பொதுவுடைமைத் தத்துவத்தின் பிதாமகரான காரல் மார்க்ஸின் அக்கறை விளிம்புநிலையினரின் சமூக விடுதலையை முன்னிறுத்தியது. அரசியல், பொருளாதாரம், சமூகவியல் தளங்களின் பின்புலத்தில் மனித இருப்பினை ஆராய்ந்திட்ட மார்க்சியம், கலை இலக்கியம் சார்ந்த பண்பாட்டுத் தளத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாரம், சுரண்டலுக்கெதிராகப் போராடுகிற மக்களுக்குச் சார்பாகத் தமிழில் எழுதப்படுகிற படைப்புகள் எழுதப்படுவதற்கு மார்க்சியம் அடிப்படையாக விளங்கியது. விளிம்பு நிலையினரின் அன்றாட துயரவாழ்க்கையைப் படைப்புகளில் பதிவாக்குவது, முற்போக்கான அம்சமாகக் கருதப்பட்டது. குறிப்பாகத் தொழிற் சாலை அல்லது பண்ணையை மையமாகக் கொண்டு, அங்கே நிலவும் உற்பத்தி உறவுகளை மார்க்சியக் கண்ணோட்டத்தில் அணுகிப் படைப்பாக்குவது, வலியுறுத்தப்பட்டது. முதலாளி -தொழிலாளி, ஆண்டான்-அடிமை இடையில் நிலவும் வர்க்க முரண்கள் வலியுறுத்தப்பட்டன. அன்றாட வாழ்வில் சோம்பி இருக்கிறவனின் மனதில் அதிர்வை ஏற்படுத்தி, ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து போராடுவதுடன், புரட்சிக்கு ஆயத்தப்படுத்த புரட்சிகர இலக்கியம் அவசியம் என்ற பார்வையானது, தமிழ்ப் படைப்பாளர்களிடம் பரவலானது. சோசலிச யதார்த்தவாதத்தைப் பின்பற்றிய தொ.மு.சி.ரகுநாதன், பஞ்சாலைத் தொழிலாளர் வாழ்க்கைப் பிரச்சினைகளை முன்வைத்து எழுதிய பஞ்சும் பசியும்(1951) நாவல், மக்சீம் கார்க்கியின் தாய் நாவலின் தாக்கத்தினால் உருவானதாகும். டி.செல்வராஜ் - மலரும் சருகும், பொன்னீலன் - கரிசல், ஜெயகாந்தன் - பாவம் இவள் ஒரு பாப்பாத்தி, போன்ற நாவல்கள் குறிப்பிடத்தக்கன. அவை இருவேறு வர்க்கங்களாகப் பிரிந்திருக்கிற மக்களிடையில் நிலவுகிற முரண்பாடுகளை முன்னிறுத்துவதுடன், அடித்தட்டு மக்களின் துயரம்
நீங்கி, விடியல் பிறக்கும் என்ற நம்பிக்கையை விதைத்தன.
இடதுசாரி மனோபாவத்தில் வர்க்கக் கண்ணோட்டத்துடன் எழுதப்பட்ட நாவல்கள் சில: இந்திரா பார்த்தசாரதி- குருதிப்புனல், சோலை சுந்தரப் பெருமாள்- செந்நெல், டி. செல்வராஜ்- தேநீர், தோல், தனுஷ்கோடி ராம சாமி - தோழர், ராஜம் கிருஷ்ணன் -கரிப்பு மணிகள், சேற்றில் மனிதர்கள், சு.சமுத்திரம்- ஒரு கோட்டுக்கு வெளியே, விட்டல் ராவ்- போக்கிடம், கு.சின்னப்ப பாரதி- தாகம், சுரங்கம், செ.கணேசலிங்கம்- செவ் வானம், இளங்கீரன் - தரமும் தாரகையும், ஸ்ரீதர கணேசன் - அவுரி, சோ.தருமன் - தூர்வை, சூல், அறிவழகன் -கழிசடை, புதிய ஜீவா- நான்காயிரம் கைகளும் ஒரே முகமும், இரா.முருகவேள்- முகிலினி, ராம் சுரேஷ்- கரும்புனல், கலைச் செல்வி-சக்கை இப்பட்டியல் முழுமையானது அல்ல, இன்னும் நீளும். குறிப்பிட்ட வட்டாரம் அல்லது ஒரே தொழில் செய்கிற தொழிலாளர்களின் பிரச்சினைகள், தொழிற்சங்கச் செயல்பாடுகள், வேலை நிறுத்தம், போராட்டம் என இன்றுவரை எழுதப்படுகிற பெரும்பாலான தமிழ் நாவல்களுக்கு ரஷிய நாவல்கள்தான் முன்னோடி.
