பேச்சு ஒரு தவம்!

பேச்சு ஒரு தவம்!
Published on

தமிழருவி மணியனிடம் நான் அறச்சீற்றத்தைப் பார்த்திருக்கிறேன். அவரிடம் இருப்பது ரௌத்ரம். ஆனால் அவர் எப்போதும் சினம் கொண்டதில்லை. சினம் சுயநலத்தின் வெளிப்பாடாய் வருவது. ஆனால் ரௌத்ரம் பொதுநல நோக்கத்தினால் வெளிப்படுவது. வெறும் பாடல்களை மனப்பாடம் செய்து பேசுகிற பேச்சாளர் இல்லை அவர். பாடல் வரிகளுக்கு நடுவில் ஊடுசால் ஓட்டாமல் வாழ்வியல் கருத்துக் களை சேர்த்து பேசுகிற வலுவான பேச்சாளர். ஒரு பேச்சாளருக்குத் தேவை கம்பீரமான தோற்றமும், வலிமையான குரல் வளமும் தான். நாங்கள் தலைநிமிர்ந்து பார்க்கக்கூடிய மூத்தத் தலைமுறை பேச்சாளர்களில் பலர் என்னைக் கவர்ந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டுக்கென்று பேச்சாளர் பரம்பரை இருக்கிறது. என்னுடைய பதினைந்தாவது வயதில் இருந்து வாரியார், கீரன், கீவாஜா, வலம்புரி ஜான், சுகி சிவம், ராதாகிருஷ்ணன், சாலமன் பாப்பையா, தி.மு.அப்துல் காதர் என பேச்சாளர்களின் ஆளுமையான வார்த்தைகளைக் கேட்டு தான் என்னை வளர்த்துக் கொண்டேன்.

இவர்களில் என்னுடைய துறையில் நான் ஆதர்சமாகவும், எனது தகப்பனாகவும், குருவாகவும் வரித்துக் கொண்டது தமிழருவி மணியனை. அதற்கான காரணத்தை அடுக்கிக் கொண்டே போகலாம். அவரிடம் பழகக் கிடைத்த நேரங்கள் குறைவு தான். ஆனால் அவரது பேராளுமை என்னை செலுத்திக் கொண்டே இருக்கிறது.

இவருடைய பேச்சை இரண்டு விதமாக பிரிக்கலாம். இலக்கிய பேச்சு, அரசியல் பேச்சு. இரண்டும் அதற்கேயான தன்மையோடு இருக்கும். அதிலும் அவரது இலக்கியப் பேச்சில் இருக்கிற அதீத சஞ்சாரம் யாருக்கும் அவ்வளவு சுலபமாக கைவந்துவிடாது. பாரதி, கம்பன், கண்ணதாசன், காமராஜர் போன்ற ஆளுமைகள் குறித்து பேசும் ஒவ்வொன்றும் அவரது உயர்ரக கருத்துக்கள். பாரதியைப் பற்றி அவர் பேசுகிறபோது, பாரதியே என் முன் நின்று பேசுவது போன்றதான பிம்பத்தை உருவாக்கியிருக்கிறார். கண்ணதாசனைப் பற்றி தமிழருவி மணியன் பேசிக் கேட்பது ஒரு சுகானுபவம். இலக்கியத்தைப் பேசும்போது காப்பியத்துக்குள் நம்மளை செலுத்தி, கதாபாத்திரத்திற்குள் நம்மை ஊடுருவ வைத்துவிடுவார்.

