பூரிக்குத் தொட்டுக்கொள்ள பாஸந்தி!

பூரிக்குத் தொட்டுக்கொள்ள பாஸந்தி!
Published on

தஞ்சை மாவட்டம் குத்தாலத்தில் சிறுவயதில் வசித்தபோது பள்ளிக்குச் சென்று திரும்புகையில் வழியில் ராதாகிருஷ்ணய்யர் ஓட்டல் இருக்கும். அதைத் தாண்டிச் செல்கையில் இனிய தோசை மணம் காற்றில் பறந்துவந்து நாசியைத் தீண்டும். சிலமுறை அந்த கடை வாசலில் சேது மாதவராவ் மைசூர் பாக் இன்று பிற்பகல் 3 மணிக்குக் கிடைக்கும். தவறினால் கிடைக்காது! என்று எழுதிப் போட்டிருப்பார்கள்.

மைசூர் பாக் என்றால் என்னவென்று அந்த வயதில் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. இன்னொரு சமயம் ஒரு சனிக்கிழமை வீட்டுக்குத் தெரியாமல் சக வாண்டுகளுடன் காவிரியில் குளிக்கப் போனபோது, ‘இன்று காலை ஏழரை மணிக்கு சேதுமாதவராவ் மைரூர் பாக் கிடைக்கும் என்று எழுதி வைத்திருந்தார்கள். எனக்கு மைசூர் பாக் என்றால் எப்படி இருக்கும்? யார் இந்த சேதுமாதவராவ் என்ற ஆர்வம் உண்டாயிற்று. என் அம்மா பள்ளி விட்டு வீட்டுக்கு வந்ததும் தேன்குழல், ஓமப்பொடி, முள் முறுக்கு என்று ஏதாவது கொடுப்பாரே ஒழிய, இந்த மைசூர் பாக்கை கண்ணில் காட்டியது இல்லை.

என் சகோதரிக்கு திருமணம் நிச்சயம் ஆயிற்று. எழுத்தாளர்கள் தி.ஜா., ஆர்வி ஆகிய எழுத்தாளர்கள் கலந்துகொண்ட பழைய கால ஐந்து நாள் கல்யாணம். தி.ஜா. கதைகளில் எல்லாம் இப்படி ஒரு திருமணம் பற்றிப் படித்திருக்கலாம்! மணப்பெண் கிளம்பும்போது கொடுக்கும் சீர்களில் ஒன்றாக மைசூர் பாகும் செய்திருந்தார்கள். மாப்பிள்ளையின் தோழர்களில் ஒருவர் பொடியனாக இருந்த என்னைக் கூப்பிட்டு சில மைசூர் பாக்குகளை எடுத்துவருமாறு ஏவினார். சீர் வரிசை தின்பண்டங்கள் பேக் பண்ணப்பட்டு இருந்தன. அதில் இருந்து உருவ முடியாது!. . சமையல் கட்டோ தூரத்தில் இருந்தது. அங்கு சென்று எடுத்துவரலாம் எனப் போனேன். மைசூர் பாக் எப்படி இருக்கும் என்றே எனக்குத்தெரியாது! அங்கிருந்த ஒரு ஸ்வீட்டை எடுத்தேன்! அப்போது ஒரு கை என்னைப் பிடித்தது! ‘மாப்பிள்ளையின் தோழர்கள் கேட்கிறார்கள்’ என்றேன். ‘அதெல்லாம் சீர்ல கொடுத்து அனுப்பிச்சாச்சு.. இந்த மைசூர் பாக் இங்கே இருக்கிறவங்களுக்குத்தான்.’ என்று ஸ்ட்ரிக்டாக சொல்லப்பட்டது. அது யாருடைய கரம்? அதுதான் சேது மாதவராவ்…மைசூர் பாகு புகழ்! அவரைத்தான் சமையலுக்கு அழைத்திருந்தார்கள்!

