும் திகில்,பேய் படங்களுக்கான வரவேற்பை உறுதிசெய்தது. பாசிலின் மணிசித்திரதாழ் ஜனரஞ்சக இயக்குநர் பி.வாசுவினால் அனைத்து மக்களாலும்
ரசிக்கும்படியான படமாக மாற்றப்பட்டது
சுவாரஸ்யமான விஷயம்.
வழக்கமான பழி வாங்கும் பேயாக இல்லாமல் அதற்குள் இன்றைய அபார்ட்மென்ட் காலத்தில் நடக்கும் விஷயங்களை சரியாகப் பொருத்தி ஈரம் (2009) படத்தைக் கொடுத்தார் அறிவழகன். தவறாக புரிந்து கொள்ளப்படும் பெண் தண்ணீரில் கொலை செய்யப்பட அந்த நீரையே ஆயுதமாக்கி பழி வாங்குவதுடன், தன்னை நிரூபிக்கவும் செய்கிறாள்.
அனுஷ்கா நடிப்பில் அருந்ததி (2009) படமும், மாதவனின் யாவரும் நலம் (2009) படமும் இதே ஆண்டில் வெளியாகி சக்கை போடு போட்டது. அரசர் காலத்துப் பேய் திரும்ப நிகழ்காலத்திற்கு வரும் பழைய பார்முலாவை கச்சிசதமான மசாலா கலந்து அருந்ததியில் பயமுறுத்தினார்கள். இன்றுவரை அருந்ததியின் பார்முலா பேய் படங்களுக்கு பெஞ்ச் மார்க்காக உள்ளது.
பேய் என்றால் பயமுறுத்த மட்டும் தானா? நல்ல பேய் இருக்கக் கூடாதா என்ற கேள்வியுடன் அனந்தபுரத்து வீடு (2010) வந்தது. தன்னுடைய மகனை காப்பாற்ற மறைந்த பெற்றோர் ஆவியாக அலையும் செண்டிமெண்ட் படம் பயமுறுத்தவில்லை. ஆனால் இந்த வகையில் உச்சத்தைத் தொட்டது மிஷ்கினின் பிசாசு (2014). தவறுதலாக தன்னை கொன்றவனைக் காப்பாற்ற அவனுடைய வீட்டிலேயே பிசாசாக வந்து பேய்களுக்கு மன்னிக்கவும் தெரியும் என்ற படம்.
2015-ல் வந்த சூர்யாவின் மாஸ் பழிவாங்கும் பேய்களுடன் நல்லபேய்களையும் காட்டியது. பேய் என்பது தேவதையாகவும் இருக்கலாம்.
முன்னமே சொன்னது போல முனி (2007) படத்திலிருந்து தனக்கான பேய் பட பார்முலா ஒன்றை ராகவா லாரன்ஸ் உருவாக்கிக் கொண்டார். பயந்த சுபாவமுள்ள ஒருவனை காரண காரியத்தோடு பீடிக்கும் பேய் எதிரிகளை ரத்தக் களரியாக்குகிறது. அரசியல்வாதி, திருநங்கை, மாற்றுத்திறனாளி என்று படத்திற்கு படம் பலமான செண்டிமெண்ட் பிளாஷ்பேக்கை வைத்து நகைச்சுவை, கவர்ச்சி, டான்ஸ் என்று பக்காவான கமர்சியல் பாதையில் வரிசையாக ஹிட்டடித்துக் கொண்டிருக்கிறார் லாரன்ஸ். பேய்க்கும் பேய்க்கு சண்டையெல்லாம் வருகிறது. அடுத்து காஞ்சனா 3 வரப்போகிறது.
(விவசாயி சென்டிமென்ட் தான் இப்ப டிரெண்ட்...அதானே?)
டிகே இயக்கிய யாமிருக்க பயமேன்(2014) இந்த பேய் பட வரிசையில் புதிய மாற்றத்தைக் கொண்டுவந்தது. பேய் படத்தில் காமெடி கலந்து கொடுத்தவர்கள், அடுத்த்கட்டமாக பேயையே காமெடி செய்ய வைத்துவிட்டார்கள். வரிசையாக சிரிப்பு மூட்டும் பேய் படங்கள் வந்து மக்களை டரியல் ஆக்கின.
( சிரிப்புப்பேய்கள் பற்றி தனிக் கட்டுரை உள்ளது)
ஆங்கில படங்களிலிருந்து உருவாமல் பேய் படத்திற்கான அத்தனை அம்சங்களையும் சரியாக அமைத்து ரசிகனை சீட்டு நுனியில் உட்கார வைத்த தமிழ் பேய்ப்படங்களாக மாயா (2015), டிமாண்டி காலனி (2015) ஆகிய இரண்டு படங்களையும் குறிப்பிடலாம். சினிமாவுக்குள் சினிமா என்ற பாணியில் மாயா படத்தில் பேய் படத்தை
போட்டிக்காக தனிமையில் பார்க்க ஆரம்பிக்கும் நயன்தாரா வாழ்க்கையில் அந்த படம் ஏற்படுத்தும் மாற்றம் தான் கதை. இயக்குநர் அஸ்வின்
சரவணன் பின்னணி இசை, காட்சியமைப்பு என்று எல்லா விதத்திலும் சிறப்பாக செய்திருந்தார். பெரிய எதிர்பார்ப்பில்லாமல் வெளியான அஜய் ஞானமுத்துவின் டிமாண்டி காலனி நேர்க்கோட்டில் தெளிவாக சொல்லப்பட்ட படம்.
மிருதன் (2016) ஸோம்பி வகையைக் கொண்டுவந்த முதல்படம்.
கடைசியாக ரஜினியின் 2.0 வந்திருக்கிறது. ஒரு பக்கம் பிரமாண்டமான சயின்ஸ் பிக்ஷன் படமாக தோன்றினாலும் 2.0 பேய் படம் தான். பறவை ஆர்வலர் பக்ஷிராஜன் இறந்து பறவைகளைக் காக்க பேயாக செல்போன் வடிவத்தில் வருகிறார். படத்தில் பேயைவிட செல்போன் ரிங்டோன் அதிகமாக பயமுறுத்தியது. 3G டெக்னாலஜியில் பயமுறுத்திய சயின்ஸ் பேய் குழந்தைகளை அதிகமாக கவர்ந்தது. (அப்புறம் விஜய்சேதுபதி நடித்த சீதக்காதி படத்தில் பேயைக் காட்டாவிட்டாலும் அதுவும் பேய் படம்தானே என்று கேட்கிறார் நண்பர் ஒருவர். இந்த வம்பே வேண்டாம் சாமி!)
தற்போது தொலைக் காட்சி தொடர்களில் வரும் பேய்க் கதைகளைப் பற்றி தனிக் கட்டுரையே எழுதலாம்.
'கிராமத்தில் மின்சாரம் வந்ததும் கொள்ளிவாய் பிசாசுகள் காணாமல் போய்விட்டன' என்று கி.ரா கோபல்ல கிராமம் நாவலில் அங்கதமாக
சொல்லியிருப்பார். மனிதனின் பயம் தான் பேய். அந்த பயத்தைப் பயன்படுத்தி சினிமாக்காரர்கள் மட்டுமல்ல பில்லி, சூனியம், ஏவல் என்று பலர் கல்லா கட்டுகிறார்கள்!
பிப்ரவரி, 2019.