அரசியல் பேச்சில் எப்போதும் ஒரு அறச்சீற்றம் இருக்கும். அரசியலைப் பற்றியும், சமூக கருத்துக்கள் சொல்லும்போதும், வரலாற்றுப் பிழைகள் இருக்கக் கூடாது. அவருடைய பேச்சில் உங்களால் பிழை கண்டுபிடிக்க முடியாது. ஆஸ்திரேலியாவில் கம்பன் கழக விழாவுக்காக அவருடைய தலைமையில் பேசுவதற்கு சென்றிருந்தேன். பேசுவதற்கு முன் அதற்கான தயாரிப்பை அவர் செய்து கொள்வதை பார்க்கும் வாய்ப்பு அங்கே எனக்குக் கிடைத்தது. மிக நுட்பமாக சிந்தித்து எழுதித் தயாரித்து அதை தவமாக நினைத்து பேசுவது இருக்கிறதே..!அவருடைய அர்ப்பணிப்பு கண்டு வியந்து போயிருக்கிறேன். ஒரு மணிநேரம் பேச வேண்டுமானால் ஐந்து நாட்கள் அதற்காக உழைக்கிறார். அவர் கண்ணதாசன் பற்றி பேசுவதை நான் பத்து முறையாவாது வெவ்வேறு இடங்களில் கேட்டிருக்கிறேன். ஒரு இடத்தில் பேசியதை இன்னொரு இடத்தில் அவர் பேசி நான் கேட்டதில்லை. தன்னுடைய பேச்சில் பழைய கருத்துக்கள் வந்துவிடாமல் இருக்க மெனக்கெடுவார்.

அதேபோல் தலைப்புக்காக அவர் பாடுபடுவது எங்களுக்கெல்லாம் முன்மாதிரி. பாண்டிச்சேரியில் நடந்த விழா ஒன்றில், ‘வருணனை வேண்டி வரம் பெற்றது குற்றம்’ இப்படியொரு அரிய தலைப்பு. என்னப் பேசப்போகிறார், எப்படி நியாயப்படுத்தப் போகிறார் என நாங்கள் எல்லோருமே ஆவலாக இருந்தோம். ஐம்பது நிமிடங்கள் பேசியிருப்பார். சபையில் ஒரு சின்ன சலனம் கூட இல்லை. மக்கள் அப்படியே சொக்கிப் போய் உட்கார்ந்திருக்கிறார்கள். அப்படி ஒரு நாவன்மை. தனது தலைப்புக்கு அவரால் எப்படியாக இருந்தாலும் நியாயம் கற்பிக்க முடியும். இது ஒரு பேச்சாளருக்கு இருக்க வேண்டிய முக்கிய அம்சம்.

அடுத்ததாக அவரிடம் நான் உன்னிப்பாக கவனிப்பது அவருடைய உச்சரிப்பு. வழக்கு மொழியாக பேசுவது பிழையல்ல. சில பேச்சாளர்களின் இயல்பாக இருக்கலாம். ஆனால் நாக்குப்பிரளாமல் பேசுவது ஒரு கலை. ஒரு சொல் கூட மாறாமல், சிற்பத்தை செதுக்குவது போல கருத்துக் களை செதுக்கி, சிற்பியும், சிலையும் ஒன்றாகக் கலப்பது போல, தனது சொற்சஞ்சாரத்தில் அவர் கலந்துபோய்விடுகிறார்.

தமிழருவி மணியனை பேச்சாளர் என்று நீங்கள் சொன்னால் அவர் தீவிரமாக மறுத்துவிடுவார். அவர் ஒரு சிந்தனையாளர். குரல்வளத்தை, மொழி வளமையை ஆயுதமாக பயன்படுத்திப் பேசக் கூடிய, அதோடு எழுத்தாற்றலும் கொண்ட பன்முகச் சிந்தனையாளர்.

யாரைப் பற்றி பேசினாலும் அதீத பாராட்டோ, இழிவுபடுத்தலோ இருக்காது. கண்ணதாசனைப் பற்றி பேசும்போது, அவரைப் பற்றிய முழு தரிசனத்தையும் நம் முன் வைப்பார். தன்னுணர்ச்சியில் அடிமைப்பட்டவரின் நியாயங்களைச் சொல்வதாகவே அது அமைந்திருக்கும்.

