புன்னகைத் தருணங்கள்

Published on

“நீங்கள் எப்போதாவது மகிழ்ச்சியாக இருந்திருக்கிறீர்களா?”

 “இல்லை’’ என்கிற அந்த மனிதர், சிறிது நேரம் மௌனமாக யோசிக்கிறார். பிறகு கூறுகிறார். “அப்போது நான் மரணதண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியாக இருந்தேன். என்னோடுசேர்த்து பதினைந்து அரசியல் கைதிகளை வரிசைக்கு ஐந்து பேர் வீதம் மூன்று வரிசையில் நிற்க வைத்தார்கள். முதல் வரிசையில் நின்றவர்களை காவலர்கள் துப்பாக்கியால் சுட்டார்கள். அவர்கள் செத்து வீழ, இரண்டாவது வரிசையில் நின்றவர்களைச் சுட்டார்கள். அடுத்த வரிசையில் நின்ற எங்களைச் சுடத் தயாராகும் போது ஒரு சாரட் வண்டி வந்தது. அதிலிருந்தவர் தலைமை அதிகாரிக்கு ஜாரிடமிருந்து வந்த கடிதத்தைக் கொடுத்தார். சுடுவது நிறுத்தப்பட்டு, எஞ்சிய ஐவரும் சைபீரியாவிற்கு கடத்தப்பட்டோம். எங்களுடைய தண்டனை நிறுத்தப்பட்ட அந்த கணம் மகிழ்ச்சி என்னவென்று உணர்ந்தேன்.”

இது ஸ்டெனோகிராஃபர் அன்னா க்ரிகோர்யவ்னா ஸ்னிக்னியாவுக்கும் எழுத்தாளர் ஃபியோதர் தாஸ்தோ-வஸ்கிக்கும் இடையே நடந்த உரையாடலாக, Tewnty six days of Dotoyevsky என்ற திரைப்படத்தில் இடம்பெறுகிறது.

உங்கள் வாழ்வின் துன்பவியல் நிகழ்வுகளைக் கூறுங்கள் என்று யாரிடமாவது கேட்டுப் பாருங்கள், காட்டாற்று வெள்ளமென பொங்கிவரும் சம்பவங்கள். ஆனால் மகிழ்ச்சியான தருணங்களை சொல்லச் சொன்னால் யோசிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.

எந்த அனுபவத்தைத் திரும்பத் திரும்ப நினைத்துப் பார்க்கிறோமோ அந்த அனுபவம் மனதில் பசுமையாக இருக்கும். வலிகளையும் துயரங்களையுமே அனேகர் மீண்டும் மீண்டும் அசை போடுகிறோம்.

“மூளை நேர்மறையான மற்றும் எதிர்மறையான தகவல்களை தன் வெவ்வேறு அரைக்கோளங்களில் கையாளுகின்றது. எதிர்மறையான உணர்வுகள் அதிக அளவில் சிந்தனையைத் தூண்டுகின்றன. அதனால் நேர்மறையான தகவல்களை விட அதிகமாக அத்தகவல் கையாளப்படுகிறது” என்கிறார் பேராசிரியர் நாஸ்.

கையில் கிடைக்கும் ஐம்பது டாலர்களை எண்ணி மகிழ்வதைவிட இழக்கும் ஐம்பது டாலர்களை நினைத்து அதிகம் வருந்துகிறான் மனிதன் என்பது சமூக உளவியல் பேராசிரியர் ராய் எப் பவ்மெய்ஸ்டெரின் வார்த்தைகள்.

