பூ மாலையில் ஓர் மல்லிகை

பூ மாலையில் ஓர் மல்லிகை
Published on

தமிழின் ஆகச் சிறந்த முழுக்  காதலர்கள் யார் யார்?

இந்த கேள்வியை எழுப்பி ஒரே குரலில் உரக்க சந்தேகமின்றிச் சொன்னோம்: பாரதியார், கண்ணதாசன்...

யவனிகா ஸ்ரீராமுடன் அன்றுதான் முரண்படாமல் பேசிக்கொண்டிருந்தேன். கவிதைகளை, பெண்ணெழுத்தை, அரசியலை, விவசாயத்தை, பயணங்களை, பின் நவீனத்துவ தமிழெழுத்துச் சூழலை...  குறித்தான நீண்ட சர்ச்சைகள் பலதும் முரண்பட்டே  முடியும்.. அன்று அப்படியேதும்  நடக்கவில்லை. காரணம் சர்ச்சை காதலைப் பற்றி... கண்ணதாசனைப் பற்றி...

பின் நவீனத்துவ காதல் கவிதைகளைப் பேசும்போதும் சரி,  கட்டுடைத்த மனப்பாங்கில் கண்ணதாசன் நகர்த்திய காதலை அவரின்  பாடல்களாக  கேட்கும்போது பூரணமான ஒரு வித அமைதியில் ஊறுகிறது மனம் . 

காலம் கவியை உருவாக்குவதில்லை. பதிலாக கவி காலத்தை உருவாக்குவான் என்பதற்கு எடுத்துக்காட்டுபோல் இன்றும் நிற்பவர் கண்ணதாசன். மட்டுமல்ல இவரின் காலம் எப்போதும் நிகழ்வாகவே தமிழ் மொழியின் காதல் வடிவமாக சஞ்சரித்துக்கொண்டிருக்கிறது..

பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த வில்லியம் ப்ளேக் கவிதைகளைப் போன்று  தூரிகை நிறங்கள் கொண்ட  கற்பனை  உணர்வுகளின் உச்சநிலையை, இவரின் காதல் பாடல்களிலும் காணலாம்.. வில்லியம் ப்ளேக் போலவே, கண்ணதாசனும்  ஓவியரா ? தெரியவில்லை.. ஆனால், பாடல்களில் அது இருக்கிறது...

’பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு நான்தான் தேன் என்றது,

உந்தன் வீடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா என்றது ’

இங்கு மாலையில் செடிகளின் காமவெளிப்பாடான பூக்களை ஏந்தி வரும் பூக்காரப்  பெண்ணின் தோற்றம் நம் மன கான்வாஸில் பதிந்துவிடுகிறதல்லவா?  ஆனால் இந்தப்பூக்காரி கவியின் காதலியாகவும் இருக்கிறாள். இந்த நிலைதான்  ப்ளேக்கின் ரொமாண்டிக் பித்தநிலைக்கு கண்ணதாசனை எடுத்துச் செல்கிறது.. இந்த இடத்திலிருந்துதான் கேட்கிறார்:

‘நீ வருகின்ற வழிமீது யார் உன்னைக் கண்டார்?

உன் வளை கொஞ்சும் கை மீது பரிசென்ன தந்தார்?

உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?

உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார்?

ஆஹா...காதலின் அற்புதமான நிலை இது ...

நீ, நான், உலகம் என்பதெல்லாம்  மறந்து  சுயம் பிறழ்ந்த காதல் மனம் காதலனையே மூன்றாம் மனிதனாக பார்த்து, காதலியிடம் காமத்தின் அழகியலை முன்வைக்கிறது...அதற்கு அவளின் மூலமாக கவி சொல்லும் காரணங்களும் ஒருவிதமான காதலின் மாஜிக்கலிசம்தான்..

’என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக

நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற’

என்று கூறும் காதலி திறந்த காமத்தன்மையை வெளிப்படுத்துகிறாள்.

சமூகம் வரைந்த காதலுக்கான லக்ஷ்மண ரேகையை எளிதாக புன்னகையுடன் கடந்து  செல்கிறார் கவியரசு. இந்திய மரபில் தோய்ந்த காமசூத்திரங்களின்

சிலைவடிவங்களை சுவர் சித்திரங்களை தமது காதல் பாடல்களில் ஆவாஹித்து ஒளித்து வைத்தவர் இவர்....

‘ஒருவரின் தாய் மொழிச்  சமூகத்தின், அதன் தலைமுறைகளுக்கு பகிரப்படும் கலாச்சாரத்தின்   பிரிக்கமுடியாத ஒன்றாக  மாறுவது என்பது ஒரு கவியின் பிறவிப்பயன்’  என்று மலையாளத்தின் பிரபல எழுத் தாளரும் கவியும் இலக்கிய விமர்சகருமான என்.வி. கிருஷ்ணா வாரியர் கூறியது  கண்ணதாசன் என்ற கவிக்கு நூறு விழுக்காடு பொருந்தியிருக்கிறது..

பண்டைய  தமிழ்த் திணைகளின் வரப்புவழி நடந்துவந்த பல கவிஞர்களின் புலவர்களின் கையொப்பங்களை எடுத்துச் செல்லும் ‘காலம்’, தன் பெட்டகத்தில்   இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் சேர்த்த கடைசி காதல் கவி கண்ணதாசன்.. கம்பனின் பாரதியாரின் மொழியின்பால் ஈர்க்கப்பட்டு   ஆராதனையோடு அவர்களை ரசித்த கண்ணதாசனை அந்த வரிசையில் நின்றுதான் பார்க்கமுடியும்.. காதல் எனும் மகா யோக நிலையிலேயே அவர் வாழ்ந்திருந்தார் என்பது அவரின் சிறப்பு.  பிரபஞ்சத்தின் ஒவ்வொரு துகளும் அவருடன் காதலில் இருந்தது. இதெல்லாம் ஏதோ பெருமைக்காக அல்லது சொல்வதெற்கென்றே சொல்வதல்ல.