மதுஒழிப்பைப் பற்றி அவர் பேசும்போது கூட, ஒழுக்கம் கெட்டுப் போகும் என்கிற கருத்தை விட, மது எப்படி தயார் செய்யப்படுகிறது என்பதாகச் சொல்லி, இப்படிப்பட்ட மோசமான ஒன்றை நாம் பழக்கப்படுத்திக் கொள்வதால் அரசாங்கத்திற்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்ற ரீதியிலேயே அவர் பேச்சு இருக்கும். தனி மனித நலன் என்றில்லாமல், சமூக முன்னேற்றத்திற்கு மது ஒழிக்கப்பட வேண்டும் என்பதே அவரது கருத்து.

ஒரு மனிதன் பணத்தின் மேல் ஆசையே இல்லாமல் இருக்க முடியுமா? தமிழருவி மணியனால் அப்படி வாழ முடியும். உழைப்பாளர், பணம் ஈட்டுபவர் தான். ஆனால் எளிமையானவர். அதற்கு அவர் இரண்டு பேரை ஆதர்சமாக கொண்டிருக்கிறார். ஒருவர் காமராஜர், மற்றொருவர் காந்தி. ஒருமுறை பிரான்சில் நிகழ்ச்சிக்காகப் போயிருந்தபோது, நாங்கள் எல்லாம் பொருட்களை வாங்கி குவித்துக் கொண்டிருந்தோம். இவர் ஒரு பொருளைக் கூட ஏறிட்டும் பார்க்கவில்லை. ‘நான் உங்களை சந்தித்ததிலிருந்து இந்த ஒரு கடிகாரத்தைத் தான் அணிந்து கொண்டிருக்கிறீர்கள்..புதிதாக ஒன்று வாங்குங்கள்’ என்றேன். ‘அறுந்து விழட்டுமேம்மா. அதுவரைக்கும் இருந்து விட்டுப் போகட்டும்’ என்று சொல்லிவிட்டார்.

ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் தமிழருவி மணியன் மௌன விரதம் இருப்பார். அதற்கு ஒருமுறை காரணம் கேட்டேன். ‘என்னை நானே சுயபரிசோதனை செய்து கொள்கிறேன். நான் என்னை விசாரிக்கிற நாள்” என்று சொன்னார்.

ஒவ்வொரு முறையும் மேடை ஏறுவதற்கு முன்பு அவர் தவறாமல் செய்கிற ஒரு விஷயம் மூச்சுப் பயிற்சி. வேதாத்ரி மகரிஷியின் ‘மனவளப் பயிற்சிகளை செய்து விட்டே அந்தந்த நாளைத் தொடங்குகிறார். அதனால் தான் சொல்கிறேன், அவர் வெறும் மேடைப்பேச்சாளராக தன்னை வடிவமைக்கவில்லை. மிகப்பெரும் தவத்தை அவர் ஏற்றிருக்கிறார்.

பெரிய ரசிகர். இந்திப்பாடல்களை விரும்பிக் கேட்பார். மதன்மோகன் இசையும்,, முஹம்மது ரபீக்கும், லதா மங்கேஷ்கர் குரலும் அவருக்கு மிகவும் விருப்பமானவை.

ஒரு குழந்தையிடம் காட்டும் பிரியத்தை தன்னைப் பிடிக்காதவர் களிடமும் கூட அவரால் காட்ட முடியும். மொத்தத்தில் அவரைப் பற்றி நினைத்தவுடன் நெகிழ்ச்சியுடன் எனக்கு நினைவுக்கு வரும் ஒற்றை சொல் அன்பு என்பது. அது தான் அவரை இந்தத் தமிழ்ச் சூழலோடு கட்டிப்போட்டிருக்கிறது.

(ஜா.தீபாவிடம் கூறியதில் இருந்து)   

ஆகஸ்ட், 2013.

logo
Andhimazhai
www.andhimazhai.com