நான் தூரத்தில் தனியாக இருப்பேன். நீ வருகிறாய் அல்லவா? என்னருகில், என் கரங்களில் என் மார்பில், என் உதடுகளில் நீ இருக்கப்போகிறாய். பறந்து வா! உன் உச்சந்தலையில் ஒரு முத்தம்.. இன்னொரு முத்தம் அதற்கு மிகவும் கீழே.. மிகவும் கீழே...!'
ஏப்ரல் 1796இல் நெப்போலியன் தனது காதல் மனைவியான ஜோசபைனுக்கு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி.
சூதாட்டத்தில் தன் நேரத்தைச் செலவழித்த ஒரு ஃபிரெஞ்சு பிரபுவின் (Aristocrat) மகளான ஜோசபைனுக்கு 16 வயதில் திருமணம். அவர்களுக்கு ஒரு மகனும் மகளும் பிறக்கிறார்கள். தேசத்துரோக குற்றத்தில் கணவர் கைதாக, பாதுகாப்பு தேடி ஓடுகிறாள், ஜோசபைன். பாதுகாப்பும் காதலும் ஃபிரான்ஸின் முக்கிய அரசியல் புள்ளியான பால் பாரஸ் என்பவரிடம் கிடைக்க, அவரது ஆசை நாயகி ஆகிறார். ஒரு நெருக்கமான காலத்திற்குப் பின் ஜோசபைன் மீது சலிப்பு ஏற்பட, பால் பாரஸ் தன்னை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்ட நெப்போலியனிடம் பழக விடுகிறார். பழக்கம் பற்றிக் கொண்டு காதலாக மாறுகிறது.
இவர்களுக்கு 9, மார்ச், 1796 -இல் திருமணம், சனவரி 1810-இல் பிரிவு. இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த காதல் சடுகுடுகள் பல புத்தகங்களாக வெளிவந்துள்ளன.
ஜோசபைனுக்கும் நெப்போலியனுக்கும் காதல் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது, இருவருக்கும் தனித்தனியே காதல்கள் பலருடன் வந்து கொண்டே இருந்தன.
வாரிசு இல்லாததால் ஜோசபைனை 1810-இல் நெப்போலியன் பிரிந்தாலும் சாகும் வரை அவர் மகாராணியாகவே இருந்தார். பட்டத்தையும், அவரது சகல தேவைகளையும் அவர் சாகும் வரை நெப்போலியனே அளித்துச் சிறப்பித்தார்.
ஜோசபைனின் மனதைப் புரிந்து கொள்ள, கடந்த இருநூறு வருடங்களாக பலர் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பல பெண்கள் குடியிருந்த நெப்போலியனின் மனதில் உண்மையான காதல் யாரிடமிருந்தது என்று ஓர் இடத்தில் குறிப்பிடுகிறார். ‘அதிகாரம் தான் என் காதலி. அவளை வெற்றிகொள்வதற்காக நான் கடுமையாக உழைத்துள்ளேன்.' நெப்போலியனின் இந்த வார்த்தைகள் ஆயிரம் சிந்தனைகளின் பிறப்பிடம்.
‘நூறு பெண்கள் கூட ஆணின் ஒற்றை விதைக்குச் சமமாக மாட்டார்கள். பெண்கள் ஆண்களின் ஆதிக்கத்தில் இருக்கவேண்டும் என்பது இயற்கையின் விதி!'
- கன்பூசியஸ்.
(இந்த வாசகத்தின் வார்த்தைப் பிரயோகம் பற்றி விவாதம் உண்டு).
தன்னால்குழந்தை பெற முடியாது என்பதால் ஆண் பெரும் தாழ்வு மனப்பான்மையால் பாதிக்கப்பட்டுள்ளான். அவனது ஆழ்மனத் தாழ்வு மனப்பான்மைகளில் இதுவும் ஒன்று என்கிறார், ஓஷோ.
நான் பெண்ணாகப் பிறந்ததுதான் எனக்கு நடந்த மிக நல்ல விஷயம். எல்லா பெண்களும் இப்படித்தான் நினைக்கவேண்டும்
- மர்லின் மன்றோ
மேலே இடம்பெற்றுள்ள இந்த மூன்று சிந்தனைகளும் ஆண் - பெண் புரிதல்களுக்கிடையே உள்ள சிக்கல்களின் மூலத்தைச் சுருக்கமாகச் சொல்லலாம்.
