பெண்ணுக்கு முதிர்ச்சி அதிகம்

பெண்ணுக்கு முதிர்ச்சி அதிகம்
Published on

ஆண்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என பெண்கள் எதிர்பார்க்கிறார்கள்?

மூன்று விஷயங்களைப் பேசலாம். ஒன்று சமத்துவம். பெண் தனக்கு சமமானவள் என்று பார்க்கும் அளவிற்கு ஆண்கள் தங்களை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். தான் செய்யக் கூடிய அனைத்தும் பெண்ணால் செய்ய முடியும் என ஆண்கள் உணர வேண்டும். ஆண் செய்யக் கூடிய எல்லாவற்றையும் செய்வதற்கான வாய்ப்பை பெண்ணுக்கு நிராகரிக்கக்கூடாது. 

இரண்டாவதாக உரிமை. என்னுடைய கணவர் என்னை சுதந்திரமாக வெளியே செல்வதற்கும், வேலைக்குப் போவதற்கும் அனுமதிக்கிறார் என்று பெண்கள் கூறினால், ஆண்கள் கொடுப்பது தான் சுதந்திரம் என்றாகிவிடுகிறது.  சுதந்திரம் என்பது யாரோ ஒருவர் கொடுப்பதில்லையே! அது நம்முடைய அடிப்படை உரிமை என்பதை சமூகத்தில் உள்ள ஆண் - பெண் இருவரும் உணர வேண்டும். ஆணும் - பெண்ணும் சேர்ந்து பெண்ணுக்கான அடிப்படை உரிமையை நிலைநாட்ட வேண்டும். அதில் மிக முக்கியமான பங்கு ஆணுக்கு உண்டு.

மூன்றாவதாக மரியாதை. பெண்ணை தன்னைவிட இரண்டாம் பட்சமாகக் கருதி, மரியாதைக் குறைவாக நடத்துவதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். என்னை மரியாதைக் குறைவாக நடத்துகிற எந்த ஆணையும் முதிர்ச்சி பெற்ற ஆணாக என்னால் பார்க்க முடியாது. ஆண்களுக்கு பெண்கள் தான் உலகம் கிடையாது. அதேபோல், பெண்களுக்கும் ஆண்கள் தான் உலகம் கிடையாது. 

உறவு என்று வந்தபிறகு, நானே உன்னுடைய உலகமாக இருக்க வேண்டும், என் மூலமாக குடும்பம் என்று ஒன்று வரும்பட்சத்தில், அந்த குடும்பம் தான் உனக்கு உலகமாக இருக்க வேண்டும். அதற்குப் பிறகு தான் உன்னுடைய கனவோ, உன்னுடைய வேலையோ இருக்க வேண்டும் என நினைக்காத ஆண்களைத் தான் பெண்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஆண் பெண் உறவு சிக்கல் ஏன் ஏற்படுகிறது?

நான் பார்த்த வரைக்கும் ஆண்களின் முதிர்ச்சி என்பது குறைவாகத்தான் இருக்கின்றது. அதனால் தான் உறவில் சிக்கல் வருகின்றது. பெண்ணுக்கு ஆணைவிட இருக்கின்ற முதிர்ச்சியும் அறிவும் செயல்திறனும் ஆணை ஒரு விதமான தாழ்வு மனப்பான்மைக்கு கொண்டு செல்கிறது.

ஒரே வயதுள்ள ஆண் - பெண் இருவரில் பெண்களிடம் முதிர்ச்சி அதிகமாக இருக்கின்றது. சொல்லப்போனால் வயது கூடுதலான ஆணை விட குறைந்த வயதுள்ள பெண்களுக்கு முதிர்ச்சி அதிகமாகவே இருக்கின்றது. 

சிறிய வயதிலிருந்தே குடும்பத்திற்கு நீ தான் மாஸ்டர் என ஆண் குழந்தைகளை நாம் பழக்கப்படுத்தியிருக்கின்றோம். குழந்தைகள் அப்பாவைப் பார்த்து வளர்வதால், அவர்களும் அப்பாவைப் போல வளர்கிறார்கள். தான் எதை சொன்னாலும் அது நிறைவேற விட வேண்டும், அது தர்க்கரீதியாக இல்லையென்றாலும் கூட..

பிரச்சனைகளைப் பற்றி பொதுவெளியில் பேசுவதற்கு பெண்களுக்கு கல்வி முக்கியமானதாக இருக்கின்றது. எதையும் தாங்கிக் கொண்டு இருக்கத் தேவையில்லை, தனக்கு சரியென்றுபட்டதை வெளியில் சொல்லலாம் என்ற தைரியம் இன்று பெண்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது. இதனால் தான் இப்போது உறவுச் சிக்கல் அதிகரித்திருப்பதாகத் தெரிகிறது. முன்பெல்லாம் அப்படியான பிரச்சனை இல்லை. 'உன் வழியே என் வழி' என பெண்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள். இப்போது பெண்கள் பேச ஆரம்பித்திருப்பதால் பிரச்சனைகள் அதிகரித்திருக்கிறது.

நவம்பர், 2021.

logo
Andhimazhai
www.andhimazhai.com