இருப்பினும் எனக்கு ஒன்று கிடைத்தது. கால் செங்கல் அளவுக்கு இருந்தது. நெய்வாசத்துடன் பொன் நிறம் மினுங்க, இனிமையாக இருந்தது! முதல் முதலில் அதை சாப்பிட்டேன்! அவ்வளவு இனிப்பாய் வாயில் கரைந்து சென்றது. இப்போது பல விதங்களில் மைசூர் பாக் கிடைக்கிறது. அவற்றில் பலவற்றை மைசூர்பாக் வரிசையில் சேர்த்துக்கொள்ளவே முடியாது! அந்த பேருக்கே அவமானம்!

பின்னர் வளர்ந்து சென்னைக்கு வந்த பின் பத்திரிகைத் துறையில் விகடனில் பணியாற்றியபோது மாநிலம் முழுக்க உள்ள பல ஓட்டல்களில் சாப்பிடும் வாய்ப்பு. மாயவரம் காளியாகுடி ஓட்டலுக்கு மாலை மூன்றரை மணி அளவில் நுழைந்தேன். குடுமி வைத்து கம்பீரமாக இருந்த ஒருவர் வரவேற்று ’உட்காருங்கோ… சூடா ஜாங்கிரி இருக்கு சாப்பிடுங்கோ’ என்றார்.

வாழை இலையில் சூடாக பொன்னிறத்தில் ஒரு ஜாங்கிரி வைக்கப்பட்டது. அதிலிருந்து வழிந்தது ஒரு சொட்டு ஜுஸ்! எடுத்து சுவைத்தேன் நான் கேட்காமலேயே இன்னொரு ஜாங்கிரி வைத்தார்கள். மறுக்க முடியவில்லை. கூடவே கொஞ்சம் காராபூந்தி!

சென்னையில் திருவல்லிக்கேணியில் கிருஷ்ணய்யர் ஓட்டல் என ஒன்று இருந்தது. எஸ்.எஸ்.வாசன், களைப்பாக இருந்தால் ரிலாக்ஸ் செய்ய அங்குதான் செல்வார். அற்புதமான அல்வா கிடைக்கும்! விகடன் தீபாவளிமலர் வேலை முடிந்த பின் ஆசிரியர் குழுவை அங்கு அழைத்துச் சென்றதும் உண்டு. கல்கி போன்ற எழுத்தாளர்களை அங்கே காணலாம்! குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பியும் பதிப்பாளர் பார்த்தசாரதியும் உற்சாகமான மனநிலையில் இருக்கும்போது அங்குபோய் ஸ்வீட் சாப்பிட்டு கொண்டாடுவதைக் கண்டுள்ளேன்!

வடசென்னையில் ஒரு கடையில் பாஸந்தி கிடைக்கும். இதுபோன்ற பெங்காலி வட இந்திய இனிப்புகள் அந்த காலத்தில் வடசென்னையில்தான் கிடைக்கும். எழுத்தாளர் பரணிதரனுடன் போவேன். அவர் பூரியும் அதற்குத் தொட்டுக்கொள்ள பாஸந்தியும் ஆர்டர் செய்வார்! பாஸந்தி பெரிய கப்ப்ில் ததும்பும்! மிகப்பிரமாதமாக இருக்கும்!

பின்னர் தென்சென்னைக்கு என்று அடையாரில் அருமையான இனிப்புக் கடை வந்தது. கிராண்ட் ஸ்வீட்ஸ் என அழைக்கப்பட்ட அந்தக் கடை எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்து வென்றதுபோல் தன் சுவையால் ஜேஜே எனவெற்றி பெற்றது! வரிசை அமர்க்களப்படும். வருகிறவர்களுக்கு சர்க்கரைப் பொங்கல், கல்கண்டு சாதம், புளியோதரை என சாப்பிட வழங்குவார்கள்! இப்போது காலப்போக்கில் அந்த பழைய காலம் திரும்பாதா என நினைக்கும் இனிப்புப் பிரியர்களின் பெருமூச்சைத்தான் கண்டு வருகிறேன்!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com