கண்ணதாசனின் காதல் பாடல்களை பிறரின் பாடல்களைப்போல திருமணத்திற்கு முன் அல்லது பின் என்றெல்லாம் வகைப்படுத்த இயலாது... மனைவியும் காதலியும் இயற்கையும் மரபும் மாறி மாறி ஆட்கொள்ளும் ஆண்மையாக தலைவன் மாறும்போது கணவனும் காதலனும் பிரபஞ்சமும் ஆக விரிகிறது பெண்மையின் உலகம்.

‘கண்ணன் கோவிலில் துயில் கொண்டான், இருகன்னம் குழிவிழ நகை செய்தான்

என்னை நிலாவினில் துயர் செய்தான்...அதில் எத்தனை எத்தனை சுகம் வைத்தான்.....

சேர்ந்து மகிழ்ந்து போராடி, தலை சீவி முடித்தேன்

 நீராடி ... ‘

இந்தப் பாடல் வரிகளில் மிதந்து கிடக்கும் அனுபவம் பிசிறில்லாமல் பெண் மனதை அப்படியே காட்டுகிறது... எங்கும் பெண்மையின் காம மணம் கொண்ட

சொற்கள்.. அதெப்படி கண்ணதாசன் என்ற ஆணுக்கு பெண்மொழியும் இவ்வளவு  சரளமாக வருகிறது?

‘ஆசை கொஞ்சம் நாணம் கொஞ்சம் பின்னிப் பார்ப்பதென்ன?

அருகில் நடந்து மடியில் விழுந்து ஆடக் கேட்பதென்ன?

மலர்ந்த காதல் என்ன உன் கைகள் மாலையாவதென்ன?

வாழை தோரண மேளத்தோடு பூஜை செய்வதென்ன?‘

இங்கும் பெண்மொழி அதன் பூரண நளினத்துடன் பூஜை கொள்கிறது .

அழகியலின் அத்தனை இனிமையையும் கண்ணதாசன் ஊற்றுகிறார்.

காலம் கடந்து  இன்றைய தொழில் நுட்பத்தின் உலகில், அழகியலும் கவிதையும்  கருவிகளுக்குள் அடங்கும்போது அதற்கேற்றார் போல் வேண்டுமென்றே சொற்களை அடுக்கும் வெற்றுப் பாடலாசிரியர்களின் பிளாஸ்டிக் காதல் வரிகள் உயிருள்ள உணர்வுள்ள மனிதர்களுக்குள் சலிப்பை ஏற்படுத்துகிறது. அழகியலும் மரபும் வெளியேற்றப்படும் அவல நிலை..காதல் மரித்துப்போகும் மனிதமனங்கள்...

இதனால் ஓர் ஆணும் பெண்ணும் தங்களின் உணர்வை தூய்மைப் படுத்தும் இயல்பு நிலையான காதல் நிலைக்குப்  போகமுடியாமல் ஆகிறது.. இதன் எதிர் வினை மிகப்பெரிய பாதிப்பை உருவாக்குகிறது,  திடீரென்றல்ல.. காலப் போக்கில் மனசிதைவுகளின் தவிப்புகளின் அவஸ்தை அதிகரித்து அதிகரித்து அது நாளைய சமூகத்தை நேரடியாக அல்லாமல் பாதிப்பிற்கு உள்ளாக்கும் என்பதில் ஐயப்பட வேண்டியிருக்கிறது. 

இங்கு

‘நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம் காரணம்

ஏன் கண்ணே‘

‘அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது பாய்வதினால் தானோ

அருஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான் அது கொதிப்பதனால் தானோ...‘

‘தேர் போலே ஒரு பொன்னூஞ்சல் அதில் தேவதை போலே நீ ஆட

பூவாடை வரும் மேனியிலே உன் புன்னகை இதழ்கள் விளையாட...‘

என்று காதலூற்றும் வரிகளை பத்திரப்படுத்த வேண்டியிருக்கிறது... கேட்கும்போதே மனமிளகும் ஆயிரக்கணக்கான கண்ணதாசப் பாடல்கள் மட்டுமே  மனிதனின் வறட்சித் தன்மைக்கு, மன சிக்கலுக்கு மருந்தாக அமைபவை.

’கறும்போ கனியோ கவிதைச் சுவையோ.. விருந்தோக்  கொடுத்தான் விழுந்தாள் மடியில்’

‘பால் வண்ணம் ,பழத்தட்டு தேன்கிண்ணம் மணப் பெண்ணின் தாய்தந்த சீராகக் காண்போமா.’   என்ற வரிகளிலெல்லாம்  மறைந்திருக்கும் காமத்தின் விவித நிலை  விதைகள் ரசிகனின் மனதில் வளர்ந்து கனிய கண மாத்திரை நேரம் போதும்..

சங்கக்காலக் கவிகளின் சாயலொத்த சொற்களை புதுமைப்படுத்தி தமிழ்ப் பாடல் உலகை செழுமைப்படுத்தியவர் கண்ணதாசன்.. கண்ணதாசனைத் தெரியவில்லை என்றால் அவர் காதலிக்கவில்லை என்று பொருள். 

மதன மாளிகையில்

மந்திர மாலைகளாம்

உதய காலம் வரை

உன்னத லீலைகளாம்!

(மீரா வில்வம், பத்திரிகையாளர் மற்றும் ஆவணப்பட இயக்குநர்)

பிப்ரவரி, 2015.

logo
Andhimazhai
www.andhimazhai.com