புதியதோர் உலகம் செய்வோம், கொலை வாளினை எடுடா என ஆவேசத்துடன் பாரதிதாசன் பாடிய பாடலுக்குப் பின்னணியாக மார்க்சிய அரசியல் இருந்தது. அன்றைய காலகட்டத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த மரபுக்கவிதை வடிவில் மார்க்சியக் கருத்துக்களை முன்னிறுத்திக் கவிதைகள் எழுதுவதுடன், அவற்றை அரசியல் பரப்புரை மேடைகளில் உணர்ச்சிபொங்கிடப் பாடவும் செய்தனர். பொதுவுடமைக் கட்சியைக் கட்டியமைத்திட முயன்ற ஜீவா என அழைக்கப்பட்ட ஜீவானந்தம் மேடைகளில் பாடியபோது அதைக்கேட்டவர்கள் உணர்ச்சிவயப்பட்டனர். தமிழ்ஒளி, கே.சி.எஸ்.அருணாசலம், ரகுநாதன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், ஏ.தெ.சுப்பையன், பரிணாமன், தணிகைச்செல்வன், நவகவி, இன்குலாப் போன்ற கவிஞர்கள் புரட்சிக்குக் கட்டியங்கூறிப் பாடல்கள் புனைந்திட்டனர்.
எழுபதுகள் தொடங்கித் தீவிரமாக எழுதிய/எழுதுகிற இலக்கிய ஆளுமைகளில் இடதுசாரி மனநிலையுடன் சமூகப் பிரச்சினைகளை அணுகுவதுடன் மார்க்சிய சித்தாந்தத்திற்கு ஆதரவான படைப்பாளர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்: ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, கி.ராஜநாராயணன், ஞானி, வண்ணநிலவன், பிரபஞ்சன், கலாப்ரியா, புவியரசு, சிற்பி, இன்குலாப், கங்கைகொண்டான், பொன்னீலன், ஈரோடு தமிழன்பன், பா.செயப்பிரகாசம், பூமணி, அஸ்வகோஷ், சு.சமுத்திரம், ராஜம்கிருஷ்ணன், ஜெயந்தன், மு.ராமசாமி, கந்தர்வன், பொன்னீலன், மீரா, புதிய ஜீவா, ச.தமிழ்ச்செல்வன், யமுனா ராஜேந்திரன், என்.டி.ராஜ்குமார், உதயசங்கர், மேலாண்மை பொன்னுச்சாமி, ஹெச்.சி.ரசூல், காமுத்துரை, சுதீர் செந்தில், சு.வெங்கடேசன், கீரனூர் ஜாகிர்ராஜா, தேனீ சீருடையான், அப்பண்ணசாமி, எனப் பட்டியல் நீள்கிறது. இன்றைய சூழலில் இடதுசாரி சார்புடன் அமைப்புரீதியில் இணைந்துள்ள எழுத்தாளர்கள் கணிசமாக உள்ளனர். அவர்களுடைய படைப்புகள் சமூக விமர்சனமாக வெளிப்படுகின்றன.