‘பெண் ஒரு புரியாத புதிர்' என்பது காலங்காலமாக விவாதிக்கப்படுகின்ற ஒன்று தானே? அதை இப்போது ஏன் விவாதிக்க வேண்டும்?
‘Men who hate women' என்ற புத்தகத்தை எழுதிய லாரா பேட்ஸ் ஒரு நேர்காணலில் கூறிய விஷயங்கள் அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடியது.
‘பெண்ணியத்திற்கு எதிரான போக்கு இளைஞர்களிடம் குறிப்பாக இளம் பள்ளி மாணவர்களிடம் அதிகமாகத் தென்படுகிறது. சமூக வலைதளங்களில் மற்றும் வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற செயலிகளில் பரிமாறப்படும் பல மீம்ஸ்கள், ஜோக்ஸ் மற்றும் குறு வீடியோக்கள், பெண்களைப் பற்றிய தவறான புரிதல்களை, பிம்பங்களை இளம் வயதில் ஆண்களிடம் ஏற்படுத்துகிறது. பெண்களுக்கு எதிரான சிந்தனை பலருக்கு பதினோரு வயதிலே ஏற்படுகிறது' என்பது லாரா பேட்ஸின் ஆய்வு மூலம் கிடைக்கும் தகவல்கள்.
பெண்களை உடைமைகளாகக் கருதிய இடத்திலிருந்து விடுபட்டு சரியான பாதையில் பயணித்தவர்கள் மீண்டும் திசை மாறுகிறார்களோ என்ற அச்சம் ஏற்படுவதாக தோழி ஒருவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.
ஆல்ஃப்ரெட் நோபலின் நினைவாக நோபல் பரிசு மற்றும் ஸ்வெரிஜெஸ் ரிக்ஸ்பேங் பரிசு, (பொருளாதார அறிவியலுக்காக) 1901 முதல் வழங்கப்படுகின்றன. 1901 - 2021க்கு இடைப்பட்ட 120 வருடங்களில் 609 பரிசுகள் 975 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் 59 பரிசுகள் 58 பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேரி கியூரி 1903-இல் இயற்பியலுக்கும் 1911-இல் வேதியலுக்கும் ஆக இருமுறை பெற்றுள்ளார். 1901-2000 காலகட்டத்தில் பெண்களுக்கு 30 பரிசுகள் மட்டும் தான். அறிவியல் உலகில் பெண்களுக்கான இடங்கள் போதுமானதாக இல்லை. நிறையப் போராட வேண்டியிருக்கிறது என்று எண்ணற்ற குரல்கள் கேட்கின்றன.
கோரின் மாஸ் ராகசின் என்கிற உளவியலாளரும் அவரது குழுவினரும் ஏல் பல்கலைக்கழகத்தில் ஓர் ஆய்வு நடத்தினர். ஒரு பதவிக்கு வந்த விண்ணப்பத்தை நூற்றுக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளிடம் கொடுத்து தேர்ந்தெடுப்பது பற்றிய அபிப்பிராயத்தைக் கேட்டனர். ஒரே விண்ணப்பம் தான், ஆனால் சரிபாதி பெண் என்றும் மீதி ஆண் என்ற அடையாளத்துடனும் கொடுக்கப்பட்டது.
விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்த விஞ்ஞானிகள் ஆண் என்று குறிப்பிட்ட விண்ணப்பங்களை உயர்வாகவும், பெண் அடையாளப்படுத்தப்பட விண்ணப்பங்களைத் தாழ்வாகவும் மதிப்பிட்டதாகக் கண்டறியப்பட்டது. பெண்களைக் குறைவாக மதிப்பிட்டதில் அநேகர் பெண்கள் என்பது அதிர்ச்சி. 2021-இல் நடந்த ஆய்வு இது.
காதலால் கசிந்துருகி கோடான கோடி வார்த்தைகளை உதிர்த்த பின்னும் பெண் பற்றிய சரியான சிந்தனை வருவது சிரமமாயிருக்கிறது.
