வாகை சூடவா
வாகை சூடவா

பெண்ணின் காதல்

வாகை சூடவா
Published on

அரவான் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருந்த நேரம். அலுவலகத்திற்கு ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கான அழைப்பிதழ் வந்தது. பார்த்த நொடியில் அலுவலகத்திலிருந்த அத்தனை பேரும் அசந்து போனோம். பழைய போஸ்ட் பாக்ஸில் சில  கடிதங்கள் நூலாம்படை உறைந்து போன  கரப்பான்பூச்சி அத்தோடு இசை வெளியீட்டு விழாவிற்கான அழைப்பிதழ்.

கதை நிகழும் காலகட்டம் குறித்த அற்புதமான டீடைல்களோடு வெளியான படம் வாகை சூடவா. முதல் ஷாட்டிலிருந்து இதை நாம் புரிந்து கொள்ள முடியும். கதைக்கு வெளியே எந்த தகவலையும் திணிக்காமல் வெகு இயல்பாக அந்தக் காலகட்டத்தின் வாழ்வை பதிவு செய்திருப்பார் இயக்குநர் சற்குணம். ( கண்டெடுத்தான் காட்டில் ஒரு வியாபாரி கழுதையில் வந்து உப்பு விற்பது வரை நுட்பம்.) அந்தக் காலகட்டத்தின் அனேக காதல் படங்களைப் போல் இல்லாமல் இந்தக் கதை ஒரு பெண் ஆணின் மீது கொண்டிருக்கும் காதலை பேசியது. கதை நிகழும் இடத்திற்குள் நிகழும் சம்பவங்களும் கதையின் பிண்ணனியும் இதை ஒரு காதல் படம் என்பதைத் தாண்டி சமூகப் படம் என்பதையே பிரதானப்படுத்தினாலும்  மதியின் கதாப்பாத்திரம் விமலின் மீது கொண்டிருக்கும் காதலை வெளிப்படுத்த துடிக்கும் இடங்களெல்லாம் சுவாரஸ்யமானவை.  திடீர் திருப்பங்களோ எதாவது செய்து அவனைத் தன்னோடு வைத்துக் கொள்ள வேண்டுமென்கிற சாகசமோ இல்லாமல் வெகு இயல்பாக அந்த சூழலில் ஒரு பெண் தன்னால் என்ன இயலுமோ அதை செய்யக் கூடியவளாய் மதி இருப்பாள்.  இனியாவிற்கும் விமலுக்குமான கேட் - மவுஸ் விளையாட்டுகளும் கேலியும் அத்தனை சுவாரஸ்யமானவை. இரண்டு பேருக்குள்ளான காதல் நிகழக்கூடிய சாத்தியமுள்ள தருணங்களை உண்மையில் பாடல் காட்சிகள் தான் மிகப் பிரமாதமாய் வெளிப்படுத்தின. போறானே போறானே பாடல் காட்சியும் சர சர சாரக் காத்து பாடல் காட்சியும் காட்சிக் கவிதைகள். இந்த பாடல்கள் காட்சிப்படுத்தப் பட்ட விதம் குறித்தே ஆறேழு பக்கங்களுக்கு விலாவாரியாக எழுதலாம். ஆனால் இரண்டு பாடல்களிலும் உள்ளார்ந்து வெளிப்படும் அந்தப் பெண்ணின் காதல் தான் காட்சிகளை மிகுந்த வலுவாக்குபவை.

தன் கதையின் மீது அபரிமிதமான காதலும் நம்பிக்கையும் இல்லாத ஒருவரால் இவ்வளவு நுட்பமான டீடைல்களோடு, பிரம்மிப்பூட்டும் ஒளிப்பதிவு, மயக்கும் இசை, ஒரு காலகட்டத்தை உயிர்ப்போடு சொல்லும் கலை இயக்கம் அவ்வளவையும் திறம்பட காட்சியில் கொண்டு வந்திருக்க முடியாது. இந்தப் படத்தின் கதை விவாதத்தில் கலந்து கொண்டு நண்பர் சரசுராம் ஒரு முறை இப்படிச் சொன்னார் ‘சற்குணத்தின் கனவுப் படமிது.' இந்தப் படத்தை ஒவ்வொருமுறை பார்க்கும் போதும் இயக்குநர் அதற்கு நியாயம் செய்திருப்பதாகத்தான் தோன்றுகிறது.

நவம்பர், 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com