இடதுசாரி சார்புடன் இலக்கியத்தை அணுகி விமர்சித்த/ விமர்சிக்கிற திறனாய்வாளர்கள் கணிசமாக உள்ளனர். க.கைலாசபதி, நா.வானமாமலை, கா.சிவத்தம்பி, ஞானி, கோ.கேசவன், எஸ்.வி.ராஜதுரை, தி.சு.நடராஜன், ஆ.சிவசுப்ரமணியன், எஸ்.தோதாத்ரி, அ.மார்க்ஸ், எம்.ஏ.நுஃமான், தி.க.சி., க.பஞ்சாங்கம், தமிழவன், கே.முத்தையா, முத்துமோகன், எம். அருணன், செந்தீ நடராசன், எஸ்.ஏ.பெருமாள், எஸ்.செந்தில்நாதன், சி.கனக சபாபதி, பொதிகைச்சித்தர், பொ.வேல்சாமி, ந.முருகேசபாண்டியன், ஜமாலன், பிரேம் ரமேஷ், மணா, அ.ராமசாமி, பா.ஆனந்தகுமார், வீ.அரசு, பார்த்திபராஜா, இரா.காமராசு போன்ற திறனாய்வாளர்கள் மார்க்சியப் பின்புலத்தினர். இன்று விமர்சனம் என்பது பின்நவீனத்துவம், தலித்தியம், பெண்ணியம், சூழலியம் எனப் புதிய தளங்களில் விரிந்தாலும் அடிப்படையில் மார்க்சியம் பொதிந்துள்ளது.
இடதுசாரிக் கருத்துகளுக்கு முன்னுரிமை தந்து படைப்புகளை வெளியிடுவதற்காக நடத்திய/ நடத்துகிற பத்திரிகைகள் பின்வருமாறு: தாமரை, செம்மலர், சிகரம், நிகழ், மனிதன், தோழமை, மக்கள் பண்பாடு, புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம், கேடயம், மன ஓசை, படிகள், இங்கே இன்று, பிரக்ஞை, செந்தாரகை, உங்கள் நூலகம், புத்தகம் பேசுது, சமூக விஞ்ஞானம் என நீள்கிற பத்திரிகைகளினால் உருவான இடதுசாரி எழுத்தாளர்கள் எழுதியுள்ள புத்தகங்கள் குறிப்பிடத்தக்கவை. அவை தமிழிலக்கியச் சூழலில் படைப்புகளின் வழியாக வாசகர்களின் மனதில் நடப்பு வாழ்க்கை குறித்தத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
கலை இலக்கியப் பெருமன்றம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள், சங்கம், மக்கள் கலை இலக்கியக் கழகம் போன்ற இடதுசாரி வெகுஜன இலக்கிய அமைப்புகளின் தொடர்ச்சியான செயல்பாடுகள் காரணமாக உருவாகியுள்ள படைப்பாளர்கள், படைப்புத்தளத்தில் தீவிரமாக இயங்குகின்றனர். இன்று தமிழக மெங்கும் புரட்சியை நேசிக்கிற எழுத்தாளர்களின் முற்போக்கான படைப்புகள் வெளியாகின்றன.
எண்பதுகளில் ரஷிய இலக்கியப் படைப்புகளைக் கொண்டாடினாலும் தங்களுக்கான தனிப்பட்ட மொழியில் படைப்புகள் படைத்தவர்களில் கோணங்கியும், எஸ். ராமகிருஷ்ணனும் தனித்துவமானவர்கள். அகத்தின் நெருக்கடியானது உளவியல் ரீதியில் எப்படிக் கசப்பு ததும்பிடப் பொங்குகிறது என்று விவரிக்கிற எஸ். ராம கிருஷ்ணன், புனைவு வழியாகப் பயணிப்பதில் மார்க்சியம் பின்புலமாக இருக்கிறது. நவீனப் படைப்பாளர்களில் ரஷிய இலக்கியத்தை எஸ்.ரா. போலக் கொண்டாடுகிறவர் யாரும் இல்லை. கோணங்கியின் புனைவுலகு ரஷிய இலக்கியத்துடன் நெருங்கிய தொடர்புடையது. டால்ஸ்டாயின் வாழ்க்கைச் சம்பவங்கள் ஊடாகப் பயணிக்கிற கோணங்கியின் புனைவு எழுத்துகள் ரஷியாவின் ஸ்டெப்பிப் புல்வெளிகளின் மீது பரவுகிறது. தான்யா என்ற ரஷியச் சொல் உருவாக்கும் பின்புலத்தில் அவர் விவரித்துள்ள புனைவுலகு முடிவிலியாக விரிகிறது. கோணங்கியின் நாவல்களில் ரஷிய வாழ்க்கையும் இலக்கியப் படைப்புகளும் அண்டரண்டப் பட்சியின் நிழல் போலப் படர்ந்துள்ளன. காலனிய ஆட்சியின் கொடூரம், ஆதித்தாய், இனக்குழுச் சமூகம், தமிழ் அடையாளம் எனக் கதைக்கிற கோணங்கியின் கதைமொழியில் மார்க்சியத்தின் தாக்கம் உள்ளது.