பீகல் ஸ்ட்ரீட் இங்கிலாந்தில் உள்ள ஆயுள் காப்பீட்டு நிறுவனம். 2014-இல் பீகல் ஸ்ட்ரீட் ‘மிக மகிழ்ச்சியான தருணம்’ என்ற குறும்படத்தை தயாரிப்பதற்காக 70 வயதைக் கடந்த ஆயிரம் தம்பதியரை பேட்டி கண்டனர். ஆய்வில் அதிகமானோரால் சொல்லப்பட்ட முதல் பத்து மகிழ்வான தருணங்கள்:

1. முதல் குழந்தை பிறந்தபோது 12.3%

2. கல்யாண நாள் 11.5%

3. பேரக்குழந்தை பிறந்தபோது 10%

4. இரண்டாவது குழந்தை பிறந்தபோது 8.5%

5. ஓய்வு பெற்ற நாள் 7.4%

6. புதிய வீட்டிற்கு போன நேரம் 6.7%

7. குழந்தை முதன்முதலாக நடந்தபோது - 5.5%

8. குழந்தையின் முதல் வார்த்தையைக்கேட்ட போது - 5.4%

9. கனவு ஆண் (அல்லது) பெண்ணை சந்தித்தபோது - 4.5%

10. கனவு ஆண் (அல்லது)

பெண்ணை முதன்முதலாக முத்தமிட்ட போது 4.4%

இதே ஆய்வில் பீகல் ஸ்ட்ரீட், அவர்களது ஆகப் பெரிய வருத்தம் எதுவென்றும் கேட்டார்கள்.

முதல் ஐந்து பெரிய வருத்தங்கள்:

கனவைத் துரத்தாமல் தப்பான

வேலையைத் தேந்தெடுத்தது 11%

மேற்படிப்பு படிக்காமல்விட்டது 10%

போதுமான அளவு பயணம் செய்யாதது 7%

விவாகரத்து - 6%

சீக்கிரமாக திருமணம் செய்தது - 5%

இந்த ஆய்வை உன்னிப்பாக கவனிக்கும்போது மகிழ்வான தருணங்கள் பணத்தையோ அது தரும் சௌகரியங்களையோ சாராமல் உறவுகள் சார்ந்து இருப்பது சிறப்பானது.

குழந்தைகள் பிறக்கும்போது மகிழ்வாகத் தானிருக்கிறார்கள். சுற்றி நிகழும் எதிர்மறையான சார்புகள் (Negativity Bias ) குழந்தையை பாதிக்க ஏழாவது மாதத்திற்கு பின் மகிழ்ச்சி குறையத் தொடங்குகிறது என்பது மருத்துவர்கள் அம்ரிஷா வைஷ், டொபியஸ் கிராஸ்மன், அமண்டே வுட்வர்ட் ஆகியோரின் கண்டுபிடிப்பு.

காயப்படுத்திய நிகழ்வுகளை, துயரச்செய்திகளை அவமானங்களை மன அடுக்குகளில் சேகரிக்கும் பழக்கம் தொடர்வது மட்டுமல்லாமல், அவ்வப்போது பழைய சம்பவத்தை தூசிதட்டி எடுத்து அசை போடுகிறோம். இந்த செய்கை பழைய நிகழ்வுகளை பசுமையாகவே வைத்திருக்கிறது. ஆறிய புண்ணைப் பிறாண்டி மீண்டும் புதுப் புண்ணாக மாற்றும் செயல். செய்யத் தகுந்ததல்ல இச்செயல். ஆனாலும் தொடர்ந்து செய்கிறோம்.

இன்றைய சூழலில் பெரும்பான்மையானவர்களைச் சுற்றி துயரச் செய்திகளே மிகுந்து காணப்படுகிறது. சோகங்களில் மூழ்கிப்போனால் மீட்பு இல்லை. கடந்த காலங்களின் மகிழ்ச்சியும் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையோடு இன்றைய உழைப்பு மட்டுமே நம்மையும் நம்மை சார்ந்தவர்களையும் உற்சாகப்படுத்த முடியும்.

தீபாவளி சிறப்பிதழாக மலரும் இந்த அந்திமழையில் சிறப்பான மகிழ்ச்சி தருணங்கள் அணி திரண்டு வருகின்றன. வாசிக்கும்போது உங்களது மகிழ்வான தருணங்கள் நினைவுக்கு வர, இதழ்களில் புன்னகை பூக்கும்.

என்றும் உங்கள்,

அந்திமழை இளங்கோவன்

நவம்பர், 2020 அந்திமழை இதழ்

logo
Andhimazhai
www.andhimazhai.com