‘உண்மைக்குப் புறம்பான விஷயங்களைப் பெண்களிடம் சொல்லி பெண்ணின் உளவியலைக் கெடுத்து தனக்கு அடிமையாகவும் இரண்டாம் நிலை குடிமக்களாகவும் ஆண்கள் வைத்துள்ளனர். இதற்குக் காரணம் அவன் உடல்ரீதியாக பலசாலி. உடல் ரீதியான பலம் என்பது விலங்குத் தன்மையின் ஒரு பகுதி. இதை வைத்து யார் பெரியவர் எனத் தீர்மானிக்கலாம் எனில், விலங்குகள்தான் ஆணைவிட பலசாலிகள்' என்ற ஓஷோவின் வரிகள் நிகழ்ந்த சூழ்ச்சிகளைச் சுருக்கமாகச் சொல்கின்றன.
'பெண்களுக்கு என்ன தேவை? பதிலே சொல்லப்படாத கேள்வி. இக்கேள்விக்கு பெண்களின் மனதைப் பற்றி முப்பது ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்துள்ள என்னாலும் பதில் சொல்ல முடியவில்லை,' என்று உலகின் ஆகச்சிறந்த உளவியலாளர் சிக்மண்ட் ப்ராய்டு கூறி இருக்கிறார்.
எல்லாரையும் போல் நானும் பெண்களைப் புரிந்து கொள்ள முயன்று தோற்றுப் போய் வேடிக்கை பார்ப்பவனாக மாறிப்போனேன்.
பெண்கள் எழுப்பும் கேள்விகளுக்கு தர்க்க ரீதியான பதில்களால் சமாளிக்க முடியாமல் பலர் திணறிக் கொண்டிருக்கும் போது, மனைவி/ காதலியின் கேள்விகளுக்கு வார்த்தைகளற்ற அன்பின் மூலம் பதில் அளிக்க முடியுமென்பது கோடான கோடி ஆண்களுக்குத் தெரியாத சங்கதியாக உள்ளது.
புரிகின்ற எல்லா விஷயங்களும் சுவாரஸ்யமற்றதாகி விடுகிறது.
பெண் எப்போதும் சுவாரஸ்யமானவளாகவே இருக்கட்டுமே!
--அந்திமழை இளங்கோவன்
ஆண்- பெண் இடையிலான உரசல்கள் மனித குலம் தோன்றியதிலிருந்தே இருக்கின்றன. ஒரு கட்டத்தில் பெண் கை தாழ்ந்து ஆணின் கரம் உயர்ந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தற்போதைய தொழில்நுட்ப யுகத்தில் ஆண்- பெண் இடையிலான உரசல்கள் வெவ்வேறு மாறுதல்களுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கின்றன. பெண் கல்வி கற்று தனக்கான இடத்தைக் கேட்கத் தொடங்கி இருப்பதால், ஒருவித சமூகக் கொந்தளிப்பு ஓசைப்படாமல் நிலவுகிறது. இந்நிலையில்தான் சமூகத்தில் பல்வேறு தளங்களைச் சார்ந்தவர்களிடம் கருத்துத் திரட்டல் ஒன்றை நடத்தினோம். பெண்களிடம் ஆண்களிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? ஆண்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும்? ஆண் பெண் உறவுச்சிக்கல்களுக்குக் காரணம் என்ன போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன. ஆண்களிடம் ஆண் பெண் உறவுச்சிக்கல்களுக்குக் காரணம் என்ன? பெண்களை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா ஆகிய கேள்விகளை முன்வைத்து பதில்களைப் பெற்றோம். ஒருசாரார் இக்கேள்வியை முன்வைத்ததும் தெறித்து ஓடினர். இன்னொருசாரார் முக்கியமான கேள்விகள் என ஆர்வமுடன் பதிலளித்தனர். சமூக மனநிலையின் குறுக்குவெட்டுத் தோற்றமாக இந்த பதில்கள் தொகுக்கப்பட்டுள்ளன. பொறுமையாகப் பதில்களை அளித்த எழுத்தாளர்கள், சமூக ஊடகப் பிரபலங்கள், கலைஞர்கள், சமூக சேவகர்கள், குடும்பத் தலைவிகள் உள்ளிட்ட கருத்தாளர்களுக்கு நன்றி.
நவம்பர், 2021.