திராவிட அரசியல் பேசுகிற மு.கருணாநிதி, ரஷிய நாவலாசிரியர் கார்க்கியின் தாய் நாவலைக் கவிதை வடிவில் காவியமாக்கியுள்ளது தற்செயலானது அல்ல. அறுபதுகளில் வெளியான பெரும்பாலான திராவிட இயக்கப் பத்திரிகைகளில் மார்க்சியச் சார்பிலான இலக்கியப் போக்குகள் இடம் பெற்றிருந்தன. இன்று தன்னைத் தி.மு.க.காரராக அறிவிக்கிற கவிஞர் மனுஷ்யபுத்திரன் எண்பதுகளில் மார்க்சிய லெனினிய அமைப்பின் வெளியீடான புதிய கலாச்சாரம் பத்திரிகையில் கவிதைகள் எழுதியுள்ளார். நாவலாசிரியர் பெருமாள் முருகன் தொடக்கத்தில் மார்க்சிய லெனினிய அமைப்பின் இதழான மன ஓசையில் எழுதியுள்ளார். தமிழ்ப் படைப்பாளர்கள் எவ்வளவுதான் மார்க்சிய தத்துவதைக் கடுமையாக விமர்சித்தாலும் படைப்பு என வரும்போது, விளிம்புநிலையினருக்குச் சார்பானவர்கள்தான். ஜெயமோகன் பின் தொடரும் நிழலின் குரல் எனத் தமிழகக் கம்யூனிஸ்ட் கட்சியினரை விமர்சித்து நாவல் எழுதியிருந்தாலும், அவருடைய படைப்புகளில் மனித மையமற்ற தன்மையையோ, மனிதவிரோதமான அம்சங் களையோ பார்க்க முடியாது. அவருடைய வெள்ளை யானை நாவல், விளிம்புநிலையினருக்குச் சார்பானது.
உலகமயமாக்கல் வலுவடைந்த நிலையில், எங்கும் நுகர்வுப் பண்பாடு ஆதிக்கம் செலுத்துகிற சூழலில், இன்று இளைஞர்களின் உலகமானது தொலைக்காட்சி சேனல்கள், இணையம், ஸ்மார்ட் போன்கள் என மாறியுள்ளது. “நீ மட்டும் முன்னேறு” எனச் சுய முன்னேற்றப் போதனைக்குள் சிக்கியுள்ள இளைய தலைமுறையினருக்கு மார்க்சியம், புரட்சி குறித்து லட்சிய ஆவேசம் பெரிய அளவில் இல்லை. எங்கும் அரசியலற்ற தன்மை ஆதிக்கம் செலுத்துகிறது. என்றாலும் இன்று காத்திரமாகத் தமிழில் எழுதுகிற பெரும்பாலான எழுத்தாளர்கள், மார்க்சியத்தை ஏற்றுக்கொண்டுள்ள இடது சாரியினர்தான். வலதுசாரி மனோபாவமுடைய எழுத்தாளர்கள் எனத் தமிழில் யாராவது இருக்கிறார்களா?. யோசிக்க வேண்டியுள்ளது. சிறுமை கண்டு பொங்குகிற மனநிலையுடன் பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்கள் இருப்பதற்குக் காரணம், மார்க்சியத் தத்துவமும் ரஷிய இலக்கியப் படைப்புகளும் இன்றும் நுட்பமாகத் தமிழிலக்கிய உலகில் ஆளுகை செலுத்துவதுதான்.
ஜூலை, 2017.